search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TASMAC"

    • டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் 2 மாதத்தில் கடை மாற்றப்படும் என கடை முன்பாக சிறிய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது.
    • மதுபான கடைக்கான உரிமம் தேதி நிறைவடைந்த பின்பும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி கொங்கு மெயின் ரோடு இஎஸ்ஐ., மருத்துவமனை அருகில் உள்ள ரங்கநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைக்கு எதிராக அப்பகுதி பொது மக்கள் பலமுறை போராட்டம் நடத்தி வந்தனர்.

    கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி மாவட்ட கலெக்டரிடமும் இது குறித்து மனு அளித்திருந்தனர். தொடர் போராட்டத்தின் காரணமாக டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் 2 மாதத்தில் கடை மாற்றப்படும் என கடை முன்பாக சிறிய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது.

    தற்போது அந்த அறிவிப்பு பலகையை பார் உரிமையாளர் கழற்றி வீசி விட்டு தொடர்ந்து அந்த கடையை நடத்தி வருவதாகவும் மதுபான கடைக்கான உரிமம் தேதி நிறைவடைந்த பின்பும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

    எனவே அச்சுறுத்தலாக இருந்து வரும் அந்த மதுபான கடையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் இன்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனு அளித்தனர்.

    • விலை உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.3350 கோடி வருவாய் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • அனைத்து நகரப் பகுதிகள், கிராமப்புறங்களில் மது பிரியர்கள் மதுபானங்களின் விலையை கேட்டு ‘ஷாக்’ ஆனார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் மதுபானங்களின் விலையை டாஸ்மாக் நிறுவனம் உயர்த்தி உள்ளது. டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் கிடைக்கும் வருவாய் அரசின் வருவாய் ஆதாரங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    கடந்த ஆண்டு மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்ட பிறகு தற்போது மீண்டும் விலையை உயர்த்தி உள்ளது. பிராந்தி, விஸ்கி, ரம், ஜின் உள்ளிட்ட அனைத்து மதுபானங்களின் விலையும் ரூ.10 முதல் ரூ.80 வரை அதிகரித்துள்ளது.

    சாதாரண மற்றும் நடுத்தர வகை மதுபானங்கள் விலை குறைவாகவும், பிரீமியம் வகை மதுபானங்கள் விலை அதிக அளவிலும் உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண மற்றும் நடுத்தர மதுபானங்கள் குவாட்டர் பாட்டிலுக்கு ரூ.10-ம், அரை பாட்டிலுக்கு ரூ.20-ம், முழு பாட்டிலுக்கு ரூ.40-ம் அதிகரித்துள்ளன.

    பிரீமியம் வகை மதுபானங்கள் குவாட்டருக்கு ரூ.20-ம், அரைபாட்டிலுக்கு ரூ.40-ம், முழு பாட்டிலுக்கு ரூ.80-ம், பீர் வகைகளுக்கு ரூ.10-ம் கூடியுள்ளது.

    மதுபானங்களின் அதிக பட்ச சில்லறை விலை 80 ரூபாய் வரை கூடியதால் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    தமிழகம் முழுவதும் மதுபானங்களின் விலை உயர்வு இன்று அமலுக்கு வந்தது. இந்த விலை உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.3350 கோடி வருவாய் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    குவாட்டர் பாட்டில் சாதாரண, நடுத்தர வகை மதுபானங்கள் முன்பு ரூ.130, ரூ.160-க்கு கிடைத்தது. அவை தற்போது ரூ.170 ஆக கூடியுள்ளது.

    பிரீமியம் வகை குவாட்டர் பாட்டில் முன்பு ரூ.180, ரூ.190, ரூ.200, ரூ.240 என்ற அளவில் விற்கப்பட் டது. இவற்றின் விலை தற்போது ரூ.20 உயர்ந்துள்ளது.

    மெக்டவல் விஸ்கி, மெக்டவல் பிராந்தி ரூ.200-க்கு இன்று விற்கப்பட்டது. வி.எஸ்.ஒ.பி.எக்ஸ்டிரா கோல்டு பிராந்தி ரூ.220, ராயல் சேலஞ்ச் விஸ்கி, சிக்னேச்சர் பிரீமியம் விஸ்கி குவாட்டர் ரூ.240-ல் இருந்து ரூ.260 ஆக உயர்ந்தது.

    ஓல்டு காஸ்ரம் கோல்டன், கிரேப் ஆர்டினரி பிராந்தி, மென்ஸ் கிளப் டீலக்ஸ் பிராந்தி ஆகியவை குவாட் டர் ரூ.140-க்கு விற்கப்பட்டது. டைமண்ட் பிராந்தி, விஸ்கி, ரம், சாபில் சூப்பர் ஸ்டார் பிராந்தி ஆகியவை குவாட்டர் ரூ.140 ஆக உயர்ந்தது. எம்.ஜி.எம் மீடியம் ஓட்கா, எம்.ஜி.எம். ஒயிட் மீடியம் ரம், வி.எஸ்.ஓ.பி. பிராந்தி குவாட் டர் ரூ.170-க்கு விற்கப்பட் டது.

    ஆபிசர்ஸ் சாய்ஸ், டைநைட் பிராந்தி ரூ.170, எம்.சி. ஓல்டு காஸ்க் ரம் ரூ.200, எம்.சி வின்டேஜ் கோல்டு பிளன்டட் மால்ட் விஸ்கி ரூ.230, செஞ்சூரியன் பிரெஞ்ச் வி.எஸ்.ஓ.பி. பிராந்தி ரூ.250 ஆக உயர்ந்து உள்ளது.

    பிரிஹான்ஸ் நெப்போலியன் பிராந்தி ரூ.210, பிரிஹான்ஸ் பிரீமி யம் விஸ்கி ரூ.200, பவர் ஆப்பிள் ஓட்கா, பவர் ஆரஞ்சு ஓட்கா ஆகியவை ரூ.170 ஆக உயர்ந்தது.

    ஓல்டு மங்க் டீலக்ஸ் ரம், கோல்டன் ஈகிள் ஆர்டினரி பிராந்தி, ஓரியன் பிராந்தி ஆகியவை குவாட்டர் ரூ.140, மேன்ஷன் ஹவுஸ் பிராந்தி குவாட்டர் ரூ.250, அரை பாட்டில் ரூ.500 ஆக கூடியது.

    கூலி தொழிலாளர்கள், நடுத்தர மக்கள் அதிகமாக பயன்படுத்தும் மதுபானங்கள் குவாட்டர் பாட்டில்கள் ரூ.140 ஆகவும், அரைபாட்டில் ரூ.280 ஆகவும் உயர்ந்தன. இனிமேல் சாதாரண வகை குவாட்டர் சரக்கு அடிக்க வேண்டுமா னால் குறைந்த பட்சம் ரூ.200 தேவைப்படும். தண்ணீர் பாட்டில், கிளாஸ், சினாக்ஸ் என ரூ.250 வரை செலவிட வேண்டிய நிலை உள்ளது.

    பிரீமியம் வகையான சரக்குகளை சாப்பிடுபவர்கள் குவாட்டர் பாட்டிலுக்கு ரூ.350 வரை செலவிட வேண்டும். மதுபானங்கள் விலை இன்று முதல் அமலுக்கு வந்ததால் மது பிரியர்கள் முனுமுனுத்து கொண்டே சரக்கு வாங்கி குடித்தனர். "குடிகாரர்கள் தலையில் தான் கடைசியில் கை வைக்கும்" என்று புலம்பிக் கொண்டே சரக்கு வாங்கியதை காண முடிந்தது.

    சென்னை உள்ளிட்ட அனைத்து நகரப் பகுதிகள், கிராமப்புறங்களில் மது பிரியர்கள் மதுபானங்களின் விலையை கேட்டு 'ஷாக்' ஆனார்கள். ஆனாலும் கடைகளில் கூட்டம் குறையவில்லை. கடைகள் இன்று திறந்ததும் சரக்கு வாங்குவதற்கு காத்து நின்றனர்.

    கூலி தொழிலாளர்கள் நிறைந்த பகுதிகளில் உள்ள மதுக்கடைகளில் வேதனையுடன் புலம்பலை காண முடிந்தது.

    • பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே தரமான கல்வி கிடைக்கும் நிலை உள்ளது.
    • மோடி ஆட்சிக்கு வந்த பின் புதிதாக 15 மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.

    சங்கராபுரம்:

    என் மண் என் மக்கள் யாத்திரையை மேற்கொண்டு வரும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்திற்கு பாத யாத்திரையாக வந்தார்.

    சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    சங்கராபுரம் தொகுதி வளர்ச்சி அடையாமல் பின் தங்கிய நிலையில் உள்ளது. தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு தரமான கல்வி கிடையாது. பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே தரமான கல்வி கிடைக்கும் நிலை உள்ளது. கல்வராயன் மலை, வெள்ளிமலையில் உள்ள மலைவாழ் மக்கள் மட்டும் படிக்கும் பள்ளியில் படித்த 15 பேர் இந்த ஆண்டு ஐ.ஐ.டி.யில் சேர்ந்துள்ளனர்.

    சங்கராபுரம் நகரில் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லும் வழியில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதனால் பெண் பிள்ளைகள் பள்ளிக்கு எப்படி பாதுகாப்பாக சென்றுவர முடியும். கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் பா.ஜ.க.ஆட்சிக்கு வந்த பின் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வீடுகள், ஒரு லட்சத்து 75 ஆயிரம் கழிவறைகள், ஒரு லட்சத்து 24 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 2013-ம் ஆண்டுக்கு முன் 5 மருத்துவ கல்லூரிகள் மட்டுமே இருந்தது. மோடி ஆட்சிக்கு வந்த பின் புதிதாக 15 மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி புஸ்வானமாக ஆகியுள்ளது. மீண்டும் ஊழலற்ற ஆட்சி அமைய நீங்கள் 3-வது முறையாக மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அண்ணாமலை பேசினார். 

    • டாஸ்மாக் மதுபானங்கள் விலையை குவார்ட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த அரசு முடிவு.
    • 'ஆப்' பாட்டில், முழு பாட்டில் விலையும் ரூ.30 முதல் ரூ.80 வரை விலை உயருகிறது.

    தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் வருகிறது. இதனால் டாஸ்மாக் மதுக்கடைகள் இப்போது தவிர்க்க முடியாததாகிவிட்டது.

    பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் பஸ் நிலையம், ரெயில் நிலையம், பள்ளிக்கூடங்கள் அருகேயும் டாஸ்மாக் மதுக்கடைகள் இன்னும் இயங்கி கொண்டுதான் இருக்கிறது. இப்போது மொத்தம் 4829 மதுக்கடைகள் செயல்படுகிறது.

    அரசுக்கு பல்வேறு நிதிச்சுமை ஏற்பட்டுள்ள நிலையில் வருவாயை பெருக்குவதற்கு டாஸ்மாக் மதுபானங்கள் விலையை குவார்ட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.

    அதன்படி பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், ஓட்கா உள்ளிட்ட மதுவகைகளின் விலை குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் விரைவில் உயர உள்ளது. இதற்கேற்ப 'ஆப்' பாட்டில், முழு பாட்டில் விலையும் ரூ.30 முதல் ரூ.80 வரை விலை உயருகிறது.

    இந்நிலையில், வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடியை அழைத்து ஏன்?
    • முதலமைச்சர் ஆவதற்காக தான் கட்சியை ஆரம்பித்து இருக்கிறேனே தவிர முச்சந்தியில் நிற்க கிடையாது.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காமராஜர் சிலை அருகே நாம் தமிழர் கட்சி சார்பில், முத்துக்குமார் 15-வது ஆண்டு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று முத்துக்குமார், பழனிபாபா உருவ படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    கட்சி தொடங்கிய அன்று முதல் இன்று வரை கூட்டணி இல்லை என்றும் தனித்து தான் எங்கள் பயணம் தொடர்கிறது. மக்களை நம்புகிறோம். எங்களை மக்கள் கைவிடமாட்டார்கள். தோற்றாலும், வெற்றி பெற்றாலும் தனித்து தான் என்று வரலாறு பேசும். நாம் தமிழர் கட்சிக்கு கூடும் கூட்டத்தை கண்டு மற்ற கட்சிகள் கலக்கம் கொள்கின்றனர்.

    இது கொள்கைக்காக கூடும் கூட்டம். தி.மு.க. என்பது கட்சி கிடையாது. அது ஒரு கம்பெனி. கருணாநிதி குடும்பத்தின் சொத்து. ஒரு ரூபாய் காசு கொடுக்காமல் மற்ற கட்சிகளால் ஓட்டோ அல்லது கூட்டத்தையோ கூட்ட முடியாது. நாம் தமிழர் செய்வது தான் புரட்சி.

    தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் 2026-க்கு பிறகு ஒரு குச்சியாக கூட இருக்காது. ஒத்தையடி பாதையில் செல்லும் என்னை 8 வழிச்சாலையில் அழைத்துச் செல்வது தி.மு.க., பா.ஜ.க. தான். ஒரு தீவிரவாதியாகவோ, பயங்கரவாதியாக என்னை மாற்றி விடாதீர்கள், ஜனநாயகவாதியாகவே என்னை வைத்து பார்த்துக் கொள்ளுங்கள்.

    ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு. நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் கள்ளுக்கடைகளை (பனை-தென்னை பால்) திறப்போம். டாஸ்மாக் கடைகளை மூடுவோம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொன்னதை நிறைவேற்றி விட்டார்களா? கூட்டுறவு வங்கியில் வைத்த நகைக் கடன் தள்ளுபடி செய்து விட்டார்களா?.

    கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடியை அழைத்து ஏன்? கேலோ என்பது இந்தியில் விளையாட்டு என்று அர்த்தம். இந்தி தெரியாது போடா என்று கூறியவர்கள், ஆட்சிக்கு வந்ததும் இந்தியை வாடா என்கின்றனர். முதல்-அமைச்சர் ஆவதற்காக தான் கட்சியை ஆரம்பித்து இருக்கிறேனே தவிர முச்சந்தியில் நிற்க கிடையாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • டாஸ்மாக் கடைகளில் இப்போது 35 வகையான பீர் மற்றும் 13 வகையான ஒயின் விற்கப்படுகிறது.
    • உயர்தர மது வகைகள் ‘லைட்’ கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் வருகிறது. இதனால் டாஸ்மாக் மதுக்கடைகள் இப்போது தவிர்க்க முடியாததாகி விட்டது.

    ஏழை எளியோர், உழைக்கும் வர்க்கத்தினர் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் வந்து வாங்கி செல்லும் இடமாக 'டாஸ்மாக்' கடைகள் அமைந்து விட்டது. அதனால்தான் பஸ் நிலையம், ரெயில் நிலையம், பள்ளிக்கூடங்கள் அருகேயும் டாஸ்மாக் கடைகள் இன்னும் இயங்கி வருகிறது. இப்போது மொத்தம் 4829 மதுக்கடைகள் செயல்பட்டு வருகிறது.

    அரசுக்கு பல்வேறு நிதிச்சுமை ஏற்பட்டுள்ள நிலையில் வருவாயை பெருக்குவதற்கு டாஸ்மாக் மதுபானங்கள் விலையை குவார்ட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த அரசு முடிவு எடுத்துள்ளது. இந்த விலை உயர்வு பிப்ரவரி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிகிறது.

    அதன்படி பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், ஓட்கா உள்ளிட்ட சாதாரண மது வகைகளின் விலை குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் உயர்கிறது. ஆப் பாட்டில் ரூ.20 அதிகரிக்கும், முழு பாட்டில் விலை ரூ.40 கூடும்.

    பிரீமியம் மதுபாட்டில்கள் குவார்ட்டர் பாட்டில் ரூ.20-ம், முழு பாட்டில் ரூ.80 வரை விலை அதிகரிக்கிறது. அனைத்து வகையான பீர் விலை 10 ரூபாய் உயர்கிறது. நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


    டாஸ்மாக் கடைகளில் இப்போது 35 வகையான பீர் மற்றும் 13 வகையான ஒயின் விற்கப்படுகிறது. சாதாரண மது வகைகளில் 43 பிராண்டுகளும், நடுத்தர அளவில் 49 பிராண்டுகளும், 128 பிரீமியம் பிராண்டுகளும் விற்பனையாகி வருகிறது.

    உயர்தர மது வகைகள் 'லைட்' கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. மதுபான உற்பத்தியாளர்கள் கடந்த சில ஆண்டுகளாக கொள்முதல் விலையை உயர்த்தும் படி அரசுக்கு கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர். அரசுக்கும் இப்போது நிதி நெருக்கடி அதிகமாக உள்ளதால் டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வு என்பது தவிர்க்க முடியாததாகும் என்று அதிகாரிகள் கூறினார்கள்.

    • ஓட்டல்களில் உள்ள மதுபார்களை கண்டிப்பாக மூட வேண்டும்.
    • மதுபானம் விற்பனை செய்யும் மதுக்கூடங்கள், கிளப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    சென்னை கலெக்டர் ரஷ்மிசித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    வடலூர் ராமலிங்க வள்ளலார் நினைவு நாள் வருகிற 25-ந்தேதி (வியாழக்கிழமை), குடியரசு தினம் 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. இந்த 2 நாட்களில் தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் மதுக்கூடங்கள், கிளப்புகள், ஓட்டல்களில் உள்ள மதுபார்களை கண்டிப்பாக மூட வேண்டும். விதிமுறைகளை மீறி இந்த 2 நாட்களிலும் மதுபானம் விற்பனை செய்யும் சில்லரை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள், கிளப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • டாஸ்மாக் நிறுவனம் மதுக்கடைகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
    • அனைத்து கடை பணியாளர்கள் மீதும் தற்காலிக பணிநீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள மதுபான பார்களில் சட்டத்துக்கு புறம்பாக கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக அரசுக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

    இதை தடுக்க டாஸ்மாக் நிறுவனம் மதுக்கடைகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

    காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் மதுபான சில்லரை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்களில் (பார்) மதுபானங்கள் விற்கப்படுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.


    இச்செயல் டாஸ்மாக் நிறுவனத்தின் விதியை மீறிய செயலாகும். மதுக் கூடங்களில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கு 'டாஸ்மாக்' கடை பணியாளர்கள் மதுபானங்களை கொடுக்கக் கூடாது.

    டாஸ்மாக் கடைகளில் இருந்து மதுபானங்களை மதுக் கூடத்திற்கு கொடுத்து விற்றால் சம்பந்தப்பட்ட கடை மேற்பார்வையாளர் உள்ளிட்ட அனைத்து கடை பணியாளர்கள் மீதும் தற்காலிக பணிநீக்கம் (சஸ்பெண்ட்) உள்ளிட்ட கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    • 4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு நாளை பொது விடுமுறை.
    • அத்தியாவசிய சேவை வழங்கும் நிறுவனங்கள் மட்டும் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், 4 மாவட்டங்களுக்கும் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    4 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு நாளை பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவை வழங்கும் நிறுவனங்கள் மட்டும் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    மிச்சாங் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.

    • மனுதாரர்கள் தங்கள் குறைகளுக்கு அரசை அணுகி நிவாரணம் கோரலாம்.
    • கட்டட உரிமையாளர்கள் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகளை மூட, டாஸ்மாக் நிர்வாகம் கடந்த ஜூன் 20ந் தேதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று ஐகோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,

    பொதுநலனை கருத்தில் கொண்டு டாஸ்மாக் கடைகளை மூடுவது தொடர்பாக தமிழக அரசு எடுத்த கொள்கை முடிவை எதிர்த்து நில உரிமையாளர்கள் வழக்கு தொடர முடியாது.

    மனுதாரர்கள் தங்கள் குறைகளுக்கு அரசை அணுகி நிவாரணம் கோரலாம். இது சம்பந்தமான முறையீட்டை பரிசீலித்து அரசு முடிவெடுக்கலாம்.

    இதைத்தொடர்ந்து கட்டட உரிமையாளர்கள் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

    • டாஸ்மாக் கடையில் நேற்று இரவு ஒருவர் மது பாட்டிலை வாங்கிச் சென்றார்.
    • குடிமகன்கள் வாக்குவாதம் செய்தனர்.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த வீரகமோடு பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.

    இந்த கடையில் நேற்று இரவு ஒருவர் மது பாட்டிலை வாங்கிச் சென்றார். அப்போது அதனை திறந்து பார்த்தபோது அந்த மது பாட்டிலில் பல்லி இறந்து கிடந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக அந்த டாஸ்மாக் கடைக்கு சென்று இந்த மது பாட்டிலில் பல்லி உள்ளது. இதை மாற்றித் தரும்படி கேட்டார்.

    இதற்கு டாஸ்மாக் கடை ஊழியர்கள் மூடி திறந்த நிலையில் உள்ளது. இதனை நாங்கள் எப்படி நம்புவது மேலும் மது பாட்டிலை எதற்காக திறந்து எடுத்து வந்தீர்கள். அப்படியே எடுத்துக் கொண்டு வர வேண்டியது தானே என பல்வேறு கேள்விகளை கேட்டனர். அவர்களிடம் குடிமகன்கள் வாக்குவாதம் செய்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த நபர் தனது செல்போனில் அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்தார்.

    மேலும் நான் மது போதையில் இருக்கிறேன். தெரியாமல் பல்லி விழுந்த பாட்டிலில் உள்ள மதுவை நான் குடித்திருந்தால் இந்த நேரம் செத்துபோய் இருப்பேன். எனது சாவுக்கு யார் காரணம்? என பல்வேறு கேள்விகளை பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

    • கூடுதல் விலைக்கு மது விற்ற 2 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
    • மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடி பகுதியில், சிலர் மொத்தமாக டாஸ்மாக் கடையில் இருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து திருட்டுத்தனமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக மாமல்லபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது வடக்கு மாமல்லபுரம் பகுதியை சேர்ந்த ஜோசப் (வயது 53), இ.சி.ஆர் மணிகண்டன் (24) ஆகிய இருவரும் கூடுதல் விலைக்கு மது விற்றபோது போலீசார் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×