search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காஞ்சிபுரம்"

    • சென்னையில், உள்ள 39,01,167 வாக்காளர்களில், 11,369 பேர் மாற்றுத்திறனாளிகள்.
    • வாக்களிக்கும் விவரங்கள் அனைத்தும் வீடியோவாக பதிவு.

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கும் மேற்பட்ட முதியோருக்கு தபால் வழியாக ஓட்டு அளிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    தேர்தலில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் விருப்பத்தை பெறுவதற்கு வசதியாக, அவர்களின் வீடுகளுக்கே சென்று, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் படிவம் 12டி வழங்கியுள்ளனர்.

    சென்னையில், உள்ள 39,01,167 வாக்காளர்களில், 11,369 பேர் மாற்றுத்திறனாளிகள். 85 வயதுக்கு மேற்பட்டோர் 63,751 பேர். மொத்தம், 75,120 பேர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிப்பதாக கூறி உள்ளனர். 4176 பேர்தான் இதுவரை தபால் ஓட்டு அளிக்க விருப்பம் தெரிவித்து உள்ளனர். மாற்றுத்திறனாளிகள் 366 பேர் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்களான 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்கள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட படிவம் 120-ன்படி வீட்டில் இருந்த படியே வாக்களிக்க 1039 மூத்த குடிமக்கள் மற்றும் 612 மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 1651 நபர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

    மேற்படி நபர்களிடம் அவர்களின் வீடுகளுக்கே சென்று வாக்குகள் பெற ஏதுவாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 14 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நடமாடும் குழுவிலும் ஒரு வாக்குச்சாவடி தலைமை அலுவலர், ஒரு உதவி வாக்குச்சாவடி அலுவலர், ஒரு நுண்பார்வையாளர், ஒரு காவலர் மற்றும் ஒரு புகைப்பட கலைஞர் ஆகியோர் இருப்பர்.

    வாக்குச்சாவடிக்கு வர இயலாத வாக்காளர்களின் விவரங்கள் அட்டவணைப்படுத்தப்பட்டு எந்த தேதியில் எந்த நேரத்தில் அவர்களின் வீடுகளுக்கு செல்ல வேண்டும் என்ற தகவலை வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலமாக வாக்காளர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு வேட்பாளர்களின் முகவர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டு அதனடிப்படையில் இன்று முதல் சம்பந்தப்பட்ட வாக்காளரின் வீடுகளுக்கு சென்று வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மூலம் வாக்காளர் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்ற விளக்கத்தினை அளித்து அதன்பேரில் அவர்களிடம் ரகசிய வாக்குப்பதிவு மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    அதன்படி, சென்னையிலும் இன்று முதல் தபால் வாக்குகள் வீடு தேடி சென்று வாங்க உள்ளனர்.

    அதன்படி, தபால் வாக்குபதிவு இன்று (திங்கட்கிழமை) முதல் 13-ந் தேதி வரையில் நடைபெறவுள்ளது. காலை 10.30 மணிக்கு தபால் வாக்குப்பதிவு தொடங்கவுள்ளது. இந்த பணிக்கா

    வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குச் சீட்டு உள்ள பெட்டியை 3 நாடாளுமன்ற தொகுதிகளிலும் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கபடுகிறது.

    மேற்படி வாக்களிக்கும் விவரங்கள் அனைத்தும் புகைப்படக்காரர்கள் மூலம் வீடியோ பதிவு செய்யப்பட உள்ளது.

    • பாராளுமன்ற தேர்தலில் புரட்சி பாரதம் கட்சிக்கு எந்த தொகுதியையும் அதிமுக ஒதுக்கவில்லை.
    • 40 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி திட்டவட்டமாக கூறினார்

    வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்

    "திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் தொகுதிகளை விருப்பப் பட்டியலாக அளித்து, அதில் ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என அதிமுகவிடம் அவர் கேட்டிருந்தார்.

    ஆனால் கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சிக்கு எந்த தொகுதியையும் அதிமுக ஒதுக்கவில்லை. இதனையடுத்து அதிமுக - புரட்சி பாரதம் கூட்டணி முறியும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி தொடரும் என அக்கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுக கூட்டணியில் எங்களுக்கு சீட் வழங்காததால் வருத்தத்தில் இருந்தோம். அடுத்த தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம் என அதிமுக தலைவர்கள் எங்களை சமாதானம் செய்தனர். பெரும்பாலான தொண்டர்கள் அதிமுகவுடன் தொடரலாம் என கூறியதால் அதில் தொடர முடிவு செய்யப்பட்டது என்றார்.

    40 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி திட்டவட்டமாக கூறினார்.

    • தருமபுரி தொகுதியில் பா.ம.க. சார்பில் சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார்.
    • காஞ்சிபுரம் தொகுதியில் ஜோதி வெங்கடேஷ் போட்டியிடுகிறார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான அணியில் பா.ம.க, தமிழ் மாநில காங்கிரஸ், அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. நேற்று முன்தினம் மற்ற கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது. அதில் காஞ்சிபுரம் தொகுதியில் மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

    இதற்கிடையே, தருமபுரி தொகுதி பா.ம.க. வேட்பாளர் மாற்றப்பட்டு, அன்புமணி ராமதாஸ் மனைவியான சவுமியா அன்புமணி போட்டியிடுவார் என அறிவிப்பு வெளியானது.

    இந்நிலையில், காஞ்சிபுரம் தொகுதிக்கு பா.ம.க. சார்பில் ஜோதி வெங்கடேஷ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மின்சார ரெயில்கள் இயக்கப்படுவதை கண்டித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
    • காஞ்சிபுரம் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    காஞ்சிபுரம்:

    திருமால்பூர் - சென்னை கடற்கரை இடையே செங்கல்பட்டு வழியாக பயணிகள் மின்சார ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் தினந்தோறும் ஆயிரக்காணக்கான பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள்.

    காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பொது மக்கள் மற்றும் மாணவ-மாணவிகளுக்கு இந்த ரெயில் பெரிதும் பயன்உள்ளதாக உள்ளது. காலை நேரத்தில் குறித்த நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்குசெல்ல ஏராளமான பயணிகள் திருமால்பூர் - சென்னை கடற்கரை ரெயிலில் பயணம் செய்வதால் எப்போதும் கூட்டம் நிரம்பி இருக்கும்.

    மேலும் வாலாஜாபாத் மற்றும் காஞ்சிபுரம் கிழக்கு ரெயில் நிலையங்களில் சரக்குகளை கையாள முனையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் தென்னக ரெயில்வேக்கு வருமானம் கிடைத்து வருகிறது.

    இதனால் சரக்கு ரெயில்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில் பயணிகள் மின்சார ரெயில்களை நிறுத்தி தாமதமாக இயக்கி வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 6.15 மணிக்கு காஞ்சிபுரம் ரெயில் நிலையத்திற்கு வர வேண்டிய திருமால்பூர் - சென்னை கடற்கரை மின்சார ரெயில் தாமதமாக 6.45 மணிக்கு வந்தது. இதனால் ரெயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் ஆத்திரம் அடைந்தனர். திடீரென அவர்கள் மின்சார ரெயில் முன்பு நின்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தினமும் தாமதமாக மின்சார ரெயில்கள் இயக்கப்படுவதை கண்டித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனால் காஞ்சிபுரம் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் ரெயில்வே அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மின்சார ரெயிலை குறித்த நேரத்திற்கு இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து மின்சார ரெயில் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதுகுறித்து பயணிகள் கூறும்போது, திருமால்பூர் - சென்னை கடற்கரை மின்சார ரெயில் தினமும் தாமதமாக இயக்கப்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் பொதுமக்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள். இதனை தவிர்க்க காஞ்சிபுரம்- செங்கல்பட்டு இடையே இரு வழிப்பாதை திட்டத்தை உடனடியாக கொண்டு வரவேண்டும் என்றனர்.

    • திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்த நிலையில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
    • காஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    காஞ்சிபுரத்தில் நகைக்கடை அதிபரின் வீட்டில் 150 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

    காஞ்சி விளக்கடி கோவில் தெரு பகுதியில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.

    நகைக்கடை அதிபர் மகாவீர் சந்த் வீட்டை பூட்டிவிட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்த நிலையில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

    இதில், 150 சவரன் தங்க நகைகள், ஒரு லட்ச ரூபாய் பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    கொள்ளை சம்பவம் தொடர்பாக, விஷ்ணு காஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தொடர்வதாக புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார்.

    "திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் தொகுதிகளை விருப்பப் பட்டியலாக அளித்து, அதில் ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என அதிமுகவிடம் கேட்டுள்ளோம்" என்று அவர் கூறியுள்ளார்.

    இன்னமும் அதிமுக எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. ஆனாலும் திருவள்ளூர் எங்களது சொந்த தொகுதி என்பதால் அதை நிச்சயம் கேட்டு வெற்றி பெறுவோம் என்று பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார்.

    அரசியலமைப்பு சட்டத்தை வெளிப்படையாக மீறி ராமர் கோயிலை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். ஒரு மதத்தை மட்டுமே வைத்து அவர் வெளிப்படையாகவே அரசியல் செய்கிறார். ஹிந்து மத்தை வைத்து பாஜக அரசியல் செய்கிறது. நான் கூட ஹிந்து தான் ஆனால் பாஜகவின் மத அரசியலை நான் ஆதரிக்கவில்லை என்று பூவை ஜெகன் மூர்த்தி பேசியுள்ளார்.

    மேலும் "திமுக வெல்லக் கூடாது என்பதுதான் பாஜகவின் ஒரே எண்ணமாக உள்ளது. பாஜக ஜெயிக்காது என பிரதமர் மோடிக்கே தெரியும். அதனால்தான், அதிமுக ஜெயித்தால்கூட பரவாயில்லை என அக்கட்சித் தலைவர்களை புகழ்ந்து பேசியுள்ளார் என்று பூவை ஜெகன்மூர்த்தி கூறியுள்ளார்.

    • சலவை தொழிலாளி மகன் சிவில் நீதிபதியாக தேர்வு பெற்று அசத்தியுள்ளார்.
    • தனது பணிக்காலத்தில் நேர்மையாகவும் வழக்குகளை விரைந்து முடிக்க முயலுவேன் என தெரிவித்தார்.

    காஞ்சிபுரத்தில் சலவை தொழிலாளி மகன் சிவில் நீதிபதியாக தேர்வு பெற்று அசத்தியுள்ளார்.

    காஞ்சிபுரம் சேக்குப்பேட்டை சாலியர் தெற்கு தெருவில் வசிக்கும் சலவை தொழிலாளியான கணேசன் - மேகலா தம்பதியரின் இரண்டாவது மகனான பாலாஜி, சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று வழக்கறிஞர் ஆனார்.

    அதன் பின்னர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சிவில் நீதிபதிக்கான முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்று நவம்பர் மாதம் நடைபெற்ற இறுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.

    அதனைத் தொடர்ந்து ஜனவரி 30 ஆம் தேதி நடைபெற்ற நேர்முகத் தேர்வில் சிறப்பாகச் செயல்பட்டு, கடந்த 11-ம் தேதி வெளியான முடிவுகளின் படி சிவில் நீதிபதியாக தேர்ச்சி பெற்றார் பாலாஜி.

    நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்றது குறித்துப் பேசிய பாலாஜி, "நாள்தோறும் 8 மணி நேரம் இத்தேர்விற்காக பயிற்சி மேற்கொண்டு வெற்றி பெற்றுள்ளேன். தனது பணிக்காலத்தில் நேர்மையாகவும் வழக்குகளை விரைந்து முடிக்க முயலுவேன்" என தெரிவித்தார்.

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து முசரவாக்கம் காலனியை சேர்ந்த தொழிலாளியான சீராளன் என்பவரை கைது செய்தனர்.
    • சீராளன் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

    காஞ்சிபுரம்:

    பாலுசெட்டி சத்திரம் அருகே உள்ள திருப்புட்குழி பகுதியை சேர்ந்தவர் கண்ணியப்பன். இவரது மனைவி பார்வதி (வயது66). கடந்த 7.12.2018-ம் ஆண்டு திருப்புட்குழி ஏரிக்கரை அருகில் உள்ள நிலத்தில் பார்வதி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முசரவாக்கம் காலனியை சேர்ந்த தொழிலாளியான சீராளன் என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி எழிலரசி தீர்ப்பு அளித்தார். அதில், சீராளன் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

    • உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டது.
    • பால் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகியவற்றை கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

    சென்னை:

    தமிழகத்தில் அரசின் சேவைகள் மற்றும் திட்டங்கள் மக்களை முழுமையாக சென்றடையவும், அவை பொதுமக்களுக்கு முறையாக சென்றடைகிறதா? என்பதை உறுதி செய்யவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் மக்களை நாடி, மக்கள் குறைகேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு எந்திரம் களத்திற்கே வரும் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்"என்ற புதிய திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த நவம்பர் மாதம் அறிவித்தார்.

    (4-வது புதன்கிழமைகளில்) ஒருநாள் வட்ட அளவில் தங்கி ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்க வேண்டும். மேலும் அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தடையின்றி மக்களை சென்றடை வதை உறுதி செய்ய வேண்டும்.

    ஆய்வு செய்யப்படும் வட்டத்தில் கலெக்டர்கள் காலை 9 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை தங்கி இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டம் தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்கப்பட்டது.

    சென்னை நீங்கலாக அனைத்து மாவட்ட கலெக்டர்களும் ஒவ்வொரு வட்டத்தை தேர்வு செய்து இன்று காலை 9 மணி முதல் கிராமங்களில் அதிகாரிகளுடன் முகாமிட்டனர். அவர்கள் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரி, பள்ளிகள், அரசு விடுதிகள், பூங்கா, சமூக நல மையங்கள், பஸ் நிலையம், பொது கழிப்பிடம், போக்குவரத்து சேவை, குடிநீர் வசதி, அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்து திட்டப்பணிகள், பொது மக்களின் குறைகள் குறித்து கேட்டறிந்து மனுக்கள் பெற்றனர்.

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின்படி மாவட்ட கலெக்டர்கள் காஞ்சிபுரம், திருப்போரூர், ஊத்துக்கோட்டை வட்டங்களில் முகாமிட்டு உள்ளனர்.

    காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் காலை 9 மணியளவில் வந்தார். பின்னர் அவர் அதிகாரிகளுடன் புதிய திட்டம் குறித்தும் அதனை செயல்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

    இதைத் தொடர்ந்து இ-சேவை மையம், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரேசன் கடைகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையங்கள், சத்துணவு மையங்கள், நேரடி நெல் கொள்முதல் நிலையம், நகர்ப்புற கூட்டுறவு கடன் சங்கங்கள், விவசாய கிடங்கு, பள்ளிகளை பார்வையிட்டார்.

    பின்னர் வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், ஊராட்சி அலுவலகம், மாநகராட்சி அலுவலகங்களில் கலெக்டர் கலைச்செல்வி மோகன் ஆய்வு செய்தார். அப்போது அலுவலகங்களில் இருந்த பொதுமக்களிடம் குறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை ஆய்வின் போது சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் தெரிவித்த கருத்துக்களின் மீது ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    இதைத் தொடர்ந்து மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை கலெக்டர் கலைச்செல்வி மோகன் பொதுமக்களுடன் கலந்துரையாடி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.

    பின்னர் அரசு விடுதிகள், பூங்கா, அறிவுசார் மையம், சமூக நலத்துறையின் மூலம் பதிவு செய்யப்பட்ட மையங்கள், பஸ் நிலையம், பொது கழிப்பிடம், பஸ் போக்கு வரத்து, அரசு ஆஸ்பத்திரிகளில் ஆய்வு செய்து இரவு தங்குகிறார்.

    நாளை காலை 6 மணி முதல் காலை 8.30 மணி வரை மீண்டும் ஆய்வுப் பணி நடக்கிறது. திடக்கழிவு மேலாண்மை, சுகாதார மேம்பாட்டு நடவடிக்கைகள், குடிநீர் வசதி, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகியவற்றை கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை வட்டத்தில் கலெக்டர் பிரபு சங்கர் தங்கி ஆய்வுப் பணியில் ஈடுபட்டார். காலை 9 மணி முதல் கச்சூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அம்மம்பாக்கம் கிராமம், மதுரா சீத்தஞ்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி, அங்கன்வாடி மையம், பெருஞ்சேரியில் உள்ள ரேசன் கடை, எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம், பெரியபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஊத்துக்கோட்டையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    இதைத் தொடர்ந்து மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரை அரசு அதிகாரிகள் தெரிவித்த கருத்துக்களின் மீது ஆய்வு கூட்டம் கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் நடை பெற்றது. பின்னர் பொது மக்களிடம் கலந்துரையாடி பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெறப்பட்டது.

    மாலை 6.30 மணிக்கு ஊத்துக்கோட்டையில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாணவர்கள் விடுதி, பஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு நடைபெறுகிறது. பின்னர் இரவு அம்மம் பாக்கம் கிராமத்தில் கலெக்டர் பிரபுசங்கர் தங்குகிறார். நாளை (1-ந்தேதி) மீண்டும் ஆய்வு பணியை தொடங்கும் கலெக்டர் பிரபுசங்கர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம், ஊத்துக்கோட்டை பேரூராட்சி சிட்ரப்பாக்கத்தில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் தூய்மை பணிகள், குடிநீர் வினியோகம், கச்சூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்கிறார்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர் வட்டத்தில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெற்றது. மாவட்டத்திற்கு புதிதாக பொறுப்பேற்று உள்ள கலெக்டர் அருண்ராஜ் காலை 9 மணி அளவில் திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் அனைத்து துறை அதிகாரிகளுடன் திருப்போரூர் பேரூராட்சி பகுதியில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டம், திடக்கழிவு மேலாண்மை திட்டம், அரசு மருத்துவமனை, அரசு பள்ளிகள், சத்துணவு கூடங்களில் ஆய்வு செய்தார்.

    இதைதொடர்ந்து கேளம்பாக்கம், அருங்குன்றம், ஒரகடம், ஆமூர், கீழூர் ஆகிய கிராமங்களில் வளர்ச்சி பணிகளை ஆய்வு மேற் கொண்டு கிராமமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். கோவளம், கே.ஆர்.குப்பம் ஊராட்சிகளில் ஊராட்சி பதிவேடுகளை ஆய்வு செய்தார். நெம்மேலியில் செயல்பட்டு வரும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகளை பார்வையிட்டார்.

    ஆலத்தூர் கிராமத்தில் பயனாளிகளுக்கு பட்டாக்களை கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார். பின்னர் மதியம் திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து மக்களின் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார்.

    இன்று மாலை தண்டலம் மயிலை, நாவலூர், கீழூர், ஆமூர் ஊராட்சிக்குட்பட்ட பல கிராமங்களில் தெரு விளக்குகளின் செயல்பாடுகள் மற்றும் பூங்காக்கள், பேருந்து நிலையங்களில் ஆய்வு மேற்கொள்கிறார். இரவு திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் கலெக்டர் அருண்ராஜ் தங்குகிறார்.

    நாளை காலை செம்பாக்கம், நெல்லிக்குப்பம், கொட்டமேடு, முட்டுக்காடு, கோவளம் வடநெம்மேலி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் குடிநீர் விநியோகம், தூய்மை பணிகள், திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து கலெக்டர் அருண் ராஜ் ஆய்வு மேற்கொள்கிறார். பின்னர் ஆலத்தூர், பையனூர், தண்டலம், மடையத்தூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

    உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தை பொது மக்கள் வரவேற்று உள்ளனர். மாவட்ட கலெக்டர் முதல் அதிகாரிகள் அனைவரும் பொதுமக்கள் இருக்கும் இடத்திற்கே வந்து குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பதால் இந்த திட்டத்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    • 7 மகரிஷிகள் சிவவழிபாடு செய்ததாக சொல்லப்படுகிறது.
    • காஞ்சிபுரத்திலும் சப்தஸ்தான தலங்கள் இருக்கின்றன.

    தமிழ்நாட்டின் பல இடங்களில் சப்த ஸ்தானம் எனப்படும் ஏழு இடங்களூம், அது தொடர்புடைய ஏழு ஆலயங்களும் இருக்கின்றன. அவற்றில் ஐக்கியமான சப்தஸ்தான தலமாக திருவையாறைச் சுற்றி அமைந்த 7 ஊர்களூம், அதில் அமைந்த ஆலயங்களும் போற்றப்படுகின்றன. திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருச்சோற்றுத்துறை, திருபிநய்த்தானம், திருப்பழனம், திருவேதிக்குடி, திருவையாறு ஆகிய இந்த ௭ ஊர்களிலும் சப்தரிஷிகள் எனப்படும் 7 மகரிஷிகள் சிவவழிபாடு செய்ததாக சொல்லப்படுகிறது.

    அதேபோல் காஞ்சிபுரத்திலும் சப்த ஸ்தான தலங்கள் இருக்கின்றன. ஒரு முறை பிரம்மதேவன், 'காஞ்சியில் செய்யப்படும் வழிபாடுகளும், தர்மங்களும் பன்மடங்கு பலன் தரக்கூடியது என்று சப்த ரிஷிகளிடம் எடுத்துரைத்தார். அவரது அறிவுரைப்படி சப்த ரிஷிகளான அங்கிரஸ், அத்ரி, காசியபர், குச்சர், கவுதமர், வசிஷ்டர், பிருகு ஆகியோர் காஞ்சிபுரத் தில் உள்ள வியாச சாந்தலீசுவரர் என்ற கோவிலுக்கு அருகில் தனித்தனியாக சிவலிங்கம் அமைத்து வழிபட்டனர்.

    அந்த சிவலிங்கங்கள், அந்த ரிஷி களின் பெயர்களிலேயே அழைக்கப்படுகின்றன. அவை அமைந்த இடங்களும் 'சப்த ஸ்தான தலங்கள்' என்று பெயர் பெற்று விளங்குகின்றன. அவற்றைப் பற்றி இங்கே பார்ப்போம்.

     அங்கீராரீசுவரர் கோவில் (அங்கீரசம்)

    காஞ்சிபுரத்தில் உள்ள சிவ சப்தஸ்தான திருத்தலங்களில் முதலாவது கோவிலாக அமைந்திருப்பது தான் அங்கீராரீசுவரர் கோவில், இந்த ஆலயத்தில் உள்ள இறைவனை பிரதிஷ்டை செய்தவர் அங்கீரச முனிவர். அதனால்தான் இந்த ஆலய இறைவனின் திருப்பெயர், 'அங்கீராரீசுவரர்' என்றானது. இந்த ஆலயத்தில் சப்த ரிஷிகளில் மற்றவர்களான அத்ரி, காசியபர், குச்சர்,பிருகு, கவுதமர், வசிஷ்டர் ஆகியோரும் வழிபாடு செய்திருக்கிறார்கள். இத்தலம் பற்றிய குறிப்புகள் காஞ்சி புராணத்தில் தனிப்படலமாக சொல்லப்பட்டிருக்கிறது.

    காஞ்சிபுரத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள சிறிய காஞ்சிபுரம் என்று அழைக்கப்படும் இடம் அந்த காலத்தில் 'விஷ்ணு காஞ்சி என்று அழைக்கப்பட்டது. இங்குள்ள கண்ணப்பன் தெரு புளியந்தோப்பில் சாந்தலீஸ்வரர் கோவில் இருக்கிறது. இதன் அருகில்தான் அங்கிராரீசுவரர் கோவில் அமைந்துள்ளது. காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் 2 கிலோமீட்டர் தூரத்தில் வெங்குடி என்ற ஊர் உள்ளது. இதன் பஸ் நிறுத்தத்தில் இருந்து தென்திசையில் சென்றால் கோவிலை அடையலாம்.

     அத்திரீசுவரர் கோவில் (அத்திரீசம் - குச்சேசம்)

    அத்ரி முனிவரும், குச்சர் முனிவரும் தனித் தனியாக ஒரே இடத்தில் சிவலிங்கங் களை பிரதிஷ்டை செய்து வழிபட்ட இடம் இது. இங்கே ஒரே கருவறையில் இரண்டு சிவலிங்கங் கள் இருக்கின்றன. அத்ரி முனிவர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கம் ஆவுடையாருடனும், குச்சர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கம் வெறும் பாண வடிவிலும் காணப்படுகின்றன. காஞ்சிபுரம் சப்தஸ்தான தலங்களில் இந்த ஆலயம். இரண்டாம் மற்றும் மூன்றாம் கோவிலாக அமைந்திருக்கிறது.

    இந்த தலம் பற்றிய குறிப்பு களும், காஞ்சி புராணத்தில் தனிப் படலமாக சொல்லப்பட்டிருக்கிறது. இரண்டு தலங்களும் ஒரே இட இடத்தில் அமைந்திருந்தாலும் இங்கே அத்ரி முனிவர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கமே பிரதானம் என்பதால், இந்த ஆலயம் 'அத்திரீகவரர் கோவில் என்றே அழைக்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் சப்த ரிஷிகளில் மற்றவர் களும் வழிபாடு செய்துள்ளனர். இந்த ஆலயம் அங்கீராரீசுவரர் கோவிலின் அருகாமையிலேயே இருக்கிறது.

     காசிபேசுவரர் கோவில் (காசிபேசம்)

    காஞ்சிபுரம் சப்தஸ்தான தலங்களில் 4-வது தலம் இதுவாகும். காசியப முனி வரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம் இங்கே மூலவராக இருக்கிறது. காசியப முனிவர் காஞ்சியில் தங்கியிருந்து சிவபூஜை செய்ததுடன், சிவனை நோக்கி தியானம் செய்தும், பல தர்ம காரியங்களில் ஈடுபட்டும் இத்தல இறைவனை வழிபாடு செய்திருக்கிறார். சிவலிங்க மூர்த்தம் மட்டுமே உள்ளதாக அறிப்படும் இத்தலம் பற்றிய குறிப்புகளும், காஞ்சி புராணத்தில் காணப்படுகிறது.

    காசியப முனிவர் பிரதிஷ்டை செய்து வணங்கியதால், இத்தல மூலவர் 'காசிபேசுவரர்' என்று அழைக்கப்படுகிறார். வெங்குடி பஸ் நிறுத்தத்தில் இருந்து தென்திசையில் சென்றால் வேகவதி ஆற்றங்கரை அம்மன் கோவில் இருக்கும். அந்தக் கோவில் வளாகத்தில் இடதுபுறம் சிறிய கோவிலாக இந்த காசிபேசுவரர் கோவில் இருக்கிறது.

     வசிட்டேசுவரர் கோவில் (வசிட்டேசம்)

    சப்தஸ்தான தலங் களில் 5-வதாக வைத்து போற்றப்படும் ஆலயம் இது. வசிஷ்டர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கம் என்பதால், இத்தல இறைவன் 'வசிட்டேசுவரர்' என்று அழைக்கப்படுகிறார். இந்த சிவலிங்கமானது வெடித்துச் சிதறி, பின்னர் வசிஷ்டரின் வழிபாட்டால் மீண்டும் ஒன்று கூடியதாக சொல்லப்படுகிறது. எனவே இத்தல இறைவனுக்கு 'வெடித்து கூடிய வசிட்டேசுவரர்' என்ற பெயரும் உண்டு. இத்தலம் பற்றியும் காஞ்சி புராணத்தில் தனிப்படலமாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்த ஆலயம் வேகவதி ஆற்றின் கரையில் உள்ள வியாச சாந்தலீசுவரர் கோவிலின் எதிர்புறம் உள்ள குளக்கரையின் தென்புலத்தில் அமைந்திருக்கிறது.

     கவுதமேசுவரர் கோவில் (கவுதமேசம்)

    காஞ்சிபுரம் சப்தஸ்தான தலங்களில் கடைசி தலமாகவும், ஏழாவது தலமாகவும் இருப்பது, கவுதமேசுவரர் கோவில் கவுதம முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கம் என்பதால் இத்தல இறைவனுக்கு 'கவுதமேசுவரர்' என்று பெயர் வந்தது. இந்த ஆலயம் பற்றிய தகவல்களும், காஞ்சி புராணத்தில் தனிப்படலமாக காணப்படுகிறது. காஞ்சியின் தென்புலத்தில் உத்திரமேரூர் செல்லும்

    சாலையில் அரசு நகர் வெளிங்கப்பட்டரை அருகில் அரச மரத் தெருவில் இந்த ஆலயம் இருக்கிறது. காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும், வேகவதி ஆற்றின் முற்பகுதியிலும் கவுதமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

     பார்க்கவேசுவரர் கோவில் (பார்க்கவேசம்)

    பிருகு முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கம் உள்ள இந்த ஆல யம், காஞ்சிபுரம் சப்தஸ்தான தலங்களில் 6-வது தலமாக போற்றப்படுகிறது. பிருகு முனிவர் வழிபட்ட மூர்த்தி என்பதால், இத்தல இறைவன் 'பார்க்க வேசுவரர்' என்றும் 'பார்க்கீசுவரர்' என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலம் பற்றிய குறிப்புகளும், காஞ்சிபுராணத்தில் தனிப் படலமாக சொல்லப்பட்டுள்ளது. காஞ்சியின் தென்புலத்தில் இருந்து உத்திரமேரூர் செல்லும் சாலையில் ஒரிக்கை அரசு நகர் பகுதியில் இத்தலம் அமைந்திருக்கிறது. காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் வேகவதி ஆற்றின் அருகில் இந்தக் கோவில் இருக்கிறது.

    • விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்
    • தங்களது கைபேசி மூலமாகவோ, தாங்களாகவே ஆதார் எண்ணை உறுதி செய்து கொள்ளலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஜனவரி மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் வருகிற 23-ந்தேதி காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் தலைமையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது.

    விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம். மேலும் பி.எம். கிசான் திட்டத்தில் அடுத்து விடுவிக்கப்பட உள்ள தவணைத்தொகையினை பெறும் வகையில் அனைவரும் கிசான் கணக்கினை புதுப்பிக்க வேண்டும். பயனாளிகள் பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களது கைபேசி மூலமாகவோ, தாங்களாகவே ஆதார் எண்ணை உறுதி செய்து கொள்ளலாம். http://pmkisan.gov.in எனும் இணையதளத்தில் சென்று ஆதார் இ-கே.ஒய்.சி. எனும் பக்கத்திற்கு சென்று ஆதார் எண்ணை உறுதி செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் ரெயில்வே சாலையில் தலைமை அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு தினந்தோறும் காஞ்சிபுரத்தை சுற்றி உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். காஞ்சிபுரம் மட்டும் இன்றி அருகில் உள்ள திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களும் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். ஏராளமானோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த ஆஸ்பத்திரியில்அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ பிரிவு, நுண்கதிர் பிரிவு, பச்சிளம் குழந்தைகள் பிரிவு, இயன்முறை சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, காது, மூக்கு தொண்டை சிகிச்சை பிரிவு உள்பட பல்வேறு பிரிவுகள் இயங்கி வருகின்றன.

    காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் போதி கட்டமைப்பு வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறுபவர்கள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் இங்குள்ள காய்ச்சலுக்கான வார்டில் நோயாளி ஒருவருக்கு குளுக்கோஸ் ஏற்றும் பாட்டிலை தொங்கவிட உரிய ஸ்டாண்டு இல்லாததால் அதனை துடைப்பத்தின் நுனியில் கட்டி வைத்து பயன்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த புகைப்படும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    மருத்துவ கட்டமைப்பில் பெரும் வளர்ச்சி அடைந்து உள்ள நிலையில் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்தியில் நிலவும் இந்த நிலை பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இங்குள்ள காய்ச்சலுக்கான வார்டுகள் முறையாக பராமரிக்கப்படாமல் காணப்படுகிறது. நோயாளிகளுக்கான படுகையிலும் போதிய வசதிகள் இல்லை. குளுக்கோஸ் மற்றும் நரம்பு வழியாக ஏற்றும் மருந்துகளை தொங்கவிடுவதற்காக பயன்படுத்தும் ஸ்டாண்டுகள் பெரும்பாலான படுக்கைகளில் இல்லை.

    இதனால் தரையை துடைக்க பயன்டுத்தும் துடைப்பத்தின்(மாப்)பின் அடிப்பகுதியில் உள்ள துணியை நீக்கி விட்டு அதன் கம்புகளை மட்டும் நோயாளிகளின் படுக்கையுடன் கட்டி வைத்து உள்ளனர். அதில் குளுக்கோஸ் மற்றும் நரம்பு வழியாக செலுத்தும் மருந்து பாக்கெட்டுகளை தொங்கவிட்டு பயன்படுத்தும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    பல நோயாளிகளின் படுக்கையில் இந்த துடைப்ப நுனி கட்டி வைக்கப்பட்டு உள்ளன. மேலும் பல இடங்களில் அங்குள்ள மின்விளக்கு சுவிட்சுகள் பெயர்ந்து தொங்கியபடி ஆபத்தான நிலையில் உள்ளது.


    கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த படி உள்ளது. ஆனால் காய்ச்ச்சல் வார்டில் போதிய படுக்கை இல்லாததால் பொது வார்டில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பொது வார்டுக்கு வரும் இதய நோயாளிகள், சிறுநீரகப் பிரச்சினையுடன் வரும் நோயாளிகள் சிரமம் அடையும் நிலை ஏற்பட்ட உள்ளது.

    இது தொடர்பாக காய்ச்சல் வார்டில் அனுமதிக்கப்பட்ட திருவண்ணாமலையைச் சேர்ந்த நோயாளி ஒருவர் கூறும்போது, காய்ச்சல் வார்டில் ஒவ்வொரு படுக்கையிலும் குளுக்ககோஸ் மற்றும் மருந்து பாக்கெட்டுகளை தொங்க விட துடைப்பத்தின் நுனிகள் மட்டுமே உள்ளன. இதுபற்றி ஊழியர்களிடம் கேட்டால் எந்த பதிலும் கூறுவதில்லை. ஆஸ்பத்தரியில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றார்.

    செய்யூரைச் சேர்ந்த மற்றொரு நோயாளி கூறும்போது, துடைப்பத்தின் கீழ்பகுதியில் உள்ள துணி இருந்த பகுதியை அகற்றி விட்டு அதனை ஸ்டாண்டாக பயன்படுத்தி வருகிறார்கள். நோயாளிகளின் படுக்கையில் இந்த நுனிகளில் சரியாக கட்டப்படாமல் சரிந்து விழுகிறது. எனக்கு குளுக்கோஸ் அந்த துடைப்பத்தின் கம்பில் கட்டிதான் ஏற்றினார்கள். நான் கைகளை அசைக்கும் போதெல்லாம் அது நழுவி என் மீது விழுந்தது என்று வேதனையுடன் தெரிவித்தார்.

    இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணின் கூறும்போது:-

    காய்ச்சல் வார்டில் கொசுவலை கட்டுவதற்காக துடைப்பத்தின் கம்புகளை சிலர் பயன்படுத்தி உள்ளனர். அதில் குளுக்கோஸ் மற்றும் மருந்து பாக்கெட்டுகள் தொங்க விட்டு பயன்படுத்தப்பட்டதா? என்பது குறித்து ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது. அங்கு 32 ஸ்டாண்டுகள் உள்ளன என்றார்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில்

    காய்ச்சலுக்கு சிகிச்சை பெற ஆண்கள் மற்றும் பெண்கள் வார்டு என தனி தனி வார்டுகள் உள்ளன. ஆனால் காய்ச்சலுக்கான ஆண்கள் வார்டில் 10 படுக்கைகளும், பெண்கள் வார்டில் 12 படுக்கைகள் மட்டுமே உள்ளன.

    இதனால் வைரல் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் மற்றும் கொரோனா பாதித்து வருபவர்களுக்கு தனித்தனி வார்டு இல்லாததால் அந்த நோயாளிகளை பொது வார்டில் வைத்து சிசிச்சை அளிக்கும் நிலை காணப்படுகிறது. இதனால் பொது வார்டில் இருப்பவர்களுக்கு காய்ச்சல் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வசதிகள் மிகவும் மோசமாக உள்ளது என்றனர்.

    ×