search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "flight"

    • விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் உயிருடன் எலி இருந்ததால் பயணிகள் அச்சமடைந்து கூச்சல் இட்டனர்.
    • இச்சம்பவத்திற்கு விமான நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.

    நார்வே நாட்டில் இருந்து ஸ்பெயினுக்கு சென்ற ஸ்காண்டிநேவியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் உயிருடன் எலி இருந்ததால் பயணிகள் அச்சமடைந்து கூச்சல் இட்டனர். இதனால் விமானம் அவசரமாக டென்மார்க்கில் தரையிறக்கப்பட்டது.

    பின்னர் பயணிகள் அனைவரும் வேறு விமானத்திற்கு மாற்றப்பட்டு ஸ்பெயினுக்கு புறப்பட்டனர்.

    இச்சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த விமான நிறுவனம், 'பலத்த பாதுகாப்பையும் மீறி இந்த அரிதான நிகழ்வு நடந்துள்ளது. இனி இதுபோன்று நடக்காது' எனவும் உறுதியளித்துள்ளது.

    • வானிலை சீரானதும் விமான சேவை மீண்டும் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
    • சுமார் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.

    பீஜிங்:

    கிழக்கு சீனாவின் கடற்கரை பகுதியில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் பெபின்கா சூறாவளி மையம் கொண்டுள்ளது. இந்த சூறாவளி சுமார் 151 கி.மீ. வேகத்தில் இன்று கரையை கடக்கும் என சீன வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கிழக்கு கரையோர பகுதிகளில் 254 மி.மீ. அளவிலான மழைப்பொழிவு பதிவாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஷாங்காய் நகரில் இருந்து சுமார் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், மோசமான வானிலை காரணமாக ஷாங்காய் நகரில் உள்ள விமான நிலையங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    பெபின்கா சூறாவளி கரையை கடக்கும் வரை சுமார் 600 விமானங்கள் ரத்துசெய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வானிலை சீரானதும் விமான சேவை மீண்டும் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பாதுகாப்பு காரணங்களுக்காக துருக்கியில் தரையிறக்கப்பட்டுள்ளது.
    • ஜெர்மனியின் பிராங்பேர்ட் நகருக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் இயக்கப்பட்டது.

    மும்பை:

    மும்பையில் இருந்து ஜெர்மனியின் பிராங்பேர்ட் நகருக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் இயக்கப்பட்டது. இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக துருக்கிக்கு திருப்பிவிடப்பட்டது. அங்கு பத்திரமாக தரைறக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனம், தனது எக்ஸ் தளத்தில், "பிராங்பேர்ட் நகருக்கு சென்ற விமானம், பாதுகாப்பு காரணங்களுக்காக துருக்கியில் தரையிறக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளது.

    • விமானத்தில் பயணம் செய்தது மகிழ்ச்சி.
    • விமானத்தில் பயணம் செய்தது மகிழ்ச்சி. அண்ணா நூலகத்தை சுற்றிப்பார்த்து விட்டு திரும்பி உள்ளனர்.

    கோவை:

    காரமடை சிக்காரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணார்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்கள் அதிகளவில் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளியில் படிக்கும் ஏழை-எளிய மாணவர்களை சிக்காரம்பாளையம் ஊராட்சி மன்றத்தலைவர் ஞானசேகரன் கடந்த 4 ஆண்டுகளாக கோவையில் இருந்து விமானம் மூலம் சொந்த செலவில் சென்னைக்கு அழைத்து சென்று வருகிறார்.

    அதன்படி இந்தாண்டு 200 மாணவர்களை சென்னைக்கு விமானத்தில் அழைத்து செல்ல திட்டமிட்டு உள்ள ஞானசேகரன், முதல்கட்டமாக இருமுறை தலா 50 மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து சென்றார்.

    அங்கு அவர்கள் காலை உணவுக்கு பிறகு மெட்ரோ ரெயில் மூலம் அண்ணா நூலகத்தை சுற்றிப்பார்த்து விட்டு திரும்பி உள்ளனர்.

    இந்த நிலையில் ஞானசேகரன் அடுத்தகட்டமாக அரசு பள்ளி மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை கோவை விமான நிலையம் அழைத்து சென்றார். பின்னர் அவர்கள் சென்னைக்கு விமானத்தில் பறந்தனர்.

    முன்னதாக சென்னைக்கு விமானத்தில் செல்வது குறித்து மாணவிகள் கூறுகையில், இதுவரை தரையில் நின்று வானத்தில் பறந்த விமானத்தை வெறும் கண்களில் மட்டுமே பார்த்து உள்ளோம்.

    ஆனால் ஊராட்சித்தலைவர் உதவியால் நாங்களும் விமானத்தில் பயணம் செய்தது மகிழ்ச்சி என்று தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவம் மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் இடையே பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    • முடிமாற்று அறுவை சிகிச்சை செய்திருந்ததால், தலையில் இருந்து இரத்தம் வழிந்தது.
    • விமானத்தில் இருந்து இருவரும் இறங்க மறுத்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

    மியாமி சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவர் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது. 27 வயதான ஹெர்னான்டஸ் கார்னியர் தலையில் முடிமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு விமானத்தில் ஏறினார்.

    திடீரென அவரது தலையில் இருந்து இரத்தம் வழிய ஆரம்பித்ததால், விமான பணியாளர்கள் கார்னியரை விமானத்தில் இருந்து வெளியேற வலியுறுத்தினர். எனினும், அவர் விமானத்தை விட்டு வெளியேற மறுத்துள்ளார்.

    நீண்ட நேரம் அறிவுறுத்திய பிறகும் விமானத்தில் இருந்து கார்னியர் வெளியேற மறுத்ததால், பணியாளர்கள் காவல் துறை உதவியை நாடினர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், கார்னியரை விமானத்தில் வைத்து கைது செய்து வெளியே அழைத்து சென்றனர். இவருடன் பயணிக்க இருந்த பிலான்கா லயோலாவும் விமானத்தில் இருந்து கைது செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

    இந்த சம்பவம் காரணமாக குறிப்பிட்ட விமானம் அன்றிரவு புறப்படாமல் அதிகாலையில் தாமதமாக புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தில் விமான அதிகாரிகளுடன் ஒத்துழைக்க மறுத்து, ரகளையில் ஈடுபட்ட கார்னியர் மற்றும் லயோலா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னதாக தலையில் இருந்து இரத்தம் வழிந்ததால், கார்னியருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    • விமானத்தில் 325 பயணிகள் பயணம் செய்தனர்.
    • விமானம் குலுங்கியதில் சில இருக்கைகள் சேதம் அடைந்தது.

    மாட்ரிட்:

    சமீப காலமாக நடுவானில் விமானம் குலுங்கும் சம்பவங்கள் தொடர்கதை போல நடந்து வருகிறது. தற்போது ஸ்பெயின் நாட்டிலும் இது போன்ற ஒரு விபத்து விமான பயணிகளை அதிர்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

    ஸ்பெயினில் உள்ள மாட்ரிட்டில் இருந்து உருகுவே தலைநகர் மாண்டி வீடியோவுக்கு ஏர் யுரோபா விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 325 பயணிகள் பயணம் செய்தனர். விமானம் நடுவானில் பறந்த போது திடீரென பயங்கரமாக குலுங்கியது. விமானம் அங்கும், இங்கும் ஆடியதால் பயணிகள் அலறினர். சிலர் இருக்கையை கெட்டியாக பிடித்து கொண்டனர். சீட் பெல்ட் அணியாத பயணிகள் இருக்கையில் இருந்து கீழே விழுந்தனர். விமானத்தில் பயணித்த ஒரு குழந்தை கதறி அழுதது.

    ஒரு பயணி விமானத்தின் மேற்பகுதிக்கு தூக்கி வீசப்பட்டார். இதனால் அவர் மேல் பகுதியை பிடித்து கொண்டு தொங்கினார். அவரை சக பயணிகள் கீழே இழுத்து மீட்டனர். இந்த சம்பவத்தில் 30 பயணிகள் காயம் அடைந்தனர்.


    இந்த சம்பவத்தையடுத்து விமானம் வடகிழக்கு பிரேசிலில் உள்ள நடால் விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறக்கப்பட்டது. விமானம் குலுங்கியதில் சில இருக்கைகள் சேதம் அடைந்தது. பின்னர் வேறு ஒரு விமானம் மூலம் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இது தொடர்பாக ஏர் யுரோபா விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் விமானம் பத்திரமாக தரை இறக்கப்பட்டதாகவும், காயம் அடைந்த பயணிகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


    • மன்ப்ரீத் கவுர் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவில் சமையல் படிப்பு படிக்க சென்றுள்ளார்.
    • காசநோயின் காரணமாகத்தான் இளம்பெண் உயிரிழந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.

    24 வயதான இந்திய வம்சாவளி பெண்ணான மன்ப்ரீத் கவுர் பெரிய சமையல் கலைஞராக வேண்டும் என்ற கனவுடன் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவில் சமையல் படிப்பு படிக்க சென்றுள்ளார். படிக்கும் போதே வேலை செய்து தனது செலவுகளை அவர் கவனித்து வந்துள்ளார்.

    இந்நிலையில், 4 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இந்தியாவில் உள்ள தனது குடும்பத்தை பார்க்க வேண்டும் என்று அவர் திட்டமிட்டிருந்தார். அதன்படி மெல்போர்னில் இருந்து டெல்லிக்கு செல்லும் விமானத்தில் எறியுள்ளார். ஆனால் விமானத்தில் ஏறி அவள் சீட் பெல்ட்டை அணிய முயன்றபோது திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

    காசநோயின் காரணமாகத்தான் இளம்பெண் உயிரிழந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. காசநோய் நுரையீரலை பாதிக்கும் ஒரு தொற்று நோயாகும்.

    • விபத்தில் சிக்காமல் நூலிழைவில் தப்பியதாக தகவல்.
    • இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஹவாய் தீவில் உள்ள ஹோன்லுலுவில் இருந்து லிஹூவிற்கு சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் மோசமான வானிலை காரணமாக அதிபயங்கர விபத்தில் சிக்காமல் நூலிழைவில் தப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 2786 விமானமான போயிங் 737 மேக்ஸ் 8 போதிய வெளிச்சமின்மை காரணமாக தரையிறங்குவதை தவிர்க்க உத்தரவிடப்பட்டது.

    இந்த உத்தரவு காரணமாக கடல் பகுதியின் மேல் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் நொடிகளில் பலநூறு அடிகள் கீழே இறங்கியது. இதனால் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அலறினர். எனினும், விமானிகள் துரிதமாக செயல்பட்டு விமானத்தை கட்டுப்படுத்தி அதனை சட்டென மேலே உயர்த்தினர்.

    இதன் காரணமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

    • இந்த விமானம் நடுவானில் திடீரென குலுங்கியது.
    • விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    கத்தார் ஏர்வேஸ்-க்கு சொந்தமான கியூ.ஆர். 017 என்ற விமானம் கத்தார் நாட்டின் தோஹா நகரில் இருந்து இன்று மதியம் 1 மணியளவில் டப்ளின் நகருக்கு புறப்பட்டு சென்றது. பயணத்தின் போது துருக்கி நாட்டின் மேலே சென்றபோது, இந்த விமானம் நடுவானில் திடீரென குலுங்கியது.

    இதில் விமானத்தில் பயணித்த ஆறு பயணிகள் மற்றும் ஆறு ஊழியர்கள் என மொத்தம் 12 பேர் காயமுற்றனர். இதனைத் தொடர்ந்து விமானம் டப்ளின் நகரில் தரையிறங்கியது. விமானம் நடுவானில் குலுங்கிய தகவல் விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, விமான நிலையதில் இருந்த போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் காயமுற்ற பயணிகளுக்கு உதவினர். முன்னதாக லண்டனில் இருந்து சிங்கப்பூர் நோக்கி சென்ற விமானம் இதேபோன்று நடுவானில் குலுங்கியது. இதில் அந்த விமானத்தில் பயணித்த 73 வயது முதியவர் உயிரிழந்தார். 

    • நாய்களுக்கு பிரத்யேக பயண அனுபவத்தை வழங்குகிறது.
    • நாய்களுடன் அதன் உரிமையாளர்களும் பயணம் செய்யலாம்.

    நாய்கள் விமானம் பயணம் செய்வதற்கான புதிய ஆடம்பர விமான சேவை துவங்கப்பட்டுள்ளது. பார்க் ஏர் என அழைக்கப்படும் புதிய விமான சேவை மே 23 ஆம் தேதி துவங்கியது. நியூ யார்க்-இன் வெஸ்ட்செஸ்டர் கவுண்டி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட முதல் விமானம் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியது.

    நாய் பொம்மைகளை விற்பனை செய்யும் பார்க் நிறுவனம் ஜெட் சார்டர் சேவையை வழங்கும் நிறுவனத்துடன் இணைந்து பார்க் ஏர் நிறுவனத்தை துவங்கியுள்ளது. இந்த நிறுவனம் நாய்களுக்கும், அதன் உரிமையாளர்களுக்கும் பிரத்யேக பயண அனுபவத்தை வழங்குகிறது.

    "முந்தைய விமான பயணத்தை போன்று, இந்த நாய்களை யாரும் குறைத்து மதிப்படவோ அல்லது கார்கோ போன்றோ நடத்தவில்லை. மேலும், இவைகள் மற்ற பயணிகள் மற்றும் ஊழியர்களுக்கு தொல்லையாகவும் இருக்கவில்லை. இங்கு, நாய்களுக்குத் தான் முன்னுரிமை வழங்கப்படுகிறது. இங்குள்ள ஒவ்வொரு வசதியும், நாய்களுக்கு சவுகரியமாக இருக்குமா? என்ற அடிப்படையில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கின்றன," என்று பார்க் ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    நாய்கள் பயணிக்கும் இந்த விமானத்தில், அவைகளுடன் அதன் உரிமையாளர்களும் பயணம் செய்யலாம். தற்போது முதற்கட்டமாக இந்த சேவை நியூ யார்க் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் இடையே, ஒருவழி மற்றும் இருவழி பயணமாக வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பயணத்திலும் 15 நாய்களும், அதன் உரிமையாளர்களும் பயணம் செய்யலாம்.

    சவுகரியமான பயணத்தை உறுதி செய்யும் வகையில், ஒரு பயணத்தில் அதிகபட்சம் 10-க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதில்லை. இந்த விமானத்தில் உள்நாட்டு பயணத்திற்கு 6 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 4 லட்சத்து 98 ஆயிரத்து 352 என்றும் சர்வதேச பயணத்திற்கு 8 ஆயிரம் டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 6 லட்சத்து 64 ஆயிரத்து 470 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • பாதுகாப்பு காரணங்களுக்காக டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

    135 பயணிகளுடன் டெல்லியில் இருந்து லடாக்கின் லே நகருக்க புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் டெல்லியிலேயே அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இன்று காலை 10.30 மணிக்கு விமானம் புறப்பட்ட நிலையில், சுமார் 30 நிமிடங்களில் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, விமான எஞ்சினில் பறவைகள் மோதியுள்ளன. எஞ்சினில் பறவைகள் மோதியதை அடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக விமானம் டெல்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    இந்த சம்பவம் காரணமாக பயணிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பறவைகள் எஞ்சினில் மோதும் போது, இவ்வாறு அவசரமாக தரையிறக்கும் நடைமுறை சாதாரணமானது தான் என்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    விமானம் டெல்லியில் தரையிறக்கப்பட்டதை அடுத்து இன்று மதியம் 12.20 மணிக்கு லே நகரில் இருந்து டெல்லிக்கு புறப்பட வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டது. விமானம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பயணிகள் லே விமான நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    • விமானம் சான்பிரான்சிஸ்கோவில் தரை இறங்கியதும் 2 பயணிகளும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
    • பயணிகளின் மோதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றது.

    பஸ், ரெயில்களில் இருக்கைகளை பிடிப்பதற்காக பயணிகள் இடையே சண்டை நடப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் விமானத்தில் இருக்கைக்காக பயணிகள் இடையே நடந்த மோதல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    கிழக்கு ஆசியாவில் உள்ள தைவானில் இருந்து கலிபோர்னியா செல்லும் ஈ.வி.ஏ. விமானத்தில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் தொடர்ந்து இருமிக்கொண்டே இருந்துள்ளார். இதனால் அவர் அருகே அமர்ந்திருந்த மற்றொரு பயணி விமானத்தில் காலியாக இருந்த மற்றொரு இருக்கைக்கு சென்று அமர்ந்துள்ளார். இந்நிலையில் இருமிக்கொண்டிருந்த பயணி எழுந்து சென்று, ஏற்கனவே தன் அருகே இருந்து விலகி சென்று அமர்ந்த பயணியின் இருக்கை அருகே சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர்களுக்கிடையே சண்டை ஏற்பட்டது. இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் திடீரென ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    இதனால் சக பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் சண்டை போட்ட பயணிகளை விலக்கி விட முயன்றனர். ஆனாலும் 2 பயணிகளும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டனர். இதனால் அவர்களை சமாதானபடுத்த முடியாமல் விமான ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். விமானம் சான்பிரான்சிஸ்கோவில் தரை இறங்கியதும் 2 பயணிகளும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஏற்கனவே பயணிகளின் மோதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றது.

    வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் விமான ஊழியர்களின் பொறுமை மற்றும் கடமை உணர்வை பாராட்டி பதிவிட்டனர். மேலும் மோதலில் ஈடுபட்ட பயணிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.

    ×