search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வீரமாமுனிவா் சிலையுடன் மணிமண்டபம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
    X

    வீரமாமுனிவா் சிலையுடன் மணிமண்டபம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

    • ஒரு அரங்கத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
    • பெரும்புலவர் கணியன் பூங்குன்றனார் நினைவுத்தூணையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

    சென்னை:

    இத்தாலிய நாட்டைச் சேர்ந்த கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்ற இயற்பெயரை கொண்ட வீரமாமுனிவர், கிறித்தவ சமயத் தொண்டாற்றுவதற்காக மதுரை வந்து தமது சமயப்பணிக்கு தமிழ் மொழியறிவு மிகவும் இன்றியமையாதது என்பதை உணர்ந்து, தமிழ் கற்கத் தொடங்கி தமிழராகவே மாறி, தமிழ் மேதையாக உருவெடுத்தார்.

    "தமிழ் அகராதியின் தந்தை" எனப் போற்றப்படும் வீரமாமுனிவர் , திருக்குறள் அறத்துப் பாலையும். பொருட்பாலையும் லத்தீன் மொழியில் மொழி பெயர்த்தது, "குட்டி தொல்காப்பியம்" என்று புகழப்படும் தொன்னூல் விளக்கத்தை படைத்தது, இயேசு நாதரின் வரலாற்றைத் தேம்பாவணி எனும் காவியமாக உருவாக்கியது, திருக்காவலூர்க் கலம்பகம், அடைக்கல மாலை, அன்னை அழுங்கல் அந்தாதி, கித்தேரியம்மாள் அம்மானை முதலிய சிற்றிலக்கியங்களை படைத்தது, என தமிழ் மொழிக்கு வீரமாமுனிவர் ஆற்றியுள்ள மாபெரும் தொண்டுகளைப் போற்றிடும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் தூத்துக்குடி மாவட்டம், காமநாயக்கன்பட்டி கிராமம், புனித பரலோக மாதா ஆலய வளாகத்தில் 1 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள வீரமா முனிவரின் திருவுருவச் சிலையுடன் கூடிய மணி மண்டபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை நினைவை போற்றிடும் வகையில், நாமக்கல் நகரில் உள்ள நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லத்தில் 20 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள அவரது மார்பளவுச் சிலையினையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், மகிபாலன்பட்டியில் 276.75 சதுர அடி பரப்பளவில் 23.26 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள பெரும்புலவர் கணியன் பூங்குன்றனார் நினைவுத்தூணையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    புதிதாக நிறுவப்படவுள்ள 3 சுதந்திர போராட்ட வீராங்கனை வீரத்தாய் குயிலி திருவுருவச் சிலை, சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்குவேலி அம்பலம் திருவுருவச்சிலை, சுதந்திர போராட்ட வீரர் வெண்ணி காலாடி திருவுருவச் சிலை, அண்ணல் காந்தியடிகள் மற்றும் தோழர் ஜீவா சந்திப்பின் நினைவாக அரங்கம் என மொத்தம் 4 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள 3 திருவுருவச் சிலைகள் மற்றும் ஒரு அரங்கத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன், பி. கீதா ஜீவன், அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, செய்தித்துறை செயலாளர் இரா. செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் த.மோகன் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அருள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×