search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Investor Conference"

    • உலக முதலீட்டாளர்கள் மாநாடு இந்த மாதம் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரு தினங்களில், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
    • பயண திட்ட ஏற்பாடுகள் தொழில் துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டின் பொருளாதாரம் 2030-ம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி அடைந்திட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒரு லட்சிய இலக்கினை நிர்ணயித்து உள்ளார்.

    இதன் பொருட்டு, கடந்த இரண்டரை ஆண்டுகளாகவே சிறந்து விளங்கும் முதலீட்டுச் சூழலை மேம்படுத்தும் வகையிலும், மாநிலத்தின் வலுவான தொழில் சூழலமைப்பு மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் மனித வளத்தை, உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு அறியப்படுத்தும் வகையிலும், சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இந்த மாதம் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய இரு தினங்களில், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.

    இம்மாநாட்டினை. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்து இரு தினங்களும் பங்கேற்றார்.

    மத்திய வர்த்தகம் மற்றும் தொழில், நுகர்வோர், ஜவுளித்துறை அமைச்சர் பியுஷ் கோயல் சிறப்பு விருந்தினராக இம்மாநாட்டில் கலந்து கொண்டார்.

    தலைமைத்துவம், நீடித்த நிலைத்தன்மை மற்றும் அனைவரையும் கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு இம்மாநாடு நடத்தப்பட்டது.

    இந்நிகழ்வில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்சு, ஜெர்மனி, டென்மார்க், சிங்கப்பூர் மற்றும் தென்கொரியா ஆகிய 9 நாடுகள் பங்குதாரர் நாடுகளாகவும், மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தாய்பெய் பொருளாதார மற்றும் சர்வதேச பங்குதாரர்களாக தமிழ்நாடு அரசுடன் இணைந்து செயல்பட்டன.

    உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் இரண்டு தினங்களில், முன் எப்போதும் இல்லாத அளவில் 6,64,180 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள். 14,54,712 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு உள்ளிட்ட மொத்தம் 26,90,657 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தும் வகையில் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இம்முதலீடுகள் பல்வேறு துறைகளில் இருந்து வரப்பெற்று உள்ளன. குறிப்பாக, மேம்பட்ட மின்னணுப் பொருட்கள் உற்பத்தி, பசுமை எரிசக்தி, தோல் அல்லாத காலணிகள், மோட்டார் வாகனங்கள் மற்றும் மின் வாகனங்கள், வான்வெளி மற்றும் பாது காப்பு, தரவு மையங்கள், திறன்மிகு மையங்கள் மற்றும் தகவல் தொழில் நுட்பம் போன்ற துறைகளில் மேற்கொள்ளப்பட்டது. இவை தவிர பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் தங்கள் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற் கொண்டன.

    இம்மாநாட்டின் முக்கிய முதலீட்டாளர்களான டாடா பவர் நிறுவனம் (70,800 கோடி ரூபாய்), செம்ப்கார்ப் நிறுவனம் (37,538 கோடி ரூபாய்), அதானி குழுமம் (42,768 கோடி ரூபாய்), வின்பாஸ்ட் நிறுவனம் (16,000 கோடி ரூபாய்), டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் (12,082 கோடி ரூபாய்). ஜெ.எஸ்.டபிள்யூ நிறுவனம் (12,000 கோடி ரூபாய்), ஹுண்டாய் நிறுவனம் (6.180 கோடி ரூபாய்), டி.வி.எஸ்.நிறுவனம் (5,000 கோடி ரூபாய்), பெகட்ரான் நிறுவனம் (1,000 கோடி ரூபாய்) மற்றும் செயிண்ட் கோபைன் (3,400 கோடி ரூபாய்) போன்ற குறிப்பிடத்தக்க நிறு வனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் அடங்கும்.

    இரண்டு நாட்கள் நடைபெற்ற இம்மாநாட்டில் 6277.27 கோடி ரூபாய் முதலீட்டிலான பர்ஸ்ட் சோலார், குவால்கம் மற்றும் பெங் டே ஆகிய 3 நிறுவனங்களின் திட்டங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

    இது குறித்து தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறுகையில் தமிழ்நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை கொண்டு வரும் வகையில் இன்னும் பல லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிற 28-ந் தேதி ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரேலியா செல்வதுடன் அதன் தொடர்ச்சியாக அமெரிக்கா செல்கிறார் என்றார் .

    இதற்கான பயண திட்ட ஏற்பாடுகள் தொழில் துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 28-ந் தேதி ஸ்பெயின் சென்று அங்கு தொழில் முதலீட்டாளர்களை சந்திக்கிறார். அங்கு நடைபெறும் கருத்தரங்கு நிகழ்ச்சியிலும் பங்கேற்க உள்ளார்.

    தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு உண்டான சாதகமான சூழ்நிலை பற்றியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்து கூற உள்ளார். அப்போது பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்து ஆகும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் 5 நாட்கள் அமையும் வகையில் இருக்கும் என தெரிகிறது.

    • மத்திய அமைச்சர் பியூஷ்கோயலுக்கு ஜல்லிக்கட்டு காளை நினைவுப் பரிசை வழங்கினார்.
    • உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நிறுவனங்கள் கோடிகளை கொட்டி முதலீடு.

    உலக முதலீட்டாளர் மாநாட்டை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்புரை ஆற்றினார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய ஜவுளி, வர்த்தக தொழில்துறை மந்திரி பியூஷ்கோயலுக்கு ஜல்லிக்கட்டு காளை நினைவுப் பரிசை வழங்கினார். இதைத்தொடர்ந்து மத்திய மந்திரி பியூஷ் கோயல் உரையாற்றினார்.

    இதையடுத்து உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு நிறுவனங்கள் கோடிகளை கொட்டி முதலீடு செய்துள்ளன.

    இந்நிலையில், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மிச்சாங் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடிக்கான காசோலையை கோத்ரேஜ் நிறுவனத்தின் தலைவர் நிசாபா வழங்கினார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.
    • மத்திய ஜவுளி, வர்த்தக தொழில் துறை மந்திரி பியூஷ்கோயல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகிறார்.

    சென்னை:

    தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    உலக அளவில் மிகப் பெரிய நிறுவனங்களையும், முதலீட்டாளர்களையும் ஈர்க்கும் வகையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.

    தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளில் சுற்றுப்ப யணம் செய்து புதிய திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளார்.

    இந்த நிலையில் தமிழக பொருளாதாரத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்திட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். இந்த இலக்கை அடையும் நோக்கில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் 2 நாட்கள் உலக முதலீட்டாளர்கள் மாநாடு அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை மாநாட்டின் தொடக்க விழா நடைபெறுகிறது. விழாவில் தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வரவேற்றுப் பேசுகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

    மத்திய ஜவுளி, வர்த்தக தொழில் துறை மந்திரி பியூஷ்கோயல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகிறார்.

    மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெறுகின்றன. உற்பத்தி தொடர்பான கண் காட்சியும் நடைபெறுகிறது. இதில் தொழில் துறை அரங்குகளும் இடம் பெறுகின்றன. 450-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் உள்பட 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மாநாட்டில் பங்கேற்பதற்காக பதிவு செய்துள்ளனர்.

    சிங்கப்பூர், ஜப்பான், கொரியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, டென்மார்க், அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து பல்வேறு தொழில் நிறுவனங்கள் மாநாட்டில் பங்கேற்கின்றன. 35 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    மாநாட்டு கருத்தரங்கில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜன், மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், இஸ்ரோ தலைவர் சோமநாத் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனர்.

    மாநாட்டின் போது நூற்றுக்கணக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்படுவதுடன் ரூ.5.5 லட்சம் கோடிக்கணக்கான முதலிடுகளை ஈர்க்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    ஒசூரில் டாடா நிறுவனம் கூடுதலாக 7 ஆயிரம் கோடி ருபாய் முதலீட்டில் ஐ-போன் உதரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

    இதற்கான அறிவிப்பு நாளை சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் வெளியிடப்படுகிறது.

    இதன் மூலம் 6 ஆண்டுகளில் 30 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும்.

    ஐ-போனை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கான முதல் இந்திய நிறுவனமாக கடந்த நவம்பர் மாதம் டாடா எலக்ட்ரானிக் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.

    தற்போது ஒசூரில் ஐ-போன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கூடுதலாக 7 ஆயிரம் கோடி ரூபாயில் புதிய யூனிட் அமைக்க டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 30 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும்.

    உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான ஆயத்தப்பணிகள் மற்றும் ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

    நாளை நடைபெற உள்ள இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொழில் முதலீட்டாளர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளது.
    • நமது மாநிலம் வழங்கும் அபரிமிதமான ஆற்றலைப் பயன்படுத்துவதிலும் எங்களுடன் சேருங்கள்.

    சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வருகிற 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது.

    தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக நடத்தப்படும் இந்த மாநாட்டில் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழில் அதிபர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளது.

    இதையொட்டி வர்த்தக மையத்தில் அரங்கங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில், உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி ஏற்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு 2024 நெருங்கி வருவதால், எதிர்பார்ப்புடன் கூடிய காற்று வீசுகிறது.

    30,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன், நம் பிரச்சாரங்கள், டைட்டன்ஸ் ஆப் தமிழ்நாடு மற்றும் ஓன் மில்லியன் ட்ரீம்ஸ் ஆகியவை உற்சாகத்தைத் தூண்டியுள்ளன.

    #GIM2024-ல் 450+ சர்வதேச பிரதிநிதிகள், 170 உலகப் புகழ் பெற்ற பேச்சாளர்கள் மற்றும் 50 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்வதுடன், தமிழ்நாட்டின் தொழில் வளத்தை அடிக்கோடிட்டுக் காட்டும்.

    நாங்கள் 26 சிந்தனை தலைமை அமர்வுகளை வரிசைப்படுத்தியுள்ளோம். எங்களிடம் ஒரு எம்எஸ்எம்இ பெவிலியன், தமிழ்நாடு சுற்றுச்சூழல் அமைப்பு பெவிலியன், பல நாட்டு அரங்குகள் மற்றும் ஸ்டார்ட்அப் டிஎன் பெவிலியன் ஆகியவை உள்ளன.

    பிரதிநிதிகள் மாநிலத்தின் தொழில்துறை அதிசயத்தைக் காணவும் வணிக ஒத்துழைப்புகளை வளர்க்கவும் ஒரு அருமையான வாய்ப்பை வழங்குகிறது.

    தமிழ்நாட்டின் தொழில்துறை மரபைக் கொண்டாடுவதிலும், நமது மாநிலம் வழங்கும் அபரிமிதமான ஆற்றலைப் பயன்படுத்துவதிலும் எங்களுடன் சேருங்கள்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • உத்தரபிரதேசத்தில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு 3 நாட்கள் நடந்தது.
    • இந்த முதலீடுகள் 95 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.

    லக்னோ :

    உத்தரபிரதேசத்தில் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு 3 நாட்கள் நடந்தது. இதில் இந்தியா மற்றும் பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த பெரு நிறுவனங்களின் அதிபர்கள் கலந்து கொண்டு உத்தரபிரதேசத்தில் தொழில் தொடங்குவதற்கான தங்கள் விருப்பத்தை வெளியிட்டனர்.

    இந்த மாநாட்டின் நிறைவு நாளான நேற்று முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உரையாற்றினார். அப்போது அவர் இந்த மாநாட்டில் கிடைத்துள்ள முதலீடுகள் குறித்து பேசினார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    இந்த சர்வதேச முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் ரூ.33.5 லட்சம் கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டங்கள் பெறப்பட்டு உள்ளன. இது மாநிலத்தின் விரைவான வளர்ச்சிக்கு உதவும்.

    இந்த முதலீடுகள் 95 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இதன் மூலம் முதலீட்டுக்கு பாதுகாப்பான இடமாக மாநிலம் உருவாகி உள்ளது.

    உத்தரபிரதேசத்தில் முன்பெல்லாம் தலைநகர் டெல்லியை ஒட்டியுள்ள பிராந்தியத்தில் மட்டுமே முதலீடுகள் குவிந்தன. ஆனால் இந்த மாநாட்டின் மூலம் மாநிலத்தின் 75 மாவட்டங்களுக்கும் முதலீட்டு திட்டங்கள் கிடைத்து உள்ளன.

    இந்த முதலீட்டு திட்டங்களை நடைமுறைப்படுத்த மாநில மந்திரிகளும், அதிகாரிகளும் சரியான முறையில் இணைந்து பணியாற்றுவார்கள். 'சீர்திருத்தம், செயல்பாடு, உருமாற்றம்' என்ற பிரதமர் மோடியின் தாரக மந்திரத்தின் அடிப்படையில் மாநில அரசு பணியாற்றி வருகிறது.

    தொழில்முனைவோர் ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிலை முதல் களத்தில் தங்கள் முதலீட்டை வழங்குவது வரை அவர்களுக்கு உதவுவதற்காக 'ஊக்குவிப்பு கண்காணிப்பு அமைப்பு' போன்ற வெளிப்படையான ஒற்றைச் சாளர அமைப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இத்தகைய சிறந்த சட்டம்-ஒழுங்கு நிலவரம், முதலீட்டாளர்களை இந்த மாநிலத்தில் முதலீடு செய்ய ஈர்க்கிறது. புதிய இந்தியாவின் ஒரு வளர்ந்த மாநிலமாக உத்தரபிரதேசத்தை மாற்ற மாநில அரசு உறுதிபூண்டுள்ளது

    இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறினார்.

    ×