search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lok sabha elections 2019"

    பாரதிய ஜனதா வேட்பாளராக கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடும் கவுதம் காம்பீர் தனக்கு ரூ.147 கோடிக்கு சொத்து இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். #GauthamGambhir #LoksabhaElections2019
    புதுடெல்லி:

    பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா வேட்பாளராக கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    அவர் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவுடன் அவர் தனது சொத்து விவரங்கள் பட்டியலை இணைத்துள்ளார்.

    கவுதம் காம்பீர் தனக்கு ரூ.147 கோடிக்கு சொத்து இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். 2017-18-ம் ஆண்டு மட்டும் தனக்கு ரூ.12.4 கோடி வருவாய் வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    அவரது மனைவிக்கு ரூ.6.17 லட்சம் வருவாய் வந்திருப்பதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் மிகவும் பணக்கார வேட்பாளர் என்ற சிறப்பை கவுதம் காம்பீர் பெற்றுள்ளார்.

    அவர் தனது வேட்புமனுவில் தன் மீது ஒரே ஒரு கிரிமினல் குற்றச்சாட்டு இருப்பதாக கூறி உள்ளார்.

    டெல்லி பா.ஜனதா தலைவர் மனோஜ் திவாரி தனது வேட்புனுவில் தனக்கு ரூ.24 கோடிக்கு சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின்போது அவருக்கு ரூ.4.33 கோடிக்கு தான் சொத்துக்கள் இருந்தது. கடந்த 5 ஆண்டுக்குள் அவருக்கு ரூ.20 கோடி சொத்து அதிகரித்துள்ளது.


    தெற்கு டெல்லி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் விஜேந்திர சிங் ரூ.1.37 கோடி சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். தெற்கு டெல்லி தொகுதியில் போட்டியிடும் ரமேஷ் பிதுரி ரூ.18 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் முன்னாள் முதல்-மந்திரி ஷீலாதீட்சித் வடக்கு கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் தனக்கு ரூ.4.92 கோடிக்கு சொத்து இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    அதில் அவர் நிஜாமுதின் பகுதியில் ரூ.1.88 கோடிக்கு பங்களா இருப்பதாக தெரிவித்துள்ளார். 81 வயதாகும் ஷீலாதீட்சித் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் அதிக அளவு அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #GauthamGambhir #LoksabhaElections2019
    மேற்கு வங்காள மாநிலம் முர்ஷிதாபாத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதலில், வாக்காளர் ஒருவர் கொல்லப்பட்டார். #LokSabhaElections2019 #VoterKilled
    கொல்கத்தா:

    பாராளுமன்ற மூன்றாவது கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. கேரளா, கர்நாடகா, குஜராத், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 116 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.  பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று வாக்களித்து வருகின்றனர். ஒரு சில இடங்களில் வாக்கு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவு தாமதம் ஆனது. கோளாறு ஏற்பட்ட இயந்திரங்கள் மாற்றப்பட்டு பின்னர் வாக்குப்பதிவு தொடங்கியது.

    இந்நிலையில், வாக்குப்பதிவின்போது ஆங்காங்கே வன்முறை ஏற்பட்டது. குறிப்பாக மேற்கு வங்காள மாநிலத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. முர்ஷிதாபாத் மாவட்டம் பாலிகிராம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். இதில், ஓட்டு போடுவதற்காக வரிசையில் நின்றிருந்த தியாருல் கலாம் (வயது 55) என்ற வாக்காளர் பலத்த காயமடைந்து பரிதாபமாக இறந்தார்.

    ராணி நகரில் உள்ள வாக்குச் சாவடியில் அடையாளம் தெரியாத ஒரு கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்கியதால் வாக்காளர்களிடையே பீதி ஏற்பட்டது.



    மோதிகஞ்ச் பகுதியில் பாஜக-திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. கட்சியின் முகாம் அலுவலகங்கள் சேதப்படுத்தப்பட்டன.

    பாலர்காட் தொகுதிக்குட்பட்ட தெற்கு தினஜ்பூரின் புனியாத்பூரில் தேர்தல் நடத்தும் அதிகாரி ஒருவர், அவரது வீட்டில் பிணமாக தொங்கினார். பணிச்சுமை காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. #LokSabhaElections2019 #VoterKilled
    மத பிரசாரத்தில் ஈடுபட்டதாக கூறி மத்திய பிரதேசத்தில் தேர்தல் பணிக்கு சென்ற தமிழக அதிகாரி உமாசங்கரை நீக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #LoksabhaElections2019
    சென்னை:

    தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர், மத்திய பிரதேச மாநிலத்தில் தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டிருந்தார்.

    1990-ம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர் சென்னையில் பல்வேறு அரசு துறைகளிலும் முக்கிய பணிகளை ஆற்றியுள்ளார். வெளிமாநில பொது பார்வையாளராக தேர்தல் ஆணையத்தால் உமாசங்கர் மத்திய பிரதேச மாநிலத்தில் பணி அமர்த்தப்பட்டிருந்தார்.

    இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு உமாசங்கர் சென்றார். அங்கு தலைவலி மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த நோயாளிகளை சந்தித்த உமாசங்கர், அவர்கள் சிகிச்சை பெறுவதற்காக தலையில் கையை வைத்து ஆசிர்வாதம் செய்தார். அப்போது அவர் மத பிரசாரத்திலும் ஈடுபட்டார்.

    இதுபற்றி கேள்விப்பட்டதும் நோயாளிகள் பலர் அவரை தேடிச் சென்று ஆசிர்வாதம் பெற்றனர். இதுபற்றிய தகவல் மாநில தேர்தல் ஆணையத்துக்கு தெரிய வந்தது.

    மாநில தலைமை தேர்தல் அதிகாரியான காந்தா ராவ், உமாசங்கரின் செயல்பாடுகள் பற்றி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு முறைப்படி புகார் தெரிவித்தார்.

    இதையடுத்து உமாசங்கரை தேர்தல் பணியில் இருந்து நீக்கி தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. அவருக்கு பதில் இமாச்சலபிரதேசத்தைச் சேர்ந்த சந்திரகார் பார்தி புதிய தேர்தல் பார்வையாளராக பணி அமர்த்தப்பட்டுள்ளார். #LoksabhaElections2019
    பாராளுமன்ற தேர்தலில் 3-வது கட்டமாக 13 மாநிலம் மற்றும் 2 யூனியன் பிரதேசத்தில் உள்ள 116 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது. #LokSabhaElections2019
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு ஏழு கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக கடந்த 11-ம் தேதி 20 மாநிலங்களில் 91 தொகுதிகளுக்கும், 18-ம் தேதி 13 மாநிலங்களில் 95 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது.

    இந்த நிலையில், மூன்றாவது கட்ட தேர்தல் இன்று தொடங்கியது. 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 116 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.

    கேரளா (20), குஜராத் (26), கோவா (2), அசாம் (4), பீகார் (5), சத்தீஷ்கார் (7), கர்நாடகம் (14), மராட்டியம் (14), ஒடிசா (6), உத்தரபிரதேசம் (10), மேற்கு வங்காளம் (5), காஷ்மீர் (1), திரிபுரா (1) மாநிலங்களிலும் தத்ராநகர் ஹவேலி (1), டாமன் டையூ (1) ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் மொத்தம் 116 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.



    காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடக்கிறது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள்.

    ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு மற்றும் அமித்ஷா போட்டியிடும் காந்தி நகர் தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.

    அதேபோல் சமாஜ்வாடி தலைவர் முலாயம்சிங் யாதவ், பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சசிதரூர், சரத்பவார் மகள் சுப்ரியா சுலே, பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ராஜசேகரன் ஆகிய முக்கிய தலைவர்களும் இன்றைய தேர்தலில் களம் காண்கின்றனர். #LokSabhaElections2019 

    டெல்லியில் உள்ள 6 பாராளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது. #LokSabhaElections2019 #CongressCandidates
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி பல்வேறு கட்டங்களாக அறிவித்து வருகிறது. அவ்வகையில், இன்று டெல்லியில் உள்ள 7 பாராளுமன்றத் தொகுதிகளில், 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி இன்று அறிவித்துள்ளது.  #LokSabhaElections2019 #CongressCandidates

    டெல்லியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-



    சாந்தினி சவுக் - ஜே.பி.அகர்வால்

    வடகிழக்கு டெல்லி- ஷீலா தீட்சித்

    கிழக்கு டெல்லி- அரவிந்தர் சிங் லவ்லி

    புதுடெல்லி - அஜய் மக்கான்

    வடமேற்கு டெல்லி (தனி) - ராஜேஷ் லிலோதியா

    மேற்கு டெல்லி- மகாபல் மிஸ்ரா

    சாந்தினி சவுக் தொகுதியில் போட்டியிடுவேன் என கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் கூறி வந்த நிலையில், அவருக்கு அந்த தொகுதியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. #LokSabhaElections2019 #CongressCandidates
    பாராளுமன்ற தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்த நடிகர் சூர்யா, உரிமைகளை நிலைநாட்ட வாக்களிக்கும் நம் கடமையை நிறைவேற்றுவோம் என்று ட்விட் செய்துள்ளார். #LokSabhaElections2019
    12 மாநிலங்களில் இரண்டாம் கட்டமாக 95 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    வாக்குப்பதிவு தொடங்கிய காலை 7 மணி முதலே மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித்குமார், விஜய், பிரபு, விக்ரம் பிரபு, சசிகுமார், விஜய் ஆண்டனி, நடிகை குஷ்பு, மீனா, சுருதிஹாசன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பலரும் வாக்களித்தனர்.


    நடிகர் சூர்யா அவரது மனைவி ஜோதிகா, நடிகர் கார்த்தி அவரது மனைவி ரஞ்சினி ஆகியோர் தியாகராய நகரில் உள்ள பள்ளி ஒன்றில் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர். தனது வாக்கினை பதிவு செய்துவிட்டு நடிகர் சூர்யா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

    உரிமைகளை எதிர்பார்க்கிற அனைவரும், வாக்களிக்கும் கடமையை தவற விடவே கூடாது.. உரிமைகளை நிலைநாட்ட வாக்களிக்கும் நம் கடமையை நிறைவேற்றுவோம்..!

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். #LokSabhaElections2019 #Suriya #Jyothika

    பாராளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள், திரைத்துறை நட்சத்திரங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் காலையிலேயே சென்று வாக்களித்தனர். #LokSabhaElections2019 #TNElections2019
    சென்னை:

    பாராளுமன்ற இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் 39 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு ஆர்வத்துடன் சென்று தங்கள் வாக்குகளை பதிவு செய்கின்றனர். இதேபோல் அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் பலர் காலையிலேயே வாக்கை பதிவு செய்தனர்.

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் எடப்பாடி சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். தமிழக பாஜக தலைவரும், தூத்துக்குடி தொகுதி பாஜக வேட்பாளருமான தமிழசை சவுந்தரராஜன் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தூத்துக்குடி தொகுதியில் நான் வெற்றி பெறுவேன் என்றும், மற்ற தொகுதிகளிலும் அதிமுக-பாஜக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்றும் கூறினார்.

    தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன் கோபி அருகே குள்ளம்பாளையத்திலும், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைஞாயிறு அருகே உள்ள ஓரடியம்புரத்திலும் வாக்களித்தனர். ஆரணி அருகே உள்ள சேவூரில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வாக்களித்தார். சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தனது தாயார் நளினி சிதம்பரம் மற்றும் மனைவி ஸ்ரீநிதியுடன்  காரைக்குடியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். முன்னதாக ப.சிதம்பரம் தனியாக வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.



    நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார். நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். நடிகர் விஜய் நீலாங்கரையில் வாக்களித்தார்.




    நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல் தனது மகள் ஸ்ருதி ஹாசனுடன் ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். #LokSabhaElections2019 #TNElections2019

    பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று துவங்கிய நிலையில், ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். #LokSabhaElections2019
    12 மாநிலங்களில் இரண்டாம் கட்டமாக 96 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    சரியாக காலை 7 மணிக்கு அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

    நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்தார். அனைவரும் தங்களது வாக்கினை தவறாமல் பதிவு செய்ய வேண்டும் என்று வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

    நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள பள்ளியில் வாக்களித்தனர். நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள பள்ளியில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார். நடிகர் கமல்ஹாசன் தனது மகள் சுருதிஹாசனுடன் தேனாம்பேட்டையில் உள்ள பள்ளியில் வாக்கினை பதிவு செய்தார். முன்னதாக கமல் வாக்குப்பதிவு செய்த பள்ளியில் வாக்குப்பதிவு எந்திரம் பழுதடைந்ததால், காத்திருந்து தனது ஓட்டை பதிவு செய்துவிட்டு சென்றார்.



    மேலும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நடிகை குஷ்பு உள்ளிட்ட பலரும் தங்களது ஓட்டை பதிவு செய்தனர். #LokSabhaElections2019 #Rajinikanth #KamalHaasan #AjithKumar #Vijay 

    பாராளுமன்றத்துக்கு இரண்டாவது கட்டமாக 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு இன்று தொடங்கியது. #LokSabhaElections2019 #ParliamentElections
    முதல்கட்ட பாராளுமன்ற தேர்தல் கடந்த 11-ஆம் தேதி 91 தொகுதிகளுக்கு நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் 95 மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

    தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. புதுச்சேரியில் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கும், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.

    அதேபோல், கர்நாடகா 14, மகாராஷ்டிரா 10, உத்தரபிரதேசம் 8, பீகார் 5, அசாம் 5, ஒடிசா 5, சத்தீஸ்கர் 3, காஷ்மீர் 2, மணிப்பூர் 1 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. 



    சரியாக காலை 7 மணிக்கு அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது வாக்கை பதிவு செய்தார்.

    நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் நிலையில், பதிவாகும் வாக்குகள், வருகிற மே 23-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். #LokSabhaElections2019 #ParliamentElections

    பாராளுமன்றத்துக்கு 2-வது கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு தொடங்கியது. #LokSabhaElection2019 #Tamilnadu #Puducherry #Polling
    சென்னை:

    தமிழ்நாட்டில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பணப்பட்டுவாடா புகாரால் வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

    வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாக காலை 6 மணிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் சோதனை செய்து பார்க்கப்பட்டது. வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் இந்த மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற வருகிறது.

    இந்த பாராளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டசபை தொகுதிகளில் 18 சட்டசபை தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

    இந்த தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் ஓர் அணியும், தி.மு.க. தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகின்றன. இதுதவிர அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன.



    தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் 38 நாடாளுமன்ற தொகுதிகளில் மொத்தம் 822 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதேபோல், 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 269 பேர் போட்டியிடுகின்றனர். புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் 18 பேரும், அங்குள்ள ஒரு சட்டசபை தொகுதியில் 8 பேரும் மல்லுக்கு நிற்கின்றனர்.

    கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த அனல் பறக்கும் பிரசாரம் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இதைத்தொடர்ந்து வாக்காளர்கள் அல்லாத வெளியாட்கள் தொகுதியை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

    இந்த நிலையில், இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது.  மதிய உணவு இடைவேளை இன்றி மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு இடைவிடாமல் நடைபெறும்.

    இதற்காக தமிழகம் முழுவதும் 67,720 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. வாக்குப்பதிவுக்கு தேவையான மின்னணு எந்திரங்கள் உள்ளிட்ட சாதனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

    சித்திரை திருவிழாவை முன்னிட்டு, மதுரை பாராளுமன்ற தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதாவது அந்த தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துடன் ‘விவிபாட்’ கருவியும் இணைக்கப்பட்டு இருக்கும். தான் அளித்த வாக்கு உரிய வேட்பாளருக்கு சரியாக பதிவாகி இருக்கிறதா? என்பதை வாக்காளர் அந்த கருவியில் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம்.

    ஓட்டுப்போட செல்லும்போது வாக்காளர்கள் கையில் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதனால், வாக்காளர்கள் வீட்டிலேயே செல்போனை வைத்துவிட்டு செல்வது நல்லது.

    மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறைவடைந்தாலும், அதற்கு முன்பாக வாக்குப்பதிவு மையத்துக்குள் வாக்காளர்கள் வந்துவிட்டால், அவர்கள் ஓட்டுப் போட அனுமதிக்கப்படுவார்கள். கடைசி நேரத்தில் கூட்டம் அதிகமாக இருந்தால், டோக்கன் கொடுத்து வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

    காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு முதல் 2 மணி நேர இடைவெளியில் பதிவான வாக்கு சதவீத விவரங்கள் வெளியிடப்படும்.

    ஓட்டுப்பதிவு முடிவடைந்ததும், வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக பெட்டியில் வைத்து அடைக்கப்பட்டு ‘சீல்’ செய்யப்படும். பின்னர், போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படும்.

    அடுத்த மாதம் (மே) 19-ந் தேதி, தமிழகத்தில் மீதமுள்ள அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் அன்றுடன் முடிவடைகிறது.

    மே மாதம் 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

    தமிழகத்தில் இன்று வாக்குப்பதிவை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து இருக்கிறது. மாநில போலீசாருடன், துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    63,951 போலீசார், 27,400 துணை ராணுவ படை வீரர்கள், 13,882 ஊர்க்காவல் படையினர், 14 ஆயிரம் தேசிய மாணவர் படையினர், 20 ஆயிரம் ஓய்வு பெற்ற போலீசார் மற்றும் ராணுவத்தினர் என மொத்தம் 1 லட்சத்து 39 ஆயிரத்து 233 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். பதற்றமான வாக்குச்சாவடி என்று கண்டறியப்பட்ட 8,293 ஓட்டுச்சாவடிகளில் துணை ராணுவ படையினர் நிறுத்தப்படுகிறார்கள்.

    இவர்கள் தவிர மாநிலம் முழுவதும் 1,500 வாகனங்களில் அதிவிரைவு படையினர் ரோந்து சுற்றி வருவார்கள்.

    மேலும், கண்காணிப்பு கேமரா மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்படுவதுடன் வீடியோ பதிவும் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

    தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சுமார் 1½ லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். #LokSabhaElection2019 #Tamilnadu #Puducherry #Polling
    தேர்தல் நடைபெறும் நாளில் தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #PaidLeave #ElectionHoliday
    சென்னை:

    தமிழ்நட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (ஏப்ரல் 18) தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. இந்த தேர்தலில் மக்கள் பணிச்சுமையின்றி வாக்களிக்கும் வகையில் ஏப்ரல் 18-ம் தேதியை அரசு விடுமுறை நாளாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    இந்நிலையில், தொழிலாளர் நல ஆணையர் நந்தகோபால் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர்தல் நடக்கும் ஏப்ரல் 18-ல் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

    தனியார் நிறுவனங்கள் மற்றும் வேலை அளிப்பவர்கள் தங்களிடம் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஏப்ரல் 18ல் ஒருநாள் சம்பளத்துடன் விடுப்பு அளிக்க வேண்டும். தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் நல ஆணையர் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #PaidLeave #ElectionHoliday
    தேர்தல், பள்ளி மாணவர்களின் விடுமுறை காரணமாக வெளியூர் செல்லக் கூடியவர்கள் இன்று மாலை முதல் பயணத்தை தொடர்வார்கள் என்ற அடிப்படையில் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. #Loksabhaelections2019
    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுவதால் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக 18-ந்தேதி அரசு விடு முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பிற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிகளவு வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு தங்களது சொந்த ஊரில் வாக்களிக்கும் உரிமை இருப்பதால் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    தேர்தல் நடைபெறுவதால் பள்ளி மாணவர்களுக்கு முன் கூட்டியே தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    அதனால் வெளியூர் செல்லக் கூடியவர்கள் இன்று மாலை முதல் பயணத்தை தொடர்வார்கள் என்ற அடிப்படையில் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    சென்னை கோயம்பேட்டில் இருந்து இன்றும் நாளையும் கூடுதலாக பஸ்களை விட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். நாளை மகாவீர் ஜெயந்தி, மறுநாள் வாக்குப்பதிவு, 19-ந்தேதி பெரிய வெள்ளியை தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை வருவதால் இன்று மாலையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-


    தேர்தல் என்பதற்காக மட்டுமல்ல தொடர் விடுமுறை காலங்களில் சிறப்பு பஸ்கள் இயக்குவது வழக்கம். தற்போது மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு இருப்பதால் வெளியூர் பயணம் அதிகமாக இருக்கும். தேர்தல் நடைபெறுவதால் அதனை கவனத்தில் கொண்டு எந்தெந்த பகுதிகளுக்கு சிறப்பு பஸ் தேவை என்பதை ஆய்வு செய்து அதற்கேற்றவாறு கூடுதலாக பஸ்களை இயக்க தயாராக இருக்கிறோம்.

    அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களானது விழுப்புரம், சேலம், கோவை, மதுரை, கும்பகோணம் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து கழகங்கள் சார்பாக விடப்படுகிறது.

    மதுரை, திருச்சி, தூத்துக்குடி, நெல்லை, நாகர்கோவில், சேலம், கோவை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி, சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர், பகுதிகளுக்கு கோயம்பேட்டில் இருந்து பஸ்கள் இயக்கப்படும்.

    கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லக்கூடிய பஸ்கள் மட்டும் கே.கே.நகர் பஸ் நிலையத்தில் இருந்து வழக்கம்போல புறப்பட்டு செல்லும். சிறப்பு பஸ்களுக்கு முன்பதிவு எதுவும் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார். #Loksabhaelections2019 #TNBuses #SpecialBuses
    ×