search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் - ஓட்டுப்பதிவு தொடங்கியது
    X

    தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் - ஓட்டுப்பதிவு தொடங்கியது

    பாராளுமன்றத்துக்கு 2-வது கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கான ஓட்டுப்பதிவு தொடங்கியது. #LokSabhaElection2019 #Tamilnadu #Puducherry #Polling
    சென்னை:

    தமிழ்நாட்டில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பணப்பட்டுவாடா புகாரால் வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

    வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாக காலை 6 மணிக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் சோதனை செய்து பார்க்கப்பட்டது. வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் இந்த மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற வருகிறது.

    இந்த பாராளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டசபை தொகுதிகளில் 18 சட்டசபை தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

    இந்த தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் ஓர் அணியும், தி.மு.க. தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகின்றன. இதுதவிர அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன.



    தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் 38 நாடாளுமன்ற தொகுதிகளில் மொத்தம் 822 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதேபோல், 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் 269 பேர் போட்டியிடுகின்றனர். புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் 18 பேரும், அங்குள்ள ஒரு சட்டசபை தொகுதியில் 8 பேரும் மல்லுக்கு நிற்கின்றனர்.

    கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த அனல் பறக்கும் பிரசாரம் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இதைத்தொடர்ந்து வாக்காளர்கள் அல்லாத வெளியாட்கள் தொகுதியை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

    இந்த நிலையில், இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது.  மதிய உணவு இடைவேளை இன்றி மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு இடைவிடாமல் நடைபெறும்.

    இதற்காக தமிழகம் முழுவதும் 67,720 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. வாக்குப்பதிவுக்கு தேவையான மின்னணு எந்திரங்கள் உள்ளிட்ட சாதனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

    சித்திரை திருவிழாவை முன்னிட்டு, மதுரை பாராளுமன்ற தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு 2 மணி நேரம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதாவது அந்த தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துடன் ‘விவிபாட்’ கருவியும் இணைக்கப்பட்டு இருக்கும். தான் அளித்த வாக்கு உரிய வேட்பாளருக்கு சரியாக பதிவாகி இருக்கிறதா? என்பதை வாக்காளர் அந்த கருவியில் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம்.

    ஓட்டுப்போட செல்லும்போது வாக்காளர்கள் கையில் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதனால், வாக்காளர்கள் வீட்டிலேயே செல்போனை வைத்துவிட்டு செல்வது நல்லது.

    மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறைவடைந்தாலும், அதற்கு முன்பாக வாக்குப்பதிவு மையத்துக்குள் வாக்காளர்கள் வந்துவிட்டால், அவர்கள் ஓட்டுப் போட அனுமதிக்கப்படுவார்கள். கடைசி நேரத்தில் கூட்டம் அதிகமாக இருந்தால், டோக்கன் கொடுத்து வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

    காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு முதல் 2 மணி நேர இடைவெளியில் பதிவான வாக்கு சதவீத விவரங்கள் வெளியிடப்படும்.

    ஓட்டுப்பதிவு முடிவடைந்ததும், வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக பெட்டியில் வைத்து அடைக்கப்பட்டு ‘சீல்’ செய்யப்படும். பின்னர், போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படும்.

    அடுத்த மாதம் (மே) 19-ந் தேதி, தமிழகத்தில் மீதமுள்ள அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் பாராளுமன்ற தேர்தல் அன்றுடன் முடிவடைகிறது.

    மே மாதம் 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

    தமிழகத்தில் இன்று வாக்குப்பதிவை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து இருக்கிறது. மாநில போலீசாருடன், துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    63,951 போலீசார், 27,400 துணை ராணுவ படை வீரர்கள், 13,882 ஊர்க்காவல் படையினர், 14 ஆயிரம் தேசிய மாணவர் படையினர், 20 ஆயிரம் ஓய்வு பெற்ற போலீசார் மற்றும் ராணுவத்தினர் என மொத்தம் 1 லட்சத்து 39 ஆயிரத்து 233 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். பதற்றமான வாக்குச்சாவடி என்று கண்டறியப்பட்ட 8,293 ஓட்டுச்சாவடிகளில் துணை ராணுவ படையினர் நிறுத்தப்படுகிறார்கள்.

    இவர்கள் தவிர மாநிலம் முழுவதும் 1,500 வாகனங்களில் அதிவிரைவு படையினர் ரோந்து சுற்றி வருவார்கள்.

    மேலும், கண்காணிப்பு கேமரா மூலம் வாக்குப்பதிவு கண்காணிக்கப்படுவதுடன் வீடியோ பதிவும் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

    தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சுமார் 1½ லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். #LokSabhaElection2019 #Tamilnadu #Puducherry #Polling
    Next Story
    ×