என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பயணிகளை மூச்சுமுட்ட வைக்கும் மூலக்கடை சந்திப்பு நெரிசல்
    X

    பயணிகளை மூச்சுமுட்ட வைக்கும் மூலக்கடை சந்திப்பு நெரிசல்

    • மாதவரம் பஸ்கள் நிறுத்தப்படும் பஸ் நிறுத்தம் ஷேர் ஆட்டோக்களின் நெருக்கடியால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
    • மூலக்கடை சந்திப்பு பகுதியில் ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் அனைத்தையும் வரைமுறைப்படுத்த வேண்டும்.

    சென்னை நகர மக்களின் முக்கிய பிரச்சினையாக போக்குவரத்து நெரிசல் உள்ளது. அகலப்படுத்தப்படும் சாலைகள், மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டாலும் அதிகரித்து வரும் வாகன பெருக்கத்தால் போக்குவரத்து நெரிசலை முற்றிலும் குறைக்க முடியவில்லை.

    காலை மற்றும் மாலை நேரங்களில் சென்னை நகருக்குள் குறிப்பிட்ட நேரத்திற்குள் சாலை மார்க்கமாக எந்த இடத்திற்கும் செல்ல முடியாத நிலையே உள்ளது. தற்போது மெட்ரோ ரெயில் பணிகள் காரணமாக அனைத்து சாலைகளுமே வாகன நெரிசலில் சிக்கி சவாலாக மாறி இருக்கிறது.

    இதேபோல் சாலை விதிகள் மற்றும் சிக்னலை மதிக்காமல் செல்வது, வாகனங்களின் முன் சென்று சிக்னலில் நிறுத்துவது, குறிப்பிட்ட வழித்தடத்தில் செல்லாமல் மற்ற வழித்தடத்தில் செல்வது என்று அத்துமீறும் வாகன ஓட்டிகளாலும் தினந்தோறும் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    குறிப்பாக, சென்னையில் ஆட்டோக்களை எவ்வளவு தான் வரைமுறைப்படுத்தினாலும் டிரைவர்கள் தங்களுக்கு சவாரி கிடைக்க வேண்டும் என்பதற்காக சாலையில் குறுக்கே அத்துமீறி செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. குறிப்பாக வடசென்னையில் மூலக்கடை சந்திப்பு அருகே மேம்பாலம் கட்டிய பிறகும் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள 4 இடங்களிலும் ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களால் தினம்தோறும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஸ்தம்பிக்கும் நிலை அரங்கேறி வருகிறது.

    மூலக்கடை சந்திப்பு என்பது மாதவரம் நெடுஞ்சாலை- ஜி.என்.டி.சாலை சந்திக்கும் இடத்தில் 4 வழிகளை இணைக்கும் ஒரு முக்கிய சாலையாக திகழ்கிறது. இங்குள்ள மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இருந்து 4 வழித்தடங்களில் ஆட்டோக்கள் மற்றும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. மூலக்கடை பகுதியில் இருந்து பெரம்பூர் பகுதிக்கு செல்வதற்கு ஒரு வழியும், மாதவரம் ரவுண்டானா செல்வதற்கு மற்றொரு வழியும், மணலி செல்வதற்கு ஒரு வழியும், எருக்கஞ்சேரி செல்வதற்கு ஒரு வழியும் என 4 வழிகளில் பஸ்கள் மற்றும் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இதற்காக அங்கு பஸ் நிறுத்தங்களும் உள்ளன.

    இந்த 4 வழிகளிலும் சாலையோரங்களில் ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் தினமும் அணிவகுத்து நிற்பதால் பஸ்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகிறார்கள்.

    புதிதாக அமைக்கப்பட்ட மேம்பாலத்தை வாகனங்கள் அதிக அளவு பயன்படுத்தாததால் மூலக்கடை சந்திப்பு எப்போதும் போல் போக்குவரத்து நெரிசலுடனே காணப்படுகிறது.

    மாதவரம் பஸ்கள் நிறுத்தப்படும் பஸ் நிறுத்தம் ஷேர் ஆட்டோக்களின் நெருக்கடியால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். சாலையின் குறுக்கே நடந்து செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் சம்பவமும் நடந்து வருகிறது.

    எனவே மூலக்கடை சந்திப்பில் ஆட்டோக்களை வரைமுறைப்படுத்தி போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுகுறித்த அப்பகுதி வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

    மூலக்கடை சந்திப்பு பகுதியில் ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்கள் அனைத்தையும் வரைமுறைப்படுத்த வேண்டும். ஆட்டோ டிரைவர்குளுக்கு இடையே சவாரி ஏற்றுவதில் உள்ள போட்டி காரணமாக வரிசையில் நிற்காமல் தங்களது ஆட்டோக்களை அவர்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு நிறுத்தி சவாரி ஏற்றுவதால் தினமும் காலை மற்றும் மாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் இந்த 4 முனை சந்திப்பில் ஒவ்வொரு இடத்திலும் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது.

    அவசரத்திற்கு ஆம்புலன்சுகள் கூட செல்ல முடியாமல் சிக்கி தவிக்கின்றன. போக்குவரத்து போலீசார் பலமுறை ஆட்டோ டிரைவர்களை கண்டித்தும் வழக்குகள் பதிவு செய்தாலும் இது நீடித்து வருகிறது.

    எனவே மூலக்கடை சந்திப்பிலும், ஆட்டோ டிரைவர்களை வரைமுறைப்படுத்தி போக்குவரத்து நெரிசலை தீர்க்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×