search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காரியாபட்டி அருகே கல்குவாரி வெடி விபத்தில் 3 பேர் பலி
    X

    விபத்து நடந்த பகுதி தரைமட்டமாக கிடக்கும் காட்சி - கல்குவாரியில் வெடிவிபத்து நடந்த அறை முற்றிலும் இடிந்து தரைமட்டமாகி கிடப்பதையும், வாகனம் சேதம் அடைந்து இருப்பதையும் காணலாம்.

    காரியாபட்டி அருகே கல்குவாரி வெடி விபத்தில் 3 பேர் பலி

    • இன்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் உடைக்கப்பட்ட பெரிய அளவிலான பாறைகளை உடைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.
    • வெடி விபத்தின்போது அருகே உள்ள ஒருசில வீடுகளிலும் விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளன.

    காரியாபட்டி:

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை அடுத்த ஆவியூர் அருகே அமைந்துள்ளது கீழஉப்பிலிக்குண்டு கிராமம். இந்த கிராமத்தையொட்டிய பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது.

    முறையான லைசென்ஸ் பெற்று இயங்கிவரும் இங்கு ஆவியூர், கீழஉப்பிலிக்குண்டு, கடம்பன்குளம் ஆகிய ஊர்களை சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இங்கு பாறைகளை உடைத்து ஜல்லிக்கற்கள், எம்.சாண்ட் மணல் உள்ளிட்ட கட்டுமானத்திற்கு தேவையான பொருட்கள் தயாரித்து உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே குடியிருப்புக்கு அருகாமையில் இயங்கி வரும் இந்த கல் குவாரியை அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

    இருந்தபோதிலும் அதில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவ்வப்போது இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பாறைகளை உடைக்க பயன்படுத்தப்படும் அதிக ஒலி எழுப்பும் வெடிகளால் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகள் வரை ஜல்லி துகள்கள் வந்து விழுவதாகவும், இதனால் உயிருக்கு அச்சம் ஏற்பட்டு வாழும் நிலை இருப்பதாகவும் கடம் பன்குளம் உள்ளிட்ட பகுதி மக்கள் புகார் கூறி வந்தனர்.

    இந்தநிலையில் இன்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் உடைக்கப்பட்ட பெரிய அளவிலான பாறைகளை உடைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். அதேசமயம் வெளிமாநிலத்தில் இருந்து பாறை உடைக்கும் பணிக்காக ஒரு வாகனத்தில் வெடிபொருட்கள் கொண்டு வரப்பட்டது. அதனை அந்த குவாரியில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு தனி அறையில் இறக்கி வைக்கும் பணி ஒருபுறம் நடைபெற்று கொண்டிருந்தது.

    அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வெடிபொருட்கள் திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அதிலிருந்து எழும்பிய தீப்பிழம்பு பல மீட்டர் தூரத்திற்கு புகை மண்டலமாக காணப்பட்டது. இந்த சத்தம் சுற்றியுள்ள பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கேட்டுள்ளது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்தனர். அப்போது வெடிபொருட்கள் பாதுகாப்பு அறை முற்றிலும் தரைமட்டாகி கிடந்தது. மேலும் அங்கிருந்து சில மீட்டர் தூரத்தில் 3 பேரின் உடல்கள் சின்னாபின்னமாகி சிதறிக்கிடந்தன.

    மேலும் அந்த பகுதியில் வெடி மருந்துகள் அதிகம் இருப்பதாலும், எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்ற அச்சம் இருந்ததாலும் மீட்புக்குழுவினரால் உடனடியாக அருகில் செல்ல முடியவில்லை.

    இந்த வெடி விபத்தின்போது அருகே உள்ள ஒருசில வீடுகளிலும் விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்துள்ளன. இந்த வெடி விபத்து சம்பந்தமாக கடம்பன்குளம் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலை ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் ஆவியூர் பைபாஸ் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே மேலும் சிலரது உடல்கள் வீசப்பட்டு கிடப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே பலி எண்ணிக்கை உயரும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×