search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாழை"

    • உணவு, தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.
    • வனத்துறையினர் சேதம் அடைந்த பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    உணவு, தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட சேஷன் நகர் பகுதியில் உள்ள விவசாயிகள் கரும்பு, வாழை தென்னை, மஞ்சள் பயிர் செய்துள்ளனர்.

    இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 காட்டு யானைகள் விவசாயி விஜயகுமார் (48) என்பவர் தோட்டத்தில் புகுந்து வாழை மரத்தை சேதம் செய்தது.

    இதை கண்ட விவசாயி அக்கம் பக்கத்து விவசாயிகள் உதவியுடன் யானையை விரட்டினர். 4 மணி நேர போராட்டத்துக்கு பிறகு யானை வனப்பகுதியில் விரட்டப்பட்டது. யானையால் 200 வாழைகள் சேதம் ஆனது.

    வனப்பகுதியில் தற்போது கடும் வறட்சி நிலவுவதால் தொடர்ந்து வனவிலங்குகள் விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருவதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

    வனத்துறையினர் சேதம் அடைந்த பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி தொடர்ந்து தோட்டத்துக்குள் புகுந்து சேதம் செய்து வருவது விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • குப்பை, கூளங்களும் நிரம்பி காணப்படுவதால் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது.
    • பயிர்கள் நாசமானதால் விவசாயிகளுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள படலையார்குளத்தின் மூலம் அப்பகுதியில் உள்ள 300 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    நாங்குநேரியான் கால்வாயில் இருந்து படலையார்குளத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. குளம் நிரம்பி உபரிநீர் வெளியேறும் மறுகால் போதிய பராமரிப்பின்றி காணப்படுகிறது.

    இதனைதொடர்ந்து மறுகால் புதர் மண்டி கிடக்கிறது. குப்பை, கூளங்களும் நிரம்பி காணப்படுவதால் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மறுகாலை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

    இந்நிலையில் களக்காடு பகுதியில் பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையினால் படலையார்குளம் நிரம்பியது. குளத்தின் மறுகாலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் உபரிநீர் வெளியேற வழியின்றி அருகில் உள்ள வட்டமொழி பத்து, மாணிக்கம்குளம் பத்து, மாவநேரி பத்து விளைநிலங்களுக்குள் குளத்து நீர் புகுந்தது.

    இதனால் அங்கு பயிரிடப்பட்டுள்ள நெல், வாழைகள் நீரில் மூழ்கியது. 150 ஏக்கர் பரப்பளவிலான நெல், வாழைகள் தண்ணீரில் மூழ்கி நாசமாகியுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். பயிர்கள் நாசமானதால் விவசாயிகளுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    எனவே படலையார்குளத்தின் மறுகாலை போர்க்கால அடிப்படையில் தூர்வாரவும், தண்ணீர் வெளியேறவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • விவசாயிகள் எதிர்பார்த்தபடி குறிப்பிட்ட காலகெடுவுக்குள் வாழைகள் முழுவளர்ச்சியடையவில்லை.
    • சிவசக்தி, முரளி ஆகியோர் பாதிக்கப்பட்ட வாழை மரங்களை ஆய்வு செய்தனர்.

    அவினாசி:

    அவினாசிஒன்றியம் இராமியம்பாளையம், குமாரபாளையம் , புஞ்சைத்தாமரைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் உடுமலைபேட்டை கிளையில் சூப்பர் நேந்திரன் என்ற ரக வாழைக்கன்றுகளை வாங்கி நடவு செய்திருந்தனர். ஆனால் விவசாயிகள் எதிர்பார்த்தபடி குறிப்பிட்ட காலகெடுவுக்குள் வாழைகள் முழுவளர்ச்சியடையவில்லை. இதனால் வாழை விவசாயிகளுக்கு ரூ.3 கோடிஇழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தாசில்தாரிடம் புகார் தெரிவித்திருந்தனர். இந்த புகாரின் அடிப்படையில் அவினாசி தாசில்தார் மோகன், தோட்டக்கலை துறை அலுவலர் அனுசியா ,உதவி அலுவலர்கள் சிவசக்தி, முரளி ஆகியோர் பாதிக்கப்பட்ட வாழை மரங்களை ஆய்வு செய்தனர்.

    இதையடுத்து நேற்று தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் மோகன் தலைமையில் இரு தரப்பினருக்கு மத்தியில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சந்திரகவிதா, உதவி இயக்குனர் உமாசங்கரி, கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தினர், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் அவினாசிசுற்றுவட்டார விவசாயிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்தனர். அப்போது பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், 13 மாதங்களில் அறுவடை செய்யும் ரகமாக சூப்பர் நேந்திரன் வாழைக்கன்றுகளை வாங்கி வந்து பயிரிட்டோம். ஆனால் குறிப்பிட்ட காலக்கெடுவை தாண்டியும் வாழைத்தாரில் சரிவர காய்பிடிக்காமல் முற்றிலும் பிஞ்சாகவே உள்ளது. இதனால் 3 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே இழப்பீடு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்றனர்.

    • 200 ஏக்கரில் பயிரிடப்பட்ட 5 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து சாய்ந்து விழுந்தன.
    • சேதமடைந்த வாழை மரங்களை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருவையாறு மற்றும் சுற்றி உள்ள பகுதிகளான ஆச்சனூர், மருவூர், வடுககுடி ஆகிய இடங்க ளில் நேற்று இரவு பலத்த மழை கொட்டியது. சூறாவ ளி காற்றுடன் மழை பெய்ததால் சுமார் 200 ஏக்கரில் பயிரிடப்பட்ட 5 ஆயிரம் வாழை மரங்கள் முறிந்து சாய்ந்து விழுந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறும்போது,

    இன்னும் 20 நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் வாழை மரம் வேரோடு சாய்ந்தும் முறிந்ததில் 5000 வாழைகள் சேதமடைந்துள்ளன.

    இயற்கை இடர்பாடின் காரணமாக திருவையாறு சுற்றுவட்டார பகுதியில் மூன்றாவது முறையாக அடித்த சூறாவளி காற்றினால் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளது. இது குறித்து அதிகாரிகளை அனுப்பி சேதமடைந்த வாழை மரங்களை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். நெல் பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்வதுபோல் வாழை மரத்திற்கும் காப்பீடு செய்வதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

    • 3 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது
    • ஆயிரக்கணக்கான வாழை மற்றும் தென்னை மரங்கள் தீயில் கருகி நாசமாகின

    கன்னியாகுமரி, ஆக.29-

    குமரி மாவட்டம் கொட்டாரம் அருகே உள்ள அச்சன்குளம் பச்சை பத்து பகுதியில்5ஏக்கர் பரப்பளவில் வாழை மற்றும் தென்னை பயிரிடப்பட்டு உள்ளது. மேலும்2 ஏக்கர் நிலப்பரப்பில் தற்போது தண்ணீர் இல்லாததால் நெல் பயிரிடப்படாமல் புல் பூண்டுகள் மற்றும் சம்பை புல்கள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு இந்த தரிசு நிலப் பகுதியில் வளர்ந்து கிடந்த புல் பூண்டுகளில் திடீர் என்று தீப்பிடித்தது. காற்று பலமாக வீசியதால் தீ மனவளவென்று பிடித்து அந்த பகுதி முழுவதும் பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தது. இதைப் பார்த்த அச்சன்குளம் பகுதி ஊர் பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் இந்த தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

    மேலும் இதுபற்றி கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் பென்னட்தம்பி மற்றும் சிறப்பு நிலைய அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    ஆனால் தீ எரிந்து கொண்டிருந்த அந்த பகுதிக்கு தீயணைப்பு வண்டி செல்ல முடியாததால் தீயணைக்கும் படை வீரர்கள் அந்த பகுதிக்கு நீண்ட தூரம் நடந்து சென்று ஊர் பொதுமக்களுடன் இணைந்து இரவு10-30மணி வரை சுமார் 3 மணி நேரம் போராடி தீயை மேலும் பரவவிடாமல் அணைத்தனர்.

    இருப்பினும் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழை மற்றும் தென்னை மரங்கள் தீயில் கருகி நாசமாகின. இதனால் லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. வாழை மற்றும் தென்னை பயிர்கள் எரிந்து நாசமான தினால் ஏற்பட்ட நஷ்டத்தினால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்து உள்ளனர்.

    • இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘மாமன்னன்’.
    • இப்படம் விமர்சகர்களின் பாராட்டுகளோடு மக்களின் பேராதரவால் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுது.

    இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில், சமூக நீதி பேசும் மாபெரும் படைப்பாக உருவான திரைப்படம் 'மாமன்னன்'.ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படம் ஜூன் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சகர்களின் பாராட்டுகளோடு மக்களின் பேராதரவால் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுது.



    'மாமன்னன்' படத்தை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் 'வாழை' திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில், நடிகர் கலையரசன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில் படம் மூலம் பிரபலமான பிரியங்கா மற்றும் சில சிறுவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    இந்நிலையில், 'வாழை'படத்தை பார்த்து வியந்த உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டி சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "வாழை உங்களின் சிறந்த படைப்பு, மீண்டும் உங்கள் மேஜிக்கிற்காக காத்திருக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.




    • 800-க்கும் மேற்பட்ட போலீசார் இரவு பகலாக துப்பாக்கி ஏந்திய படி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • மரங்களில் குற்றவாளிகளின் கைரேகைகளை பதிவு செய்து வருகிறார்கள்.

    பரமத்திவேலுார்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் தாலுகா வடகரையாத்தூர் ஊராட்சி கரபாளையத்தில் கடந்த மார்ச் 11-ந் தேதி ஆடு மேய்க்க சென்ற பட்டதாரி இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வெல்லம் ஆலை கொட்டைகையில் பணிபுரிந்து வந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில் கடந்த மே மாதம் 13-ந் தேதி நள்ளிரவில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமான ஆலை கொட்டகையில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருந்த அறையை உடைத்த மர்ம நபர்கள் வட மாநில தொழிலாளர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்தனர். இதில் 4 வட மாநில தொழிலாளர்கள் படுகாயமடைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ராஜேஷ் என்பவர் உயிரிழந்தார். இதனால் ஜேடர்பாளையம் பகுதியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800-க்கும் மேற்பட்ட போலீசார் இரவு பகலாக துப்பாக்கி ஏந்திய படி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு புதுப்பாளையம் பகுதியில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான வாழை தோப்பில் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட வாழை மற்றும் பாக்கு மரங்களை வெட்டி சாய்த்தனர்.

    இதேபோல் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. பரமத்தி வேலூர் அருகே பொத்தனூர் பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன் (வயது 60). இவரது விவசாய தோட்டம் ஜேடர்பாளையம் அருகே சின்ன மருதூர் செல்லும் வழியில் விவசாய நிலம் உள்ளது. அதில் 2 ஏக்கரில் சுமார் 3,000 பாக்கு மரம் நடவு செய்துள்ளார். இந்நிலையில் பக்கத்து தோட்டத்துக்காரர் தங்கமுத்து அதிகாலை தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச வந்தபோது சவுந்தர்ராஜன் தோட்டத்தில் சுமார் 1800-க்கும் மேற்பட்ட பாக்கு மரங்கள் வெட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த தங்கமுத்து நிலத்தின் உரிமையாளர் சவுந்தர்ராஜனுக்கும், ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    தகவல் அறிந்து அங்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா தலைமையிலான போலீஸ் டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அந்த பகுதியில் உள்ள மரங்களில் குற்றவாளிகளின் கைரேகைகளை பதிவு செய்து வருகிறார்கள் மேலும் பாக்கு மரம் இருக்கும் இடத்திற்கு நடந்து சென்றவர்களின் கால் தடத்தையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    ஊர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்த நிலையில் எவ்வித சலனமும் இன்றி மர்ம நபர்கள் தைரியமாக அடுத்தடுத்து வன்முறை சம்பவங்களை நிகழ்த்தி வருகின்றன. பாக்கு மரம் வெட்டப்பட்ட பகுதிகளுக்கு போலீசார், வருவாய்த்துறையினர் தவிர மற்ற யாரையும் அனுமதிக்கவில்லை.

    • வாழை சிகடோகா இலைப் புள்ளி நோயின் தாக்குதல் பரவலாக காணப்படுகிறது.
    • சிபாரிசு செய்யப்பட்ட இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் தோட்டக் கலை துணை இயக்குனர் ஷீலா ஜாண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட் டுள்ளதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை வட்டாரத்தில் ஊரக்கோணம் மற்றும் ஞாலம் பகுதிகளில் வாழை சிகடோகா இலைப் புள்ளி நோயின் தாக்குதல் பரவலாக காணப்படுகிறது.

    இந்நோய் தாக்கிய இலையின் மேற்பகுதியில் வெளிறிய மஞ்சள் அல்லது பச்சை கலந்த மஞ்சள் நிறத்தில் புள்ளிகள் தோன்றி விரைந்து நீள் வடிவத்தில் பழுப்பு நிறமடைகின்றது. பல புள்ளிகள் ஒன்று சேர்ந்து இலை முழுவதும் பரவுகிறது. பின்னர் இலை காய்ந்து சருகாகின்றது. இதனால் ஒளி சேர்க்கை பாதிக்கப்பட்டு வளர்ச்சி தடைபடுகிறது.

    அதிகம் பாதிக்கப்பட்ட மரத்தில் குலை சிறுத்தும், காய்கள் முதிர்ச்சி அடை யாமல் பிஞ்சிலே பழுத்தும் விடுகின்றன. இந்த நோயை பரப்பும் பூஞ்சாணம் மழை, பனித்துளிகள் மற்றும் காற்று மூலமாக விரைவில் பரவுகிறது. நெருக்கமான நடவு மண்ணில் அதிக களைகள், வடிகால் வசதியில்லாத மண், பனி மற்றும் மழை காலங்கள் போன்ற சூழ்நிலைகளில் இந்நோய் அதிகமாக பரவு கிறது. இந்நோயை கட்டுப் படுத்த பாதிக்கப்பட்ட இலைகளை வெட்டி அகற்றி தீ வைத்து அழிக்க வேண்டும். களைகளை அவ்வப்போது அகற்ற வேண்டும். சிபாரிசு செய்யப்பட்ட இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.

    ஒரு மாத இடைவெளியில் லிட்டர் நீருக்கு கார்பன்டசிம் 1 கிராம் அல்லது லிட்டர் நீருக்கு பினோமில் 1 கிராம் அல்லது லிட்டர் நீருக்கு மான்கோசெப் 2 கிராம் அல்லது லிட்டர் நீருக்கு காப்பர் ஆக்சி குளோரைடு 2.5 கிராம் கலந்து ஒட்டும் திரவத்துடன் சேர்த்து இலைகள் நன்கு நனையும் படி தெளிக்க வேண்டும்.

    இந்த மேலாண்மை முறைகளை கடைபிடித்து வாழையில் சிகடோகா இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்தி அதிக மகசூல் பெற்றிடலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்தன.
    • அரசு தொடக்கப்பள்ளியில் கட்டிடத்தின் மேற்கூரையில் 200-க்கும் மேற்பட்ட ஓடுகள் தூக்கி வீசப்பட்டன.

    திருப்பூர் :

    திருப்பூரை அடுத்த பட்டம்பாளையம், காட்டுப்பாளையம், பருத்திக்காட்டுப்பாளையம் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் பட்டம்பாளையத்தில் ஒரு தென்னை மரம் முறிந்து விழுந்தது. ஒரு பனை மரம் வேரோடு சாய்ந்தது. இதுபோல் பருத்திக்காட்டுப்பாளையம் பகுதியில் பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்தன. அதுபோல் சுற்றுப்புற பகுதிகளில் வாழை மரங்களும் சேதமானதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

    சேவூர் அருகே பொங்கலூர் ஊராட்சியில் பகுதியில் சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது. வெப்பத்தின் தாக்கம் அதிகம் இருந்தது. இந்நிலையில் கடந்த ஒரு சில நாட்கள் மழை அவ்வப்போது பெய்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை திடீரென சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால் பொங்கலூர் ஊராட்சி பகுதியில் உள்ள கிராமங்களில் தோட்டங்களில் வாழை மரங்கள் குலை தள்ளி அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் 5000-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தது.

    மேலும் பொங்கலூர் புது காலனியில் மின்கம்பம் ஒன்று சாய்ந்தது. மேலும் அரசு தொடக்கப்பள்ளியில் கட்டிடத்தின் மேற்கூரையில் 200 -க்கும் மேற்பட்ட ஓடுகள் தூக்கி வீசப்பட்டன. இதை தொடர்ந்து வருவாய்த்துறையினர் வாழை மரங்களை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். தற்போது சேதமடைந்துள்ள வாழை மரங்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் எனவிவசாயிகள் தெரிவித்தனர்.

    • பல 100 ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி ஆண்டுதோறும் நடக்கிறது.
    • பயிர்கள் பாதிக்கப்பட்டு விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர், கோவை மாவட்டங்களில் விவசாயம் பரவலாக நடந்து வருகிறது. காய்கறி பயிர்கள் மட்டுமின்றி தென்னை, வாழை, மக்காச்சோளம் உள்ளிட்ட நீண்ட கால பயிர்களும் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த இரண்டு மாவட்டங்களில், பல 100 ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி ஆண்டுதோறும் நடக்கிறது. உற்பத்தியாகும் வாழைகள், வியாபாரிகள் மூலம் கேரள மாநிலத்துக்கு விற்பனைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. கனமழை, வறட்சி, பூச்சி நோய் தாக்குதல், இயற்கையாக பரவும் தீ விபத்து உட்பட பல்வேறு காரணங்களால், பயிர்கள் பாதிக்கப்பட்டு விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.குறிப்பாக வாழை பயிரிடும் விவசாயிகள், கனமழை, சூறைக்காற்று ஆகியவற்றின் காரணமாக பெருத்த நஷ்டத்தை சந்திக்கின்றனர்.

    குறிப்பிட்ட சில பயிர்களுக்கு மட்டுமே அரசு காப்பீடு திட்டத்தை வழங்குகிறது. இதனால் விவசாயிகள், பேரிடர் மற்றும் இயற்கை சீற்றங்கள் காரணமாக ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தப்பித்து கொள்ள முடியும். ஆனால் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களுக்கு மட்டுமே இந்த காப்பீடு திட்டம் பொருந்தும் என்பதால், இதர கிராமங்களில் வாழை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இது பொருந்தாது.இதனால் இழப்பினை சந்திக்கும் வாழை விவசாயிகள் செய்வதறியாமல் பரிதவிக்கின்றனர். ஆண்டு தோறும் பேரிடர் காரணமாக வாழைகள் கடுமையாக சேதமடைகின்றன.

    சமீபத்தில் திருப்பூர், கோவை மாவட்டங்களில் வீசிய சூறைக்காற்று மற்றும் கன மழையால் பல 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் அடியோடு சாய்ந்து விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. எனவே அனைத்து தரப்பு விவசாயிகளும் பயன்பெறும் வகையில் காப்பீடு திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்தில் காற்றுக்கு வாழை மரங்கள் முறிவதற்கான வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இந்திய வானிலை மையத்தின் கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி நிலையம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலை சார்பில் திருப்பூர் மாவட்டத்தின் காலநிலை விவரம் வழங்கி வருகிறது. அதன்படி வரும் நாட்களில் மாவட்டத்தின் காலநிலை, 35 முதல் 37 டிகிரி செல்சியஸாக இருக்கும். சராசரியாக காற்றின் வேகம் மணிக்கு 4 முதல், 8 கி.மீ., வேகத்தில், பெரும்பாலும் கிழக்கு திசையில் இருந்து, தென் கிழக்கு திசை வரை பதிவாகும்.

    காற்றுக்கு 5 மாதம் வயதுடைய வாழை மரங்கள் சாய்ந்து விழும் வாய்ப்புள்ளதால் மரங்களுக்கு முட்டுக்கொடுக்க வேண்டும். பரவலாக வாழையில் குருத்து அழுகல் நோய் தென்படுகிறது. இதை கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் தண்ணீரில் 20 கிராம் அளவுக்கு பிளீச்சிங் பவுடர் கலந்து, மரத்தின் அருகே ஊற்ற வேண்டும். நோய் தாக்குவதற்கு முன் இந்த மருந்து செலுத்தினால் நோய் பரவாமல் பாதுகாக்க முடியும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • சின்னதண்டா கிராமத்தில் கடந்த 4 நாட்களாக இரவு நேரத்தில் ஒற்றை ஆண் யானை உலா வருகிறது.
    • வாழை, சோளம் தோட்டத்தில் புகுந்து அவற்றை தின்றும், மிதித்தும் நாசம் செய்து வருகிறது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பல கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன.

    இங்குள்ள சின்னதண்டா கிராமத்தில் கடந்த 4 நாட்களாக இரவு நேரத்தில் ஒற்றை ஆண் யானை உலா வருகிறது. கிராமத்தில் பயிர் செய்யப்பட்டுள்ள வாழை, சோளம் தோட்டத்தில் புகுந்து அவற்றை தின்றும், மிதித்தும் நாசம் செய்து வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.

    நள்ளிரவு நேரத்தில் யானை வருவதை அறிந்த கிராம மக்கள், வனத்துறை யினர் உதவியுடன் பட்டாசு வெடித்தும், தீப்பந்தம் கொண்டும் யானையை விரட்டும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

    மக்கள் விரட்டும்போது, வனப்பகுதிக்குள் செல்லும் யானை, மீண்டும் நள்ளிரவு நேரத்தில் கிராமத்துக்குள் வந்துவிடுகிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்களும், வனத்துறை யினரும் இரவு நேரத்தில் தூக்கம் இன்றி கண் விழித்து யானையை விரட்டும் பணியினை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மேலும் ஒற்றை யானை நடமாட்டத்தால், தார் காட்டில் இருந்து நீதிபுரம் வழியாக இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்வதை கிராம மக்கள் தவிர்த்து வருகின்றனர்.

    தற்போது கோடை காலம் என்பதால், வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் இல்லாமலும், உணவு தேடியும் யானை கிராமத்திற்குள் வந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும் யானையை அடர் வனப்பகு திக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    • கேரள சந்தைகளில் களக்காடு வாழைத்தார்களுக்கு தனி கிராக்கி உள்ளது.
    • ஆண்டு தோறும் வாழை விவசாயிகள் நஷ்டத்தையே சந்தித்து வருகின்றனர்.

    களக்காடு:

    களக்காடு பகுதியில் விளையும் வாழைத்தார்களுக்கு மவுசு அதிகம். கேரள சந்தைகளில் களக்காடு வாழைத்தார்களுக்கு தனி கிராக்கி உள்ளது.

    ஆண்டு தோறும், ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வாழைகள் பயிர் செய்யப்பட்டு வருகிறது. சீசன் தொடங்கும் போது ஏத்தன் ரக வாழைத்தார் 1 கிலோ ரூ. 40 வரை விற்பனை ஆகி வருகிறது. அடுத்த 10 நாட்களில் இருந்தே வாழைத்தார் விலை இறங்குமுகமாகி விடும். படிப்படியாக விலை குறைந்து ரூ. 10-க்கும் குறைவாக விற்பனையாகும்.

    வாழைத்தார்களுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவது தொடர் கதையாகி விட்டது. இதையடுத்து ஆண்டு தோறும் வாழை விவசாயி கள் நஷ்டத்தையே சந்தித்து வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வாக களக்காட்டில் வாழைத்தார் சந்தை அமைத்து, அரசே நேரடியாக வாழைத்தார்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், அறுவடை காலத்தில் வாழைத்தார்களை சேமித்து வைக்க குளிர்பதன கிட்டங்கி அமைக்க வேண்டும் என்றும் விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த ஆண்டு களக்காட்டில் வாழைத்தார் சந்தை அமைக்க தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.6.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார்.

    அதன்படி களக்காடு அருகே ஜெ.ஜெ.நகரில் வேளாண்மை விற்பனை மற்றும் வணிக துறை சார்பில் 3 ஏக்கர் பரப்பளவில் வாழைத்தார் ஏல மையம் மற்றும் மதிப்பு கூட்டு மையம் அமைக்க. கடந்த அக்டோபர் மாதம் 12-ந்தேதி தமிழக சபாநாயகர் அப்பாவு அடிக்கல் நாட்டி சந்தை கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

    ஆனால் கட்டுமான பணிகள் மிகவும் மந்தமான முறையில் நடந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. தற்போது வாழைத்தார்கள் அறுவடை சீசன் தொடங்கும் நிலையில் உள்ளது.

    பணிகள் தொடங்கி 4 மாதங்களாகியும் 20 சதவிகித பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளன. எனவே இன்னும் 1 மாதத்திற்குள் கட்டுமான பணிகளை முடித்து, சந்தையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று களக்காடு ஒன்றிய இந்திய கம்யூ. செயலாளர் முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    ×