search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பலி"

    • இன்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் உடைக்கப்பட்ட பெரிய அளவிலான பாறைகளை உடைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.
    • வெடி விபத்தின்போது அருகே உள்ள ஒருசில வீடுகளிலும் விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளன.

    காரியாபட்டி:

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை அடுத்த ஆவியூர் அருகே அமைந்துள்ளது கீழஉப்பிலிக்குண்டு கிராமம். இந்த கிராமத்தையொட்டிய பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது.

    முறையான லைசென்ஸ் பெற்று இயங்கிவரும் இங்கு ஆவியூர், கீழஉப்பிலிக்குண்டு, கடம்பன்குளம் ஆகிய ஊர்களை சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இங்கு பாறைகளை உடைத்து ஜல்லிக்கற்கள், எம்.சாண்ட் மணல் உள்ளிட்ட கட்டுமானத்திற்கு தேவையான பொருட்கள் தயாரித்து உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே குடியிருப்புக்கு அருகாமையில் இயங்கி வரும் இந்த கல் குவாரியை அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

    இருந்தபோதிலும் அதில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவ்வப்போது இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பாறைகளை உடைக்க பயன்படுத்தப்படும் அதிக ஒலி எழுப்பும் வெடிகளால் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகள் வரை ஜல்லி துகள்கள் வந்து விழுவதாகவும், இதனால் உயிருக்கு அச்சம் ஏற்பட்டு வாழும் நிலை இருப்பதாகவும் கடம் பன்குளம் உள்ளிட்ட பகுதி மக்கள் புகார் கூறி வந்தனர்.

    இந்தநிலையில் இன்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் உடைக்கப்பட்ட பெரிய அளவிலான பாறைகளை உடைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். அதேசமயம் வெளிமாநிலத்தில் இருந்து பாறை உடைக்கும் பணிக்காக ஒரு வாகனத்தில் வெடிபொருட்கள் கொண்டு வரப்பட்டது. அதனை அந்த குவாரியில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு தனி அறையில் இறக்கி வைக்கும் பணி ஒருபுறம் நடைபெற்று கொண்டிருந்தது.

    அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வெடிபொருட்கள் திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அதிலிருந்து எழும்பிய தீப்பிழம்பு பல மீட்டர் தூரத்திற்கு புகை மண்டலமாக காணப்பட்டது. இந்த சத்தம் சுற்றியுள்ள பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கேட்டுள்ளது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்தனர். அப்போது வெடிபொருட்கள் பாதுகாப்பு அறை முற்றிலும் தரைமட்டாகி கிடந்தது. மேலும் அங்கிருந்து சில மீட்டர் தூரத்தில் 3 பேரின் உடல்கள் சின்னாபின்னமாகி சிதறிக்கிடந்தன.

    மேலும் அந்த பகுதியில் வெடி மருந்துகள் அதிகம் இருப்பதாலும், எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்ற அச்சம் இருந்ததாலும் மீட்புக்குழுவினரால் உடனடியாக அருகில் செல்ல முடியவில்லை.

    இந்த வெடி விபத்தின்போது அருகே உள்ள ஒருசில வீடுகளிலும் விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளன. இந்த வெடி விபத்து சம்பந்தமாக கடம்பன்குளம் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலை ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் ஆவியூர் பைபாஸ் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே மேலும் சிலரது உடல்கள் வீசப்பட்டு கிடப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே பலி எண்ணிக்கை உயரும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உரிய உயிர்காப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் உத்தரவிட்டிருக்கிறேன்.
    • விபத்தில் உற்றாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் நேற்று மாலை தனியார் பேருந்து விபத்துக்குள்ளாகி 5 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் துயரத்துக்குள்ளானேன்.

    விபத்து குறித்த தகவல் நேற்று கிடைத்ததும், உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உரிய உயிர்காப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் உத்தரவிட்டிருக்கிறேன்.

    இவ்விபத்தில் உற்றாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இன்று காலை திருச்செந்தூரில் இருந்து டெம்போ வேனை வாடகைக்கு பிடித்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா புறப்பட்டனர்.
    • கல்லாமொழி அனல் நிலையத்தில் இருந்த ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தவர்களை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

    திருச்செந்தூர்:

    சென்னை, கொடுங்கையூரை சேர்ந்தவர் சகாயராஜ். இவரது குடும்பத்தினர் 11 பேர் சென்னையில் இருந்து நேற்று காலை திருச்செந்தூருக்கு ரெயிலில் வந்து விடுதியில் தங்கி உள்ளனர்.

    இந்நிலையில் இன்று காலை திருச்செந்தூரில் இருந்து டெம்போ வேனை வாடகைக்கு பிடித்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா புறப்பட்டனர். காலை 10 மணியளவில் கல்லாமொழி, பள்ளிவாசல் நுழைவாயில் எதிரே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மற்றொரு வேன் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் டெம்போ வேன் உருண்டு ஓடியது. அதில் பயணித்த சகாயராஜின் மனைவி சுமதி (வயது 37) படுகாயமடைந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் கல்லாமொழி அனல் நிலையத்தில் இருந்த ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தவர்களை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

    மேலும் சகாயராஜின் தாயார் மேரி (60), மகன்கள் தன்ஷிக் (14), மனோஜ்குமார் (13), ரமேஷ் என்பவரது மகள் திவ்யதர்ஷினி (8), டெம்போ வேன் டிரைவர் குலசை, முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்பையா மகன் விஜயகுமார்(38) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

    இதில் மேரி மற்றும் தன்ஷிக் தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும், டிரைவர் சுப்பையா திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையிலும், மற்றவர்கள் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுவன் ஆகாஷ் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான்.
    • போலீசார் வழக்குப்பதிந்து விபத்துக்கு காரணமான இரண்டு லாரிகளின் டிரைவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலம் காசர்கோடு மாவட்டம் சூரிக் காடு பீமநதி பகுதியை சேர்ந்தவர் சுதாகரன்(வயது 52). இவரது மனைவி அஜிதா(35). இவர்களுக்கு சவுரவ் என்ற மகன் இருக்கிறார். சவுரவ் கோழிக்கோட்டில் சி.ஏ படிப்பதற்கு, அங்குள்ள கல்லூரி ஒன்றில் சேர்ந்துள்ளார்.

    அவரை விடுதியில் விட்டுவிட்டு வருவதற்காக சுதாகரன், அவரது மனைவி, மாமனார் கிருஷ்ணன் (65) மற்றும் மனைவியின் அண்ணன் மகன் ஆகாஷ்(9) ஆகியோர் காரில் தலச்சேரியில் இருந்து காசர்கோடு நோக்கி சென்றனர்.

    காரை காசர்கோடு மாவட்டம் காளிச்சநடுக்கம் சாஸ்தம்பாறை பகுதியைச் சேர்ந்த பத்மகுமார் 59 என்பவர் ஓட்டிச் சென்றார். சவுரவ்வை விடுதியில் விட்டுவிட்டு சுதாகரன் உள்ளிட்ட மற்றவர்கள் காரில் திரும்பி வந்தனர். அவர்களது கார் கண்ணூர் செருக்குன்னு அருகே உள்ள புன்னச்சேரி பகுதியில் நேற்று இரவு வந்து கொண்டிருந்தது.

    அப்போது அவர்களுக்கு பின்னால் வந்த ஒரு லாரி, காரின் மீது மோதியதாக தெரிகிறது. இதனால் அவர்களது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே கியாஸ் சிலிண்டர்கள் ஏற்றிக்கொண்டு வந்த லாரி மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில் அவர்களது கார், லாரியின் முன்பதிக்குள் புகுந்தது.

    காருக்குள் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இந்த கோரவிபத்து குறித்து கண்ணபுரம் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    முதலில் அவர்கள் லாரிக்குள் சிக்கியிருந்த காரை வெளியே எடுத்தனர். பின்பு காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். அப்போது காரில் இருந்த சுதாகரன், அவரது மனைவி அஜிதா, மாமனார் கிருஷ்ணன், டிரைவர் பத்மகுமார் ஆகிய 4பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசங்கி பலியாகியிருப்பது தெரியவந்தது.


    மேலும் அந்த காரில் இருந்த சிறுவன் ஆகாஷ் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான். அவனை போலீசார் மீட்டு பரியாரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக இறந்துவிட்டான். இதனால் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. காரில் இருந்த டிரைவர் உள்ளிட்ட 5பேருமே விபத்தில் பலியாகிவிட்டனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விபத்துக்கு காரணமான இரண்டு லாரிகளின் டிரைவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோர விபத்தில் சிறுவன் உள்பட 5பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

    • வெடி விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
    • வெடி விபத்து குறித்த தகவலை கம்போடியாவின் பிரதமர் ஹன் மானெட் பகிர்ந்துள்ளார்.

    கம்போடியா நாட்டின் மேற்கு பகுதி, கம்போங் ஸ்பியூ மாகாணத்தில் மிகப்பெரிய ராணுவ தளம் அமைந்துள்ளது.

    அங்கு, வெடி பெருட்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், வெடிபொருட்கள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.

    இதில், அங்கு கரும் புகை மண்டலமாக உருவானது. இந்த பயங்கர வெடிவிபத்தில் 20 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.

    மேற்கூறிய தகவல்களை கம்போடியாவின் பிரதமர் ஹன் மானெட் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

    • தூக்கி வீசப்பட்ட போது வத்தலக்குண்டுவில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற மற்றொரு காரும் அவர்கள் மீது மோதியது.
    • விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகில் உள்ள போடிகாமன்வாடியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 47). இவர் விருவீடு அரசு மாணவர் விடுதியில் சமையலராக பணிபுரிந்து வந்தார். இவரது உறவினரான வீரக்கல் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி (47) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் இன்று வத்தலக்குண்டு சாலை போடிகாமன்வாடிக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற கார் இவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட போது வத்தலக்குண்டுவில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற மற்றொரு காரும் அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் ராமகிருஷ்ணன் மற்றும் சுப்பிரமணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்கள்.

    இதுகுறித்து செம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களது உடல்களை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பட்டப்பகலில் நடந்த இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பிளசன்டன் பகுதியில் ஸ்டோனிரிட்ஜ் டிரைவ் புட்ஹில் சாலையில் சென்றுகொண்டிருந்த போது அவர்களது கார் விபத்தில் சிக்கியது.
    • பிளசன்டன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் தருண் ஜார்ஜ். இவர் ஐக்கிய அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியாவில் பணியாற்றி வருகிறார். அவர் அங்கேயே தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று தருண்ராஜ் தனது மனைவி மற்றும் மகன்களுடன் காரில் சென்றார். கலிபோர்னியாவில் பிளசன்டன் பகுதியில் ஸ்டோனிரிட்ஜ் டிரைவ் புட்ஹில் சாலையில் சென்றுகொண்டிருந்த போது அவர்களது கார் விபத்தில் சிக்கியது.

    இதில் அவர்களது கார் முற்றிலுமாக நொறுங்கியது. காரின் இடிபாடுகளில் சிக்கி தருண் ஜார்ஜ், அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    கார் முற்றிலுமாக நொறுங்கியிருப்பதால் அதிவேகமாக சென்றதே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அதனடிப்படையில் பிளசன்டன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ஆயுதமேந்திய மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின்படி நடவடிக்கை.
    • யாருடைய ஆயுதம் தற்செயலாக செயலிழந்தது என்று குறிப்பிடவில்லை.

    சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் தற்செயலாக துப்பாக்கி வெடித்ததால் மாவட்ட ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி) கான்ஸ்டபிள் உயிரிழந்தார். மற்றொரு காவலர் காயமடைந்துள்ளார்.

    நேற்று இரவு 11 மணியளவில், மாநில காவல்துறையின் இரு பிரிவுகளான டிஆர்ஜி மற்றும் பஸ்தர் ஃபைட்டர் ஆகியவற்றின் கூட்டுக் குழு, பர்சூர் காவல் நிலைய எல்லையில் மாவோயிஸ்ட்டுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, இந்தச் சம்பவம் நடந்ததாக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தண்டேவாடா-நாராயண்பூர் மாவட்ட எல்லையை ஒட்டிய ஹந்தவாடா மற்றும் ஹிட்டாவாடா கிராமங்களில் ஆயுதமேந்திய மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    ரோந்து பணியின் போது, ஜோக்ராஜ் மற்றும் பர்சுராம் அலாமி ஆகிய இரண்டு டிஆர்ஜி கான்ஸ்டபிள்கள் தற்செயலான துப்பாக்கிச் சூட்டில் தோட்டாக்கள் பாய்ந்து காயம் அடைந்தனர்.

    இதில், ஜோக்ராஜ்கிற்கு அதிக ரத்தப்போக்கு காரணமாக உயிரிழந்தார். அலாமிமை மேல் சிகிச்சைக்காக விமானம் மூலம் ராய்ப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    யாருடைய ஆயுதம் தற்செயலாக செயலிழந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

    • எதிர்பாராதவிதமாக சாலையோரம் நின்ற லாரியின் பின்புறத்தில் கார் பயங்கர வேகத்தில் மோதியது.
    • இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய 2 பேரை மீட்டு கோதாடா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 8 பேர் இன்று அதிகாலை விஜயவாடாவுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.

    சூர்யா பேட்டை, கோதாடா அருகே உள்ள ஸ்ரீரங்காபுரம் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் நின்ற லாரியின் பின்புறத்தில் கார் பயங்கர வேகத்தில் மோதியது.

    இதில் காரின் முன்பகுதி முழுவதும் நொறுங்கி சேதம் அடைந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த குழந்தை உள்பட 6 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய 2 பேரை மீட்டு கோதாடா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மேலும் இறந்தவர்களின் உடல்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கொடைக்கானலில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்த வேன், கார் மீது நேருக்கு நேர் மோதியது.
    • இந்துஜா, அம்பிகாபதி, அனிதா ஆகியோர் படுகாயமடைந்தனர்.

    திருக்கோவிலூர்:

    ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வடிவேல், மோகன்ராஜ், ஜோதி, இந்துஜா, அம்பிகாபதி, அனிதா. இவர்கள் 6 பேரும் திருவண்ணாமலைக்கு சென்று கிரிவலம் முடித்து இன்று அதிகாலை காரில் புறப்பட்டனர். இந்த கார் தியாகதுருகம் சாலையில் உள்ள பொன்னியந்தல் அருகே அதிகாலை 6 மணிக்கு சென்று கொண்டிருந்தது.

    அப்போது கொடைக்கானலில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்த வேன், கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் காரின் முன்புறம் அப்பளம் போல் நொறுங்கி, அதில் பயணம் செய்த வடிவேல், மோகன்ராஜ், ஜோதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும், இந்துஜா, அம்பிகாபதி, அனிதா ஆகியோர் படுகாயமடைந்தனர். அவ்வழியே சென்றவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். விபத்தில் பலியான 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், வேன் ஓட்டுனர் திருவண்ணாமலை கோரிமேட்டு தெருவை சேர்ந்த ஜலாலுதீனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்த ஆண்டில் மட்டும் இதுவரை சுமார் 35 லட்சம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
    • இறந்தவர்களில் பெரும்பாலானோர் 20 முதல் 29 வயது வரை உள்ளவர்கள்.

    பிரேசிலியா:

    தென் அமெரிக்க நாடான பிரேசிலில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை சுமார் 35 லட்சம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அவர்களில் 1,600 பேர் சிகிச்சை பலனின்றி இறந்து உள்ளனர். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 35 சதவீதம் அதிகம் ஆகும். இறந்தவர்களில் பெரும்பாலானோர் 20 முதல் 29 வயது வரை உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    எனவே டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி பொதுமக்களுக்கு பிரேசில் அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. 

    • புறப்பட்ட சிறிதுநேரத்தில் படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்தது.
    • முதல்கட்ட விசாரணையில் 100 பேர் செல்லக்கூடிய படகில் சுமார் 300 பேர் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    பாங்குய்:

    மத்திய ஆப்பிரிக்க நாட்டின் தலைநகர் பாங்குய் அருகே எம்போகா என்ற ஆறு பாய்கிறது. அங்குள்ள மக்கள் அருகில் உள்ள ஊர்களுக்கு செல்ல வேண்டுமெனில் இந்த ஆற்றைக் கடந்துதான் செல்ல முடியும்.

    இதற்காக அவர்கள் படகு போக்குவரத்தையே பெரிதும் நம்பி உள்ளனர். எனவே அந்த ஆற்றில் ஏராளமான படகுகள் சவாரி செய்கின்றன. ஆனால் அவ்வாறு செல்லும்போது அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன.

    இந்தநிலையில் பாங்குய் நகரில் உள்ள ஒரு உள்ளூர் தலைவர் இறந்து போனார். அவரது இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக பாங்குய் நகரில் இருந்து ஏராளமான பொதுமக்கள் படகில் புறப்பட்டனர்.

    புறப்பட்ட சிறிதுநேரத்தில் அந்த படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்தது. இதனால் அந்த படகில் இருந்த குழந்தைகள், பெண்கள் என பலர் ஆற்றில் தத்தளித்துக்கொண்டிருந்தனர்.

    இதனையறிந்த உள்ளூர் மீனவர்கள் உடனடியாக தங்களது மீன்பிடி படகு மூலம் மீட்க முயன்றனர். இதற்கிடையே மீட்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் அங்கு தத்தளித்துக்கொண்டிருந்தவர்களை மீட்டு மற்றொரு படகு மூலம் கரைக்கு கொண்டு சென்றனர்.

    எனினும் இந்த சம்பவத்தில் 58 பேர் தண்ணீரில் மூழ்கி பலியாகினர். மேலும் பலர் மாயமாகி இருப்பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் 100 பேர் செல்லக்கூடிய படகில் சுமார் 300 பேர் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பாரம் தாங்காமல் அந்த படகு ஆற்றில் கவிழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர். இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்கு சென்றபோது படகு கவிழ்ந்து 58 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×