search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை... கணக்கில் வராத ரூ.1.32 லட்சம் ரொக்கம் பறிமுதல்
    X

    சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை... கணக்கில் வராத ரூ.1.32 லட்சம் ரொக்கம் பறிமுதல்

    • ஒவ்வொரு பத்திரப்பதிவு முடிந்த பின்னரும், சார்பதிவாளரின் உதவியாளர் வெளியில் வந்தபடியே இருந்தார்.
    • திடீரென உள்ளே நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே நாகம்மாபுதூரில் சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்த சார்பதிவாளர் அலுவலகத்தில், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தினமும் பத்திரப்பதிவுகள் நடப்பது வழக்கம்.

    இந்த நிலையில் இந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில், அன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலங்களை ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் மூலமாக லஞ்சம் பெற்றுக்கொண்டு ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவுகள் நடந்து வருவதாக கடந்த ஒரு மாத காலமாக கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

    இதையடுத்து கோவை லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி. திவ்யா தலைமையிலான போலீசார் நேற்று காலை அன்னூர் நாகம்மாபுதூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு, திறப்பதற்கு முன்பே சாதாரண உடையில், சாதாரண காரில் சென்றனர்.

    காலை 10 மணிக்கு சார்பதிவாளர் அலுவலகம் திறக்கப்பட்டது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார், பத்திரப்பதிவு அலுவலகத்தில் என்னென்ன நடக்கிறது என்பதை கண்காணித்த படியே இருந்தனர்.

    அப்போது ஒவ்வொரு பத்திரப்பதிவு முடிந்த பின்னரும், சார்பதிவாளரின் உதவியாளர் வெளியில் வந்தபடியே இருந்தார்.

    அப்படி வரும் அவர், அங்கு தனியார் இ-சேவை மையம் நடத்தி வருபர்களிடம் ஏதோ பேசி கொண்டும், அதனை தொடர்ந்து கையில் பையுடனும் உள்ளே சென்ற வண்ணம் இருந்தார்.

    இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக கண்காணித்தபடி இருந்தனர்.

    மாலை 4 மணிக்கு எல்லாம் பத்திரப்பதிவுகள் முடிந்து விடும். ஆனால் இந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் மட்டும் மாலை 6.30 மணியை தாண்டியும் பத்திரப்பதிவுகள் நடந்த வண்ணம் இருந்தது.

    இரவாகியும் யாரும் வீட்டிற்கு செல்லவில்லை. இதையடுத்து காலை முதல் இரவு வரை சார்பதிவாளர் அலுவலகத்தில் நடக்க கூடியவற்றை கண்காணித்து கொண்டிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இரவு 8.30 மணிக்கு ஏ.டி.எஸ்.பி திவ்யா தலைமையில், சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.

    அப்போது அங்கு அதிகாரிகள் பணத்தை பங்கு போடுவதற்கு தயாராக இருந்தனர்.

    திடீரென உள்ளே நுழைந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

    இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பதிவாளர் அலுவலகத்தின் கதவுகளை மூடினர்.

    மேலும் அங்கிருந்தவர்கள் யாரையும் வெளியில் செல்வதற்கு அனுமதிக்கவில்லை. அவர்கள் வைத்திருந்த செல்போன்களையும் பறிமுதல் செய்து கொண்டனர்.

    தொடர்ந்து அலுவலகம் முழுவதும் அங்குலம், அங்குலமாக அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது, அங்கு கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் பணம் இருப்பது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அலுவலகத்தில் கடந்த 6 மாத காலமாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட ஆவணங்களையும் சரிபார்த்தனர். முக்கிய ஆவணங்களையும் எடுத்து கொண்டனர். அங்கிருந்த அதிகாரிகளிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

    இதேபோல், சார்பதிவாளர் அலுவலகம் எதிரே உள்ள தனியார் இ-சேவை மையத்திலும் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அங்கிருந்து ரூ.49 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் பணத்திற்கான உரிய ஆவணங்களை காண்பித்ததால் அந்த பணத்தை அவர்களிடம் திரும்ப ஒப்படைத்தனர்.

    தொடர்ந்து சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். இரவு 8.30 மணிக்கு தொடங்கிய சோதனையானது இன்று காலை 9 மணிக்கு தான் நிறைவு பெற்றது. 12 மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனையானது நீடித்தது.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து முக்கிய ஆவணங்களையும், கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 32 ஆயிரத்தை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் இது சம்பந்தமாக , லஞ்சம் வாங்கியவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட பத்திரப்பதிவுத்துறைக்கு பரிந்துரை செய்ய உள்ளனர்.

    சார்பதிவாளர் அலுவலகத்தில் விடிய, விடிய நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையானது அன்னூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×