search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cancel"

    • 500-க்கும் மேற்பட்ட குதிரைகள் லாரிகளில் கொண்டு வரப்பட்டன.
    • 18 நாட்கள் பந்தயங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த 1905-ம் ஆண்டு முதல் புகழ்பெற்ற குதிரை பந்தயம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நடப்பாண்டில் ஊட்டியில் குதிரை பந்தயம் கடந்த ஏப்ரல் 14-ந் தேதி தொடங்கியது. போட்டியில் கலந்துகொள்ள பெங்களூரு, மும்பை, ஐதராபாத், சென்னை, புனே போன்ற இடங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட குதிரைகள் லாரிகளில் கொண்டு வரப்பட்டன.

    தினமும் காலை, மாலையில் குதிரைகளுக்கு நடைபயிற்சி அளிக்கப்பட்டது. 7 வெளியூர் பயிற்சியாளர்கள் உள்பட 30 குதிரை பயிற்சியாளர்கள் மற்றும் 30 ஜாக்கிகள் பங்கேற்றனர். முக்கிய பந்தயங்களான கடந்த 7-ந் தேதி தி நீல்கிரிஸ் 1000 கீனிஸ், தி நீல்கிரிஸ் 2000 கீனிஸ் போட்டி மே 1-ந் தேதி, தி நீல்கிரிஸ் டர்பி ஸ்டேக்ஸ் போட்டி மே 26-ந் தேதி நடந்தது.

    மொத்தம் 18 நாட்கள் பந்தயங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் ஊட்டியில் உள்ள குதிரை பந்தய மைதான ஓடுதளம் சேதமடைந்தது.

    இதனால் நீலகிரி தங்க கோப்பை போட்டி உள்பட மீதமிருந்த பந்தயங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளது மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.



     


    நிதி நெருக்கடி காரணமாக சென்னையில் இருந்து இயக்கப்பட்ட ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் மறுஅறிவிப்பு வரும்வரை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. #JetAirways
    சென்னை:

    கடன் சுமை, நிதி நெருக்கடி காரணமாக இந்தியா முழுவதும் ஜெட் ஏர்வேஸ் நிறுவன விமான சேவை பெரும் அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் இருந்து நள்ளிரவு 1.15 மணிக்கு பாரீஸ், காலை 11.25 மணி, மாலை 4.50 மணிக்கு மும்பைக்கும் என 3 விமானங்களை அந்த நிறுவனம் இயக்கி வந்தது.

    இந்தநிலையில் அந்த நிறுவன விமானங்களுக்கு எரிபொருள் வழங்குவதை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்திவிட்டன. இதையடுத்து சென்னையில் இருந்து இயக்கப்பட்ட 3 விமானங்களையும் மறுஅறிவிப்பு வரும்வரை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.இதுபற்றி முன்கூட்டியே பயணிகளுக்கு தகவல் தரப்பட்டு, மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். #JetAirways 
    போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை தரையிறக்கிய பின்னர், இன்று 35 விமானங்களை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ரத்து செய்ய உள்ளது. #Boeing737MAX8 #EthiopiaPlaneCrash #DGCA
    புதுடெல்லி:

    எத்தியோப்பியா ஏர்லைன்சுக்கு சொந்தமான ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்தனர். இதே ரக விமானம் இந்தோனேசியாவில் கடந்த அக்டோபரில் விபத்துக்குள்ளானதில் 189 பேர் பலியாகினர். இதனால், ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்ததால் சீனா, எத்தியோப்பியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அந்த ரக விமானங்களை இயக்க தற்காலிக தடை விதித்தன.



    இந்தியாவிலும் போயிங் 737 மேக்ஸ்-8 விமானங்களை தரையிறக்க சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) முடிவு செய்தது. அதன்படி போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் தரையிறக்கப்பட்டன.

    அதன்பின்னர், ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனங்கள் நேற்று 20 விமானங்களின் சேவையை ரத்து செய்தன. இதனால் சுமார் 300 பயணிகள் பாதிக்கப்பட்டனர். இன்று 35 விமானங்களின் சேவையை ஸ்பைஸ்ஜெட் ரத்து செய்ய உள்ளது.

    முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு எந்தவித கூடுதல் கட்டணமும் பெறாமல் அவர்களுக்கு தேவையான தங்கும் வசதியை செய்துகொடுக்க வேண்டும் என்றும் ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.  #Boeing737MAX8 #EthiopiaPlaneCrash #DGCA
    தமிழகத்தில் இயங்கி வரும் அரசுப் பள்ளிகளில் சத்துணவு முட்டை கொள்முதல் டெண்டருக்கான அரசாணை ரத்து செய்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #HighCourt #EggProcurement
    மதுரை:

    தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மதிய உணவுடன் முட்டை வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்காக பல நிறுவனங்களிடம் டெண்டர் கோரப்பட்டு முட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அவை அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, முட்டை கொள்முதல் அரசாணைக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்தது.

    முட்டை கொள்முதல் அரசாணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க கோரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது.



    இந்நிலையில், இந்த வழக்கு ஐகோர்ட் மதுரை கிளையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி மகாதேவன் தமது உத்தரவில், அரசாணை முறையாக இல்லை என்றும், பல்வேறு பாகுபாடுகள் உள்ளதாகவும் கூறி, அதனை ரத்து செய்வதாக தெரிவித்துள்ளார். முட்டை வழங்குவதில் பாதிப்பு இல்லாத வகையில், இதுவரை யார் முட்டை வழங்கி வருகிறார்களோ அவர்களிடம் அதே விலையில் அதே எண்ணிக்கையில் முட்டை வாங்கலாம் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.  #HighCourt #EggProcurement
    ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் ஆயிரத்து 111 பேர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது என பள்ளிக்கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது. #JactoGeo
    சென்னை:

    பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழகத்தில் கடந்த மாதம் 22-ம் தேதி முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மறியலில் ஈடுபட்டவர்கள், வேலைக்கு செல்பவர்களை தடுத்தவர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிலர் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் ஜாமீனில் வெளி வந்துள்ளனர். இவர்கள் மீது துறைரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதற்கிடையே, ஜாக்டோ-ஜியோ போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. முதல்வரின் கனிவான வேண்டுகோளை ஏற்றும், மாணவர்களின் நலன் கருதியும் எந்தவிதமான தொடர் போராட்டத்திலும் ஈடுபடப் போவதில்லை. மேலும், ஆசிரியர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறவேண்டும் என்று சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் ஆயிரத்து 111 பேர் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது என பள்ளிக்கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது. ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது. #JactoGeo
    கன்னியாகுமரியில் இன்று காலை வழக்கத்துக்கு மாறாக கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருந்ததால் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலாபயணிகள் செல்ல வசதியாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் 3 படகுகளை இயக்கி வருகிறது.

    தினமும் காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கி மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறும். இன்று காலை வழக்கத்துக்கு மாறாக கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருந்தது. மேலும் சூறாவளி காற்றும் வீசியது. இதனால் படகு போக்குவரத்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து விவேகானந்தர் மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை. கடல் இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர் படகுகள் இயக்கப்படும் என அதிகாரிகள் அறிவித்தனர்.

    இதனால் படகில் செல்ல காத்திருந்த ஏராளமான சுற்றுலாபயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். சென்னை அருகே நடுக்கடலில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் கன்னியாகுமரி வரை நீடித்து கடல் சீற்றம் ஏற்பட்டு இருக்கலாம் என தெரிகிறது.


    செயல்பாட்டு காரணங்கள், மோசமான வானிலை உள்ளிட்ட காரணங்களால் இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. #FlightsDelayed
    மும்பை:

    மும்பை உள்ளிட்ட வடமாநிலங்களில் கடுமையான குளிர் வாட்டி வதைக்கிறது. கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு மற்றும் பனிமூட்டமும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விடிந்து வெகுநேரம் ஆகியும் பனி விலகாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சாலையில் வாகனங்களை இயக்குகின்றனர். 

    இந்நிலையில் மோசமான வானிலை, செயல்பாட்டு காரணங்கள், விமானிகள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புறப்படும் 8 விமானங்கள், ஐதராபாத்தில் இருந்து புறப்படும் 6  விமானங்கள் , ஜெய்பூரில்  இருந்து புறப்படும் 3 விமானங்கள் கடந்த சனிக்கிழமை அன்று ரத்து செய்யப்பட்டன. 

    இதேபோல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இண்டிகோ நிறுவனத்தின் 30 விமானங்கள் இன்று ரத்து செய்யப்படலாம் என தெரிகிறது. 

    மேலும் ஒரு வருடத்திற்கு 1,000 மணி நேரத்திற்குமேல் ஒரு விமானி செயல்பட இயலாது என்பதால், விமானிகளுக்கான தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இது இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    விமான சேவையை மீண்டும் தொடர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.  கடந்த வெள்ளி அன்று கடுமையான ஆலங்கட்டி மழை பெய்ததால் 11 விமானங்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. #FlightsDelayed
    ரெயில் பாதை பராமரிப்பு பணி நடப்பதால் சென்ட்ரல் மற்றும் கடற்கரை நிலையத்தில் இருந்து ஆவடி, திருவள்ளூர், திருத்தணி, அரக்கோணத்துக்கு இயக்கப்படும் 45 ரெயில்கள் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளன. #ElectricTrain
    சென்னை:

    பேசின்பிரிட்ஜ் - வில்லிவாக்கம் இடையே ரெயில் பாதை பராமரிப்பு பணி நடப்பதால் சென்ட்ரல் மற்றும் கடற்கரை நிலையத்தில் இருந்து ஆவடி, திருவள்ளூர், திருத்தணி, அரக்கோணத்துக்கு இயக்கப்படும் 45 ரெயில்கள் நாளை (10-ந் தேதி) ரத்து செய்யப்பட்டுள்ளன.

    சென்ட்ரல் மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்தில் இருந்து ஆவடி, திருவள்ளூர், கடம்பத்தூர், திருத்தணி, அரக்கோணத்துக்கு நாளை காலை 10.05 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை 18 புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    கடற்கரை நிலையத்தில் இருந்து இதே ஊர்களுக்கு இயக்கப்படும் 6 ரெயில் மற்றும் திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும் 18 ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    கடற்கரை நிலையத்தில் இருந்து திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூருக்கு இயக்க வேண்டிய 3 ரெயில்கள் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளன.

    சென்ட்ரலில் இருந்து திருத்தணிக்கு மதியம் 3 மணிக்கு இயக்க வேண்டிய மின்சார ரெயில் நாளை சென்ட்ரல் - ஆவடி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் ஆவடியில் இருந்து திருத்தணிக்கு மாலை 3 மணிக்கு இயக்கப்படும்.

    அரக்கோணத்தில் இருந்து காலை 8.10 மணி, திருவள்ளூரில் இருந்து காலை 9.10 மணி, பட்டாபிராமில் இருந்து காலை 10.30 மணி, திருத்தணியில் இருந்து காலை 9.40 மணிக்கு சென்ட்ரலுக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் நாளை ஆவடி - சென்ட்ரல் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ஆவடியில் இருந்து அரக்கோணத்துக்கு காலை 11.10 மணிக்கும், பட்டாபிராமுக்கு மதியம் 1.50 மணிக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. சென்ட்ரல் மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்தில் இருந்து அரக்கோணத்துக்கு காலை 9.45 மணிக்கும், அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு காலை 11.55 மணி, மதியம் 1.50 மணி மற்றும் 2.25 மணிக்கும், நாளை சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    திருவள்ளூரில் இருந்து சென்ட்ரலுக்கு மதியம் 1.15 மணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து வேளச்சேரிக்கு காலை 8 மணிமுதல் மதியம் 1.40 மணி வரையும், வேளச்சேரியில் இருந்து கடற்கரை நிலையத்துக்கு காலை 8.10 மணியில் இருந்து மதியம் 1.50 மணி வரையும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    கடற்கரை நிலையத்தில் மதியம் 2 மணியில் இருந்தும், வேளச்சேரி நிலையத்தில் இருந்து மதியம் 2.10 மணிக்கு வழக்கம்போல் ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    கடற்கரை - ராயபுரம் இடையே ரெயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் கும்மிடிப்பூண்டி, அரக்கோணம் ரெயில்கல் பாதி வழியில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    கும்மிடிப்பூண்டியில் இருந்து கடற்கரை நிலையத்துக்கு இரவு 9.40 மணிக்கு இயக்கப்படும் ரெயில் இன்று முதல் 16-ந் தேதி வரை வண்ணாரப்பேட்டை கடற்கரை இடையே ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நாட்களில் இந்த ரெயில் பாதை மாற்றி சென்ட்ரல் மூர்க்மார்க்கெட் நிலையத்துக்கு இயக்கப்படும்.

    கடற்கரை நிலையத்தில் இருந்து அரக்கோணத்துக்கு அதிகாலை 1.20 மணிக்கு இயக்க வேண்டிய மின்சார ரெயில் நிலையம் மாற்றப்பட்டு நாளை முதல் 17-ந் தேதி வரை சென்ட்ரல் மூர்மார்க்கெட் நிலையத்தில் இருந்து அதிகாலை 1.25 மணிக்கு இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #ElectricTrain
     
    மத்திய அரசின் புதிய கேபிள் கட்டண முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இன்று (வியாழக்கிழமை) கேபிள் டி.வி. ஒளிபரப்பு நிறுத்தப்படுகிறது என்று கேபிள் டி.வி. பொதுநல சங்கம் அறிவித்துள்ளது. #CableTv #TRAI
    சென்னை :

    இதுகுறித்து தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் (டி.சி.ஓ.ஏ.) நிறுவன தலைவர் பி.சகிலன் கூறியதாவது:-

    கேபிள் டி.வி.யில் அனலாக் முறை ஒழிக்கப்பட்டு டிஜிட்டல் ஒளிபரப்பு நாடு முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தனது 8-வது புதிய கட்டண கொள்கையை அறிவித்துள்ளது. அதன்படி பொதுமக்கள் விரும்பும் சானல்களுக்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும் என்கிற அடிப்படையில் கட்டண சானல்கள் தங்கள் கட்டண விகிதத்தை தனித்தனியாக அறிவித்துள்ளன. அதற்கு 18 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரியையும் வசூலிக்கப்பட உள்ளது.

    இந்த திட்டம் முழுமையாக கட்டண சானல் ஒளிபரப்பாளர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. தற்போதைய நிலையில் கட்டண சானல் நிறுவனங்களும், கட்டுப்பாட்டறை நிறுவனங்களும் பேசி இசைந்து ஒரு கட்டணத்தை இறுதி செய்து வழங்கி வந்தனர். தமிழகத்தின் முன்னணி கட்டுப்பாட்டறைகளான அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேசன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் சுமார் 150-க்கும் மேற்பட்ட கட்டண சானல்களை அதிகபட்சம் ரூ.200-க்கு கேபிள் ஆபரேட்டர்கள் வழியாக வழங்கி வருகிறது. தற்போதைய நிலையில் இதே சானல்களை மக்கள் தேர்வு செய்ய முயன்றால் ரூ.600-க்கும் மேலாக கட்டணம் செலுத்த வேண்டி வரும்.

    தமிழகத்தில் 1.5 கோடி இணைப்புகள் இருப்பதாக கருதும் நிலையில், தற்போதைய விதிமுறை காரணமாக கோடிக்கணக்கில் அரசு கேபிள் டி.வி. கார்ப்பரே‌ஷன் செலவிட வேண்டிவரும். ரூ.200-க்கு பார்க்கும் சானல்களை ரூ.600 கொடுத்து பார்க்கும் நிலையை கார்பரேட் கம்பனிகளுக்கு சாதகமாக டிராய் அறிவித்துள்ளதாக கூட்டமைப்பு கருதுகிறது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ரூ.70-க்கு அதிக சானல்களை வழங்கினார். புதிய திட்டத்தால் பொதுமக்கள் பணம் சுரண்டப்படும் என்பதுடன், ஜெயலலிதாவின் அடிப்படை எண்ணமும் சிதைக்கப்படும் என்று அறிந்து முதல்-அமைச்சர் இதில் தலையிட வேண்டும்.



    100 சானல்கள் வழங்கிய முறை மாறி, தற்போது 500 சானல்கள் டிஜிட்டல் முறையில் வழங்குவதற்காக கோடிக்கணக்கில் முதலீடு செய்து கருவிகள் வாங்கப்பட்டு சேவை நடந்துவருகிறது. இந்தநிலையில் திடீரென்று யாரையும் ஆலோசிக்காமல் தவறான முறையில் ரூ.130 என டிராய் அறிவித்து உள்ளது. தூர்தர்சனின் அனைத்து சானல்களையும் கண்டிப்பாக இலவசமாக காட்ட வேண்டும் என்ற விதிமுறையை அறிவித்த டிராய், இந்திய சானல்கள் அதிகபட்ச சில்லறை விலையை ரூ.5-க்கு மேல் வைக்கக்கூடாது என கூறியிருந்தால் கட்டண உயர்வு கட்டுக்குள் இருந்திருக்கும். ஜி.எஸ்.டி.யையும் ரத்து செய்ய வேண்டும்.

    பொதுமக்கள் நலன் கருதி கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள், ஒளிபரப்பாளர்கள், கட்டுப்பாட்டறை நிறுவனங்களை அழைத்து பேசி இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அதுவரை மத்திய அரசு இந்த திட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பொதுமக்கள் ஆதரவோடு தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் முழு ஒளிபரப்பு நிறுத்த போராட்டம் நடைபெறும். தமிழகத்தில் 29 ஆயிரம் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    இந்த கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்க்காவிட்டால் பொதுமக்கள் தொழில் சங்கங்களை இணைத்து பிப் 10-ந்தேதி சென்னையில் கவர்னர் மாளிகை நோக்கி பேரணி நடத்தி முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #CableTv #TRAI

    ஜனவரி 28ந் தேதி நடப்பதாக இருந்த திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஏன்? என்பது தொடர்பாக விரிவான விபரங்கள் வெளியாகியுள்ளது. #ThiruvarurByElection #ElectionCommission

    சென்னை:

    கருணாநிதி மரணம் காரணமாக 7-8-2018 முதல் திருவாரூர் சட்டசபை தொகுதி காலி இடமாக உள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி காலியாக உள்ள தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் அதாவது 6-2-2019க்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

    அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் ஜனவரி 3-ந்தேதி அறிவிக்கை வெளியிட்டது. 28-ந்தேதி ஓட்டுப்பதிவு நடத்துவதற்கு ஏற்ப தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டது.

    தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கடந்த 3-12-2018 அன்று தேர்தல் ஆணையத்துக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில் அவர் கஜா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கடும் பேரிழவு ஏற்பட்டு இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார். விவசாய பயிர்கள், தோட்டக்கலை பயிர்கள் அழிந்ததோடு 6 லட்சம் வீடுகள், 1½ லட்சம் மின் கம்பங்கள் சேதம் அடைந்து இருப்பதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

    கஜா புயல் பாதித்த 12 மாவட்டங்களில் திருவாரூர் மாவட்டமும் ஒன்று என்றும், அங்கு நிவாரணப் பணிகள் முடிந்து முழுமையான இயல்பு நிலை திரும்ப குறைந்தது 3 மாதங்கள் ஆகும் என்றும் கூறி இருந்தார். எனவே திருவாரூர் தொகுதிக்கு 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்பு இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு இருந்தார்.

    மேலும் தலைமைச் செயலாளர் தனது கடிதத்தில், காலி இடமாக உள்ள மேலும் 18 தொகுதிகளுக்கு ஏப்ரல் மாதத்திற்கு முன்பு இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என்று கோரிக்கை விடுத்து இருந்தார். தமிழக அரசு தலைமை செயலாளரின் இந்த கடிதத்தை மத்திய உள்துறைக்கு தேர்தல் ஆணையம் அனுப்பி கருத்து கேட்டது.

    அதை ஏற்று கடந்த 31-12-2018 அன்று மத்திய உள்துறை அமைச்சகம் பதில் அளித்து இருந்தது. அதில், “தமிழ்நாட்டில் நவம்பர் 15-ந்தேதி தாக்கிய கஜா புயலில் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அந்த பகுதிகளில் மாநில அரசு மூலம் நிவாரணப் பணிகள் நடந்து வருகிறது” என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் கடந்த 2-1-2019 அன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் தேர்தல் ஆணையத்துக்கு இ.மெயில் மூலம் ஒரு வேண்டுகோள் விடுத்து இருந்தார். திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டு இருந்தார். மறுநாள் 3-1-2019 அன்று அவர் தேர்தல் கமி‌ஷனரை நேரில் சந்தித்து இது தொடர்பாக மனு அளித்தார்.

    மேலும் கஜா புயல் தாக்குதல் காரணமாக மாநில அரசு அதிகாரிகள் அனைவரும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக உள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் தற்காலிகமாக மற்றொரு மாவட்டத்துக்கு இடம் பெயர்ந்து உள்ளனர். இதுபற்றி தலைமை தேர்தல் ஆணையம் தமிழக தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டது. சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யலாம் என்று கூறி இருந்தார்.

     


    இதையடுத்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திருவாரூரில் தேர்தல் நடத்த உகந்த சூழ்நிலை உள்ளதா? என்று கேட்கப்பட்டது. அதன் அடிப்படையில் மாவட்ட தேர்தல் அதிகாரி திருவாரூரில் கடந்த 5-1-2019 அன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை அழைத்து கருத்து கேட்டார்.

    பா.ஜனதா, காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, தேசியவாத காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க. ஆகியவை உள்பட பல்வேறு கட்சிகள் திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டன. கஜா புயல் நிவாரப்பணிகள் நடந்து வருவதால் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று இந்த கட்சிகள் கோரிக்கை விடுத்து இருந்தன.

    இது தொடர்பாக கடந்த 6-1-2019 அன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கமான அறிக்கை ஒன்றை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி இருந்தார். அதில் கூறி இருந்ததாவது:-

    1. கஜா புயலால் இடம் பெயர்ந்துள்ள பட்டியலை தயாரிக்க மாநில நிர்வாகத்துக்கு கூடுதல் அவகாசம்.

    2. கஜா புயல் நிவாரணப் பணிகள் பாதிதான் முடிந்து உள்ளன. முழுமையாக முடிக்க அவகாசம் வேண்டும். நிவாரணப் பணிகளில் உள்ள அதிகாரிகள்தான் தேர்தல் பணிகளை செய்ய வேண்டி உள்ளது.

    3. தமிழ்நாட்டின் முக்கிய பண்டிகையான பொங்கல் திருநாள் தேர்தல் சமயத்தில் வருகிறது.

    4. டெல்டா மாவட்டங்களில் சம்பா அறுவடை நடைபெற உள்ளது. அந்த சமயத்தில் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் அமைக்கப்பட வேண்டி உள்ளது. அந்த சமயத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீற வாய்ப்பு உள்ளது.

    5. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

    6. இந்த சூழ்நிலையில் வியாபாரிகளும் இடைத்தேர்தல் நடத்தப்படுவதை விரும்பவில்லை.

    7. தமிழ்நாட்டில் பள்ளிகளில் பொதுத்தேர்தவு 2 வாரங்களில் நடைபெற உள்ளது. இந்த சமயத்தில் ஆசிரியர்களை தேர்தல் அதிகாரிகளாக பணியாற்ற வைப்பதில் இடையூறு உள்ளது.

    8. இத்தகைய சூழ்நிலையில் பொதுமக்கள் தேர்தல் நடைமுறைகளில் ஆர்வமுடன் தீவிரமாக பங்கேற்கமாட்டார்கள்.

    9. மேலும் திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து அனைத்து கட்சிகளிடமும் கருத்து கேட்டபோது அனைத்து கட்சிகளும் தேர்தலை நடத்த வேண்டாம் என்றும் ஒத்திவைக்க கோரியும் கருத்து தெரிவித்து உள்ளன.

    இவ்வாறு தமிழக தேர்தல் அதிகாரியின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

    கஜா புயலால் திருவாரூர் மாவட்டத்தில் நிவாரணப் பணிகள் செய்ய வேண்டி இருப்பதை மாவட்ட கலெக் டர் மூலம் தெரிய வந்துள்ளது. இதை கருத்தில் கொண்டு தற்போது திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தலை சுமூகமாக நடத்த முடியாது என்ற முடிவுக்கு தேர்தல் ஆணையம் வந்தது.

    எனவே மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் -1951 பிரிவு 150, 30, 56 மற்றும் அரசியல் சட்டப்பிரிவு 326, பொது காரணங்கள் சட்டப்பிரிவு 21 ஆகியவற்றின் அடிப்படையில் திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. இதன் விளைவாக திருவாரூர் தொகுதி மாவட்ட தேர்தல் அதிகாரி இதுவரை மேற்கொண்டு இருந்த தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளும், நடவடிக்கைகளும் செல்லாது என்று அறிவிக்கப்படுகிறது.

    தமிழக அரசின் கடிதம் மற்றும் கட்சிகளின் கருத்து அடிப்படையில் திருவாரூர் தொகுதி தேர்தல் ரத்து ஆகிறது. திருவாரூர் தொகுதியில் சுமூகமாக, நியாயமாக, அமைதியாக தேர்தல் நடத்த உகந்த சூழ்நிலை உருவான பிறகு மீண்டும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையர்களின் உத்தரவில் தெரிவிக்கபட்டுள்ளது.

    திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகிற 28-ந் தேதி நடைபெற இருந்த நிலையில், இடைத்தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது. #Thiruvarur #ThiruvarurByElection #ElectionCommission
    திருவாரூர்:

    திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் பணிகளை நிறுத்திவைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    தமிழக சட்டசபைக்கு கடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது திருவாரூர் தொகுதியில் முன்னாள் முதல்- அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி இரண்டாவது தடவையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    அந்த தேர்தலில் அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளரை விட கூடுதலாக 68 ஆயிரத்து 316 வாக்குகள் பெற்றார். திருவாரூர் தொகுதியில் முதன் முதலாக 2011-ம் ஆண்டு களம் இறங்கிய போதும் அவர் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி உடல் நலக்குறைவு காரணமாக கருணாநிதி மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து திருவாரூர் தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டது. சட்ட விதிகளின்படி திருவாரூர் தொகுதியில் பிப்ரவரி 5-ந்தேதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால் தலைமை தேர்தல் ஆணையம் இதுபற்றி ஆலோசித்து வந்தது.

    தமிழ்நாட்டில் திருவாரூர் தொகுதி தவிர திருப்பரங்குன்றம் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளும் காலியாக இருப்பதால் 20 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திருப்பரங்குன்றம் தொகுதி தொடர்பான வழக்கு கோர்ட்டில் இருப்பதாலும், தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் அப்பீல் செய்ய அவகாசம் இருப்பதாலும் அந்த 19 தொகுதிகளின் தேர்தலை சற்று தாமதித்து நடத்தலாம் என்று தலைமை தேர்தல் கமி‌ஷன் முடிவு செய்தது.

    இதையடுத்து திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி வருகிற 28-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருந்த நிலையில், திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் பணிகளை நிறுத்திவைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இடைத்தேர்தல் பணிகளை நிறுத்துமாறு தமிழக தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

    கஜாபுயல் நிவாரணப் பணிகள் முடியாததால் திருவாரூரில் தேர்தலை ஒத்திவைக்க கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
    திருவாரூர் தேர்தலுக்கு எதிரான மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்நிலையில் இந்த அறிவிப்பு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.   #Thiruvarur #ThiruvarurByElection #ElectionCommission
    திருப்பதி கோவிலில் டிசம்பர் மாதம் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் ஆகியோருக்கு வழங்கப்படும் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. #Tirupati
    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் ஆகியோருக்கு பக்தர்களின் கூட்டம் குறைவாக உள்ள நாட்களில் மாதத்திற்கு இருமுறை தரிசனம் அளிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் 8 ஆயிரம் பேருக்கு மாதத்தில் இரு நாட்களும், 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு சுபதம் பகுதி வழியாக காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் மாதந்தோறும் இரு நாட்களும் தரிசனம் செய்ய அனுமதி வழங்கிவந்தது.

    இந்நிலையில், டிசம்பர் மாதம் வைகுண்ட ஏகாதசி, துவாதசி மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு, மார்கழி மாத உற்சவங்கள், அரையாண்டு விடுமுறை உள்ளிட்டவற்றால் திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதனால் இந்த மாதத்தில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட இலவச தரிசனங்களை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.


    ஏழுமலையான் கோவில் மற்றும் தேவஸ்தானம் நிர்வகித்து வரும் பல கோவில்களுக்கு பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய துணிகளை வரும் 13-ந் தேதி இணையதளம் வாயிலாக ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பாலியஸ்டர், பருத்தி வேட்டிகள், துணிகள், உண்டியலுக்கு பயன்படுத்தும் துணிகள், ரவிக்கைத் துணிகள், மேல்துண்டுகள், லுங்கிகள், சால்வைகள், படுக்கை விரிப்பு, தலையணை உறை, பஞ்சாபி ஆடைகள், ஜமுக்காளம், போர்வைகள், திரைச் சீலைகள் உள்ளிட்டவை ஏலம் விடப்பட உள்ளன.

    இது தொடர்பாக மேலும் விவரங்களை அறிய www.tirumala.org, www.mstce commerce.com/ www.mstcindia.co.in  ஆகிய இணையதளங்களை தொடர்பு கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. #Tirupati #TirupatiTemple
    ×