search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "car accident"

    • சம்பந்தப்பட்ட கார் ஓட்டுனரிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த காரால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே வெலக்கல்நாத்தம் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்தது.

    இந்நிலையில், அந்த காரில் கட்டுக்கட்டாக இருந்த ரூ.2,000 நோட்டுகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இதைதொடர்ந்து, சம்பந்தப்பட்ட கார் ஓட்டுனரிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், காரில் கட்டுக்கட்டாக இருந்தது போலி ரூ.2000 நோட்டுகள் என தெரியவந்துள்ளது.

    மேலும், தான் சினிமா தயாரிப்பாளர் எனவும், படப்பிடிப்பிற்காக கொண்டு சென்றதாகவும் வாகன ஓட்டி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே, தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த காரால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    • இருசக்கர வாகனம் குறுக்கே வந்ததால் சாலையின் தடுப்பு சுவரில் கார் மோதி விபத்து.
    • விபத்தில் காரின் முன்பகுதி பயங்கரமாக சேதமடைந்துள்ளது.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜீவா. இவர் இன்று சேலத்தில் இருந்து சென்னைக்கு குடும்பத்தினருடன் காரில் வந்துக் கொண்டிருந்தார்.

    அப்போது, கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம், கனியாமூர் பேருந்து நிறுத்தம் அருகே நடிகர் ஜீவாவின் கார் விபத்துக்குள்ளானது.

    இருசக்கர வாகனம் குறுக்கே வந்ததால் சாலையின் தடுப்பு சுவரில் மோதி நடிகர் ஜீவா சென்ற கார் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த விபத்தில், நடிகர் ஜீவா உள்பட அவரது குடும்பத்தினர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

    மேலும், காரின் முன்பகுதி பயங்கரமாக சேதமடைந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பலியானவர்களில் ஒரு ஆண், இரண்டு பெண்கள் மற்றும் ஐந்து குழந்தைகள் என தகவல்.
    • உயிரிழந்தவர்கள், கிஷ்த்வாரில் இருந்து வந்தவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் தக்சும் பகுதியில் வாகனம் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.

    பலியானவர்களில் ஒரு ஆண், இரண்டு பெண்கள் மற்றும் ஐந்து குழந்தைகள் என தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்கள், கிஷ்த்வாரில் இருந்து வந்தவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து காவல்துறை கூறுகையில், " ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் பயணித்த டாடா சுமோ டக்சம் அருகே சாலையில் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது".

    விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • போலீஸ் வேகமாக ஓடிய காரை 1 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று கார் ஓட்டுனரை பிடித்தனர்.
    • சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து சிறுவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை ஜாம்பஜார் பாரதி சாலையில் சிறுவன் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சம்பவத்தால் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    இன்று மாலை 6 மணி அளவில் நெரிசல் மிகுந்த பகுதியான பாரதி சாலையில் திடீரென ஒரு கார் அதிவேகமாக வந்த கார் ஒன்று அங்கிருந்த இருசக்கர வாகனம் மற்றும் பொதுமக்கள் என அனைத்து மீதும் தாறுமாறாக ஓடிய கார் விபத்தை ஏற்படுத்தி உள்ளது.

    உடனடியாக அங்கு இருந்த ஜாம்பஜார் போலீஸ் வேகமாக ஓடிய காரை 1 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று கார் ஓட்டுனரை பிடித்தனர்.

    பிடிப்பட்ட ஓட்டுனரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபர் 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவன் என்பது தெரியவந்துள்ளது. தனது உடன் படிக்கும் நண்பருடன், காரை இயக்கி வந்த நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. தனது பெரியப்பாவின் காரை கொண்டுவந்துள்ளது தெரியவந்துள்ளது.

    உடனடியாக விபத்து தொடர்பாக 2 சிறுவர்களிடமும் அண்ணாசதுக்கம் புலனாய்வு பிரிவு போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து சிறுவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்தில் 5க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் சேதம் அடைந்திருக்கிறது. 3க்கும் மேற்பட்ட நபர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தால் ஜாம்பஜார் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சிறுவனை கைது செய்த போலீசார் காரையும் பறிமுதல் செய்தனர்.
    • சிறுவனின் தந்தை மீது வழக்கு பதிவு செய்யவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    டெல்லியின் ஜகத்புரி பகுதியில் தொழிலதிபரின் 16 வயது மகன் கார் ஓட்டி சென்று மோதியதில் 5 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து சிறுவனை கைது செய்த போலீசார் காரையும் பறிமுதல் செய்தனர்.

    காரின் உரிமையாளரான சிறுவனின் தந்தை மீது வழக்கு பதிவு செய்யவும் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட 16 வயது சிறுவன் தனது நண்பர்களுடன் கிருஷ்ணா நகரின் காலை உணவு சாப்பிட வந்ததாகவும் அந்த இடத்தில் தள்ளுவண்டி மீது கார் மோதியதால் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த தூய்மை பணியாளர் மீது மோதியது. பின்னர் சாலையில் நடந்து கொண்டிருந்த 3 பேர் மோதியது என்று காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த மாதம் மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் 17 வயது சிறுவன் மதுபோதையில் ஓட்டி வந்த சொகுசு கார் (Porsche) மோதியதில் இரண்டு ஐ.டி. ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சண்முகதாய் என்பவருக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
    • விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம், முக்காணி கிராமம், தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில், சாலையோரமாக நின்று, தெரு குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் மீது இன்று காலை 6.30 மணியளவில் தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் நோக்கி வந்துகொண்டிருந்த நான்கு சக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்த முக்காணி கிராமத்தைச் சேர்ந்த நட்டார் சாந்தி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்த அமராவதி மற்றும் பார்வதி ஆகிய இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையுமடைந்தேன்.

    இவ்விபத்தில் பலத்த காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சண்முகதாய் என்பவருக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

    இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

    • விபத்து நடந்த இடத்தில் வேகத்தடை இல்லாததால் இந்த கோர விபத்து நடந்ததாக கூறி அந்த பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • டி.எஸ்.பி. வசந்தராஜ் மற்றும் தாசில்தார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஸ்ரீவைகுண்டம்:

    தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் நாலு மாவடியில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.

    இவர் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து பெங்களூக்கு சென்று செல்போன் கடைக்கு தேவையான உதிரி பாகங்கள் வாங்கி விட்டு இன்று தூத்துக்குடி வழியாக வந்து கொண்டிருந்தார்.

    அப்போது முக்காணி பகுதியில் சாலையின் ஓரம் தெருக்குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த பெண்கள் கூட்டத்தில் மணிகண்டன் ஓட்டி வந்த கார் புகுந்தது.

    இதில் அதே பகுதியை சேர்ந்த பலவேசம் என்பவரது மனைவி நட்டார் சாந்தி (வயது45), ராஜ்குமார் என்பவரின் மனைவி பார்வதி (40), சித்திரவேல் என்பவரது மனைவி அமராவதி (59) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் சுந்தரம் என்பவரது மனைவி சண்முகத்தாய் படுகாயம் அடைந்தார்.

    இதுகுறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆத்தூர் போலீசார் இறந்தவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து கார் டிரைவர் மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    விபத்து நடந்த இடத்தில் வேகத்தடை இல்லாததால் இந்த கோர விபத்து நடந்ததாக கூறி அந்த பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து டி.எஸ்.பி. வசந்தராஜ் மற்றும் தாசில்தார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொதுமக்கள் இந்த சாலையில் வேகத்தடை இல்லாததால் எப்போதுமே வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

    சாலையின் இருபுறமும் தெருக்கள் உள்ளன. எனவே நாங்கள் அடிக்கடி சாலையை கடக்கும் போது அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது. எனவே இங்கு வேகத்தடை அமைக்க வேண்டும். சாலையின் இருபுறமும் தெருவிளக்குகள் இரவு முழுவதும் ஒளிர செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் பொதுமக்களிடம் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் 4 இடங்களில் பேரிகார்டுகள் அமைத்து வாகனங்கள் வேகமாக செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    மேலும் இன்று இரவுக்குள் வேகத்தடை அமைத்து தரப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    இந்த விபத்தில் பலியான பார்வதியின் கணவர் ராஜ்குமார் கட்டிட தொழிலாளியாக உள்ளார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகள் பிளஸ்-1 வகுப்பும், மகன் 10-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

    அதிகாலை நேரத்தில் தெருவோரம் குழாயில் தண்ணீர் பிடிக்க வந்த 3 பெண்கள் கார் மோதி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • இளம்பெண் காரை பின்னோக்கி ஓட்டும் வீடியோ காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.
    • ரீல்ஸ் மோகத்தில் காரை ஓட்ட முயற்சி செய்து காதலன் கண்முன்னே இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் அனுமன் நகர் பகுதியை சேர்ந்தவர் சுவேதா சுர்வாசே(வயது23). இவர் சுரஜ் முலே(25) என்ற வாலிபரை காதலித்து வந்ததாக தெரிகிறது. அவருடன் இளம்பெண் காரில் அவுரங்காபாத், சுலிபஞ்சன் மலைக்கு சென்றார். மதியம் 2 மணியளவில் தத்தாதாம் கோவில் அருகில் சுவேதா சுர்வாசே, காதலனின் காரை பின்னால் நோக்கி ஓட்டினார்.

    சரியாக கார் ஓட்ட தெரியாத போதும், சமூகவலைதளத்தில்(ரீல்ஸ்) பதிவிட கார் ஓட்டுவது போல இளம்பெண் வீடியோ எடுத்ததாக தெரிகிறது.

    சுவேதா சுர்வாசே பின்னால் நோக்கி காரை ஓட்ட, காதலன் சுரஜ் முலே செல்போனில் படம் பிடித்து உள்ளார். அப்போது இளம்பெண் காரை சற்று வேகமாக ஓட்டி உள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த காதலன் 'பிரேக்கை' பிடிக்குமாறு இளம்பெண்ணை எச்சரித்தப்படி, காரை நோக்கி வேகமாக ஓடினார். ஆனால் இளம்பெண் காரை நிறுத்த பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்ததாக தெரிகிறது. இதனால் வேகமாக பின்நோக்கி சென்ற கார், 50 மீட்டர் தூரத்தில் இருந்த 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. மலையில் வேகமாக கீழே உருண்ட கார் சுக்குநூறாக நொறுங்கியது.

    சில வினாடிகளில் நடந்த இந்த பயங்கர சம்பவத்தை பார்த்து, அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் மலை பள்ளத்தாக்கில் இறங்கி காரில் படுகாயங்களுடன் கிடந்த இளம்பெண்ணை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இளம்பெண்ணை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினார்.

    சம்பவம் குறித்து குடாபாத் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "இளம்பெண் ஓட்டிய கார் பின்னோக்கி வேகமாக சென்று, தடுப்பு வேலியை உடைத்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து உள்ளது. கார் விழுந்த இடத்தை கண்டுபிடித்து செல்லவே மீட்பு குழுவினருக்கு 1 மணி நேரம் ஆகிவிட்டது" என்றார்.

    இளம்பெண் காரை பின்னோக்கி ஓட்டும் வீடியோ காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது. ரீல்ஸ் மோகத்தில் காரை ஓட்ட முயற்சி செய்து காதலன் கண்முன்னே இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


    • சொகுசு கார் ஒன்று, சாலை ஓரம் தூங்கிய சூர்யா மீது மோதியது.
    • காரில் வந்த இரு பெண்களும் மதுபோதையில் இருந்ததாக சூர்யாவின் உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    சென்னை:

    சென்னை பெசன்ட் நகர் ஓடக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (வயது 22) பெயிண்டரான இவர், நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் பெசன்ட் நகர் கலாசேத்ரா காலனி, வரதராஜ் சாலை நடைபாதை அருகே தூங்கி கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த சொகுசு கார் ஒன்று, சாலை ஓரம் தூங்கிய சூர்யா மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆஸ்பத்திரியில் சூர்யாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்தை ஏற்படுத்திய காரில் 2 பெண்கள் இருந்துள்ளனர். விபத்து குறித்து கேள்வி எழுப்பிய பொதுமக்களிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து காரில் தப்பி ஓடினர்.

    மேலும் காரில் வந்த இரு பெண்களும் மதுபோதையில் இருந்ததாக சூர்யாவின் உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் சதீஸ் தலைமையிலான போலீசார் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் கார் பதிவெண் மற்றும் தப்பியோடிய பெண்களின் புகைப்படம் ஆகிய ஆதாரங்களை வைத்து விசாரணை நடைபெற்றது.

    விசாரணையில் விபத்தை ஏற்படுத்தியது ஆந்திர மாநில எம்பி பீடா மஸ்தானின் மகள் பீடா மாதூரி என்பது தெரியவந்தது. இவர் புதுச்சேரியில் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் போலீசார் நேற்று மாலை பீடா மாதூரியை கைது செய்தனர். அவர் மீது கவனக்குறைவாக வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்துதல் சட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    பின்னர் பீடா மாதூரி போலீஸ் நிலைய ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

    நடைபாதையில் தூங்கிய பெயிண்டர் கார் மோதி உயிரிழந்த சம்பவம் பெசன்ட் நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஓட்டுநரின் கட்டுப்பாட்டை வாகனம் இழந்திருக்கலாம் என சந்தேகம்.
    • உயிரிழந்தவர்கள் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றபோது விபத்து.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பவுரி மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் இரண்டு கார்கள் பள்ளத்தாக்குகளில் விழுந்து மூன்று குழந்தைகள் உள்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    இதில், ஒரு விபத்து கிர்சு சௌபட்டா என்கிற பகுதியிலும், மற்றொன்று சத்புலி பகுதியில் உள்ள துத்ராகல் அருகேயும் நிகழ்ந்துள்ளது.

    இதுகுறித்து மாநில பேரிடர் மீட்புப் படையிலிருந்து (SDRF) பெறப்பட்ட தகவலை மேற்கோள் காட்டி, "கிர்சு சௌபட்டாவில் கார் சாலையை விட்டு விலகி 200 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஏழு பேரில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக" அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும், விபத்துகான காரணம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை வாகனம் இழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    பாதிக்கப்பட்டவர்களை மீட்க மாநில பேரிடர் மீட்புப் படையிலிருந்து பணியாளர்கள் மற்றும் போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இந்த விபத்தில் 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இறந்தவர்கள் ஸ்ரீஷ்டி நேகி (15), ஆருஷி (9), சௌமியா (5) மற்றும் டிரைவர் மன்வர் சிங் என்ற சோனு என அடையாளம் காணப்பட்டனர்.

    காயமடைந்தவர்களில் ஸ்ரீஷ்டியின் சகோதரி சாக்ஷி நேகி (14), சமீக்ஷா ராவத் (15) மற்றும் கன்ஹா (11) ஆகியோர் அடங்குவர்.

    சாக்ஷியும், சமீக்ஷாவும் சிறப்பு சிகிச்சைக்காக ரிஷிகேஷில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்திற்கு (எய்ம்ஸ்) விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மற்றொரு சம்பவத்தில், சத்புலி பகுதியில் உள்ள துத்ராகல் அருகே கார் 150 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 5 பேர் காயமடைந்தனர்.

    உயிரிழந்தவர்கள் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சத்புலிக்கு சென்று கொண்டிருந்தனன் என்பது தெரியவந்தது.

    • அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் கார் விபத்து ஏற்பட்டது.
    • இதில் 2 பெண் உள்பட இந்திய மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் படித்த 5 இந்திய மாணவர்கள் சென்ற கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியது.

    இந்த விபத்தில் ஆர்யன் ஜோஷி, ஷ்ரியா அவர்சாலா, அன்வி சர்மா ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 மாணவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விசாரணையில், கார் வேகமாக சென்றதே விபத்துக்கு காரணம் என தெரிய வந்தது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் கார் விபத்தில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • சிறார் என்பதால் 15 மணிநேரத்தில் ஒரு சில நிபந்தனைகளை விதித்து ஜாமீன் வழங்கி உள்ளது நீதிமன்றம்.
    • குடிக்க அனுமதித்த அவன் பணக்கார தந்தைக்கு என்ன நிபந்தனை கொடுக்க போகிறதோ நம் நீதிமன்றங்கள்.

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கல்யாணி நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை போர்ச் கார் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த அஸ்வினி கோஸ்டா சம்பவ இடத்திலேயே இறந்தார். அனிஸ் துதியா மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். அந்த காரை 17 வயது சிறுவன் ஓட்டி வந்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய சிறுவன் புனேவை சேர்ந்த பிரபல கட்டுமான தொழிலதிபரின் மகன் என தெரிய வந்துள்ளது. அவரை விபத்து நிகழ்ந்த இடத்தில் பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். பின்னர் காவலர்கள் வசம் ஒப்படைத்தனர்.

    அந்த சிறுவன் மதுபோதையில் இருந்ததும், பார்ட்டி முடித்து வீடு திரும்பிய போது காரை வேகமாக இயக்கியுள்ளார் என்பதும், ஒரு கட்டத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    சிறார் என்பதால் 15 மணிநேரத்தில் ஒரு சில நிபந்தனைகளை விதித்து ஜாமீன் வழங்கி உள்ளது நீதிமன்றம்.

    அவருக்கு விழிப்புணர்வு கொடுக்கும் வகையில் நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் கிடைத்துள்ளதாக அந்த சிறுவனின் வழக்கறிஞர் பிரசாந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார்.

    நிபந்தனையில் கூறியிருப்பதாவது,

    போக்குவரத்து காவலர்களுடன் 15 நாட்கள் பணியாற்ற வேண்டும், மனநல சிகிச்சை பெற வேண்டும், சாலை விபத்தின் விளைவு மற்றும் அதற்கான தீர்வு என்ற தலைப்பில் 300 வார்த்தைகளில் கட்டுரை எழுத வேண்டும், போதை ஒழிப்பு மையத்தில் கவுன்சிலிங் பெற வேண்டும், எதிர்காலத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    வயது குறைந்த மகனை வாகனம் ஓட்ட அனுமதித்ததற்காக அவரது தந்தை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..

    17 வயது சிறுவனுக்கு வெறும் 15 மணி நேரத்தில் ஜாமீன் வழங்கப்பட்ட சம்பவம் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. அந்தச் சிறுவனுகு சமூக சேவை, போதை விழிப்புணர்வு கட்டுரைகள் எழுதுதல் போன்ற தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளதும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

    செய்தி வெளியாகி பூதாகரமானதால் சிறாரின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார், மகனுக்கே ஜாமீன் நிபந்தனை கட்டுரை எழுத வேண்டும் என்றால் சட்டவிரோதம் என தெரிந்தும் தன் மகனுக்கு காரை ஓட்ட கொடுத்த, அவன் குடிக்க அனுமதித்த அவன் பணக்கார தந்தைக்கு என்ன நிபந்தனை கொடுக்க போகிறதோ நம் நீதிமன்றங்கள்.

    சாமானிய, ஏழை மக்களுக்கு வழக்கு, தண்டனை என வழங்கும் இந்த நீதிமன்றங்கள், கோடி கணக்கில் ஊழல் செய்தவர்கள், கொலை செய்தவர்கள், கொள்ளை அடித்தவர்கள் என்று பல்வேறு வழக்குகளில் இருக்கும் பண படைத்தவர்களை இந்த சட்டமும், போலீஸூம் கண்டு காணாமல் இருக்கிறார்கள் என்ற விமர்சனம் சமூக வலைதளங்களில் எழுந்து வருகிறது.

    ×