search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PMK"

    • கிளி ஜோதிடரின் அருகில் அமர்ந்து, நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் நான் வெற்றி பெறுவேனா? என, ஆர்வமாக தங்கர் பச்சான் கேட்டார்.
    • கிளியை கூண்டில் அடைத்து வைத்து ஜோசியம் பார்ப்பது சட்டப்படி குற்றம் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடலுார் பாராளுமன்ற தொகுதியில் பா.ம.க., வேட்பாளராக சினிமா இயக்குனர் தங்கர் பச்சான் போட்டியிடுகிறார். அவர் கூட்டணி கட்சியினருடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    சுட்டெரிக்கும் வெயிலுக்கு இளைப்பாறுவதற்காக வழியில் உள்ள மரத்தடி நிழலில் ஒதுங்கினார். அந்த மரத்தடியில் கிளி ஜோதிடர் ஒருவர் அமர்ந்து ஜோசியம் பார்த்துக்கொண்டிருந்தார். அதை பார்த்த தங்கர்பச்சான், கிளி ஜோதிடரின் அருகில் அமர்ந்து, நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் நான் வெற்றி பெறுவேனா? என, ஆர்வமாக கேட்டார்.

    கூண்டில் இருந்த கிளியை வெளியே அழைத்து, தங்கர் பச்சான் பெயருக்கு சீட் எடுத்து தருமாறு ஜோசியர் கூறினார். கிளி, அய்யனார் படத்தை எடுத்துக் கொடுத்து, தங்கர் பச்சானை ஒரு பார்வை பார்த்துவிட்டு கூண்டுக்கு திரும்பியது. வெற்றி நிச்சயம் என கிளி ஜோதிடர் அடித்து கூற, நமக்கு அய்யனார் ஆசீர்வாதம் வழங்கி விட்டார். இனிமேல் கவலையில்லை' என, தங்கர் பச்சான் மகிழ்ச்சியாக வாகனத்தில் ஏறி பிரசாரத்தை தொடர்ந்தார்.

    இந்நிலையில், தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்த வீடியோ வைரலான நிலையில் ஜோசியம் பார்த்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    தென்னம்பாக்கம் கோவில் அருகே ஜோசியம் பார்த்த 2 கிளி ஜோசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்த 4 கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கிளியை கூண்டில் அடைத்து வைத்து ஜோசியம் பார்ப்பது சட்டப்படி குற்றம் என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தேர்தலில் எங்களுக்கு வெற்றி, தோல்வி பிரச்சனை இல்லை. கொள்கைதான் பெரிது.
    • கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே. விஷ்ணுபிரசாத் எனது மைத்துனர் தான்.

    கடலூர்:

    கடலூர் பாராளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் தங்கர்பச்சானை ஆதரித்து கடலூர், பண்ருட்டியில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார்.

    கடலூர் தொழிற்பேட்டை ரசாயனக் கழிவு பாதிப்பு குறித்து 25 ஆண்டுகளுக்கு முன்பு பசுமைத் தாயகத்தின் தலைவராக இருந்த நான் போராட்டம் நடத்தினேன். தி.மு.க., அ.தி.மு.க. மாறிமாறி ஆட்சியில் இருந்தும் அதற்கு தீர்வு காணப்படவில்லை.

    தனது தொகுதிக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் போட்டியிடும் தங்கர்பச்சானை பொது வேட்பாளராக பாருங்கள். முந்திரி விலை வீழ்ச்சிக்கு தற்போதைய தி.மு.க. எம்.பி. ரமேஷ்தான் காரணம்.

    என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் நிலத்தடி நீர் 800 அடிக்கும் கீழாக சென்று விட்டது. நிலக்கரி சுரங்கங்கள் கடலூர் மாவட்டத்தை நாசம் செய்து கொண்டிருக்கின்றன. நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக பா.ம.க. தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.

    தேர்தலில் எங்களுக்கு வெற்றி, தோல்வி பிரச்சனை இல்லை. கொள்கைதான் பெரிது.

    கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே. விஷ்ணுபிரசாத் எனது மைத்துனர் தான். ஆரணி பாராளுமன்ற உறுப்பினரான அவர் ஏன் இங்கு வந்து போட்டியிடுகிறார்? அவருக்கு இங்கு என்ன வேலை? அங்கு சீட் கொடுக்காததால் இங்கு வந்துள்ளார். அவர் போட்டியிடுவதைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை. எங்களுக்கு பா.ம.க.வும், கூட்டணியும்தான் முக்கியம்.

    தே.மு.தி.க. வேட்பாளர் சிவக்கொழுந்து எம்.எல்.ஏ.வாக இருந்த போது, தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. தங்கர்பச்சானை 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும். அவர் மனதில் ஆழமான சமூக நீதிக் கருத்துகள் உள்ளன.

    நாம் துரோகம் செய்து விட்டதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஒவ்வொரு முறையும் அ.தி.மு.க.வுக்கு நாங்கள் உயிர் கொடுத்துள்ளோம். பா.ம.க. ஆள வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட கட்சி. உங்களை ஆட்சி அதிகாரத்தில் அமர வைத்து பார்ப்பதற்காக இல்லை.

    இடஒதுக்கீடு, டாஸ்மாக் கடைகள் மூடல் உள்ளிட்ட எங்களின் கோரிக்கைகள் ஏற்கப்படாததால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்தோம். 2026-ல் தி.மு.க., அ.தி.மு.க. இல்லாத புதிய கூட்டணியை அமைப்போம்.

    அ.தி.மு.க. தொண்டர்கள் தங்கள் வாக்குகளை வீணாக்க வேண்டாம். ஏனென்றால், உங்களுக்கு பிரதமர் வேட்பாளர் கிடையாது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவோ, பிரதமராகவோ ஆக போவதில்லை. உங்களின் எதிரி தி.மு.க.

    தி.மு.க.வை தோற்கடிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அ.தி.மு.க.வினர் வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பா.ம.க. பிரமுகர் பிரபு மீது அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • பிரமுகர் சுதாகர் மீது வழக்கு பதிவு செய்து ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அரியலூர்:

    சிதம்பரம் மக்களவை தொகுதி தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. அரசியல் கட்சியினர் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சரும் அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளருமான எஸ்.எஸ்.சிவசங்கர் குறித்து முகநூலில் தவறான செய்தி வெளியிட்டதாக கூறப்படுகிறது. இது பற்றி தி.மு.க. வக்கீல் அன்பரசு கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதி, ஓலைப்பாடி கிராமத்தை சார்ந்த பா.ம.க. பிரமுகர் பிரபு மீது அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனை போல, தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து முகநூலில் தவறான செய்தி வெளியிட்டதாக தி.மு.க. வக்கீல் ராஜசேகர் கொடுத்த புகாரின் பேரில், அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கொலையனூர் கிராமத்தை சார்ந்த அ.தி.மு.க. பிரமுகர் திருமுருகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தில் அனுமதி இல்லாமல் சுவர் விளம்பரம் செய்ததாக பெரிய கிருஷ்ணாபுரம் கிராம நிர்வாக அதிகாரி பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில், பள்ள கிருஷ்ணாபுரத்தை சார்ந்த அ.தி.மு.க. பிரமுகர் சுதாகர் மீது வழக்கு பதிவு செய்து ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தி.மு.க அறிக்கை என்பது வெற்று அறிக்கை, பொய் அறிக்கையாகும்.
    • மாற்றத்திற்கான அரசியலை உருவாக்க தேர்தல் நடைபெறுகின்றது.

    கடலூர்:

    கடலூரில் பா.ஜ.க. கூட்டணி பா.ம.க வேட்பாளரை ஆதரித்து கடலூர் முதுநகரில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. வேட்பாளராக தங்கர் பச்சான் போட்டியிடுகிறார். பா.ஜ.க. ஆட்சியில் கடலூர் மாவட்டத்தில் செய்துள்ள வேலைகள் தற்போது குறிப்பிடுகிறேன். இதில் கடலூர்-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலைக்கு ரூ.1507 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . பிரதமர் வீடு கட்டு திட்டம் மூலம் 5803 குடும்பம், 3 லட்சத்து 7 ஆயிரம் கழிப்பறை, 2 லட்சத்து 40 ஆயிரத்து 800 மக்களுக்கு சமையல் எரிவாயு, மருத்துவ காப்பீடு மூலம் 2 லட்சத்து 88 ஆயிரம், 2 லட்சத்து 65 ஆயிரம் விவசாயிகளுக்கு தலா 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் அடித்தட்டு மக்களுக்கு பாரபட்சம் இன்றி பாரத பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. ஆனால் தி.மு.க. ஆட்சியில் வெறும் வாய் பேச்சு தான். முதலமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் போன்றவர்கள் மக்களுக்கான திட்டங்கள் எதுவும் செய்யவில்லை . ஆனால் தங்கர் பச்சானை நீங்கள் வெற்றி பெற செய்தால் முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை உடனடியாக கொண்டுவரப்படும்.

    விவசாய மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களும் உடனடியாக செயல்படுத்தப்படும். ஆனால் தி.மு.க . ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை. சிலிண்டருக்கு ரூ.100 மானியம், பெட்ரோல் விலை குறைக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் பிரதமர் மோடி 3 முறை பெட்ரோல் விலை குறைத்துள்ளார்.

    ஆகையால் தி.மு.க அறிக்கை என்பது வெற்று அறிக்கை, பொய் அறிக்கையாகும். பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. வேட்பாளர் தங்கர் பச்சானை அதிக வாக்கு வித்தியாசத்தில் மாம்பழ சின்னத்தில் வாக்களித்து நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும். மாற்றத்திற்கான அரசியலை உருவாக்க தேர்தல் நடைபெறுகின்றது. மேலும் செல்லும் இடங்களில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு வருவதால் பா.ஜ.க. வெற்றி பயணத்தை நோக்கி செல்கின்றது. 10 ஆண்டு மோடி ஆட்சி மக்களின் ஆதரவுடன் இன்னும் 5 ஆண்டுகள் தொடர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும்போது தொகுதிகள் மாறுவது தவிர்க்க முடியாது.
    • திருநாவுக்கரசருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காவிட்டாலும் அவருக்கு பெரிய பதவியை கட்சி வழங்கும்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எம்.பி.யாக இருக்கும் மத்திய மந்திரி எல்.முருகனையும் கவர்னராக இருந்த டாக்டர் தமிழிசையையும் தேர்தலில் போட்டியிட வைத்துள்ளீர்கள்.

    ஆனால் தென்சென்னையில் பிறந்த ஜெய்சங்கரையும் திருச்சியில் பிறந்த நிர்மலா சீதாராமையும் போட்டியிட வைக்கவில்லை. இதற்கான உண்மையான காரணத்தை பா.ஜனதா தெளிவுபடுத்த வேண்டும்.

    இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு, சமூக பாதுகாப்பு அளிக்கப்படும். வயதான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்படும். இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுக்கிறது பா.ஜனதா. ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பை வற்புறுத்தியும் சமூக நீதி பற்றி பேசியும் வரும் பாட்டாளி மக்கள் கட்சி பா.ஜனதா உடன் கூட்டணி அமைத்துள்ளது. அந்தக் கட்சி சமூக நீதிக்கு எதிராக சென்று கொண்டிருக்கிறது.

    கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும்போது தொகுதிகள் மாறுவது தவிர்க்க முடியாது. அந்த வகையில் திருச்சி தொகுதி மாறியது. எங்கள் கட்சியின் மூத்த தலைவரான திருநாவுக்கரசருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காவிட்டாலும் அவருக்கு பெரிய பதவியை கட்சி வழங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழக ஆறுகள் சீரமைக்கப்படும்.
    • தங்கம் இறக்குமதி வரி முற்றிலுமாக ரத்து செய்யப்படும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கான பா.ம.க. தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகள் வருமாறு:-

    * சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தப்படும்.

    * தமிழகத்தில் தனியார் நிறுவனங்களில் 80 சதவீத பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டு வரப்படும்.

    * மாநிலங்களுக்கு தன்னாட்சி குறித்து பரிந்துரைக்க வலியுறுத்தப்படும்.

    * மத்திய அரசின் வரி வருவாயில் 50 சதவீதம் மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    * வேளாண் விளைப் பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை வழங்கப்படுவது உழவர்களின் உரிமையாக்கப்படும்.

    * 60 வயது கடந்த உழவர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும்.

    * பொதுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட ரூ.1 லட்சம் வரையிலான பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

    * நியாய விலை கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் வழங்கப்படும்.

    * கடலூர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட 3 நிலக்கரி திட்டங்கள் கைவிடப்படும்.

    * மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறி மற்றும் உணவு தானியங்களுக்கு தடை விதிக்கப்படும்.

    * குறிப்பிட்ட காலத்துக்குள் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை தமிழகத்தில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    * தமிழ்நாட்டை அணு உலை இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    * கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் முழுக்க முழுக்க மத்திய அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும்.

    * மேகதாது அணைக்கான திட்ட அறிக்கை திரும்ப பெறப்படும்.

    * தமிழக ஆறுகள் சீரமைக்கப்படும்.

    * தமிழகத்தில் 3 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

    * பெண்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.

    * கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு கால மருத்துவ உதவி ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்படும்.

    * மூத்த குடிமக்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்படும்.

    * பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் பிற தேவைகளுக்கு ரூ.10 லட்சம் வைப்பீடு கொடுக்கப்படும்.

    * அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வலியுறுத்தப்படும்.

    * அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீட்டை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * சென்னையில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * அனைவருக்கும் இலவச மருத்துவ சேவை வழங்கப்படும்.

    * அனைத்து வட்ட தலைநகரங்களிலும் அறுவை சிகிச்சை வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனைகள் தொடங்கப்படும்.

    * சென்னையில் ரூ. ஆயிரம் கோடியில் தேசிய புற்றுநோய் மருத்துவ மையம் அமைக்கப்படும்.

    * நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * போதைப் பொருட்களை ஒழிக்க சட்டத்திருத்தம் செய்யப்படும்.

    * மது விலக்கை நடை முறைப்படுத்தும் மாநிலங்களுக்கு மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * புகையிலை பொருட்கள் மீது 100 சதவீதம் வரி விதிக்கப்படும்.

    * தனி நபர் வருமான வரி விலக்கு வரம்பு ரூ. 7 லட்சமாக உயர்த்த வலியுறுத்தப்படும்.

    * ஜி.எஸ்.டி. வரி 2 அடுக்குகளாக குறைக்கப்படும்.

    * பெட்ரோல்-டீசல் மீதான வரி குறைக்கப்படும்.

    * தங்கம் இறக்குமதி வரி முற்றிலுமாக ரத்து செய்யப்படும். இதனால் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 6 ஆயிரம் வரை குறையும்.

    * தொழில் தொடங்க மாணவர்களுக்கு வட்டி இல்லாத கடன் வழங்கப்படும்.

    * தருமபுரி-மொரப்பூர் இடையே புதிய ரெயில் பாதை அமைக்கும் பணியை ஒரு ஆண்டில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    * தமிழக மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.

    * தமிழை தேசிய அலுவல் மொழியாக்க வலியுறுத்தப்படும்.

    * திருக்குறளை தேசிய நூலாக்க வலியுறுத்தப்படும்.

    * மது விலக்கு சட்டம் இயற்ற வலியுறுத்தப்படும்.

    * பாட திட்டங்களில் விளையாட்டு சேர்க்கப்படும்.

    * இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தப்படும்.

    * புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற வலியுறுத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சவுமியா அன்புமணி வாரிசு அரசியலில் வர மாட்டார். அவருக்கு தகுதி இருப்பதாகவே பார்க்கிறேன்
    • அன்புமணி ராமதாஸ்- சவுமியாவின் மகள் சங்கமித்ராவின் திருமணம் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது

    பாஜக கூட்டணியில் உள்ள பாமக, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறது. அந்த தொகுதியின் வேட்பாளராக பாமக தலைவர் அன்புமணி ராமதாசின் மனைவியும், பசுமை இயக்கத்தின் நிர்வாகியுமான சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார்.

    இந்நிலையில், கோவை தொகுதி பாஜக வேட்பாளராக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், சவுமியா அன்புமணி வாரிசு அரசியலில் வருவாரா?, மாட்டாரா? என்ற கேள்வியை பத்திரிகையாளர்கள் கேட்டனர்.

    அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, சவுமியா அன்புமணி வாரிசு அரசியலில் வர மாட்டார். அவருக்கு தகுதி இருப்பதாகவே பார்க்கிறேன் என தெரிவித்தார். பசுமை இயக்கத்துக்கு அவர் வேலை செய்து இருக்கிறார். அவர் ஒன்றும் 24 வயதில் சீட் கேட்கவில்லை,30 வயதில் சீட் கேட்கவில்லை,35 வயதில் சீட் கேட்கவில்லை,50 வயதிலும் சீட் கேட்கவில்லை என தெரிவித்தார். சௌமியா அன்புமணிக்கு குழந்தை பிறந்து, அந்த குழந்தைக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்து, அந்த குழந்தைக்கும் திருமணமான பின்புதான் அரசியலுக்கே வந்துள்ளார் என்று குழப்பமான பதிலை கூறினார்.

    இவரது பேச்சை கேட்டு, அங்கு கூடியிருந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் சிரிக்க தொடங்கினர்.

    மேலும், கே.என்.நேரு பையனையும், டி.ஆர்.பி.ராஜாவையும் தயவு செய்து சவுமியா அன்புமணியுடன் ஒப்பிட வேண்டாம் எனவும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்- சவுமியாவின் மகள் சங்கமித்ராவின் திருமணம் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. சவுமியா அன்புமணியின் மகளுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், பேத்திக்கு திருமணம் நடைபெற்றது என்று அண்ணாமலை மாற்றி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    • தங்கத்தின் விலையை குறைப்பேன் என வாக்குறுதி கொடுக்க திமுக தயாரா ?
    • தேமுதிக நியாயத்திற்கும், தமர்மத்திற்கும் துணை நிற்கும்.

    திருச்சியில் அ.தி.மு.கவின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தினார்.

    இந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்பட அதிமுக கூட்டணி தலைவர்களும் பங்கேற்றனர்.

    அப்போது, விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்தார்.

    அப்போது, கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-

    அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி என்பது வெற்றிக் கூட்டணி. அ.தி.மு.க. - தே.மு.தி.க. கூட்டணி 2026 சட்டமன்ற தேர்தலிலும் தொடரும். உறுதியாக, இறுதியாக என்றைக்கும் எங்கள் கூட்டணி தொடரும்.

    முதலமைச்சராக இருந்த போது, எடப்பாடி பழனிசாமி கொரோனா தொற்று, வெள்ளம் போன்ற சூழ்நிலைகளை சிறப்பாக கையாண்டார்.

    சென்னையில் கடந்த ஆண்டு மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது, தி.மு.க. அரசு அதை சிறப்பாக கையாளவில்லை. நீட் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.கவால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது.

    தங்கத்தின் விலையை குறைப்பேன் என வாக்குறுதி கொடுக்க திமுக தயாரா ?

    தேமுதிக நியாயத்திற்கும், தமர்மத்திற்கும் துணை நிற்கும்.

    இரண்டு நாட்கள் வரை கூட்டணியில் இருக்கிறோம் என நாடகம் நடத்தியவர்கள், தங்களுக்கு வேண்டியது கிடைத்தவுடன் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என கூடாரத்தையே காலி செய்து வேறு இடத்திற்கு சென்றுவிட்டார்கள்.

    ஆனால் தேமுதிக அப்படி கிடையாது. துளசி வாசம் மாறும், தவசி வார்த்தை மாறாது. துண்ட காணோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டில் வேறு எந்தக் கட்சியும் மகளிருக்கு இந்த அளவுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை.
    • பா.ம.க. போட்டியிடும் 10 தொகுதிகளில் காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய இரு தொகுதிகள் பட்டியல் சமூகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    2024 பாராளுமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகளின் வேட்பாளர்களில் சவுமியா அன்புமணி (தருமபுரி), கவிஞர் திலகபாமா (திண்டுக்கல்), ஜோதி வெங்கடேசன் (காஞ்சிபுரம்) ஆகிய மூவர் பெண்கள். மொத்த தொகுதிகளில் 30% மகளிருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது தான் மகளிருக்கு அதிகாரம் வழங்குதல், இது தான் சமூகநீதி.

    தமிழ்நாட்டில் வேறு எந்தக் கட்சியும் மகளிருக்கு இந்த அளவுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை. அதனால் தான் சொல்கிறோம் பாட்டாளி மக்கள் கட்சி தான் சமூகநீதிக் கட்சி என்று!

    அதேபோல், பா.ம.க. போட்டியிடும் 10 தொகுதிகளில் காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய இரு தொகுதிகள் பட்டியல் சமூகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தலித் கட்சிகளைத் தவிர, திமுகவோ, அதிமுகவோ அல்லது வேறு எந்தக் கட்சியுமோ பட்டியலினத்தவருக்கு 20% பிரதிநிதித்துவம் வழங்கவில்லை. இது தமிழ்நாட்டின் மொத்த தொகுதிகளில் பட்டியலினத்தவருக்கு வழங்கப்பட்டுள்ள தனித்தொகுதிகளின் பிரதிநிதித்துவத்தை விட அதிகம் ஆகும். இது தான் பட்டியலினத்தவருக்கு அதிகாரம் வழங்குதல், இது தான் சமூகநீதி.

    இதற்கு முன் 1999 பாராளுமன்ற தேர்தலில் 7 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்ட போதே சிதம்பரம், ராசிபுரம் ஆகிய இரு தொகுதிகளை, அதாவது 28.70% தொகுதிகளை பட்டியலினத்தவருக்கு ஒதுக்கிய வரலாறு பாட்டாளி மக்கள் கட்சிக்கு உண்டு. இது தான் நாங்கள் விரும்பும் சமூகநீதி! என கூறியுள்ளார்.

    • சவுமியா அன்புமணி தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறை.
    • கடந்த தேர்தலில் தனது கணவர் அன்புமணிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணியின் மனைவி சவுமியா அன்புமணி தர்மபுரி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    முதலில் வெளியான பட்டியலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிடுவதாக அரசாங்கம் என்பவரின் பெயர் அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அவருக்கு பதிலாக சவுமியா அன்புமணி அறிவிக்கப்பட்டார்.

    சவுமியா அன்புமணி தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறை. அரசியல் குடும்பத்தில் இருந்தாலும் தீவிர அரசியலில் வெளிப்படையாக இறங்கியது இல்லை. பசுமை தாயகம் அமைப்பின் தலைவராக இருந்து சுற்றுச்சூழல் ஆர்வலராகவே இருந்து வந்தார்.


    கடந்த தேர்தலில் தனது கணவர் அன்புமணிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

    சவுமியாவின் தந்தை கிருஷ்ணசாமி முன்னாள் காங்கிரஸ் தலைவர். எம்.பி.யாகவும் இருந்தவர். அதே போல் சவுமியாவின் சகோதரர் டாக்டர் விஷ்ணு பிரசாத் எம்.பி.யாக இருப்பவர். எனவே சிறு வயதில் இருந்தே அரசியல் சூழலுக்குள் வளர்ந்தவர்.

    அதே போல் மாமனார் டாக்டர் ராமதாஸ் பா.ம.க. நிறுவனராகவும், தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் தலைவராகவும் இருப்பவர். கணவர் மத்திய மந்திரியாக இருந்தவர்.


    இப்படி அரசியல் சூழ்ந்த குடும்ப சூழலுக்குள் இருக்கும் சவுமியாவும் தேர்தலில் போட்டியிட விரும்பி இருக்கிறார். மனைவி போட்டியிட விரும்பியதால் தான் போட்டியிட்ட தர்மபுரி தொகுதியில் போட்டியிட அன்புமணி ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.

    முக்கியமாக அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்றதும் 100 சதவீதம் தேர்தலில் குதிக்க தயாராகி இருக்கிறார். கடைசியில் கூட்டணி மாறியதால் போட்டியிட தயங்கியதாக கூறப்படுகிறது.

    ஒருவேளை கடைசி நேரத்தில் மனம் மாறினால் என்ன செய்வது என்ற எண்ணத்தில் தான் கட்சி மேலிடமும் பிரபலமில்லாத அரசாங்கம் என்பவரை வேட்பாளராக அறிவித்ததாகவும், எதிர் பார்த்தது போலவே சமியா போட்டியிட தயார் என்று அறிவித்ததால் அரசாங்கத்தை மாற்றி விட்டு சவுமியாவை அறிவித்ததாகவும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • தருமபுரி தொகுதியில் பா.ம.க. சார்பில் சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார்.
    • காஞ்சிபுரம் தொகுதியில் ஜோதி வெங்கடேஷ் போட்டியிடுகிறார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான அணியில் பா.ம.க, தமிழ் மாநில காங்கிரஸ், அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. நேற்று முன்தினம் மற்ற கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது. அதில் காஞ்சிபுரம் தொகுதியில் மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

    இதற்கிடையே, தருமபுரி தொகுதி பா.ம.க. வேட்பாளர் மாற்றப்பட்டு, அன்புமணி ராமதாஸ் மனைவியான சவுமியா அன்புமணி போட்டியிடுவார் என அறிவிப்பு வெளியானது.

    இந்நிலையில், காஞ்சிபுரம் தொகுதிக்கு பா.ம.க. சார்பில் ஜோதி வெங்கடேஷ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பாஜக கூட்டணியில், பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன
    • பாராளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான அணியில் பா.ம.க., தமிழ் மாநில காங்கிரஸ், அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. பல கட்டங்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை கடந்த 2 தினங்களுக்கு முன் நிறைவு பெற்றது.

    இதையடுத்து பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தொடர்ந்து நேற்று முன்தினம் மற்ற கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

    இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதில், தருமபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசாங்கம் என்பவரை வேட்பாளராக அக்கட்சி அறிவித்தது.

    இந்நிலையில், தருமபுரி தொகுதி பாமக வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அத்தொகுதியில் அன்புமணியின் மனைவியான சவுமியா அன்புமணி போட்டியிடுவார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

    ×