என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Varatharaja Perumal Ttemple"

    • ஆலயக் கருவறையில் வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் காட்சியளிக்கிறார்.
    • ஆலயத்தின் ஏழாவது வீதியில் சித்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது.

    இந்திரனின் சாபத்தைப் போக்க, மகாவிஷ்ணு கூர்ம அவதாரம் (ஆமை வடிவம்) எடுத்தத் தலமாக, இலங்கையின் பொன்னாலை ஆலயம் விளங்குகின்றது. இத்தலத்தில் முதன்மை பெற்று விளங்கும் வரதராஜப் பெருமாள் ஆலயத்தை முன்னோர்கள் 'பொன் ஆலயம்' என்று அழைத்து வந்ததாகவும், அப்பெயரே மருவி, தற்பொழுது 'பொன்னாலை' என அழைக்கப்பெறுவதாகவும் செவிவழிக் கதைகள் கூறுகின்றன. இத்தலத்தில் பொன் ஆமையாக திருமால் அவதாரம் எடுத்ததால், பொன் ஆமையே `பொன்னாலை' என மருவியதாகவும் கூறுகின்றனர்.

    தல புராணம்

    முற்காலத்தில் துர்வாச முனிவரால் இந்திரன் சாபம் பெற்று நீசத்தன்மையை அடைந்தான். அப்போது இந்திரன், ''நான் செய்த பிழையைப் பொறுத்து, சாபம் நீங்க அருள வேண்டும்'' என்று துர்வாச முனிவரை நோக்கி வேண்டினான்.

    இதையடுத்து மனம் இரங்கிய துர்வாச முனிவர், ''சேது சமுத்திரம் நடுவில் இருக்கும் இலங்கையில் பொன்னாலயம் என்னும் பட்டினத்தில் மீனவர் குலத்திலே நீ பிறப்பாய். அப்போது வாசுதேவர் கூர்ம அவதாரம் எடுப்பார். அக்கூர்மம் உன் வலையில் பிடிபடும். அந்த ஆமையின் உடலைத் தொட்டவுடன் உன் சாபம் நீங்கும்'' என்று துர்வாச முனிவர் கூறினார்.

     

    கல் ஆமை

    அதன்படி, இத்தலத்தில் மீனவராகப் பிறந்த இந்திரன் ஒரு நாள், தற்போது ஆலயம் அமைந்துள்ள இடத்திற்கு அருகில் உள்ள கடலில் வலை வீசினான். வலையில் ஒரு பொன்னிற ஆமை ஒன்று அகப்பட்டது. அதனை அவனால் தனித்து கரை சேர்க்க முடியவில்லை. தன் இனத்தவரின் துணையை நாடி, அவர்களை அழைத்து வந்தான். அப்போது வானத்தில் பொன்னொளி வீசும் விமானம் ஒன்று காணப்பட்டது.

    அதனைக் கண்டு அதிசயம் அடைந்தவர்களாய் ஆமையின் அருகே விரைவாகச் சென்றடைந்தார்கள். அந்த சமயத்தில் அந்த ஆமை கல்லாய் மாறி இருப்பதைக் கண்டார்கள். இது என்ன அதிசயம் என்று வியந்தார்கள். பின்பு, அவர்கள் அனைவரது மனதிலும், இந்த ஆமை லட்சுமியின் நாயகனான நாராயணரே என்றும், ஒளிவீசும் விமானமும் அவருடையதே என்றும் உணர்ந்தனர். அதனால், நாராயணரின் பிரதிஷ்டைக்குரிய இந்த இடத்திலே நல்ல நாளில், நல்ல முகூர்த்தத்தில், வைகாசன ஆகமப்படி பிரதிஷ்டை செய்ய முடிவு செய்தனர். அதன்படி, விஷ்ணுவை பிரதிஷ்டை செய்து, அவரை வரதராஜப் பெருமாள் என்ற பெயரில் வழிபட்டார்கள்.

    அவர்கள் பொன்னாலை ஆண்டவன் கருணையினால் அதிக மகிழ்ச்சி கொண்டவர்களாய் நித்திய பூஜையையும், நைமித்திய பூஜையையும் நடத்தி வந்தார்கள் என்கிறது புராணம்.

     

    கோவில் தோற்றம் - உற்சவர்

    ஆலய அமைப்பு

    இவ்வாலயம் குளக்கோட்டன் எனும் மன்னனால் பிரமாண்டமாக எழுப்பப்பட்டது. கி.பி. 16-ம் நூற்றாண்டில் ஏழு சுற்றுப் பிரகாரங்களுடன் அமைந்திருந்தது. ஆனால், இப்பெரிய கோவிலை போர்ச்சுகீசியர்கள் இடித்து அழித்தனர். இன்றுள்ள கோவில் பிற்காலத்தில் அமைக்கப்பட்டதாகும். ஆனாலும் பழைய அடையாளங்கள் இன்றும் உள்ளன. இடிக்கப்பட்ட கற்களைக் கொண்டு யாழ்ப்பாணம் கோட்டை மற்றும் சங்காணைக் கோட்டைகள் கட்டப்பட்டதை வரலாறு கூறுகின்றது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் புனரமைக்கப்பட்ட ஆலயங்களில் ஒன்றாக இந்த பொன்னாலை வரதராஜப் பெருமாள் கோவிலும் உள்ளது.

    இந்த கோவிலில் அமையப்பெற்ற 108 அடி உயரமான ராஜகோபுரமே யாழ்ப்பாணத்தில் அதிக உயரம் கொண்ட கோபுரமாக விளங்குகின்றது. ஆலயச் சுற்றில் நாகதம்பிரான், மகாலட்சுமி, சனீஸ்வரன், நவக்கிரங்கள் ஆகியோரது சன்னிதிகள் அமைந்துள்ளன. இந்த ஆலயத்தில் ராஜ கோபுரத்தின் மூன்றாம் பிரகாரத்தில் நரசிங்க பைரவர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.

    ஆலயக் கருவறையில் வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் காட்சியளிக்கிறார். தனியான மண்டபத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பள்ளிகொண்ட பெருமாளையும் தரிசிக்கலாம். இங்கு கன்னிமூலையில் மகாலட்சுமி கோவில் அமைந்துள்ளது. தன்வந்திரி பகவான், ஆஞ்சநேயர், இந்திரனால் கொண்டு வரப்பட்ட ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜர் (ஸ்ரீனிவாசன்) உற்சவ மூர்த்திகளாக விளங்குகின்றனர். ஆலயத்தின் ஏழாவது வீதியில் சித்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இவரை வணங்கிய பிறகே வரதராஜப் பெருமாளை தரிசிக்க வேண்டும் என்பது மரபாகும்.

    ஆலய தல வரலாற்றுடன் தொடர்புடையதாக கூறப்படும் கல் ஆமை இன்றும் கருவறைக்குள் வைத்து பாதுகாக்கப்பட்டு, வணங்கப்பட்டு வருகின்றது. நிர்வாகத்தின் அனுமதி பெற்று இந்தக் கல் ஆமையை தரிசித்து மகிழலாம். இத்தலத்தின் தனிச் சிறப்பாக 41 அடி உயரத்தில் ஆறு சக்கரங்களைக் கொண்ட பிரமாண்ட திருத்தேர் அமைந்துள்ளது. இதில் தசாவதார காட்சிகள் உள்ளிட்ட புராண சிற்பங்கள் நிறைந்துள்ளன. இது இந்தியாவில் உள்ள மரங்களைக் கொண்டு இந்திய சிற்பிகளால் செய்யப்பட்ட தேராகும்.

    சந்தான கோபாலருக்கு அருகே ஓர் வன்னி மரமும், வடக்கு புறத்தில் மற்றொரு வன்னி மரமும் அமைந்துள்ளன. இவை கல்யாண வரத்திற்கும், குழந்தைப் பேறுக்கும் உகந்த மரங்களாக பக்தர்கள் வணங்குகின்றனர்.

    விழாக்கள்

    ஆண்டுதோறும், ஆவணி மாதத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு 19 நாட்களும், மார்கழியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாட்களும் என இரண்டு பிரமோற்சவங்கள் நடைபெறுகின்றன. கடலில் ராமர் பாதம் வைத்த இடமான (இந்து மகாசமுத்திரம்) திருவடி நிலை எனும் மண்டபத்தில் தை அமாவாசை, மாசிமகம் ஆகிய நாட்களில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகின்றன.

    இக்கோவிலில் ஐந்து கால பூஜைகள் நடைபெறுகின்றன. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் இருந்து இலங்கை வந்த பரம்பரையினர் இங்கு நடைபெறும் பூஜைகளை செய்து வருகின்றனர்.

    இவ்வாலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்ற நேரத்தில் கருடன் வானத்தில் பறந்து இவ்வாலயத்தைச் சுற்றி வந்து செல்வது தனிச்சிறப்பாகும்.

    காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையும் ஆலய தரிசனம் செய்யலாம்.

    அமைவிடம்

    இலங்கையின் வடக்கு மாகாணம் யாழ்ப்பாண மாவட்டத்தில், யாழ்ப்பாணத்திற்கு மேற்கே சுமார் 15 கி.மீ. தொலைவில், கடலும் கடல் சார்ந்த நெய்தல் நிலத்தில் பொன்னாலை அமைந்துள்ளது.

    • பெருமாள் மற்றும் தேவியர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது.
    • கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகளும் நடைபெற்றது.

    களக்காடு:

    களக்காடு வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் பிரம்மோற்சவ திருவிழா விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு விழா முதல் நாளான இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    கொடியேற்றம்

    இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, பெருமாள் மற்றும் தேவியர்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பெருமாள் ஸ்ரீ பூமி, நீலா தேவியர்களுடன் முன் மண்டபத்திற்கு எழுந்தருளினார்.

    அதன் பின் கோவில் கொடி மரத்தில் கருடன் படம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடை பெற்றது. முன்னதாக கொடிப் பட்டம் பல்லக்கில் வைக்கப்பட்டு, ரதவீதிகளில் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருக்கல்யாணம்

    இரவில் தோளுக்கினி யான் வாகனத்தில் எழுந்த ருளி வரதராஜபெருமாள் காட்சி அளிக்கிறார். திருவிழாவை முன்னிட்டு தினசரி பகலில் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், இரவில் பல்வேறு வாகனங்களில் பெருமாள் திருவீதி உலா வருதலும் நடக்கிறது.

    விழாவின் 5-ம் நாளான 31-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவில் 2 கருட வாகனங்களில் பெருமாளும், வெங்கடாஜல பதியும் உலா வருகின்றனர்.

    7-ம் நாளான 2-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) மாலை 5 மணிக்கு திருக்கல்யாண விழா நடத்தப்படுகிறது. 8-ம் நாளான 3-ந்தேதி (திங்கட்கிழமை) இரவில் பெருமாள் குதிரை வாகனத்தில் திருவீதி உலா வருகிறார்.

    தேரோட்டம்

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்ட விழா 10-ம் நாளான 5-ந்தேதி (புதன்கிழமை) நடக்கிறது. அன்று மாலை 5 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. 11-ம் நாளான 6-ந் தேதி (வியாழக்கிழமை) தீர்த்தவாரி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை விழா மண்டகப்படிதாரர்கள், கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    ×