search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காஞ்சி சங்கர மடத்தின் 70வது பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் 55வது ஜெயந்தி உற்சவம்
    X

    காஞ்சி சங்கர மடத்தின் 70வது பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் 55வது ஜெயந்தி உற்சவம்

    • விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 55வது ஜெயந்தி உற்சவம் 3 நாட்கள் நடக்கிறது.
    • ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள சங்கர மடத்தில் ஜெயந்தி உற்சவம் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சி சங்கர மடத்தின் 70-வது பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 55-வது ஜெயந்தி உற்சவம் 3 நாட்கள் நடக்கிறது. இது தொடர்பாக

    காஞ்சி சங்கர மடத்தின் மேலாளர் சுந்தரேச ஐயர் கூறியதாவது:-

    காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70-வது பீடாதிபதியாக இருந்து வருபவர் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். பக்தர்களின் துயர்களை தீர்த்து வரும் இவரது 55-வது ஜெயந்தி உற்சவம் வருகிற 18-ந்தேதி விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.

    இதனையொட்டி காஞ்சிபுரம் சங்கரமடத்தில் பிப்ரவரி 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை தொடர்ந்து 3 நாட்களும் சதுர்வேத பாராயணம், வித்வத் சதஸ், ஆன்மீகச் சொற்பொழிவுகள், நாமசங்கீர்த்தனம், இன்னிசைக் கச்சேரிகள் நடைபெற உள்ளது.

    18-ந்தேதி ஜெயந்தி நாளன்று ஸ்ரீருத்ர பாராயணம்,ஹோமங்கள் மற்றும் சங்கர மடத்தில் இருக்கும் மகா பெரியவர் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்திலும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் விசேஷ அலங்காரங்களும் நடைபெற உள்ளது.

    தற்சமயம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள சங்கர மடத்தில் விஜேயந்திரர் உள்ளார். அங்கும் ஜெயந்தி உற்சவம் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் இந்நிகழ்வுகளில் கலந்து கொள்ளலாம்.

    காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் அமைந்திருக்கும் சரஸ்வதி கோவிலில் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி உற்சவத்தையொட்டி சரஸ்வதிக்கு 18-ந்தேதி வெள்ளி வீணை சாற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கல்லூரியில் பயின்ற பழைய மாணவர்கள் சரஸ்வதிக்கு வெள்ளி வீணை காணிக்கையாக கொடுத்துள்ளனர்.

    ஆண்டுதோறும் மகா சிவராத்திரி நாளன்று சங்கர மடத்தில் சுத்தமான விபூதி தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பசுவின் சாணத்தில் வைதீகமாக செய்யப்பட்ட சாம்பலை விபூதியாக்கி, சலித்து மிருதுவானதாகவும், சுத்தமானதாகவும் மாற்றப்பட்டு விபூதி தயாரிக்கப்படுகிறது. இவை 18-ந்தேதி மகா சிவராத்திரியன்று பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது சங்கரா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன் உடன் இருந்தார்.

    Next Story
    ×