search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Forest department"

    • பொன்மனை வன ரேஞ்சர் ராஜேந்திரன் தலைமையிலான வன குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
    • சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பார்வதிபுரம் அருகே கணியக்குளம் பஞ்சாயத்துக் குட்பட்ட உழவன் கோணம் பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை புலி நடமாட்டம் இருந்து வருகிறது.

    அந்த பகுதியில் சிறுத்தை உலா வந்த காட்சிகள் அங்குள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளில் பதிவாகி இருந்தது. இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பொன்மனை வன ரேஞ்சர் ராஜேந்திரன் தலைமையிலான வன குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

    கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருந்த காட்சிகளையும் ஆய்வு செய்தபோது சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். இந்தநிலையில் அந்த பகுதியில் வனத்துறை சார்பில் கண்காணிப்பு கேமிரா அமைத்து சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்றும், குழந்தைகளை தனியாக வெளியே விடக்கூடாது என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் 2 கன்றுகுட்டிகள் இறந்து கிடந்தது. மேலும் ஆடுகளும் உயிரிழந்திருந்தது.

    எனவே சிறுத்தை தான் அடித்து கொன்று இருக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கருதுகிறார்கள். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் சிறுத்தை உலா வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

    • உணவு, தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.
    • வனத்துறையினர் சேதம் அடைந்த பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    உணவு, தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட சேஷன் நகர் பகுதியில் உள்ள விவசாயிகள் கரும்பு, வாழை தென்னை, மஞ்சள் பயிர் செய்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 காட்டு யானைகள் விவசாயி விஜயகுமார் (48) என்பவர் தோட்டத்தில் புகுந்து வாழை மரத்தை சேதம் செய்தது.

    இதை கண்ட விவசாயி அக்கம் பக்கத்து விவசாயிகள் உதவியுடன் யானையை விரட்டினர். 4 மணி நேர போராட்டத்துக்கு பிறகு யானை வனப்பகுதியில் விரட்டப்பட்டது. யானையால் 200 வாழைகள் சேதம் ஆனது.

    வனப்பகுதியில் தற்போது கடும் வறட்சி நிலவுவதால் தொடர்ந்து வனவிலங்குகள் விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருவதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

    வனத்துறையினர் சேதம் அடைந்த பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி தொடர்ந்து தோட்டத்துக்குள் புகுந்து சேதம் செய்து வருவது விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • குறிப்பாக யானைகள் உணவு, தண்ணீருக்காக ஊருக்குள் புகுவதும், பயிர்களை நாசம் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.
    • சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் குட்டி யானையை மீட்டு அழைத்து சென்றுவிட்டனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்கு வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் வனவிலங்குகள் குறிப்பாக யானைகள் உணவு, தண்ணீருக்காக ஊருக்குள் புகுவதும், பயிர்களை நாசம் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.

    இந்த நிலையில் ஆசனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட அரோபாளையம் கிராமத்தில் இன்று காலை 6 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு குட்டி யானை அங்கு உலா வந்தது.

    இதைக்கண்ட அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் உடனடியாக ஆசனூர் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். குட்டி யானை அங்கும் இங்குமாக சுற்றி கொண்டிருந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் குட்டி யானையை மீட்டு அழைத்து சென்று விட்டனர். குட்டி யானை வனப்பகுதியில் இருந்து எப்படி வெளியே வந்தது என தெரியவில்லை.

    இந்நிலையில் அந்த குட்டி யானை கடந்த 2 நாட்களுக்கு முன்பு பவானிசாகர் வனப்பகுதியில் விடப்பட்ட குட்டி யானை என ஒரு தகவல் பரவியது. ஆனால் இது குறித்து வனத்துறையினர் எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை.

    • கரும்பு தோட்டத்திற்குள் புகுந்து ஜெயஸ்ரீ என்ற பெண்ணை தாக்கியது.
    • யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கு வனத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

    தருமபுரி:

    தருமபுரி நகர பகுதிக்குள் புகுந்த ஒற்றை யானை விவசாய நிலங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகிறது. அந்த ஒற்றையானையை வனப்பகுதிக்குள் விரட்ட மாவட்ட வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் பொதுமக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனப்பகுதியில் இருந்து ஒற்றை ஆண் யானை கடந்த 3 நாட்களாக கிராமப் பகுதிக்குள் புகுந்து காரிமங்கலம் வழியாக அண்ணாமலைஅள்ளி, சவுளுக்கொட்டாய் பகுதி யில் இருந்த கரும்பு தோட் டத்திற்குள் புகுந்து ஜெயஸ்ரீ என்ற பெண்ணை தாக்கியது. படுகாயம் அடைந்த அந்தப் பெண் தருமபுரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில் யானை திருப்பத்தூர் சாலை வழியாக சோளக்கொட்டை அருகே மான்காரன் கோட்டை பகுதியை வந்து அடைந்தது அங்குள்ள கரும்பு தோட்டம், தீவனம் பயிர், சோளத்தட்டு உள்ளிட்ட விவசாய பயிர்களை நாசம் செய்து, பின்பு இரவு அங்கிருந்து வனத் துறையினர் பட்டாசு வெடித்து யானையை விரட்ட தொடங்கினர்.

    அப்போது அந்த யானை வேறு பகுதிக்கு சென்றது. தொடர்ந்து வனத் துறையினர் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி டிரோன் கேமரா மூலம் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். நேற்று மாலை 7 மணி அள வில் தருமபுரி திருப்பத்தூர் சாலையை கடந்து செட்டிகரை பகுதி பொறியியல் கல்லூரி பின் பகுதியில் தஞ்சம் அடைந்தது.

    வனத் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை தருமபுரி நகரப் பகுதியான வேடியப்பன் திட்டு, அக்ரஹாரம், சனத்குமார்ஓடை அருகே தற்பொழுது யானை குடியிருப்பு அதிகம் உள்ள பகுதிக்கு யானை புகுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை வேறு பகுதியில் விரட்டும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் யானை தற்போது சனத்க்குமார் ஓடை அருகே உள்ள புதர் பகுதியில் புகுந்துள்ளதால் 3 வனக் குழுவினர் வெவ்வேறு பகுதிகளில் நின்று யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    யானை நகரப் பகுதியில் தற்பொழுது இருப்பதால் இந்த பகுதியில் உள்ள மின்சாரத்தை துண்டித்துள்ளனர். மேலும் யானை நகரப் பகுதிக்குள் செல்ல நேர்ந்தால் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கு வனத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர். தருமபுரி நகரப் பகுதியில் ஒற்றை ஆண் காட்டு யானை வந்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    • பஸ்சின் முன் பக்கவாட்டு கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது.
    • சற்றும் எதிர் பாராத டிரைவர் சுதாரித்துக்கொண்டு பஸ்சை நிறுத்தினார்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வழியாக உடுமலையில் இருந்து கேரள மாநிலம் மூணார் செல்வதற்கு சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதன் வழியாக நாள்தோறும் வாகன மற்றும் சரக்கு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருப்பூரில் இருந்து உடுமலை வழியாக அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு மூணாருக்கு சென்றது.

    பின்னர் அங்கு பயணிகளை இறக்கி விட்டு விட்டு இரவு மூணாறில் இருந்து அந்த பஸ் புறப்பட்டு உடுமலை நோக்கி வந்து கொண்டிருந்தது. தலையார் அருகே வந்த போது உடுமலை-மூணார் சாலையில் ஆக்ரோசத்துடன் சுற்றித்திரிந்த ஒற்றை யானை அந்த பஸ்சை வழிமறித்து தாக்கியது. இதில் பஸ்சின் முன் பக்கவாட்டு கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது.

    இதை சற்றும் எதிர் பாராத டிரைவர் சுதாரித்துக்கொண்டு பஸ்சை நிறுத்தினார். இதன் காரணமாக அச்சமடைந்த பயணிகள் அலறினர். காட்டு யானையின் அடாவடி செயலால் உடுமலை- மூணார் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. யானை பஸ்சை தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    மேலும் வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு யானைகளை காட்டுக்குள் விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், கடந்த சில நாட்களாக உடுமலை- மூணார் சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் யானைகளுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது. மேலும் சாலையின் ஓரங்களில் வாகனங்களை நிறுத்தக் கூடாது.யானைகளை துன்புறுத்தும் வகையில் ஒலி எழுப்புவதோ, கற்களை வீசுவதோ கூடாது. யானைகள் சாலையை கடக்கும் நிகழ்வு நேர்ந்தால் தூரத்தில் வாகனங்களை நிறுத்தி அவை சாலையை கடந்த பின்பு இயக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்.

    • கடைக்குள் இருந்த அரிசி, பருப்பு மற்றும் மளிகை பொருட்களை கூட்டம்-கூட்டமாக தின்று சேதப்படுத்தியது.
    • வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த 5 காட்டு யானைகளையும் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விரட்டினர்.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் தற்போது அதிகரித்து வருகிறது. மேலும் அவை அங்குள்ள ஆற்றங்கரையோரங்களில் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 5 காட்டு யானைகள் நேற்று நள்ளிரவு நல்லகாத்து எஸ்டேட் பகுதிக்கு வந்தது. பின்னர் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அங்குள்ள ரேஷன் கடையை தாக்கி ஜன்னல், கதவு மற்றும் சுற்றுச்சுவரை உடைத்து சேதப்படுத்தியது. பின்னர் கடைக்குள் இருந்த அரிசி, பருப்பு மற்றும் மளிகை பொருட்களை கூட்டம்-கூட்டமாக தின்று சேதப்படுத்தியது.

    நள்ளிரவு நேரத்தில் யானைகள் பிளிறும் சத்தம் கேட்டு பொதுமக்கள் விழித்து தெருவுக்கு வந்து பார்த்தனர். அப்போது காட்டு யானைகள் ரேஷன் கடையை சூறையாடிக்கொண்டு இருந்தன. தொடர்ந்து பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அவர்கள் இதுதொடர்பாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த 5 காட்டு யானைகளையும் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விரட்டினர்.

    காட்டு யானைகள் புகுந்து ரேஷன் கடையை சூறையாடிய சம்பவம் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானைகளை வராமல் தடுக்கவும், அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • ஆண்டு தோறும் புலிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது.
    • பயிற்சி முகாம் அம்பை கோட்ட துணை இயக்குனர் இளையராஜா தலைமையில் முண்டந்துறையில் இன்று காலை தொடங்கியது.

    கல்லிடைக்குறிச்சி:

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் திருக்குறுங்குடி முதல் கடையம் வரை 895 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது.

    பல்லுயிர் பெருக்கத்திற்கு புகழ் பெற்ற இக்காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, கரடி, சிங்கவால் குரங்கு, செந்நாய்கள், கடமான் உள்ளிட்ட அரிய வகை விலங்குகள், மூலிகை தாவரங்கள் உள்ளது.

    இங்கு ஆண்டு தோறும் புலிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. இந்த ஆண்டு அம்பை கோட்டத்திற்கு உட்பட்ட அம்பை, பாபநாசம், முண்டந்துறை, கடையம் உள்ளிட்ட வனச் சரகங்களில் இன்று முதல் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கி வருகிற 27-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    இதனையொட்டி புலிகள் கணக்கெடுப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் அம்பை கோட்ட துணை இயக்குனர் இளையராஜா தலைமையில் முண்டந்துறையில் இன்று காலை தொடங்கியது. இந்த பயிற்சி முகாமில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

    இதைத்தொடர்ந்து பயிற்சி காலையில் முடிந்தவுடன் உடனடியாக மதியமே கணக்கெடுக்கும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட தொடங்கினர். தொடர்ந்து முண்டந்துறை அருகே நாளை (புதன்கிழமை) கணக்கெடுப்பு பணி நடக்கிறது.

    இதனையொட்டி பாபநாசம், மணிமுத்தாறு சோதனை சாவடிகள் தற்காலிகமாக மூடப்படுகிறது. இதனால் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை, சொரிமுத்து அய்யனார் கோவில் ஆகிய இடங்களுக்கு இன்று முதல் பொதுமக்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனை அறியாமல் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    • முருகன் கோவில்களுக்குச் செல்லும் பாதைகளில் காட்டு யானைகள் மற்றும் சிறுத்தைகள் அடிக்கடி தென்படுகின்றன.
    • கோவிலுக்குச் செல்லும் படிக்கட்டுகளை குட்டி யானை உள்பட 8 காட்டு யானைகள் கடந்த 3 நாள்களுக்கு முன்பு கடந்து சென்றுள்ளன.

    வடவள்ளி:

    மருதமலை முருகன் கோவிலுக்குச் செல்லும் வழியில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், கோவிலுக்கு நடந்து, வாகனங்களில் செல்லும் பக்தர்களுக்கு நேரக் கட்டுப்பாடு விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

    கோவை மாவட்டத்தில் ஆனைக்கட்டி, தடாகம், பேரூர், மருதமலை, போளூவாம்பட்டி, மதுக்கரை, ஆகிய பகுதிகளில் யானை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் தற்போது அதிகரித்து காணப்படுகிறது.

    குறிப்பாக மருதமலை, அனுவாவி முருகன் கோவில்களுக்குச் செல்லும் பாதைகளில் காட்டு யானைகள் மற்றும் சிறுத்தைகள் அடிக்கடி தென்படுகின்றன.

    இந்நிலையில், மருதமலை முருகன் கோவிலுக்குச் செல்லும் சாலையில் சிறுத்தை ஒன்று நடமாடிய வீடியோ காட்சிகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியாகின.

    இதேபோல், அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் செல்லும் படிக்கட்டுகளை குட்டி யானை உள்பட 8 காட்டு யானைகள் கடந்த 3 நாள்களுக்கு முன்பு கடந்து சென்றுள்ளன.

    தற்போது இந்த இரண்டு வீடியோ காட்சிகளும் வைரலாகி வருகின்றன. இந்நிலையில், மருதமலை முருகன் கோவிலுக்கு நடந்து செல்வதற்கும், வாகனங்களில் செல்வதற்கும் நேரக்கட்டுப்பாடு விதித்து காவல் துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.

    இது தொடர்பாக வனத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மருதமலை சரகத்தில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மற்றும் கோவிலுக்கு செல்லும் தார்சாலை, படிக்கட்டுகள் வனப்பகுதியில் அமைந்துள்ளதால், சிறுத்தைகள், யானைகள் போன்ற வனவிலங்குகள் பெரும்பாலான முறை கடந்து செல்கின்றன.

    கோவிலுக்குச் சென்று வரும் பக்தர்கள் மற்றும் வாகனங்களின் சத்தத்தால் பெரும்பாலும் பகல் நேரங்களில் அவை கடந்து செல்வதில்லை.வன விலங்குகளின் நடமாட்டத்தை இரவு, பகலாக கண்காணித்து காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே பொது மக்கள் நடந்து செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. வாகனங்களில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை சென்று வரலாம். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர். 

    • காட்டுப் பன்றியை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.
    • கேரளாவில் உள்ளது போல் தமிழகத்திலும் காட்டுப்பன்றிகளை சுட்டுப் பிடிக்க தனி சட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும்.

    நெல்லை:

    தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நெல்லை மாவட்டத்தில் விவசாய விளை நிலங்களையும், பயிர்களையும் அழிக்கும் காட்டுப்பன்றியை வனத்துறையினர் சுட்டுப்பிடிக்க வலியுறுத்தி இன்று பாளை பெருமாள்புரத்தில் உள்ள நெல்லை மாவட்ட வன அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பு குழுவின் மாவட்ட செயலாளர் ஆபிரகாம் தலைமை தாங்கினார். பின்னர் அவர்கள் தமிழக அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    அதனைத் தொடர்ந்து வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது அங்கே பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். தொடர்ந்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் கூறியதாவது:-

    நெல்லை, தென்காசி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் இங்கு வந்துள்ளோம். மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தை ஒட்டிய பகுதிகளில் விவசாயம் செய்ய முடியாத நிலை இருக்கிறது. இதற்கு காரணம் வன விலங்குகள் ஏற்படுத்தும் சேதங்கள் தான்.

    காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளால் மானாவாரி பயிர்களை கூட விவசாயம் செய்ய முடியாத அளவுக்கு நாங்கள் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறோம்.

    நெல், கரும்பு, உளுந்து உள்ளிட்ட எந்த பயிர்களுக்கும் ஆதார விலை கூட அரசு வழங்காமல் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தற்போது வடகிழக்கு பருவ மழை நன்றாகப் பெய்து தண்ணீர் இருந்தும் விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு நாங்கள் ஆளாகி உள்ளோம்.

    எனவே காட்டுப் பன்றியை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். அதை வனத்துறையினர் சுட்டுப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் நாங்கள் எவ்வித சிரமமும் இன்றி விவசாயத்தில் ஈடுபட முடியும்.

    100 சதவீதம் நடக்க வேண்டிய விவசாயம் தண்ணீர் இருந்தும் காட்டுப் பன்றிகளின் அட்டகாசத்தால் 40 சதவீதம் தான் நடக்கிறது. லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து அவை வீணாகி விடுகிறது.

    இந்த கோரிக்கைகளை பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அரசு எங்களது கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் இருந்து வருகிறது. கேரளாவில் உள்ளது போல் தமிழகத்திலும் காட்டுப்பன்றிகளை சுட்டுப் பிடிக்க தனி சட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து பூண்டி வனத்துறை சோதனைச்சாவடி முன்பாக இருந்த சாலை நடுப்புற தடுப்புகளை அகற்றினர்.
    • வழியில் இருக்கும் 6 மலையோர பகுதிகளிலும் தற்காலிக கடைகள் நிறுவும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    வடவள்ளி:

    கோவை மாவட்டம் பூண்டியையொட்டி அமை ந்துள்ள மேற்குத்தொடர்ச்சி மலையின் 7-வது மலை உச்சியில் தென்கயிலை என போற்றப்படும் பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இங்கு பக்தர்கள் ஆண்டுதோறும் கோடை க்காலம் தொடங்கியதும் கூட்டமாக வந்திருந்து படிப்படியாக மலையேறி சென்று, பின்னர் மலைஉச்சியில் வீற்றிருக்கும் சுவாமியை தரிசனம் செய்து செல்வதை பெரும்பாக்கியமாக கருதுகின்றனர்.

    இந்நிலையில் இந்த ஆண்டு கோடைக்காலம் தொடங்கியதை முன்னிட்டு சிவபக்தர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெள்ளியங்கிரி செல்தற்காக பூண்டி மலைஅடிவாரத்துக்கு வந்திருந்தனர். அப்போது அவர்களை வனத்துறையினர் நடுவழியில் தடுத்து நிறுத்தினர். மேலும் வெள்ளியங்கிரி மலையேற்றம் செல்ல அனுமதி மறுத்து ஊருக்குள் மறுபடியும் திருப்பி அனுப்பினர். இது மலையேற ஆர்வமாக வந்திருந்த பக்தர்களை ஏமாற்றம் அடைய செய்தது. தொட ர்ந்து அவர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என வனத்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதற்கிடையே சரவணம்பட்டியை சேர்ந்த நாக ராஜன் என்பவர் வெள்ளியங்கிரி மலையேற்றம் செல்ல ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை 4 மாதங்களுக்கு அனுமதியளிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி மஞ்சுளா, ஆண்டு தோறும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களை அனுமதிக்க வேண் டும் என வனத்துறைக்கு உத்தரவு பிறப்பித்தார்.

    ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து பூண்டி வனத்துறை சோதனைச்சாவடி முன்பாக இருந்த சாலை நடுப்புற தடுப்புகளை அகற்றினர்.

    தொடர்ந்து மலையேற்றத்துக்காக வந்திருந்த பக்தர்களிடம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் புகையிலை பொருட்கள் உள்ளதா? என்று சோதனைக்கு உட்ப டுத்தினர். அப்போது ஒரு சிலரிடம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் உணவுப்பொருட்களை பேப்பரில் மடித்து பக்தர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் பக்தர்கள் வெள்ளிங்கிரி மலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு மலையேற வசதியாக நீண்ட கம்புகள் வழங்கப்பட்டன.

    வெள்ளிங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் கூட்டம்-கூட்டமாக செல்ல வேண் டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். இதன்படி பக்தர்கள் கூட்ட மாக மலையேறி வருகின்ற னர். மேலும் பக்தர்கள் செல்லும்வழியில் பாது காப்பு மற்றும் ரோந்து ப்பணிகள் தீவிரப்படுத்த ப்பட்டு உள்ளன. மார்ச் 8-ந்தேதி மகாசிவராத்திரி வருவதால் அன்றைய தினம் பக்தர்கள் அதிகளவில் திரண்டுவருவர் என்பதால், மலையேற்ற பகுதியில் பாது காப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்பாட்டு பணிகள் தீவிரப்படுத்தப்ப ட்டு உள்ளன.

    மேலும் வெள்ளியங்கரி மலைக்கு வரும் பக்தர்களை பாதுகாப்புடன் வழிநடத்தும் வகையில் எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டு வருகின்றன. பக்தர்களுக்கு வழிகாட்டுவதற்காக தன்னார்வலர்களை ஏற்பாடு செய்யும் பணியும் நடக்கிறது. இதுதவிர மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் கண்காணிப்பு கூரை அமைத்தல், கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்துதல் போன்ற பல்வேறு முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகளும் வனத்துறை சார்பில் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.

    இதற்கிடையே வெள்ளியங்கிரி மலையேற்றத்துக்கு வந்திருக்கும் பக்தர்கள் தேநீர் அருந்தவும், சாப்பாடு வாங்கி செல்லவும் ஏதுவாக, வழியில் இருக்கும் 6 மலையோர பகுதிகளிலும் தற்காலிக கடைகள் நிறுவும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    • யானைகள் மிரண்டு தாக்கும் அபாய நிலை உள்ளது.
    • சுற்றுலாப் பயணிகள் சில நேரங்களில் சாலையோரத்தில் நிற்கும் யானைகளின் அருகிலேயே வாகனத்தை நிறுத்துகின்றனர்.

    ஒகேனக்கல்:

    கோடை காலத்திற்கு முன்பே வனப்பகுதிகளில் வறட்சி நிலவுவதால் யானைகள் கூட்டம் கூட்டமாக கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட வனப்பகுதிகளில் சுற்றி திரிகின்றன. கோடை காலம் துவங்குவதற்கு முன்பே ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமப் பகுதிகளில் யானைகள் அவ்வப்போது யானைகள் நுழைந்து விவசாய பயிர்களை நாசம் செய்வது வழக்கமாக உள்ளது.

    இந்த நிலையில் ஒகேனக்கல் வனப்பகுதிக்கு சுமார் 20-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக இடம்பெயர்ந்துள்ளன. ஒகேனக்கல் சுற்றுலா தளம் பென்னாகரம் பகுதியில் இருந்து 11 கிலோமீட்டர் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டிய நிலை உள்ளதால் இடம்பெயர்ந்துள்ள யானைகள் பென்னாகரம், ஒகேனக்கல் செல்லும் சாலையின் ஓரங்களில் உள்ள மரங்களை உடைத்தும், தண்ணீருக்காக கணவாய் பகுதியில் உள்ள வனப்பகுதிக்குள் உள்ள கூட்டுக் குடிநீர் திட்டம் சிறிய தொட்டிகளில் தண்ணீர் குடிக்க பென்னாகரம் ஒகேனக்கல் செல்லும் சாலைக்கு பகல் நேரங்களிலும் இரவு நேரங்களில் வந்து செல்கிறது.

    அப்போது இரவு நேரங்களில் ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகள், யானையைக் கண்டதும் அச்சத்தில் வாகனங்களை நிறுத்துவது, வாகன ஒலி, ஒளி எழுப்புவது போன்ற செயல்களின் ஈடுபடுகின்றனர். இதனால் யானைகள் மிரண்டு தாக்கும் அபாய நிலை உள்ளது.

    ஒகேனக்கல் வனப்பகு தியில் பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனத்துறையினரின் சார்பில் வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பலகைகளை வாகன ஒளியில் யானைகள் மிரண்டு உடைத்திருப்பதால் யானைகள் கடக்கும் பகுதிகளை அறியாமல் சுற்றுலாப் பயணிகள் சில நேரங்களில் சாலையோரத்தில் நிற்கும் யானைகளின் அருகிலேயே வாகனத்தை நிறுத்துகின்றனர்.

    வறட்சி நிலவும் காலங்களில் ஆண்டுதோறும் யானைகள் ஒகேனக்கல் பகுதிக்கு இடம் பெயரும் சூழல் தொடர்ந்து நிகழ்வதால் பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனத்து றையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டும், மடம் சோதனைச் சாவடி பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 

    • முட்டைகள் பாதுகாக்கப் பட்டு குஞ்சு பொறித்தும் அவை மீண்டும் கடலில் விடப்பட உள்ளது.
    • ஆமைகள் முட்டையிடும் பருவத்தில் அதனை கண்காணித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்

    பொன்னேரி:

    நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை ஆமைகள் முட்டையிடும் காலம் ஆகும். ஆமை முட்டைகள் 45 முதல் 60 நாட்களில் குஞ்சுபொரித்து விடும். தற்போது சென்னை கடற்கரை மற்றும் பழவேற் காடு கடற்கரை பகுதிகளில் ஏராளமான ஆமைகள் முட்டையிட்டு வருகின்றன.

    இந்த நிலையில் பழவேற்காடு பகுதியில் ஆமை முட்டைகளை பாதுகாக்கும் வகையில் வனத்துறையினர், சமூக ஆர்வலர்களுடன் இணைந்து ஆமை முட்டைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் இதுவரை சுமார் 1200-க்கும் மேற்பட்ட ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்து உள்ளனர். இந்த முட்டைகள் பாதுகாக்கப் பட்டு குஞ்சு பொறித்தும் அவை மீண்டும் கடலில் விடப்பட உள்ளது.

    இதற்கிடையே பழவேற்காடு பகுதியில் முட்டையிட கரைக்கு வரும் ஏராளமான ஆமைகள் இறந்து வருகின்றன. படகுகள் மற்றும் வலைகளில் சிக்கி காயம் அடைந்து அவை இறப்பதாக ஆமைகள் பாதுகாப்பு அமைப்பினர் தெரிவித்து உள்ளனர். ஆமைகள் முட்டையிடும் பருவத்தில் அதனை கண்காணித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    ×