என் மலர்
நீங்கள் தேடியது "கொடைக்கானல்"
- மலைப்பாதைகளில் சாலையோரங்களில் உள்ள தோட்டங்களிலும் வேலிக்காக சங்கு பூச்செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது.
- பூச்செடிகளில் இளஞ்சிவப்பு, மஞ்சள், வெள்ளை நிறங்களில் சங்கு பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.
பெரும்பாறை:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் ஒவ்வொரு காலநிலைக்கு ஏற்ப மரம், செடிகளில் பல்வேறு வண்ணப்பூக்கள் பூத்து கவர்ந்திழுப்பது வழக்கம். அதன்படி, தற்போது கொடைக்கானல் நகர்ப்பகுதி, மலைப்பாதைகள் மற்றும் கிராமங்களில் சங்கு பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.
குறிப்பாக கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான பெரும்பாறை. தாண்டிக்குடி, பண்ணைக்காடு, மங்களம்கொம்பு, புல்லாவெளி, கே.சி. பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காபி, வாழை, மிளகு போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் தோட்டங்களுக்குள் யாரும் செல்லாமல் இருக்க வேலிக்காக சங்கு பூச்செடிகளை விவசாயிகள் நடவு செய்துள்ளனர். அதேபோல் மலைப்பாதைகளில் சாலையோரங்களில் உள்ள தோட்டங்களிலும் வேலிக்காக சங்கு பூச்செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது அந்த பூச்செடிகளில் இளஞ்சிவப்பு, மஞ்சள், வெள்ளை நிறங்களில் சங்கு பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. இவை சாலையோரங்களில் மின் விளக்குகளை தோரணங்களாக கட்டிவிடப்பட்டது போன்று சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளன. இதனால் அவற்றை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பதுடன், தங்களது கேமரா, செல்போனில் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.
- வீடியோ வைரலான நிலையில் கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
- வீடியோவை பதிவிட்டவர் மேல்மலை கிராமம் பூம்பாறையைச் சேர்ந்த செல்வக்குமார் என தெரிய வந்தது.
கொடைக்கானல்:
சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு வரும் இளைஞர்கள் ஆர்வ மிகுதியில் பல்வேறு வீடியோக்களை எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகளில் அதிவேகத்தில் மோட்டார் சைக்கிளில் செல்வது, தடை செய்யப்பட்ட அருவிகள், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு சென்று அதன் அனுபவங்களை தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இது போல கடந்த சில நாட்களாக கையில் மிகப்பெரிய வாளுடன் திரைப்பட பாடல் பின்னணியில் வாகனங்களில் அமர்ந்தவாறு வீடியோ எடுத்து வாலிபர் சமூக வலைதள பக்கத்தில் வீடியோ பதிவிட்டு இருந்தார்.
இந்த வீடியோ வைரலான நிலையில் இது குறித்து கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் அபினேஷ் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில் வீடியோவை பதிவிட்டவர் மேல்மலை கிராமம் பூம்பாறையைச் சேர்ந்த செல்வக்குமார் (25) என தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். வீடியோவில் பதிவு செய்த வாள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களையும் கைப்பற்றினர். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் இது போன்று வீடியோ பதிவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- குளிர் காலம் முடிந்து கோடை காலம் தொடங்கும் போது அதிக அளவில் மலரும்.
- பல்வேறு இடங்களில் தீயின் நிறத்தில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் ஒவ்வொரு சீசனுக்கு தகுந்தவாறு விதவிதமான பூக்கள் பூத்து குலுங்குவது வழக்கம். குறிப்பாக 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் தொடங்கி கோடைகாலம், வசந்தகாலம், கிறிஸ்துமஸ் சீசனில் பூக்கும் சிலுவை மலர்கள் என பல்வேறு பூக்கள் பூத்து சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கும்.
அந்த வகையில் தற்போது குளிர் சீசன் நிறைவு பெறுவதை உணர்த்தும் வகையில் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் தீயின் நிறத்தில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன.
இந்த மலர்கள் பொதுவாக குளிர் காலம் முடிந்து கோடை காலம் தொடங்கும் போது அதிக அளவில் மலரும். குறிப்பாக கொடைக்கானலில் குளிர் காலங்களான டிசம்பர் மற்றும் ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் அதிக அளவிலான பனிப் பொழிவினால் புதர்கள் கருகும். இதனைத் தொடர்ந்து கோடை காலம் தொடங்கும் போது கருகிய புதர்களில் சுட்டெரிக்கும் வெயிலின் காரணமாக எளிதில் தீப்பற்றக் கூடிய அபாயம் நிகழும். மேலும் காலம் மாறும் இந்த நேரங்களில் தீயின் நிறத்தில் பூக்கள் பூத்துக் குலுங்குவதால் இந்த மலர்களுக்கு புதர் தீ (காட்டு தீ)மலர்கள் என பெயர் வந்ததாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
மலைப்பகுதிகளில் மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு, ஆரஞ்சு நிறத்தில் கண்களுக்கு விருந்தளிக்கும் விதத்தில் பூத்து குலுங்கும் இந்த மலர்களைக்கண்டு சுற்றுலாப் பயணிகள் ரசித்து வருகின்றனர்.
மேலும் தற்போது இந்தப்பூக்கள் பூக்க தொடங்கி உள்ளதால் காடுகளில் தீ பிடிக்காமல் இருக்க வனத்துறையினர் தீ தடுப்பு கோடுகளை முன்கூட்டியே அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளனர்.
- பனி மூட்டத்துடன் வானம் இருப்பதால் மலைச்சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி பயணித்து வருகின்றனர்.
- தினந்தோறும் விதவிதமான தோற்றத்துடன் காணப்படும் வானிலை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்து கடும் குளிர் வாட்டி எடுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது சாரல் மழை, உறைபனி, உறையவைக்கும் குளிர் ஆகியவை வாட்டி எடுத்து வருகிறது.
பனி மூட்டத்துடன் வானம் இருப்பதால் மலைச்சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி பயணித்து வருகின்றனர். தினந்தோறும் விதவிதமான தோற்றத்துடன் காணப்படும் வானிலை இங்கு வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
தற்போது கொடைக்கானல் பகுதியில் கடல் நுரை பொங்கி எழுவது போல வெண்மேக கூட்டங்கள் தவழ்ந்து செல்லும் காட்சி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. காலையில் சூரியன் உதிக்கும் நேரத்தில் செண்பகனூர் சிட்டி வியூ, கோக்கர்ஸ்வாக் உள்ளிட்ட பகுதிகளில் வானத்தில் இருந்து மேகக்கூட்டங்கள் தரையிறங்கி மலை முகடுகளை முத்தமிடுவது போல வந்த காட்சி வெகுவாக ரசிக்க வைத்தது.
"வானம் எனக்கொரு போதி மரம், நாளும் எனக்கொரு சேதி தரும்" என்ற வைரமுத்து வரிகளுக்கேற்ப கொடைக்கானலில் தினந்தோறும் காணப்படும் ரம்யமான சூழல் உள்ளூர் மக்களையும், சுற்றுலா பயணிகளையும் கவர்ந்திழுத்து வருகிறது. அதன் அருகே நின்று புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
- குணா குகைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
- சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது
புத்தாண்டு, பொங்கல் விடுமுறையை ஒட்டி கொடைக்கானலில் கூட்டம் அலைமோதுகிறது. வெள்ளி நீர்வீழ்ச்சி, கோக்கர்ஸ் வாக், குணா குகை, தூண்பாறை, மோயர்பாண்ட், பைன்பாரஸ்ட், பசுமை பள்ளத்தாக்கு, அப்சர்வேட்டரி, ரோஜா பூங்கா, பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது
இந்நிலையில், கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களின் நுழைவுக் கட்டணம் இனி ஆன்லைன் முறையில் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் குணா குகை, துன்பாறை, மோயார் சதுக்கம், பேரிஜம் ஏரி, பைன் காடுகள் ஆகிய பகுதிகளுக்கான நுழைவுக் கட்டணம் இனி ஆன்லைன் மூலம் மட்டுமே வசூல் செய்யப்படும் என்றும் நேரடிப் பணமாக இனி வசூலிக்கப்படாது என வனத்துறை தெரிவித்துள்ளது
- இந்தியாவை பூர்வீகமாக கொண்ட நபரை பிடித்து அந்நாட்டினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த சில நாட்களாகவே கொடைக்கானலில் இஸ்ரேல் நாட்டினர் வந்தவண்ணம் உள்ளனர்.
கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாட பல்வேறு நாடுகளில் இருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.
அவர்கள் இங்கு 10 நாட்களுக்கு மேல் தங்கியிருந்து பல்வேறு சுற்றுலா தலங்களை பார்வையிட்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பிறகு சொந்த நாட்டுக்கு திரும்புவார்கள்.
குறிப்பாக இஸ்ரேல் நாட்டை சேர்ந்த யூதர்கள் கொடைக்கானல் அருகில் உள்ள வட்டகானல் பகுதியில் சுமார் 1 மாதம் வரை தங்கி ஓய்வு எடுத்து செல்வது வழக்கம். அதன்படி கடந்த சில நாட்களாகவே கொடைக்கானலில் இஸ்ரேல் நாட்டினர் வந்தவண்ணம் உள்ளனர். அவர்கள் பல்வேறு சுற்றுலா தலங்களை பார்வையிட்டும் மலை உச்சியில் அமர்ந்து தியானம் செய்தும் தங்கள் பொழுதை கழித்து வருகின்றனர்.
இவர்கள் தங்கியுள்ள பகுதிக்கு முன்பாக சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு வெளிநபர்கள் அல்லது சந்தேகப்படும்படியான நபர்கள் வருகிறார்களா? என சோதனையிட்டு வருகிறார்கள்.
24 மணி நேரமும் செயல்படும் இந்த சோதனைச்சாவடியில் போக்குவரத்து காவலர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் 20க்கும் மேற்பட்டோர் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் யூதர்களை குறிவைத்து நடந்த துப்பாக்கி சூட்டில் பலர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட இந்தியாவை பூர்வீகமாக கொண்ட நபரை பிடித்து அந்நாட்டினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கொடைக்கானல் வட்டகானல் பகுதியில் இஸ்ரேல் நாட்டினர் தங்கியுள்ள பகுதிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சி.சி.டி.வி. காமிராக்கள் அப்பகுதியில் பொருத்தப்பட்டு சந்தேகப்படும்படியான நபர்கள் வருகிறார்களா? என சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனை இன்னும் சில வாரங்களுக்கு நீடிக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
- மாலை நேரங்களில் நீர் பனியுடன் கூடிய பனிச்சாரலும் விழ ஆரம்பித்துள்ளது.
- ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் அலங்கார வண்ண விளக்குகள், கிறிஸ்துமஸ் கேக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பகல் நேரங்களில் மிதமான வெயில் மற்றும் பனி மூட்டம் நிலவி வந்தது . மாலை நேரங்களில் நீர் பனியுடன் கூடிய பனிச்சாரலும் விழ ஆரம்பித்துள்ளது.
இதனால் மாலை நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. ஏரிச்சாலை மற்றும் ஒரு சில பகுதிகளில் பணியாட்கள் நெருப்பு மூட்டி குளிர் காயும் நிலையும் ஏற்பட்டுள்ளது. வரும் காலங்களில் கடும் பனி உருவாகும் என்பதால் கடும் உறைபனியும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது 10 டிகிரிக்கும் குறைவான தட்பவெட்ப நிலை உருவாகியுள்ள நிலையில் மேலும் குளிர் அதிகரிக்க கூடும் எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக உறைபனி அதிக நாட்கள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மாலை நேரங்களில் பனிச்சாரலுடன் கூடிய பனிமூட்டத்திற்கு நடுவே சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
மேலும் வெள்ளி நீர்வீழ்ச்சி, கோக்கர்ஸ் வாக், குணா குகை, தூண்பாறை, மோயர்பாண்ட், பைன்பாரஸ்ட், பசுமை பள்ளத்தாக்கு, அப்சர்வேட்டரி, ரோஜா பூங்கா, பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் இன்று விடுமுறை தினம் என்பதால் அதிகரித்து காணப்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகை, அதனைத் தொடர்ந்து புத்தாண்டு கொண்டாட்டம் என்பதால் இஸ்ரேல் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
இதனால் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் அலங்கார வண்ண விளக்குகள், கிறிஸ்துமஸ் கேக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேல்மலை கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், பூண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது. இதனால் சிறு வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- கொடைக்கானல் மலைப்பகுதியில் அரியவகை பூச்செடிகள், தாவரங்கள், மரங்கள் உள்ளன.
- டிசம்பர், ஜனவரி மாதங்களில் பேர்டப் பேரடைஸ் எனப்படும் பறவைகள் சரணாலயம், செர்ரிமரம் ஆகியவை பூத்துக் குலுங்குவது வழக்கம்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது ஆப் சீசன் நடந்து வருகிறது. வருகிற 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தற்போதே நகர் பகுதியில் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் ஸ்டார், கிறிஸ்துமஸ் குடில்கள், பல்வேறு வண்ண அலங்காரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து புத்தாண்டு கொண்டாட ஏராளமாக சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்பதால். தற்போதே பல்வேறு தங்கும் விடுதிகளில் முன்பதிவு செய்துள்ளனர். அரையாண்டு விடுமுறையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொடைக்கானல் மலைப்பகுதியில் அரியவகை பூச்செடிகள், தாவரங்கள், மரங்கள் உள்ளன. குறிப்பாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் பேர்டப் பேரடைஸ் எனப்படும் பறவைகள் சரணாலயம், செர்ரிமரம் ஆகியவை பூத்துக் குலுங்குவது வழக்கம். இந்நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை வரவேற்கும் விதமாக ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் சிலுவை வடிவிலான பூக்கள் தற்போது கொடைக்கானல் மலைப்பகுதியில் பூத்துக் குலுங்குகின்றன.
சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் வண்ணங்களில் கொத்துக் கொத்துதாகபூத்துக் குலுங்கும் இப்பூக்களை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்து செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.
- காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் நட்சத்திர ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டது.
- பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானல்:
திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு ள்ளது.
கொடைக்கானலில் கடும் குளிருடன் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் நேற்று வனப்பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களான தூண்பாறை, மோயர்பாய்ண்ட், குணாகுகை, பைன்பாரஸ்ட், பேரிஜம் ஏரி உள்ளிட்ட இடங்கள் மூடப்பட்டன. இன்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்ற போதும் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவாகவே இருந்தது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் பாதுகாப்பு கருதி இன்று 2-வது நாளாக சுற்றுலா தலங்கள் மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்தனர்.
மேலும் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் நட்சத்திர ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டது.
மற்ற சுற்றுலா தலங்களான பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது.
பொதுமக்களும் வெளியே நடமாடுவதை தவிர்த்ததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை, கும்பக்கரை அருவி, சுருளி அருவி ஆகியவற்றிலும் சுற்றுலாப் பயணிகள் செல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது.
ஆண்டிபட்டி பகுதியில் பெய்த கனமழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் சக்கம்பட்டியை சேர்ந்த மணி (வயது60) என்பவர் நடந்து சென்றபோது தவறி கால்வாயில் விழுந்து பலியானார். இன்று காலை அவ்வழியாக சென்றவர்கள் அதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று காலை சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். இதே போல் வருசநாடு மலைப்பகுதியில் அமைந்துள்ள மேகமலை அருவியிலும் வெள்ளப்பெருக்கு மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக தடை விதிக்கப்பட்டுள்ளது. கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் நீர்வரத்து சீராக உள்ளதால் அனுமதிக்கப்பட்ட போதும் குறைந்த அளவே சுற்றுலாப் பயணிகள் வந்தனர்.
- வால்பாறைக்கு செல்ல நவம்பர் 1-ம் தேதி முதல் இ-பாஸ் கட்டாயம்
- போக்குவரத்து நெரிசலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை
ஊட்டி மற்றும் கொடைக்கானல் மலை பிரதேசங்களுக்கு வாகன வரவை குறைக்கும் வகையில் இ-பாஸ் முறை நடைமுறையில் உள்ளது. உயர்நீதிமன்ற ஆணைப்படி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்து உள்ள வால்பாறைக்கு செல்ல நவம்பர் 1-ம் தேதி முதல் இ-பாஸ் கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். போக்குவரத்து நெரிசலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், www.tnepass.tngov.in என்ற இணையதளத்தில் வால்பாறைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் இ-பாஸ் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் சோதனை சாவடிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் இதனை கண்காணிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வால்பாறைக்கு பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்லவும் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது
- வாகன ஓட்டிகள் மதிய வேளையிலும் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி மிதமான வேகத்தில் சென்று வருகின்றனர்.
- அடர்ந்த பனி மூட்டம் காரணமாக மலைப்பகுதி முழுவதும் கடும் குளிர் நிலவுவதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே தொடர் மழை மற்றும் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அதிகாலை நேரங்களில் ஏரிச்சாலை, மூஞ்சிக்கல், அண்ணா சாலை, அப்சர்வேட்டரி, உகார்த்தேநகர், ஆனந்தகிரி, சீனிவாசபுரம், கவிதியாகராஜர் சாலை, பஸ் நிலையம், லாஸ்காட் சாலை, கல்லுக்குழி உள்ளிட்ட பகுதிகள், வத்தலக்குண்டு-பழனி பிரதான மலைச்சாலைகளில் அடர்ந்த பனி மூட்டம் காணப்படுகிறது. இதனால் பகலா, இரவா என்று தெரியாத அளவுக்கு சுற்றுலா பயணிகள் குழப்பம் அடைந்துள்ளனர். வாகன ஓட்டிகள் மதிய வேளையிலும் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி மிதமான வேகத்தில் சென்று வருகின்றனர்.
பல இடங்களில் எதிரே வருபவர்கள்கூட தெரியாத நிலை காணப்படுவதால் கடைகளில் பகல் நேரத்திலும் மின் விளக்குகளை எரியவிட்டு வருகின்றனர். அடர்ந்த பனி மூட்டம் காரணமாக மலைப்பகுதி முழுவதும் கடும் குளிர் நிலவுவதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது தீபாவளி பண்டிகை சீசன் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைவாகவே உள்ளது. இதனால் வியாபாரமின்றி கடைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படாத நிலையில் இன்றும் மழையில் நனைந்தபடியும், குடை பிடித்தபடியும் மாணவ-மாணவிகள் சென்றனர்.
தொடர் மழை காரணமாக கொடைக்கானல் மலை கிராமங்களில் மரங்கள் முறிந்து விழுவதும், மின் கம்பங்கள், வயர்கள் சாய்ந்து விழுவதும் நடந்து வருகிறது. இதனால் வாகன தடை ஏற்பட்டுள்ளதுடன் மின் வினியோகமும் பாதிக்கப்படுகிறது. அவ்வப்போது மின்வாரிய ஊழியர்கள், நெடுஞ்சாலைத்து றையினர் பார்வையிட்டு வருகின்றனர். ஒரு சில இடங்களில் முறிந்து விழுந்த மரங்களை பொதுமக்களே அகற்றி வருகின்றனர். மழை இன்னும் தீவிரமடையாத நிலையில் தற்போதே கொடைக்கானல் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
- சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும்.
- சூரியனில் இருந்து வரும் கதிர்கள் பூமியின் மீது பட்டு, அதனுடைய நிழல் நிலவு மீது படுவதை லூனார் எக்லிப்ஸ்.
கொடைக்கானல்:
இன்று இரவு 9 மணி முதல் அதிகாலை 2 மணி வரை முழு சந்திர கிரகணமான அரிய நிகழ்வு வானில் நடைபெற உள்ளது. இதனையடுத்து கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் அமைந்துள்ள வான் இயற்பியல் ஆய்வகத்தில் இந்த முழு சந்திரகிரகணத்தை கண்டு ரசிக்க ராட்சத தொலை நோக்கிகள் அமைத்து விளக்க உரையுடன் ஆராய்ச்சியாளர்கள் முழு சந்திர கிரகணத்தை பற்றி எடுத்துரைக்க உள்ளனர்.
மேலும் வான் இயற்பியல் ஆய்வகத்தில் நுழைவு கட்டணமின்றி இன்று இரவு மட்டும் சுற்றுலாப்பயணிகள், பொதுமக்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆராய்ச்சியாளர் கிறிஸ்பின் கார்த்திக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இன்று நடைபெற உள்ள முழு சந்திர கிரகணமானது இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தென்படுகிறது. இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும். சூரியனில் இருந்து வரும் கதிர்கள் பூமியின் மீது பட்டு, அதனுடைய நிழல் நிலவு மீது படுவதை லூனார் எக்லிப்ஸ். இதில் 2 விதமாக காட்சியளிக்கிறது. இதனை லைட் ஷேடோ, டார்க் ஷேடோ என்றும் சூரியனில் இருந்து வரும் கதிர்கள் ஒன்று விலகி செல்லுதல், குறுகி செல்லுதல் இதனை லைட் ஷேடோ, டார்க் ஷேடோ என்றும் அழைக்கப்படுகிறது.
இன்று இரவு 8:57 மணிக்கு எக்லிப்ஸ் தொடங்கும் 10 மணி அளவில் டார்க் ஷேடோ தொடங்கி 12 மணிக்கு வரை நடைபெறுகிறது. இறுதியாக 2 மணிக்கு நிறைவடையும். 11:40 மணிக்கு சூரியனில் இருந்து வரும் கதிர்கள் பூமியின் வளிமண்டல பகுதியில் பட்டு எதிரொலிக்கும் அலைநீள கதிர்கள் நிலவு மீது சிவப்பு கதிர்கள் பிரதிபலிக்கும்போது ரெட் மூனாக காட்சியளிக்கிறது. இதனை வீட்டின் மொட்டை மாடியில் இருந்து இந்த நிகழ்வை பார்க்கலாம். அதே போல இன்று இரவு விமானத்தில் செல்பவர்கள் எளிதாக காணலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.






