search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமானம்"

    • 4 போர் விமானங்கள் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஓடு பாதையில் தரையிறக்கப்பட்டன.
    • போர்க்காலத்தில் விமானங்களை தரை இறக்க இந்த தேசிய நெடுஞ்சாலை ஒரு வரப்பிரசதமாக இருக்கும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், பாபட்லா தேசிய நெடுஞ்சாலை 16-ல் கோரிசபாடு என்ற இடத்தில் போர் விமானங்களை அவசரமாக தரை இறக்குவதற்காக 4.1 கிலோமீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த சாலையில் அவசர காலத்தில் போர் விமானங்களை தரை இறக்கும் திறன் மதிப்பீடு சோதனையை விமானப்படையினர் வெற்றிகரமாக நடத்திக் காட்டினர்.

    தேசிய நெடுஞ்சாலை 16-ல் கோரிசபாடு முதல் ரெணங்கிவரம் வரை அவசர காலத்தில் விமானங்கள் தரை இறக்குவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த சாலையில் சுகோய் 232 ரக 4 போர் விமானங்கள் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஓடு பாதையில் தரையிறக்கப்பட்டன. அதனை ஹாக் ரேஞ்ஜின் வகை 2 விமானங்கள் பின் தொடர்ந்து சென்றன.


    இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதற்காக போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது.

    போர்க்காலத்தில் விமானங்களை தரை இறக்க இந்த தேசிய நெடுஞ்சாலை ஒரு வரப்பிரசதமாக இருக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    முன்னதாக போர் விமானங்களை தரையிறக்கி சோதனை செய்த போது திடீரென தெரு நாய் ஒன்று விமான ஓடு பாதையில் குறுக்கே சென்றது.

    இதனைக் கண்டு அங்கிருந்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த நாயை விரட்டி அடித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. சோதனை நடத்திய காட்சி.

    • விமானம் தவறான பாதையில் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
    • நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்த போது சுமார் 28 நிமிடங்கள் உறங்கினர்.

    153 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஒன்று நடுவானில் சென்று கொண்டிருந்த சமயத்தில், அதை இயக்கிய விமானிகள் இருவர் அரை மணி நேரம் உறங்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    தென்கிழக்கு சுலவேசியில் இருந்து இந்தோனேசிய தலைநகர் ஜகார்டாவுக்கு கடந்த ஜனவரி 25-ம் தேதி படிக் ஏர் விமானத்தின் விமானம் ஒன்று சென்றது. அதை இயக்கிய விமானி மற்றும் இணை விமானி இருவரும் நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்த போது சுமார் 28 நிமிடங்கள் உறங்கியுள்ளனர்.

    இந்த சம்பவம் அந்நாட்டு தேசிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் நடத்திய விசாரணையில் அம்பலமாகி உள்ளது. 153 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் 2 மணி 35 நிமிடத்தில் ஜகார்டாவில் தரையிறங்க வேண்டும். இந்த பயணத்தின் போது விமானம் தவறான பாதையில் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

    விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது, விமானி தன்னுடன் காக்பிட்-இல் இருந்த இணை விமானியிடம் தனக்கு ஓய்வு வேண்டும் என அனுமதி கேட்டுள்ளார். இணை விமானி அதற்கு அனுமதி அளித்ததால், விமானி உறங்கியுள்ளார். அனுமதி அளித்த இணை விமானியும், சிறிது நேரத்திலேயே அசதி காரணமாக உறங்கியுள்ளார். 28 நிமிடங்கள் விமானி மற்றும் இணை விமானி உறங்கியுள்ளனர்.

    இருவரும் உறங்கி கொண்டிருந்த போது, ஜகார்டா கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விமானியை தொடர்பு கொள்ளும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனினும், இருவரும் உறங்கி கொண்டிருந்ததால், விமானத்தில் இருந்து கட்டுப்பாட்டு மையத்திற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. 28 நிமிடங்கள் உறங்கிய இணை விமானி அதன் பின்னர் விழித்துக் கொண்டு விமானம் தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதை உணர்ந்தார்.

    இந்த சம்பவத்தின் போது உறங்கிய இரு விமானிகளின் பெயர் மற்றும் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. எனினும், இருவருக்கும் முறையான ஓய்வு வழங்காமல் பணி செய்ய வைத்தது விசாரணையில் தெரியவந்தது. நல்ல வேளையாக இந்த சம்பவத்தின் போது யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 

    • சிறிது நேரத்திலேயே விமானம் அவசராக தரையிறக்கப்பட்டது.
    • விமானத்தில் 249 பேர் இருந்ததாக யுனைடெட் ஏர்லைன்ஸ் தெரிவித்தது.

    அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானமான போயிங் 777 ஜெட்லைனர் ஜப்பானுக்குப் புறப்பட்டது.

    விமானம் டேக் ஆஃப் ஆன சில நொடிகளில் திடீரென விமானத்தின் சக்கரம் ஒன்று கழன்று கீழே விழுந்தது. இதில், விமான நிலைய ஊழியர்கள் பயன்படுத்தும் கார் பார்க்கிங்கிற்குள் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் சேதமடைந்தன.

    இதுகுறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சிறிது நேரத்திலேயே விமானம் அவசராக தரையிறக்கப்பட்டது.

    இந்த விமானத்தில் 249 பேர் இருந்ததாக யுனைடெட் ஏர்லைன்ஸ் தெரிவித்தது.

    போயிங் 777 விமானத்தில், தரையிறங்கும் ஸ்ட்ரட்கள் ஒவ்வொன்றிலும் ஆறு சக்கரங்களைக் கொண்டுள்ளது. இதில், சக்கரம் காணாமல் போனாலோ அல்லது சேதமடைந்தாலோ பாதுகாப்பாக தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இதனால், பயணிகள் பாதுகாப்பாக தரையிறங்கினர்.

    • மாயமான எம்.எச். 370 விமானம் எங்கு சென்றது என்ற கேள்விக்கு பதில் இல்லை.
    • மாயமான விமானத்தை மீண்டும் தேட வேண்டும் என்ற கோரிக்கை எழ துவங்கியுள்ளது.

    கடந்த 2014, மார்ச் 8-ம் தேதி கோலா லம்பூரில் இருந்து மலேசியா நோக்கி புறப்பட்ட எம்.எச்.370 என்ற விமானம் ரேடார்களில் இருந்து காணாமல் போனது. ரேடார்களில் இருந்து மாயமான எம்.எச். 370 விமானம் எங்கு சென்றது, அதில் இருந்தவர்கள் நிலை என்ன என்ற கேள்விகளுக்கு இதுவரை பதில் இல்லை.

    மாயமான மலேசிய விமானம் எம்.எச். 370-ஐ தேடும் பணிகளை மீண்டும் துவங்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழ துவங்கியது. இந்த நிலையில், ஆஸ்திரேலியா சென்ற மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம்-இடம் மாயமான விமானத்தை தேடும் பணிகள் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம், "தேடல் தொடர்பாக உறுதியான ஆதாரம் ஏதேனும் கிடைக்கும் பட்சத்தில், மீண்டும் தேடும் பணிகளை துவங்குவதில் மகிழ்ச்சி அடைவோம். இந்த விவகாரத்தில் தொழில்நுட்ப கோளாறு இருக்கும் என்று நினைக்கவில்லை."

    "மக்களின் உயிரை பாதிக்கும் விவகாரம் இது, இதற்காக என்னவெல்லாம் செய்ய வேண்டுமா, அவற்றை நிச்சயம் செய்தாக வேண்டும்," என்று தெரிவித்தார்.

    முன்னதாக காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் 370-ஐ கண்டுபிடிக்க புது திட்டம் உள்ளதாக ஆய்வாளர்கள் அறிவித்து இருந்தனர். லண்டனில் உள்ள ராயல் ஏரோனாடிக்கல் சொசைட்டியில் நடைபெற்ற விரிவுரையில் புதிய வகை தேடலின் மூலம் பத்து நாட்களில் காணாமல் போன விமானத்தை கண்டுபிடிக்க முடியும் என்று வான்வெளி துறை நிபுணர்கள் ஜீன்-லுக் மார்சண்ட் மற்றும் விமானியான பேட்ரிக் பெல்லி தெரிவித்தனர்.

    • ஆண்டுதோறும் சிறப்பு பரிசுகளை அள்ளித்தருவதோடு, சுற்றுலாவுக்கும் அழைத்து சென்று அசத்தி வருவது இவரது வழக்கம்.
    • இன்ப அதிர்ச்சியை சற்றும் எதிர்பாராத ஊழியர்கள் திக்குமுக்காடி போனார்கள்.

    மதுரை:

    மதுரை அருகே உள்ள செக்காணூரணியைச் சேர்ந்தவர் மாயன். இவர் சமீபத்தில் காலமான தே.மு.தி.க. கட்சி தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் தீவிர ஆதரவாளர். விஜயகாந்த் நடிகராக இருந்த காலம் முதலே அவரது தீவிர ரசிகராக இருந்து வந்துள்ளார்.

    மதுரை, செக்காணூரனி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்டுமானம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழிலில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார். இவரிடம் ஏராளமான ஊழியர்கள், பொறியாளர்களாகவும், மேஸ்திரிகளாகவும், கொத்தனாராகவும், சித்தாளாகவும் பணியாற்றி வருகின்றனர்.

    விஜயகாந்த் பாணியை பின்பற்றி தன்னிடம் பணி யாற்றும் ஊழியர்களை ஊக்கப்படுத்தும் வகையில், அவர்களுக்கு ஆண்டுதோறும் சிறப்பு பரிசுகளை அள்ளித்தருவதோடு, சுற்றுலாவுக்கும் அழைத்து சென்று அசத்தி வருவது இவரது வழக்கம்.

    பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு தனது ஊழியர்களை சுற்றுலா பேருந்தில் அழைத்துச் சென்று, அங்கு சகல வசதிகளுடன் அவர்களுக்கு விருந்தும் அளிப்பார். இது அவர்களுக்கு மறக்க முடியாத மகிழச்சியான அனுபவத்தை அளிப்பதாக இருந் தது. இதனால் மாயன் மீது அவர்களது ஊழியர்கள் மிகுந்த மரியாதையும், மதிப்பும், அன்பும் வைத்துள்ளனர்.

    அந்த வகையில் இந்த ஆண்டு சற்று வித்தியாசமாக யோசித்த மாயன், தனது ஊழியர்களுக்கு விடுமுறை பரிசளிக்க திட்டமிட்டார். அதே நேரத்தில் அவரது அபிமான நடிகர் விஜயகாந்த் மறைந்ததால் அவரது நினைவிடத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலும் அவரிடம் இருந்து வந்துள்ளது.

    எனவே தனது ஊழியர்களை சென்னைக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல எண்ணிய மாயன், தன்னிடம் பணியாற்றும் 35 பெண்கள், 40 ஆண்கள் என மொத்தம் 75 பேரை மதுரையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் சென்றார். இந்த இன்ப அதிர்ச்சியை சற்றும் எதிர்பாராத ஊழியர்கள் திக்குமுக்காடி போனார்கள்.

    இதுகுறித்து மாயன் கூறுகையில், விமானத்தில் பறக்க வேண்டும் என்பது எனக்கும் நீண்ட கால கனவாக இருந்தது. நான் ஒப்பந்ததாராக தொழில் தொடங்கி வளர்ச்சி அடைந்ததும் 2002-ல் விமானத்தில் பயணிக்க வாய்ப்பு கிடைத்தது. அது எனக்கு மறக்க முடியாத அனுபவத்தை அளித்தது. நான் பெற்ற இன்பம் என்னிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கும் கிடைக்க வேண்டும் என விரும்பினேன் என்றார்.

    அவ்வாறு விமானத்தில் அழைத்துச் சென்ற ஊழியர்களை சென்னை விமான நிலையத்தில் இருந்து பேருந்து மூலமாக விஜயகாந்த் நினைவிடத்துக்கு அழைத்துச் சென்றார். பின்னர் அங்கிருந்து மெரீனா பீச், மாமல்லபுரம் உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கும் அழைத்துச் சென்றதுடன், உயர்தர நட்சத்திர விடுதியிலும் தங்குவதற்கும் ஏற்பாடு செய்தார். அங்கே அவர்களுக்கு சுவையான விருந்து அளித்தும் அவர்களை மகிழ்வித்தார்.

    நட்சத்திர விடுதியில் தனது ஊழியர்களுக்காக சிறப்பு அனுமதி பெற்று அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்து மகிழவும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். இதுகுறித்து அவரிடம் பணியாற்று ஊழியர் ஒருவர் கூறுகையில், இது எங்களுக்கு மிகவும் மறக்க முடியாத அற்புதமான அனுபவமாகும். நாங்கள் அனைவரும் இப்போதுதான் முதன் முறையாக விமானத்தில் பறக்கிறோம். இந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

    குஜராத்தில் வைர வியாபாரி ஒருவர் தனது ஊழியர்களுக்கு அவர்களது பணியை பாராட்டி ஆண்டு தோறும் காரை பரிசாக அளிப்பதாக செய்திகள் வருவதுண்டு. நமக்கு அருகிலேயே இப்படி ஒரு அற்புதமான மனிதர் தனது ஊழியர்களுக்கு விமான பயணத்தை அளித்து மகிழ்ச்சி அளித்த சம்பவம் மதுரை மக்களிடையே மிகுந்த வர வேற்பை பெற்றுள்ளது.

    • விமானங்கள் ஆல் நிப்பான் ஏர்வேஸ்-க்கு சொந்தமானவை ஆகும்.
    • விமான விபத்துகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன.

    ஜப்பான் விமான நிலையத்தில் இரு விமானங்கள் உரசி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. திடீர் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தில் உரசி கொண்ட விமானம் ஆல் நிப்பான் ஏர்வேஸ்-க்கு சொந்தமானவை என்று தெரியவந்துள்ளது.

    ஆல் நிப்பான் ஏர்வேஸ்-க்கு சொந்தமான இரு விமானங்கள் ஒசகாவில் உள்ள இடாமி விமான நிலையத்தில் உரசி கொண்டுள்ளன. இந்த சம்பவம் காரணமாக இரு விமானங்களின் இறக்கை பகுதியில் கீறல்கள் ஏற்பட்டன. எனினும், இதில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இந்த ஆண்டு துவக்கம் முதலே ஜப்பானில் விமான விபத்துகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், சிறிய ரக விமானம் ஒன்று ஜனவரி 2-ம் தேதி விபத்தில் சிக்கிய சம்பவம் அரங்கேறியது.

    • மலேசியாவில் 9 அரச குடும்பங்கள் உள்ளன.
    • புதிய மன்னர் இப்ராஹிம் இஸ்கந்தருக்கு மலேசியாவை தவிர பிற இடங்களிலும் சொத்துக்கள் அதிகமாக உள்ளன.

    தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியா, கடந்த 1957-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது.

    அங்கு தேர்தல்கள் நடத்தப்பட்டு பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்.ஆனாலும் மலேசியாவில் இன்னும் மன்னர் அதிகாரம் நீடித்து வருகிறது.

    முக்கிய அரசியல் நியமனங்களை மேற்பார்வையிடுவது, இஸ்லாத்தின் அதிகாரப்பூர்வ தலைவராக இருப்பது, மலேசியா நாட்டின் ஆயுதப்படைகளின் தளபதி என பல்வேறு பொறுப்புகளில் மன்னர் இருக்கிறார்.

    நீதிமன்றங்கள், காவல் துறை, சட்டத்துறை ஆகியவற்றால் கொடுக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்வதற்கும் மன்னருக்கு அதிகாரம் இருக்கிறது.

    மலேசியாவில் 9 அரச குடும்பங்கள் உள்ளன.இவர்களில் ஒருவர் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மன்னராக தேர்ந்தெடுக்கப்படுவார்.

    இந்நிலையில் முன்னாள் மன்னரான பகாங் ஆட்சியாளர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத்ஷாவின் பதவிக்காலம் நேற்று நிறைவு பெற்றதையடுத்து நாட்டின் 17வது மன்னராக ஜோகூர் அரச குடும்பத்தைச் சேர்ந்த சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் பொறுப்பேற்றுக்கொண்டார்.

    கோலாலம்பூரில் உள்ள தேசிய அரண்மனையில் அவரது பதவியேற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.

    புதிய மன்னர் இப்ராஹிம் இஸ்கந்தருக்கு மலேசியாவை தவிர பிற இடங்களிலும் சொத்துக்கள் அதிகமாக உள்ளன. இவரிடம் 300 கார்கள் மற்றும் ஜெட் விமானங்கள் உள்ளன. இதில் ஒரு கார் ஜெர்மனி சர்வாதிகாரியான ஹிட்லர் பரிசளித்தது. தனியாக ராணுவம் வைத்துள்ளார்.இவரது குடும்பமும் சிங்கப்பூரில் நிலம் மற்றும் பாமாயில், ரியல் எஸ்டேட் மற்றும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் முதலீடுகளை கொண்டிருக்கிறது. இதன் மதிப்பு ரூ.47 ஆயிரம் கோடி ஆகும்.

    மன்னர் இப்ராஹிம் இஸ்கந்தர் கூறும்போது, நான் அரசாங்கத்தை ஆதரிப்பேன். ஆனால் அவர்கள் தவறாக ஏதாவது செய்கிறார்கள் என்று நினைத்தால் அது குறித்து எச்சரிப்பேன் என்றார்.

    • சுரங்க நகரமான இட்டா பேலா மீது விமானம் வானில் பறந்து கொண்டிருந்தது.
    • மற்றவர்கள் உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது.

    ஸா பாலோ:

    பிரேசிலின் அண்டை நாடான சாவ்பாலோ காம்பினாவில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று நேற்று புறப்பட்டது. பிரேசிலின் தென்கிழக்கு மினாஸ்ரைசுக்கு அந்த விமானம் வந்து கொண்டிருந்தது.

    பிரேசிலின் சுரங்க நகரமான இட்டா பேலா மீது விமானம் வானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரைவில் விழுந்து நொறுங்கியது. புல் மற்றும் மரங்களால் சூழப்பட்ட பகுதியில் அந்த விமானம் விழுந்தது.

    இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த விமானி உள்ளிட்ட 7 பேரும் பலியாகி விட்டனர். இது பற்றி அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இது வரை இறந்த 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்றவர்கள் உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது. உடைந்த விமானத்தின் பாகங்களும் சேகரிக்கபட்டு வருகிறது. விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    • ராணுவத்தில் பணியாற்றும் வாலிபர்கள் விமானத்தில் சொந்த ஊருக்கு அடிக்கடி வந்து செல்கின்றனர்.
    • ஊர்மக்கள் அனைவரும் பணத்தை சிறுக சிறுக சேமித்து விமானத்தில் பறக்க திட்டமிட்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பையை அடுத்த வி.கே.புரம் அருகே தாட்டான்பட்டி என்ற கிராமம் உள்ளது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தில் பெரும்பாலானோர் விவசாயத்திலும், பெண்கள் பீடி சுற்றும் தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ராணுவம், காவல்துறை உள்ளிட்ட அரசு துறைகளிலும் வாலிபர்கள் சேவை புரிந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இப்பகுதியை சேர்ந்த ராணுவத்தில் பணியாற்றும் வாலிபர்கள் விமானத்தில் சொந்த ஊருக்கு அடிக்கடி வந்து செல்கின்றனர். இதனால் தாட்டான்பட்டியில் வசிக்கும் பெண்களுக்கும் எப்படியாவது ஒரு முறையாவது விமானத்தில் நாமும் பறந்து செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டனர். ஆனால் அந்த ஆசை நீண்ட ஆண்டுகளாக கனவாகவே இருந்துள்ளது. அந்த கனவை நிறைவேற்றும் விதமாக ஊர்மக்கள் அனைவரும் பணத்தை சிறுக சிறுக சேமித்து விமானத்தில் பறக்க திட்டமிட்டனர்.

    அதன்படி கனவு நிறைவேறும் விதமாக பணத்தை சேமித்து வந்த கிராம மக்கள் நேற்று முன்தினம் இரவு புனித சுற்றுலாவாக விமானம் மூலமாக கோவா புறப்பட்டனர். தொடர்ந்து அங்குள்ள சவேரியாரை இன்று காலை பார்வையிட்டனர். இதற்காக அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 134 பேர் விமானத்தில் பறந்தனர். இதற்கான ஏற்பாடுகளை அருளகம் பங்கு தந்தை எட்வர்ட் ராயன் தலைமையில் அருள்பால்துரை, அருளானந்தம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    முன்னதாக அவர்கள் ஊரில் இருந்து புறப்பட்டபோது, அங்குள்ள புனித அருளானந்தர் ஆலயம் முன்பு அருளகம் பங்கு தந்தை எட்வர்ட் ராயன் தலைமையில் கிராம மக்கள் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் அனைவருக்கும் தனியாக அடையாள அட்டை, உடைமைகள் தொலைந்து விடாமல் இருக்க அனைவரது உடைகளிலும் சிவப்பு நிற துணி உள்ளிட்டவை அடையாளமாக வைத்து பல்வேறு திட்டமிடுதலுடன் சென்றனர்.

    இதுகுறித்து பங்கு தந்தை எட்வர்ட் ராயன் கூறுகையில், சிறு சிறு சேமிப்பு மூலமாக புனித பயணமாக சவேரியாரை தரிசனம் செய்ய உள்ளோம். எங்கள் கிராமத்தினர் நீண்ட ஆண்டுகளாக விமானத்தில் செல்ல வேண்டும் என கூறினர். அதனால் இந்த புனித சுற்றுலாவிற்கு விமானத்தில் சென்றுவிட்டு, ரெயிலில் ஊருக்கு திரும்ப உள்ளோம். சுமார் 10 ஆண்டுகளாக சிறு சிறு சேமிப்பு மூலமாக எங்கள் பணத்தில் செல்கிறோம். இதனால் எங்களது நீண்ட நாள் கனவு நிறைவேறி இருக்கிறது. இன்றும், நாளையும் என 2 நாட்கள் கோவாவில் தங்கி புனித சவேரியார் ஆலயத்தை சுற்றி பார்க்க உள்ளோம் என்றார்.

    • சிவில் விமான பாதுகாப்பு அமைப்பு ரூ.1.20 கோடி அபராதம்.
    • சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ரூ.30 லட்சமும் அபராதம்.

    மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் விமான ஓடுபாதையில் பயணிகள் உணவருந்திய விவகாரத்தில் இண்டியோ நிறுவனத்திற்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

    இதில், சிவில் விமான பாதுகாப்பு அமைப்பு ரூ.1.20 கோடியும், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ரூ.30 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    • கோவாவில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டு வந்தது.
    • விமானத்தில் இருந்து இறங்க படிக்கட்டு வைக்கப்பட்டதால் பயணிகள் அவசர அவசரமாக கீழே இறங்கினார்கள்.

    மும்பை:

    டெல்லியில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து செல்லும் சில விமானங்கள் தரை இறங்க முடியாததால் திருப்பி விடப்பட்டுள்ளன. விமானங்கள் புறப்படுவதில் பல மணி நேரம் தாமதமாகிறது.

    கோவாவில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டு வந்தது. டெல்லியில் பனி மூட்டம் அதிகமாக இருந்ததால் தரை இறங்க முடியவில்லை. இதனால் அந்த விமானம் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் விமானநிலையத்தில் தரை இறக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தில் இருந்து இறங்க படிக்கட்டு வைக்கப்பட்டதால் பயணிகள் அவசர அவசரமாக கீழே இறங்கினார்கள். உடனே அவர்கள் விமான ரன்வேயின் அருகில் விமானங்கள் நிறுத்தும் இடத்துக்கு சென்று அமர்ந்தனர்.

    உடனே குடும்பத்துடன் அவர்கள் உணவுகளை சாப்பிட ஆரம்பித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதை பார்த்ததும் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று பயணிகளை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் பயணிகள் நகராமல் தொடர்ந்து சாப்பிடுவதில் மும்முரமாக இருந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


    இந்த சம்பவத்துக்கு விமான நிறுவனம் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் மன்னிப்பு கேட்டுள்ளனர். இது தொடர்பாக அந்த நிறுவனம் டெல்லியில் மோசமான வானிலை காரணமாக விமானம் திருப்பி விடப்பட்டது. இதற்கு பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக சுமார் 12 மணி நேரம் விமான பயணிகள் தவித்தனர்.

    • டோயாமா விமான நிலையம் நோக்கி ஏ.என்.ஏ.-வின் போயிங் 737-800 விமானம் புறப்பட்டது.
    • அவசர அவசரமாக நியூ சிடோஸ் விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது.

    ஜப்பானை சேர்ந்த ஆல் நிப்பான் ஏர்வேஸ்-க்கு (ஏ.என்.ஏ.) சொந்தமான விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சப்போரோவின் நியூ சிடோஸ் விமான நிலையத்தில் இருந்து டோயாமா விமான நிலையம் நோக்கி ஏ.என்.ஏ.-வின் போயிங் 737-800 விமானம் புறப்பட்டது.

    பயணத்தை துவங்கிய சில நிமிடங்களில் இந்த விமானத்தின் காக்பிட் பகுதி கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விமானம் அவசர அவசரமாக நியூ சிடோஸ் விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது.

    இந்த விமானத்தில் மொத்தம் 59 பயணிகள், ஆறு பணியாளர்கள் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக பயணிகள் மற்றும் பணியாளர்கள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. விமான கண்ணாடியில் ஏற்பட்ட விரிசலால் விமானத்தை இயக்குவதில் எந்த சிரமமும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

    முன்னதாக அலாஸ்கா ஏர்லைன்ஸ்-க்கு சொந்தமான போயிங் 737-9 விமானம் ஒன்று புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அவசர அவசரமாக தரையிறங்கிய சம்பவம் அரங்கேறியது. இந்த விமானத்தின் கதவுகளில் ஒன்று நடுவழியில் திறந்ததே இதற்கு காரணம் ஆகும். இந்த சம்பவத்தை தொடர்ந்து விமானத்தின் கதவு தனியே பிரிந்து கீழே விழுந்தது குறிப்பிடத்தக்கது.

    ×