search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kalakkad"

    • கணக்கெடுப்பு பணியில் செல்போன் செயலி பயன்படுத்தப்படுகிறது.
    • வன விலங்குகளின் எண்ணிக்கை குறித்து தெரிய வரும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்தில் இந்தாண்டுக்கான பருவ மழைக்கு பிந்தைய கணக்கெடுப்பு பணிகள் இன்று (21-ந்தேதி) தொடங்கியது. இதையொட்டி கணக்கெடுப்பு குழுவினருக்கு தலையணையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

    களக்காடு புலிகள் காப்பக கள இயக்குனர் மாரிமுத்து செல்போன் மற்றும் உபகரணங்களை கணக்கெடுப்பு குழுவினருக்கு வழங்கினார். அதன் பின் வனத்துறை ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் 21 குழுக்களாக பிரிக்கப்பட்டு, களக்காடு வனசரகத்திற்கு 8 குழுவினரும், திருக்குறுங்குடி வனசரகத்திற்கு 8 குழுவினரும், கோதையாறு வனசரகத்திற்கு 5 குழுவினரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இவர்கள் வருகிற 26-ந்தேதி வரை வனப்பகுதியில் தங்கியிருந்து வனவிலங்குகளை நேரில் காண்பது, அவைகளின் எச்சங்கள், கால்தடங்களை சேகரித்தல் போன்ற முறைகளில் கணக்கெடுப்பு நடத்துகின்றனர்.

    மேலும் கணக்கெடுப்பு பணியில் செல்போன் செயலி பயன்படுத்தப்படுகிறது. கணக்கெடுப்பு குழுவினர் தாங்கள் சேகரிக்கும் புள்ளி விபரங்களை செல்போன் செயலியில் பதிவு செய்து வருகின்றனர்.

    கணக்கெடுப்பின் போது சேகரிக்கப்படும் வன விலங்குகளின் கால்தடங்கள், எச்சங்கள் தேசிய புலிகள் ஆணையத்திற்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அதன் பிறகு வன விலங்குகளின் எண்ணிக்கை குறித்து தெரிய வரும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • கடந்த சில நாட்களாக கரடி நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர்.
    • கரடியின் கால்தடங்கள் உள்ளிட்டவற்றையும் வயல்வெளிகளில் சேகரித்து வருகின்றனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம், அப்பர்குளம், பெருமாள்குளம், தேவநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள இந்த கிராமங்களுக்கு அடிக்கடி மலையில் இருந்து வனவிலங்குகள் புகுந்துவிடுகின்றன. அவ்வாறு புகும் வனவிலங்குகள் விளை நிலங்களை சேதப்படுத்தவதோடு, கிராமங்களில் குடியிருப்புகளுக்குள்ளும் அவ்வப்போது புகுந்து விடுகிறது.

    அந்த வகையில் நேற்று களக்காடு அருகே உள்ள தேவநல்லூர் கிராமத்தில் கடந்த சில நாட்களாக கரடி நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர்.

    இந்தநிலையில், நேற்று தேவநல்லூர் பாறை பகுதியில் சிலர் சென்றபோது, அந்த வழியாக கரடி ஓடியது. உடனே அவர்கள் அந்த கரடியை தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். தொடர்ந்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

    இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், களக்காடு அருகே உள்ள சிங்கிகுளத்தில் கடந்த ஆண்டு இதேபோல் கரடி ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. பின்னர் வனத்துறையினர் அதனை கூண்டு வைத்து பிடித்து சென்றனர். இதேபோல் கடந்த ஆண்டு பெருமாள்குளம் பகுதியில் புதருக்குள் புகுந்த கரடியை கூண்டு வைத்து பிடித்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் தேவநல்லூர் பகுதியில் கரடி நடமாட்டம் இருக்கிறது. இதனால் விவசாயிகள் வயலுக்கு செல்ல அச்சப்படுகின்றனர். எனவே ஊருக்குள் புகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இதற்கிடையே வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று வனத்துறையினர் அங்கு சென்று கரடி நடமாட்டம் இருக்கிறதா என்பதை அறிவதற்காக முகாமிட்டுள்ளனர். மேலும் கரடியின் கால்தடங்கள் உள்ளிட்டவற்றையும் வயல்வெளிகளில் சேகரித்து வருகின்றனர். கரடி நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அதனை பிடிக்க கூண்டு வைக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    • களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம், ராஜபுதூர் தெருவை சேர்ந்தவர் முத்துசெல்வம் (வயது45). தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது.
    • முத்துசெல்வம் மது அருந்தும் பழக்கத்தை கைவிட முயற்சி செய்தார். ஆனால் அவரால் மது அருந்தும் பழக்கத்தை கைவிட முடியவில்லை.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம், ராஜபுதூர் தெருவை சேர்ந்தவர் முத்துசெல்வம் (வயது45). தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் இவர் அடிக்கடி மது குடித்து விட்டு போதையில் இருந்து வந்ததால் பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதையடுத்து முத்துசெல்வம் மது அருந்தும் பழக்கத்தை கைவிட முயற்சி செய்தார். ஆனால் அவரால் மது அருந்தும் பழக்கத்தை கைவிட முடியவில்லை. இதனைதொடர்ந்து விரக்தி அடைந்த முத்துசெல்வம் வீட்டில் விஷம் குடித்தார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஏர்வாடி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கிருந்து அவர் நெல்லை அரசு மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுபற்றி அவரது மனைவி தங்கம் (42) களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    • நெல்லை மாவட்டம் களக்காடு சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் ஆண்டு தோறும் ஸ்தோத்திர பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
    • இந்தாண்டுக்கான 30-வது ஸ்தோத்திர பண்டிகை நேற்று தொடங்கியது.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் ஆண்டு தோறும் ஸ்தோத்திர பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான 30-வது ஸ்தோத்திர பண்டிகை நேற்று தொடங்கியது.

    விழிப்புணர்வு ஊர்வலம்

    இதையொட்டி கிறிஸ்தவர்களின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் தொடங்கிய ஊர்வலம், களக்காடு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. ஊர்வலத்தை களக்காடு சேகரகுரு சந்திரகுமார் தொடங்கி வைத்தார். நகராட்சி தலைவர் சாந்தி சுபாஷ் தலைமை தாங்கினார். நகராட்சி சுகாதார ஆய்வாளர் சிதம்பரராமலிங்கம் முன்னிலை வகித்தார்.

    ஊர்வலத்தில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்கள் பச்சை நிற ஆடை அணிந்து அணிவகுத்து சென்றனர். மேலும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்த முழக்கங்கள் எழுப்பியவாறு கைகளில் விழிப்புணர்வு பதாதைகள் ஏந்தி சென்றனர்.

    மரக்கன்றுகள் நடப்பட்டது

    இதில் களக்காடு, தோப்பூர், சிதம்பரபுரம், புதூர், ராமகிருஷ்ணாபுரம், கோவில்பத்து உள்பட 8 சபைகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர், இளைஞர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்கள் பங்கேற்றனர்.

    அதனைத்தொடர்ந்து களக்காடு அண்ணா சாலையில் சுற்றுச்சுழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசார கூட்டம் நடந்தது. முன்னதாக ஆலய வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. ஊர்வலம் கிறிஸ்தவ ஆலயத்தை வந்தடைந்ததும் கொடி ஏற்றப்பட்டது. சேகர குரு சந்திரகுமார் நன்றி கூறினார். ஸ்தோத்திர பண்டிகை நாளை (3-ந்தேதி) வரை தொடர்ந்து நடக்கிறது.

    • பெருமாள் மற்றும் தேவியர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது.
    • கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகளும் நடைபெற்றது.

    களக்காடு:

    களக்காடு வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் பிரம்மோற்சவ திருவிழா விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு விழா முதல் நாளான இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    கொடியேற்றம்

    இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, பெருமாள் மற்றும் தேவியர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பெருமாள் ஸ்ரீ பூமி, நீலா தேவியர்களுடன் முன் மண்டபத்திற்கு எழுந்தருளினார்.

    அதன் பின் கோவில் கொடி மரத்தில் கருடன் படம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடை பெற்றது. முன்னதாக கொடிப் பட்டம் பல்லக்கில் வைக்கப்பட்டு, ரதவீதிகளில் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருக்கல்யாணம்

    இரவில் தோளுக்கினி யான் வாகனத்தில் எழுந்த ருளி வரதராஜபெருமாள் காட்சி அளிக்கிறார். திருவிழாவை முன்னிட்டு தினசரி பகலில் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், இரவில் பல்வேறு வாகனங்களில் பெருமாள் திருவீதி உலா வருதலும் நடக்கிறது.

    விழாவின் 5-ம் நாளான 31-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவில் 2 கருட வாகனங்களில் பெருமாளும், வெங்கடாஜல பதியும் உலா வருகின்றனர்.

    7-ம் நாளான 2-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) மாலை 5 மணிக்கு திருக்கல்யாண விழா நடத்தப்படுகிறது. 8-ம் நாளான 3-ந்தேதி (திங்கட்கிழமை) இரவில் பெருமாள் குதிரை வாகனத்தில் திருவீதி உலா வருகிறார்.

    தேரோட்டம்

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்ட விழா 10-ம் நாளான 5-ந்தேதி (புதன்கிழமை) நடக்கிறது. அன்று மாலை 5 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. 11-ம் நாளான 6-ந் தேதி (வியாழக்கிழமை) தீர்த்தவாரி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை விழா மண்டகப்படிதாரர்கள், கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறு, குளங்கள், அணைகள் நிரம்பி ததும்புகின்றன.
    • நெல்லை மாவட்டம் களக்காடு, திருக்குறுங்குடி சுற்று வட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை இதுவரை சரிவர பெய்யவில்லை என்றே விவசாயிகள் கூறுகின்றனர்.

    களக்காடு:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறு, குளங்கள், அணைகள் நிரம்பி ததும்புகின்றன.

    ஆனால் நெல்லை மாவட்டம் களக்காடு, திருக்குறுங்குடி சுற்று வட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை இதுவரை சரிவர பெய்யவில்லை என்றே விவசாயிகள் கூறுகின்றனர். அவ்வவ்போது பெய்து வரும் மழையினால் பச்சையாறு, உப்பாறு, நாங்குநேரியான் கால்வாய், நம்பியாறுகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.

    இந்த தண்ணீர் குளங்களுக்கு திருப்பி விடப்பட்டு வருகிறது. மழை தீவிரமடையாததால் ஆறுகளில் குறைந்தளவு தண்ணீரே செல்கிறது. இதையடுத்து குளங்கள் நிரம்புவதில் சிக்கல் எழுந்துள்ளது.

    இப்பகுதியில் திருக்குறுங்குடி பெரியகுளம், கோவிலம்மாள்புரம் குளம், சாலைப்புதூர் குளம், பத்மநேரி குளம் உள்பட 100-க்கும் மேற்பட்ட குளங்கள் இன்னும் நிரம்பவில்லை.

    இதேபோல் களக்காடு பச்சையாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை கொட்டவில்லை. மழை இல்லாததால் அணையின் நீர்மட்டமும் உயராமலேயே உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 50 அடி ஆகும். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 13.25 அடியாகவே உள்ளது.

    தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வரத்தும் இல்லை. பச்சையாறு அணையின் மூலம் களக்காடு, நாங்குநேரி பகுதிகளில் உள்ள 110 குளங்களும், 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களும் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலையில் அணை நிரம்பாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். விவசாய பணிகளை தொடங்குவதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.

    மலையடிவார பகுதியில் உள்ள ஒரு சில குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளதால், அப்பகுதியில் மட்டுமே விவசாய பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மழை தீவிரமடைந்தால் மட்டுமே அணைகளும், குளங்களும் நிரம்பும் என்பதால் களக்காடு பகுதி விவசாயிகள் கனமழையை எதிர்நோக்கி உள்ளனர்.

    ஏற்கனவே தென்மேற்கு பருவமழையும் இப்பகுதியில் சரிவர பெய்யாததால் விவசாயம் செழிக்காத நிலையில் வடகிழக்கு பருவமழையும் கண்ணாமூச்சி காட்டி வருவது விவசாயகளுக்கிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கீழவடகரையில் கரடி வேட்டை நடந்ததாக வனத்துறையினர் தோட்டக் காவலாளியை கைது செய்தனர்.
    • கிராம மக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள கீழவடகரையில் கரடி வேட்டை நடந்ததாக வனத்துறையினர் தோட்டக் காவலாளியை கைது செய்தனர்.

    மேலும் 20 பேரை தேடி வருவதாகவும் அறிவித்தனர். ஆனால் வனத்துறையில் நிலவும் பல்வேறு முறைகேடுகள் குறித்தும், வனவிலங்குகள் அட்டகாசத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு கேட்டும் தொடர்ந்து மனுக்கள் கொடுத்து வந்ததன் காழ்புணர்ச்சி காரணமாக வனத்துறை துணை இயக்குனர் ரமேஷ்வரன் கரடி வேட்டை நடந்ததாக பொய் வழக்கு பதிவு செய்து, துன்புறுத்தி வருவதாக கீழவடகரை கிராம மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

    இதுபற்றி மாவட்ட கலெக்டரிடமும் மனு அளித்தனர். இதன் தொடர்ச்சியாக களக்காட்டில் இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கீழவடகரை கிராம மக்கள் சார்பில் வனத்துறை துணை இயக்குனரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    இதில் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் லெட்சுமணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் பெரும்படையார், ஒன்றிய செயலாளர் முருகன், நகர செயலாளர் முத்துவேல், ஒன்றிய துணை செயலாளர் லெனின் முருகானந்தம், பொருளாளர் அயூப்கான், மாநில குழு உறுப்பினர் வேலாயுதம், சுப்பையா, ஐயாகுட்டி, ஜவஹர், கோசிமின், ராமசுப்பு, சுரேஷ், ஸ்ரீதர், வேல்சாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சுந்தர் மற்றும் பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    கை குழந்தையுடன் வந்த பெண்களும் பங்கேற்றனர். அவர்கள் பொய் வழக்கு பதிவு செய்யும் வனத்துறை இயக்குனர் ரமேஷ்வரன் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், பொய் வழக்கை திரும்ப பெற வலியுறுத்தியும், துணை இயக்குனரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

    அத்துடன் அடுத்த கட்டமாக மாநிலம் தழுவிய போராட்டங்கள் நடத்தப் போவதாகவும் அறிவித்தனர். எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆர்ப்பாட்டத்திற்கு களக்காடு போலீசார் கடும் கெடுபிடி செய்ததாகவும் புகார் தெரிவித்தனர். கீழவடகரையில் வனத்துறையின் கிராம வனக்குழு செயல்பட்டு வருகிறது.

    இந்த வனக்குழு தலைவர் பாலன் மற்றும் கிராம மக்கள் வனப்பகுதியில் காட்டு தீ விபத்துகள் ஏற்பட்ட போது, அதனை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வனக்குற்றங்களை தடுப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். இதனால் கடந்த 2019-2020 ஆண்டில் சிறந்த வனக்குழுவாக கீழவடகரை கிராம வனக்குழு தேர்வு செய்யப்பட்டு, வனத்துறை அதிகாரிகள் விருது வழங்கியுள்ளனர்.

    தற்போது அந்த குழுவின் தலைவர் பாலன் மற்றும் கீழவடகரை கிராம மக்கள் மீதே பொய் வழக்கு போட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வர்கள் அந்த விருதுடன் கலந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வடிவேலுவுக்கு பார்வதி என்ற மனைவியும், 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர்.
    • சோகத்தில் இருந்த வடிவேல் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள வடுகச்சிமதில் மேலகாட்டை சேர்ந்தவர் வடிவேல். விவசாயி. இவருக்கு பார்வதி என்ற மனைவியும், 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர். கடந்த சில நாட்களாக வடிவேல் விவசாய வேலைக்கு செல்லாமல் இருந்தார். இதனை அவரது மனைவி பார்வதி கண்டித்துள்ளார். இதனால் சோகத்தில் இருந்த வடிவேல் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. ஏர்வாடி இன்ஸ்பெக்டர் ஆதம் அலி, திருக்குறுங்குடி சப்-இன்ஸ்பெ க்டர் சுப்பு ராமகிருஷ்ணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • களக்காட்டில்3-வது கட்டமாக பெண்களுக்கு இலவச தையல் அழகு கலை பயிற்சி தொடக்க விழா நடந்தது
    • திட்டத்தின் கீழ் 263 கிராம வனக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

    களக்காடு:

    களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு கோட்டம், திருக்குறுங்குடி சூழல் சரகத்தின் சார்பில், களக்காட்டில்3-வது கட்டமாக பெண்களுக்கு இலவச தையல் அழகு கலை பயிற்சி தொடக்க விழா, கிராம வனக்குழு உறுப்பினர்களுக்கு கடனுதவி வழங்கும் விழா நடந்தது.

    களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு திட்ட அதிகாரியும், துணை வனபாதுகாவலருமான அன்பு தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார்.

    மேலும் கிராம வனக்குழு உறுப்பினர்களுக்கு கடனுதவிகளையும், மண்டல அளவிலான இறகு பந்து போட்டியில் வெற்றி பெற்ற களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இறகு பந்துகளையும் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தியாவிலேயே களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் தான் 25 ஆண்டுகளாக சூழல்மேம்பாட்டு திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் 263 கிராம வனக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 17 ஆயிரமாக உயர்ந்துள்ளது. 20 கோடி நிதியும் உள்ளது.

    பெண்களை மதிப்புமிக்கவர்களாக, மரியாதைக்குரியவர்களாக மாற்ற வேண்டும், அவர்கள் திறமையை வெளி கொண்டு வர வேண்டும், பெண்களுக்கு தன்நம்பிக்கையை கொடுக்க வேண்டும். அவர்கள் தங்களது சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதே வனத்துறையின் நோக்கமாகும்.

    இதற்காகத்தான் இந்த தையல் அழகு கலை பயிற்சியை அளித்து வருகிறோம். கிராமங்களில் பெண்கள் பீடி சுற்றும் தொழிலில் ஈடுபடுகின்றனர். இந்த தொழிலுக்கு மாற்றாக தையல் அழகு கலை பயிற்சியை தொடங்கியுள்ளோம். இதன் மூலம் பெண்களின் பொருளாதார நிலை மேம்படும்.

    பயிற்சி பெற்ற பெண்களுக்கு சூழல் மேம்பாட்டு திட்ட அலுவலகங்கள் மூலம் ஆர்டர் எடுத்து கொடுக்கப்படும். இதனை கிராம தொழிலாக மாற்றுவதே வனத்துறையின் லட்சியமாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் வன சரகர்கள் மீனா (திருக்குறுங்குடி சூழல் சரகம்), யோகேஸ்வரன் (திருக்குறுங்குடி), சிவலிங்கம் (கோதையாறு), களக்காடு நகராட்சி தலைவர் சாந்தி சுபாஷ், ஒய்வு பெற்ற ஆசிரியர் கோமதிநாயகம், பள்ளி தாளாளர் கல்யாண சுந்தரம், நகராட்சி கவுன்சிலர்கள் ஆயிஷா லக்கிராஜா, முகம்மது அலி ஜின்னா, சூழல் திட்ட வனவர்கள் திருக்குறுங்குடி அப்துல்ரஹ்மான், களக்காடு சிவக்குமார் மற்றும் வனத்துறை அதிகாரிகள், கிராம வனக்குழு தலைவர்கள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இசக்கியம்மாள் நன்றி கூறினார்.

    • களக்காடு அருகே உள்ள கீழப்பத்தை பச்சையாறு தடுப்பணையை யொட்டி செல்லும் கால்வாயில் நேற்று காலை 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோத னைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தினர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள கீழப்பத்தை பச்சையாறு தடுப்பணையை யொட்டி செல்லும் கால்வாயில் நேற்று காலை 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது.

    வியாபாரி பலி

    அந்த வழியாக சென்ற விவசாயிகள் இதனை பார்த்து களக்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து களக்காடு இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன், சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோத னைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தினர்.

    இதில் சடலமாக கிடந்தது மஞ்சுவிளையை சேர்ந்த பன்னீர் மகன் தவசிகனி (வயது 55) என்பது தெரியவந்தது. இவர் பன் மற்றும் தின்பண்டங்கள் விற்பனை செய்து வந்தார். இவருக்கு ராணி என்ற மனைவியும், 1 மகனும், 1 மகளும் உள்ளனர். இவர் நேற்று முன் தினம் மாலையில் வீட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றுள்ளார்.

    அதன்பின் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில் அவர் கால்வாயில் சடலமாக கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவர் கால்வாயில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பலியானதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • களக்காடு அருகே உள்ள டோனாவூரை சேர்ந்தவர் ஜெபராஜ்
    • இவர் நேற்று தனது காரில் களக்காட்டில் இருந்து மாவடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள டோனாவூரை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 42). இவர் நேற்று தனது காரில் களக்காட்டில் இருந்து மாவடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    களக்காட்டை அடுத்த மேல சாலைப்புதூர் அருகே சென்றபோது கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது அந்த வழியாக நடந்து சென்ற அதே பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவரது மனைவி ஸ்ரீதேவி மீது மோதியது.

    பின்னர் அங்கு சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் பயங்கர சத்தத்துடன் கார் மோதியது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த ஜெபராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ஸ்ரீதேவி சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • களக்காடு அருகே உள்ள இடையன்குளம் காலனி தெருவை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது49). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஜெயராணி.
    • கடந்த 31-ந்தேதி பொன்ராஜ் வேலைக்கு சென்று விட்டார். மாலையில் வீட்டிற்கு வந்த போது ஜெயராணியை காணவில்லை.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள இடையன்குளம் காலனி தெருவை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது49). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஜெயராணி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஜெயராணிக்கு கடந்த 8 ஆண்டுகளாக உடல்நல பாதிப்புக்காக அவர் நெல்லை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கடந்த 31-ந்தேதி பொன்ராஜ் வேலைக்கு சென்று விட்டார். மாலையில் வீட்டிற்கு வந்த போது ஜெயராணியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பல்வேறு இடங்களில் தேடியும் ஜெயராணி குறித்து தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜோசப்ஜெட்சன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி மாயமான ஜெயராணியை தேடி வருகிறார்.

    ×