search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Forest department"

    • மயிலாடுதுறையில் கடந்த 2-ந்தேதி இரவு சிறுத்தை ஒன்று நடமாடியதை பார்த்து பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர்
    • இந்த நிலையில் இன்று 3-வது நாளாகவும் சிறுத்தையை தேடும் பணி தீவிரப்படுத்தபட்டு உள்ளது.

    மயிலாடுதுறை கூறைநாடு செம்மங்குளம் பகுதியில் கடந்த 2-ந்தேதி இரவு சிறுத்தை ஒன்று நடமாடியதை பார்த்து பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்து வனத்துறை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்து சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்தனர்.

    இதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக நாகை மாவட்ட வனஅலுவலர் அபிஷேக் தோமர் மேற்பார்வையில் வனத்துறை, காவல்துறை, தீயணைப்பு துறை வீரர்கள் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே சிறுத்தை நடமாட்டத்தால் மயிலாடுதுறை ரெயிலடி ஆரோக்கியநாதபுரம் பகுதியில் 7 பள்ளிகளுக்கு கடந்த 2 நாட்களாக விடுமுறை அறிவித்து கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டார். நேற்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவ-மாணவிகள் பலத்த பாதுகாப்புடன் எழுதி சென்றனர்.

    இந்த நிலையில் இன்று 3-வது நாளாகவும் சிறுத்தையை தேடும் பணி தீவிரப்படுத்தபட்டு உள்ளது. இதற்காக ஏற்கனவே 10 கேமராக்கள் பொருத்தப்பட்ட நிலையில் இன்று கூடுதலாக 14 அதிநவீன சென்சார் கேமராக்கள் பொருத்தப்பட்டு உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் 3 கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

    இதற்கிடையே மயிலாடுதுறை சித்தர்காடு பகுதியில் ஆடு ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதையடுத்து ஆட்டை மீட்ட வனத்துறையினர் மற்றும் கால்நடை டாக்டர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். சிறுத்தை கடித்து ஆடு இறந்ததா ? என்று பரிசோதனை செய்து வருகின்றனர். அதன் முடிவில் தான் ஆடு இறப்பிற்கு உண்மையான காரணம் தெரியவரும். இருந்தாலும் இந்த சம்பவத்தால் பொதுமக்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர். பெரும்பாலன பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். 3 நாட்களாகவே இரவில் சரியாக தூங்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.

    சிறுத்தை பிடிப்படாததால் நடமாட்டம் உள்ள பகுதிகளில் நேற்று 7 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் இன்று 9 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மயிலாடுதுறையில் குடியிருப்பு பகுதிகளில் 3 நாட்களாக சுற்றித் திரியும் சிறுத்தையைப் பிடிக்க, நீலகிரி முதுமலையில் இருந்து மயிலாடுதுறைக்கு சிறப்புக் குழு சென்றுள்ளது. மசினகுடியில் டி23 புலியைப் பிடித்தது உள்ளிட்டவற்றில் சிறப்பாக செயல்பட்ட பொம்மன், காளன் ஆகியோர் இந்த குழுவில் உள்ளனர்.

    • பக்தர்கள் வெள்ளிங்கிரி மலையெறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
    • மருத்துவ பணியாளர்கள் பரிசோதனை செய்து விட்டு சுப்பாராவ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

    வடவள்ளி:

    கோவை பூண்டி வெள்ளிங்கிரி மலையின் ஏழாவது மலை உச்சியில் சுயம்புவாக உள்ள ஈசனை தரிசிக்க கடந்த மாதம் 12-ந் தேதி முதல் பக்தர்கள் மலையேறுவதற்கு வனத்துறை அனுமதி அளித்தது.

    இதனை தொடர்ந்து நாள்தோறும் பக்தர்கள் வெள்ளிங்கிரி மலையெறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் சுப்பா ராவ்(வயது57). டாக்டரான இவர் தனது நண்பர்களுடன் சம்பவத்தன்று கோவைக்கு வந்தார்.

    பின்னர் வெள்ளிங்கிரி மலையடிவாரத்திற்கு வந்து மலையேற தொடங்கினார். 4-வது மலையில் நடந்து கொண்டிருந்த போது, சுப்பாராவிற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார்.

    அடிவாரத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, டோலி மூலம் அடிவாரத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு வந்த 108 மருத்துவ பணியாளர்கள் பரிசோதனை செய்து விட்டு சுப்பாராவ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதேபோல் சேலம் மாவட்டம் ஜலகண்டபுரத்தை சேர்ந்தவர் தியாகராஜன்(35). இவர் தர்மபுரியில் உள்ள தனியார் ஆஸ்பத்தியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவரும் தனது நண்பர்கள் 12 பேருடன் வெள்ளிங்கிரி மலையேறினார். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் மலை இறங்கி கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், இன்று அதிகாலை தேனியை சேர்ந்த பாண்டியன் (40) 2வது மலை அருகே மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.

    இதுதொடர்பாக ஆலாந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த மாதம் முதல் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதய பிரச்சினை உள்ளவர்கள் மலையேறுவதை தவிக்க வேண்டும் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • யானை நடமாட்டத்தை கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் அச்சம் அடைந்தனர்.
    • மலை பாதையில் செல்லும்போது வாகனத்தை விட்டு கீழே இறங்க வேண்டாம் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன.

    தற்போது வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள தமிழக-கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உலா வருகின்றன.

    பண்ணாரி அம்மன் கோவில் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள திம்பம் மலைப்பகுதியில் நேற்று மதியம் ஒரு காட்டுயானை சாலை ஓரத்தில் நின்றபடி அங்கும், இங்குமாக நடமாடியது. யானை நடமாட்டத்தை கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் அச்சம் அடைந்தனர்.

    வாகனங்களில் வந்தவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டனர். பஸ் மற்றும் காரில் சென்ற பயணிகள் சிலர் காட்டுயானையை தங்கள் செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். சிறிது நேரம் இருந்த யானை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

    திம்பம் மலைப்பகுதியில் பகல் நேரங்களில் காட்டுயானை நடமாட்டம் உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் கவனமாக செல்லுமாறும், மலை பாதையில் செல்லும்போது வாகனத்தை விட்டு கீழே இறங்க வேண்டாம் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    • வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் வறட்சியின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றன.
    • ஒரு சில வாகன ஓட்டிகள் அதிக சத்தத்தை எழுப்பி யானைகளுக்கு தொந்தரவு கொடுக்கிறார்கள்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்குள்ள உடுமலை, அமராவதி உள்ளிட்ட வனச்சரகங்களில் யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை, கரடி, கருஞ்சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    அவற்றிற்கு தேவையான உணவு தேவையை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளும், தண்ணீர் தேவையை அடர்ந்த வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகளும் பூர்த்தி செய்து தருகின்றன. இதனால் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை அதிகம் நம்பி உள்ளது.

    தற்போது கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் வறட்சியின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றன. இதனால் வனவிலங்குகளுக்கான உணவு தண்ணீர் தேவை பூர்த்தி அடைவதில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிவாரப்பகுதிக்கு வந்துவிட்டன.

    அமராவதி அணையில் நீர்இருப்பு உள்ளதால் அணைப் பகுதிக்குள் வனவிலங்குகள் முகாமிட்டு வருகின்றன. இதனால் அவற்றுக்கான உணவு தண்ணீர் தேவை தற்காலிகமாக பூர்த்தி அடைந்து உள்ளது.

    மேலும் யானைகள் காலை நேரத்தில் உடுமலை - மூணாறு சாலையை கடந்து வனப்பகுதிக்குள் செல்வதும் மாலையில் அணைப்பகுதிக்கு வருவதுமாக உள்ளது. அப்போது ஒரு சில வாகன ஓட்டிகள் அதிக சத்தத்தை எழுப்பி யானைகளுக்கு தொந்தரவு கொடுக்கிறார்கள். இதன் காரணமாக யானைகள் மிரண்டு வாகனஓட்டிகளை துரத்திச் சென்ற சம்பவமும் நிகழ்ந்து உள்ளது.

    இதனால் உடுமலை மூணாறு-சாலையில் யானைகள் நடமாட்டம் இருந்தால் அவை சாலையை கடக்கும் வரையிலும் வாகன ஓட்டிகள் அமைதியாக இருந்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும். யானைகள் அங்கிருந்து செல்லும் வரை ஒலி எழுப்புவதோ, அவற்றின் மீதுகற்களை வீசுவதோ, செல்பி, புகைப்படம் எடுப்பதற்கோ முயற்சி செய்யக் கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். அத்துடன் உடுமலை மூணாறு- சாலை மலைஅடிவாரப் பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • மலைப்பகுதியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் வேடப்பட்டி பகுதி உள்ளது.
    • யானை நடமாட்டம் வந்த தகவலை அடுத்து அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளளனர்.

    வடவள்ளி:

    கோவை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள வனப்பகுதிகளில் காட்டு யானைகள் அதிகமாக உள்ளது. இந்த யானைகள் அவ்வப்போது வனத்தைவிட்டு வெளியேறி உணவு, தண்ணீர் தேடி வனத்தையொட்டி உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வருகிறது.

    கோவை பேரூர் அடுத்துள்ளது வேடப்பட்டி பகுதி. இந்த நிலையில் இன்று அதிகாலை இந்த பகுதிக்கு ஒற்றை காட்டு யானை ஒன்று வந்தது. இந்த யானை அந்த பகுதிகளில் சிறிது நேரம் சுற்றி திரிந்தது.

    பின்னர், பேரூர் அடுத்த வேடப்பட்டி செல்லும் சாலைக்கு ஒற்றை யானை வந்தது. பின்னர் அந்த பகுதியில் உள்ள நிர்மல் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் யானை புகுந்தது. அங்கு சுற்றி திரிந்த யானை, தோட்டத்தில் இருந்த மாமரத்தை பார்த்ததும் குஷியானது. மரத்தின் அருகே சென்று, மரத்தில் கால்வைத்து தனது துதிக்கையால் மாங்காய்களை ஒவ்வொன்றாக பறித்து, ருசித்து சாப்பிட்டது. பின்னர் அங்கிருந்து மீண்டும் வேடபட்டி சாலைக்கு சென்றது. தொடர்ந்து அங்கிருந்து வனத்தை நோக்கி சென்றது.

    மலைப்பகுதியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் வேடப்பட்டி பகுதி உள்ளது. இந்த இடத்திற்கு எப்படி யானை வந்தது என்பது மக்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது.

    யானை நடமாட்டம் வந்த தகவலை அடுத்து அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளளனர். தோட்ட வேலைக்கு செல்வோரும் தனியாக செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எனவே வனத்துறையினர் இந்த பகுதிகளில், யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    • அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருவது பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே பீதியை கிளப்பியுள்ளது.
    • வனத்துறையினர் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மலைப்பகுதியில் நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக புல்வெளிகள், செடி-கொடிகள் காய்ந்து காணப்படுகிறது. மேலும் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருவது பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே பீதியை கிளப்பியுள்ளது.

    பெரும்பள்ளம் வனப்பகுதி, குறிஞ்சி நகர், பழனி மலைச்சாலை உள்ளிட்ட பல இடங்களில் காட்டுத்தீ பற்றி அரிய வகை மரங்கள், மூலிகைச் செடிகள் எரிந்து நாசமாகின. இந்நிலையில் மச்சூர் வனப்பகுதியில் பற்றிய காட்டுத் தீ வேகமாக பரவி பல ஏக்கர் பரப்பிலான மரங்கள் மற்றும் செடிகளை நாசம் செய்தது.

    இது குறித்து அறிந்ததும் 30க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. தற்போது வெப்ப தாக்கத்தின் காரணமாக அடிக்கடி காட்டுத் தீ பற்றி வருகிறது.

    அன்றாட நிகழ்வு போல் தொடர்ந்து காட்டுத் தீ ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மலைப்பகுதியில் காட்டுத்தீயை அணைக்க ஹெலிகாப்டர் மற்றும் நவீன உபகரணங்களை பயன்படுத்த வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் காட்டுத்தீ தொடர்ந்து பற்றி எரிந்து வருகிறது. வனப்பகுதியில் உள்ள வன விலங்குகள், பறவை இனங்கள் வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே வனத்துறையினர் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • வனத்துறையினர் இரவு பகலாக தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு ட்ரோன் மூலம் யானையை கண்காணித்து வந்தனர்.
    • யானை பிடிக்கப்பட்டதால் அச்சத்துடன் வாழ்ந்து வந்த மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

    தருமபுரி:

    ஒற்றை ஆண் யானை ஒன்று, கடந்த 15 நாட்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வழியாக ஒகேனக்கல் வனப்பகுதியை விட்டு வெளியேறியது. இந்த யானை கிராமப் பகுதிகளில் சுற்றி திரிந்து, கடந்த வாரம் தருமபுரி நகர் பகுதி வரை சென்றது. மேலும் தருமபுரியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்தது.

    இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் உடனே தருமபுரிக்கு வந்து அட்டகாசம் செய்து வந்த ஒற்றை யானையை தொப்பூர் வனப் பகுதியில் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த ஒற்றை யானை மீண்டும் பொம்மிடி கிராமப் பகுதியில் நுழைந்தது.

    குறிப்பாக முத்தம்பட்டி, கொண்டகரஅள்ளி, காளிக்கரம்பு வழியாக சுற்றிய யானையை கம்பைநல்லூர் வழியாக கொண்டு சென்று பாலக்கோடு வனப்பகுதியில் விட வன துறை தீவிர முயற்சி மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து அந்த யானை சில்லாரஅள்ளியில் இருந்து கொடகாரஅள்ளி பகுதியில் மைலாப்பூர் கிராமத்தில் தஞ்சம் புகுந்தது.

    வனத்துறையினர் இரவு பகலாக தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு ட்ரோன் மூலம் யானையை கண்காணித்து வந்தனர்.

    இந்நிலையில் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், வனச்சரக அலுவலர் ஆனந்தகுமார் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் வத்தல் மலை அடிவாரபகுதியில் நேற்று இரவு நேரத்தில் மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் இரவு நேரத்தில் காட்டிலிருந்து வெளியேறிய யானை விவசாய தோட்டங்களை சேதப்படுத்தி உணவை உட்கொண்டது. அப்போது யானைக்கு வனத்துறையினர் இரண்டு மயக்க ஊசி செலுத்தினர்.

    உடனடியாக கிரேன் மூலம் யானையை மீட்டு ஒகேனக்கல் அருகே உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வனப் பகுதிகளுக்குள் விடுவதற்காக யானையை வாகனம் மூலம் அழைத்துச் சென்றனர்.

    கடந்த 3 வாரமாக மக்களை அச்சுறுத்தி வந்த யானை பிடிக்கப்பட்டதால் அச்சத்துடன் வாழ்ந்து வந்த மக்கள் சற்று நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

    • விவசாய நிலத்தில் கிடப்பதால் முதலையை எளிதில் பிடித்து விடலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
    • பில்லூர் அணையில் தற்போது நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    சிறுமுகை அருகே உள்ள மொக்கைமேடு பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன்(45) என்பவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வாழை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். இன்று காலை அவர் வழக்கம் போல தனது விவசாய நிலத்தை பார்வையிடுவதற்காக சென்றார்.

    அப்போது வாழைமரங்களுக்கு இடையே மரம் போன்ற ஒன்று மாறுபட்ட கலரில் தென்பட்டுள்ளது. உற்றுப் பார்த்தபோது அது சுமார் 12 அடி நீளமுள்ள ராட்சத முதலை என்பது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ்குமாருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து சென்ற வனச்சரகர் மனோஜ்குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று முதலையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். விவசாய நிலத்தில் கிடப்பதால் முதலையை எளிதில் பிடித்து விடலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையில் தற்போது நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது. இதனால் பவானி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டு உள்ளது. வற்றாத ஜீவநதியான பவானி ஆறு வற்றி ஓடை போல் காட்சியளிக்கிறது. ஆறு மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் இல்லாததால் அங்கு இருந்து முதலை வெளியேறி வாழைத்தோட்டத்தில் புகுந்து இருக்கலாம் என வனத்துறையினர் கூறினர்.

    • பொன்மனை வன ரேஞ்சர் ராஜேந்திரன் தலைமையிலான வன குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
    • சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பார்வதிபுரம் அருகே கணியக்குளம் பஞ்சாயத்துக் குட்பட்ட உழவன் கோணம் பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை புலி நடமாட்டம் இருந்து வருகிறது.

    அந்த பகுதியில் சிறுத்தை உலா வந்த காட்சிகள் அங்குள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளில் பதிவாகி இருந்தது. இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பொன்மனை வன ரேஞ்சர் ராஜேந்திரன் தலைமையிலான வன குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

    கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியிருந்த காட்சிகளையும் ஆய்வு செய்தபோது சிறுத்தை நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். இந்தநிலையில் அந்த பகுதியில் வனத்துறை சார்பில் கண்காணிப்பு கேமிரா அமைத்து சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்றும், குழந்தைகளை தனியாக வெளியே விடக்கூடாது என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் 2 கன்றுகுட்டிகள் இறந்து கிடந்தது. மேலும் ஆடுகளும் உயிரிழந்திருந்தது.

    எனவே சிறுத்தை தான் அடித்து கொன்று இருக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கருதுகிறார்கள். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் சிறுத்தை உலா வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அந்த சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

    • உணவு, தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.
    • வனத்துறையினர் சேதம் அடைந்த பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    உணவு, தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட சேஷன் நகர் பகுதியில் உள்ள விவசாயிகள் கரும்பு, வாழை தென்னை, மஞ்சள் பயிர் செய்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 காட்டு யானைகள் விவசாயி விஜயகுமார் (48) என்பவர் தோட்டத்தில் புகுந்து வாழை மரத்தை சேதம் செய்தது.

    இதை கண்ட விவசாயி அக்கம் பக்கத்து விவசாயிகள் உதவியுடன் யானையை விரட்டினர். 4 மணி நேர போராட்டத்துக்கு பிறகு யானை வனப்பகுதியில் விரட்டப்பட்டது. யானையால் 200 வாழைகள் சேதம் ஆனது.

    வனப்பகுதியில் தற்போது கடும் வறட்சி நிலவுவதால் தொடர்ந்து வனவிலங்குகள் விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருவதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

    வனத்துறையினர் சேதம் அடைந்த பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி தொடர்ந்து தோட்டத்துக்குள் புகுந்து சேதம் செய்து வருவது விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • குறிப்பாக யானைகள் உணவு, தண்ணீருக்காக ஊருக்குள் புகுவதும், பயிர்களை நாசம் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.
    • சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் குட்டி யானையை மீட்டு அழைத்து சென்றுவிட்டனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்கு வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் வனவிலங்குகள் குறிப்பாக யானைகள் உணவு, தண்ணீருக்காக ஊருக்குள் புகுவதும், பயிர்களை நாசம் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.

    இந்த நிலையில் ஆசனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட அரோபாளையம் கிராமத்தில் இன்று காலை 6 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு குட்டி யானை அங்கு உலா வந்தது.

    இதைக்கண்ட அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் உடனடியாக ஆசனூர் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். குட்டி யானை அங்கும் இங்குமாக சுற்றி கொண்டிருந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் குட்டி யானையை மீட்டு அழைத்து சென்று விட்டனர். குட்டி யானை வனப்பகுதியில் இருந்து எப்படி வெளியே வந்தது என தெரியவில்லை.

    இந்நிலையில் அந்த குட்டி யானை கடந்த 2 நாட்களுக்கு முன்பு பவானிசாகர் வனப்பகுதியில் விடப்பட்ட குட்டி யானை என ஒரு தகவல் பரவியது. ஆனால் இது குறித்து வனத்துறையினர் எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை.

    • கரும்பு தோட்டத்திற்குள் புகுந்து ஜெயஸ்ரீ என்ற பெண்ணை தாக்கியது.
    • யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கு வனத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

    தருமபுரி:

    தருமபுரி நகர பகுதிக்குள் புகுந்த ஒற்றை யானை விவசாய நிலங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்து வருகிறது. அந்த ஒற்றையானையை வனப்பகுதிக்குள் விரட்ட மாவட்ட வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் பொதுமக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர்.

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனப்பகுதியில் இருந்து ஒற்றை ஆண் யானை கடந்த 3 நாட்களாக கிராமப் பகுதிக்குள் புகுந்து காரிமங்கலம் வழியாக அண்ணாமலைஅள்ளி, சவுளுக்கொட்டாய் பகுதி யில் இருந்த கரும்பு தோட் டத்திற்குள் புகுந்து ஜெயஸ்ரீ என்ற பெண்ணை தாக்கியது. படுகாயம் அடைந்த அந்தப் பெண் தருமபுரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில் யானை திருப்பத்தூர் சாலை வழியாக சோளக்கொட்டை அருகே மான்காரன் கோட்டை பகுதியை வந்து அடைந்தது அங்குள்ள கரும்பு தோட்டம், தீவனம் பயிர், சோளத்தட்டு உள்ளிட்ட விவசாய பயிர்களை நாசம் செய்து, பின்பு இரவு அங்கிருந்து வனத் துறையினர் பட்டாசு வெடித்து யானையை விரட்ட தொடங்கினர்.

    அப்போது அந்த யானை வேறு பகுதிக்கு சென்றது. தொடர்ந்து வனத் துறையினர் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி டிரோன் கேமரா மூலம் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். நேற்று மாலை 7 மணி அள வில் தருமபுரி திருப்பத்தூர் சாலையை கடந்து செட்டிகரை பகுதி பொறியியல் கல்லூரி பின் பகுதியில் தஞ்சம் அடைந்தது.

    வனத் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை தருமபுரி நகரப் பகுதியான வேடியப்பன் திட்டு, அக்ரஹாரம், சனத்குமார்ஓடை அருகே தற்பொழுது யானை குடியிருப்பு அதிகம் உள்ள பகுதிக்கு யானை புகுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை வேறு பகுதியில் விரட்டும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் யானை தற்போது சனத்க்குமார் ஓடை அருகே உள்ள புதர் பகுதியில் புகுந்துள்ளதால் 3 வனக் குழுவினர் வெவ்வேறு பகுதிகளில் நின்று யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    யானை நகரப் பகுதியில் தற்பொழுது இருப்பதால் இந்த பகுதியில் உள்ள மின்சாரத்தை துண்டித்துள்ளனர். மேலும் யானை நகரப் பகுதிக்குள் செல்ல நேர்ந்தால் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கு வனத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர். தருமபுரி நகரப் பகுதியில் ஒற்றை ஆண் காட்டு யானை வந்தது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    ×