என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சிறப்பு தீவிர திருத்தம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2.74 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
- தற்போது உள்ள 1401 வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கையானது வாக்குச்சாவடி மறு சீரமைப்பிற்கு பின்பு 1545 ஆக அதிகரிக்க உள்ளது.
- வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறவுள்ளவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 26 ஆயிரத்து 924 ஆகும்.
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு முந்தைய விபரங்கள் பெறப்பட்டு உள்ளன. வாக்காளர்கள் திருப்பி வழங்கிய படிவங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி முடிந்து விட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் நாளை(19-ந்தேதி) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், ஆலந்தூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் இறந்தவர்கள், இரட்டை பதிவு உள்ளிட்ட காரணங்களால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 2 லட்சத்து 74 ஆயிரம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட உள்ளன.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் கூறியதாவது:-
தற்போது உள்ள 1401 வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கையானது வாக்குச்சாவடி மறு சீரமைப்பிற்கு பின்பு 1545 ஆக அதிகரிக்க உள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறவுள்ளவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 26 ஆயிரத்து 924 ஆகும்.
மேலும் சிறப்பு வாக்காளர் திருத்தம் மூலம் 57 ஆயிரத்து 658 வாக்காளர்கள் இறந்தவர்கள், 10 ஆயிரத்து 719 வாக்காளர்கள் இரட்டைபதிவு, 1 லட்சத்து 46 ஆயிரத்து 621 வாக்காளர்கள் இடம் பெயர்ந்தவர்கள், 58 ஆயிரத்து 675 வாக்காளர்கள் கண்டறிய முடியாதவர்கள் மற்றும் மற்றவை 601 வாக்காளர்கள் என மொத்த 2 லட்சத்து 74 ஆயிரத்து 274 வாக்காளர்கள் நீக்கப்பட உள்ளார்கள்.
வாக்காளர்களின் மேற்படி வரைவு வாக்காளர் பட்டியலில் ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் தொடர்பாக 19.12.2025 முதல் 18.01.2026 வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம் என்றார்.
இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் 35 லட்சத்து 82 ஆயிரம் வாக்காளர்களில் 6 லட்சத்து 20 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.






