என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sankara Mutt"

    • ஸ்ரீ சுப்பிரமணிய கணேச சர்மா டிராவிட் அட்சய திருதியை நாளான இன்று (புதன்கிழமை) பொறுப்பேற்றுக் கொண்டார்.
    • கோவில் திருக்குளத்தில் மிதக்கும் தெப்பலில் அமர்ந்து பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71-வது இளைய பீடாதிபதியாக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீ சுப்பிரமணிய கணேச சர்மா டிராவிட் அட்சய திருதியை நாளான இன்று (புதன்கிழமை) பொறுப்பேற்றுக் கொண்டார்.

    இதற்கான விழா காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள பஞ்சகங்கா தீர்த்த திருக்குளத்தில் இன்று காலை நடந்தது.

    சன்னியாச தீட்சை

    சுப்பிரமணிய கணேச சர்மாவுக்கு, ஸ்ரீ சங்கர மடத்தின் தற்போதைய 70-வது பீடாதிபதியாக உள்ள ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சாமிகள் சன்னியாச ஆசிரம தீட்சை வழங்கினார்.

    புதிய இளைய பீடாதி

    பீடாதிபதியாக பொறுப்பேற்ற கணேச சர்மாவுக்கு ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ஆதீனங்கள், சன்னியாசிகள் ஆகியோர் கோவில் திருக்குளத்தில் மிதக்கும் தெப்பலில் அமர்ந்து பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    பின்னர் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சாமிகள், ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சாமிகள் ஆகிய இருவரும் இணைந்து மூலவர் காமாட்சி அம்பிகையை தரிசனம் செய்தனர்.

    கவர்னர் ஆர்.என்.ரவி

    இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், டாக்டர் சுதா சேஷய்யன், தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன், துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். மேலும் தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து மடாதிபதிகள், சன்னியாசிகள் ஆகியோரும் பங்கேற்றனர்.

    பின்னர் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சாமிகள், ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சாமிகள் ஆகிய இருவரும், காமாட்சி அம்மன் கோவிலில் இருந்து காஞ்சி சங்கரமடத்திற்கு மங்கள மேள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர்.

    அங்கு இளைய மடாதிபதி ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சாமிகளுக்கு உபதேசம் செய்யப்பட்டு 71-வது பீடாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

    விழாவையொட்டி காமாட்சி அம்மன் கோவில் வளாகம், காஞ்சி சங்கர மடம் ஆகியவை வண்ண மின்விளக்குகளாலும், வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    இதற்கான ஏற்பாடுகளை காமாட்சி அம்மன் கோவில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயர் மற்றும் சங்கர மடத்தின் ஸ்ரீ காரியம் செல்லா விசுவநாத சாஸ்திரி ஆகியோர் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

    • ஆந்திரா மாநிலம் அண்ணாவரம் ஷேத்திரத்தைச் சேர்ந்தவர் கணேச சர்மா டிராவிட்.
    • ரிக், யஜூர், சாம வேதங்கள் மற்றும் சாஸ்திர படிப்புகளை படித்து புலமை பெற்றவர்.

    காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதியாக 20 வயதான துத்து சத்திய வேங்கட சூரிய சுப்ரமணிய கணேச சர்மா டிராவிட் தேர்வாகியுள்ளார்.

    ஆந்திரா மாநிலம் அண்ணாவரம் ஷேத்திரத்தைச் சேர்ந்தவர் கணேச சர்மா டிராவிட்.

    2006ல் வேதம் கற்க தொடங்கியதில் இருந்தே காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகளின் ஆசியை பெற்றவர்.

    ரிக், யஜூர், சாம வேதங்கள் மற்றும் சாஸ்திர படிப்புகளை படித்து புலமை பெற்றவர்.

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஸ்ரீ ஞான சரஸ்வதி தேவஸ்தானத்தில் கணேச சர்மா டிராவிட் பணிபுரிந்து வந்தவர்.

    • விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 55வது ஜெயந்தி உற்சவம் 3 நாட்கள் நடக்கிறது.
    • ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள சங்கர மடத்தில் ஜெயந்தி உற்சவம் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சி சங்கர மடத்தின் 70-வது பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 55-வது ஜெயந்தி உற்சவம் 3 நாட்கள் நடக்கிறது. இது தொடர்பாக

    காஞ்சி சங்கர மடத்தின் மேலாளர் சுந்தரேச ஐயர் கூறியதாவது:-

    காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70-வது பீடாதிபதியாக இருந்து வருபவர் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். பக்தர்களின் துயர்களை தீர்த்து வரும் இவரது 55-வது ஜெயந்தி உற்சவம் வருகிற 18-ந்தேதி விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.

    இதனையொட்டி காஞ்சிபுரம் சங்கரமடத்தில் பிப்ரவரி 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை தொடர்ந்து 3 நாட்களும் சதுர்வேத பாராயணம், வித்வத் சதஸ், ஆன்மீகச் சொற்பொழிவுகள், நாமசங்கீர்த்தனம், இன்னிசைக் கச்சேரிகள் நடைபெற உள்ளது.

    18-ந்தேதி ஜெயந்தி நாளன்று ஸ்ரீருத்ர பாராயணம்,ஹோமங்கள் மற்றும் சங்கர மடத்தில் இருக்கும் மகா பெரியவர் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்திலும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் விசேஷ அலங்காரங்களும் நடைபெற உள்ளது.

    தற்சமயம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள சங்கர மடத்தில் விஜேயந்திரர் உள்ளார். அங்கும் ஜெயந்தி உற்சவம் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் இந்நிகழ்வுகளில் கலந்து கொள்ளலாம்.

    காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் அமைந்திருக்கும் சரஸ்வதி கோவிலில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி உற்சவத்தையொட்டி சரஸ்வதிக்கு 18-ந்தேதி வெள்ளி வீணை சாற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கல்லூரியில் பயின்ற பழைய மாணவர்கள் சரஸ்வதிக்கு வெள்ளி வீணை காணிக்கையாக கொடுத்துள்ளனர்.

    ஆண்டுதோறும் மகா சிவராத்திரி நாளன்று சங்கர மடத்தில் சுத்தமான விபூதி தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பசுவின் சாணத்தில் வைதீகமாக செய்யப்பட்ட சாம்பலை விபூதியாக்கி, சலித்து மிருதுவானதாகவும், சுத்தமானதாகவும் மாற்றப்பட்டு விபூதி தயாரிக்கப்படுகிறது. இவை 18-ந்தேதி மகா சிவராத்திரியன்று பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது சங்கரா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன் உடன் இருந்தார்.

    ×