search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடத்த முடிவு
    X

    தமிழகத்தில் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடத்த முடிவு

    • தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது
    • தேர்தல் தேதி அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தலைமை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

    கடந்த 2019-ம் ஆண்டு நடத்தப்பட்டது போல நாடு முழுவதும் 7 கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடத்த திட்டமிடப்படுகிறது. தேர்தல் பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பது குறித்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு மாநிலத்திலும் பள்ளி தேர்வுகள், பண்டிகைகள் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகள் எப்போது வருகின்றன என்பது பற்றி தேர்தல் ஆணையம் ஆய்வு செய்துள்ளது. அதன் அடிப்படையில் தேர்தல் தேதி அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த அட்டவணை அடுத்த மாதம் இறுதியில் அல்லது மார்ச் மாதம் தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று தெரிகிறது. தேர்தல் அட்டவணை வெளியானதும் ஒவ்வொரு மாநிலத்திலும் எந்தெந்த தேதிகளில் எத்தனை கட்டங்களாக தேர்தல் நடக்கும் என்பது தெரிய வரும்.

    மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் இருக்கும் மாநிலங்களில் பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதுபோல பெரிய மாநிலங்களிலும் பல கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடத்தப்படும். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் சுமூகமான சூழ்நிலை எப்போதும் காணப்படும்.

    இதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் எப்போதும் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடத்துவது வழக்கில் உள்ளது. எனவே இந்த தடவையும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.


    இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகிறது.

    இதற்கிடையே தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. துணை நிலை ராணுவத்தினர் எத்தனை கம்பெனி தேவைப்படுவார்கள் என்பது பற்றியும் அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

    மேலும் தேசிய தலைவர்கள் பிரசாரத்துக்கு வரும்போது செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் இப்போதே திட்டமிடப்பட்டு வருகிறது. அதுபோல மின்னணு எந்திரங்கள் அனைத்தும் தயார் நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

    தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த வேண்டிய அதிகாரிகளின் பட்டியலும் தயார் செய்யப்பட்டு வருகிறது. அவர்களுக்கு பயிற்சி அளிப்பது பற்றியும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் தேர்தல் பணியில் தொடர்புடைய அலுவலர்கள், ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தால் அவர்களை வருகிற 31-ந் தேதிக்குள் இடமாற்றம் செய்ய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவுறுத்தி உள்ளார்.

    இது குறித்து அரசு துறை செயலாளர்களுக்கு அவர் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    தேர்தல் பணியில் நேரடியாக தொடர்புடைய அலுவலர்கள், சொந்த மாவட்டத்தில் பணிபுரிந்தால், அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும்.

    ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தால் வருகிற ஜூன் மாதம் 30-ந் தேதி 3 ஆண்டுகள் நிறைவடைவதாக இருந்தாலும், அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும்.

    பதவி உயர்வு அளிக்கப்பட்டு ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றினாலும் இடமாற்றம் செய்ய வேண்டும். வாக்காளர் பட்டியல் தயாரிப்பு போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள், தலைமை தேர்தல் அதிகாரி ஒப்புதல் பெற்ற பின் அப்பணியில் தொடர அனுமதிக்கலாம். வேறு ஏதேனும் காரணத்துக்காக ஒருவர் அப்பணியில் தொடர வேண்டுமானால் தேர்தல் கமிஷன் ஒப்புதல் அவசியம்.

    ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோர் 6 மாதங்களில் ஓய்வு பெறுவதாக இருந்தால் அவர்களுக்கு விலக்கு அளிக்கலாம். ஆனால் அவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது.

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தாசில்தார்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் போன்றோர், அதே மாவட்டத்திற்குள் இடமாற்றம் செய்யப்படலாம். ஆனால் அவர்கள் வீடு உள்ள சட்டசபை தொகுதியில் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது. ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் இருப்போரை வருகிற 31-ந்தேதிக்குள் இட மாற்றம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    தேர்தல் ஆணையத்தின் இத்தகைய நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் சூடுபிடிக்க தொடங்கி உள்ளன.

    Next Story
    ×