என் மலர்
2025 - ஒரு பார்வை

2025 REWIND: ஓடுபாதை முதல் நடுவானம் வரை.. இந்த ஆண்டு நிகழ்ந்த கோரமான விமான விபத்துகள்
- ஈகிள் விமானமும் மற்றும் ஒரு ராணுவ ஹெலிகாப்டரும் மோதிக்கொண்டன.
- உலக வரலாற்றிலேயே மிக மோசமான விபத்தாகக் கருதப்படுவது எது தெரியுமா?
2025-ம் ஆண்டு மோசமான விமான விபத்துகள் பதிவான ஆண்டாக அமைந்தது. தொழில்நுட்பக் கோளாறுகள், மோசமான வானிலை மற்றும் எதிர்பாராத மோதல்கள் எனப் பல காரணங்களால் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான உயிர்கள் பறிபோயின.
அகமதாபாத் விமான விபத்து
2025-ன் மிகப்பெரிய துயரம் இந்த ஆண்டின் உலகிலேயே அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய அகமதாபாத் விமான விபத்து ஆகும்.
ஜூன் 12, 2025 அன்று, ஏர் இந்தியா போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்டது.
புறப்பட்ட ஒரு சில நிமிடங்களிலேயே இயந்திரக் கோளாறு காரணமாக விமானம் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மருத்துவக் கல்லூரி மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் மீது மோதி தீப்பிடித்தது.
விமானத்தில் இருந்த 241 பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பலியாகினர். தரையில் இருந்த 19 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் இருந்து ஒருவர் மட்டும் அதியசாமாக உயிர் தப்பினார்.
அமெரிக்காவில் நடுவானில் மோதிக்கொண்ட விமானங்கள்
ஜனவரி 29, 2025 அன்று அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் இந்த நிகழ்ந்தது. பயணிகளை ஏற்றிச் சென்ற 'அமெரிக்கன் ஈகிள்' விமானமும், ஒரு ராணுவ ஹெலிகாப்டரும் பொடோமேக் ஆற்றின் மேலே பறக்கும்போது நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில் விமானத்தில் இருந்த 64 பேரும் ஹெலிகாப்டரில் இருந்த 3 பேரும் என மொத்தம் 67 பேர் உயிரிழந்தனர்.
ரஷியாவின் அங்காரா ஏர்லைன்ஸ் விபத்து
ஜூலை 24 அன்று ரஷியாவின் கிழக்கு மலைப் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது. மோசமான மூடுபனி காரணமாக அங்காரா ஏர்லைன்ஸ் விமானம் ஒரு குன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 42 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் என 48 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
தென் கொரியா ஓடுபாதை விபத்து
ஜனவரி 28 அன்று அன்று ஏர் புசான் விமானம் புறப்படுவதற்காக ஓடுபாதையில் வேகமாகச் சென்றபோது அதன் எஞ்சினில் திடீரென தீப்பிடித்தது.
விமானிகளின் துரித நடவடிக்கையால் 176 பயணிகள் அவசரகால கதவுகள் வழியாக வெளியேற்றப்பட்டனர். உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டாலும், 27 பயணிகள் படுகாயமடைந்தனர்.
சூடான் விபத்து
ஜனவரி 29 அன்று தெற்கு சூடானின் மேல் வான் பகுதியில் எண்ணெய் நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்ற விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியது.
இதில் 20 பேர் பலியாகினர். ஒரே ஒரு பயணி மட்டும் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.
கென்யா - மொம்பசா ஏர் சபாரி விபத்து
அக்டோபர் 28, கென்யாவின் சுற்றுலாப் பகுதியான மொம்பசாவில் சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது. இதில் 11 பேர் உயிரிழந்தனர்.
2025 விபத்துகள் சொல்வது என்ன?
2025-ம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் 94-க்கும் மேற்பட்ட குறிப்பிடத்தக்க வான்வழி விபத்துக்கள் பதிவாகியுள்ளன. இதில் பெரும்பாலானவை சிறிய ரக விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர் விபத்துகள் ஆகும்.
உலகளவில், முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது வணிக மற்றும் தனியார் விமான விபத்துக்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டின் விபத்துக்கள் அனைத்தும் விமானப் போக்குவரத்துத் துறையில் எஞ்சின் பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை மேலும் மேம்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றன.
2025-ல் இத்தனை விபத்துக்கள் நடந்தாலும், உலக வரலாற்றிலேயே மிக மோசமான விபத்தாகக் கருதப்படுவது மார்ச் 27, 1977-ல் ஸ்பெயினின் டெனெரிஃப் தீவில் நடந்ததுதான். இந்த விபத்தில் இரண்டு 'போயிங் 747' விமானங்கள் ஓடுபாதையிலேயே மோதிக்கொண்டதில் 583 பேர் பலியாகினர்.
அவிழும் MH370 மர்மம்:
மார்ச் 8, 2014 அன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகரான பெய்ஜிங்குக்கு 227 பயணிகளையும் 12 விமானப் பணியாளர்களையும் ஏற்றிக்கொண்டு 777 வடிவமைப்பு கொண்ட MH370 மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது.
புறப்பட்ட ஒரு மணி நேரத்துக்குப் பிறகு வியட்நாம் வான் பரப்பை நெருங்கிக் கொண்டிருந்தபோது திடீரென வேறு திசையில் திரும்பியது.
மீண்டும் மலேசிய வான் பரப்புக்குள் திரும்பிய விமானம் இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் மாயமாக மறைந்தது. எரிபொருள் தீரும்வரை பயணித்த விமானம் இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அந்த விமானத்திற்கு அதில் இருந்தவர்களுக்கும் என்ன ஆனது என்பது இதுநாள்வரை மர்மமாகவே உள்ளது.
கடந்த காலங்களில் 2 முறை மிகப்பெரிய அளவிலான தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் அவை பெரிய அளவில் பயனளிக்காமல் தோல்வியிலேயே முடிந்தன. இந்த சூழலில் மீண்டும் அந்த விமானத்தை தேடும் பணிகளை மலேசிய அரசு இந்த மாத தொடக்கத்தில் மீண்டும் தொடங்கி உள்ளது.






