search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Airplane"

    • ராணுவத்தில் பணியாற்றும் வாலிபர்கள் விமானத்தில் சொந்த ஊருக்கு அடிக்கடி வந்து செல்கின்றனர்.
    • ஊர்மக்கள் அனைவரும் பணத்தை சிறுக சிறுக சேமித்து விமானத்தில் பறக்க திட்டமிட்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பையை அடுத்த வி.கே.புரம் அருகே தாட்டான்பட்டி என்ற கிராமம் உள்ளது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தில் பெரும்பாலானோர் விவசாயத்திலும், பெண்கள் பீடி சுற்றும் தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ராணுவம், காவல்துறை உள்ளிட்ட அரசு துறைகளிலும் வாலிபர்கள் சேவை புரிந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இப்பகுதியை சேர்ந்த ராணுவத்தில் பணியாற்றும் வாலிபர்கள் விமானத்தில் சொந்த ஊருக்கு அடிக்கடி வந்து செல்கின்றனர். இதனால் தாட்டான்பட்டியில் வசிக்கும் பெண்களுக்கும் எப்படியாவது ஒரு முறையாவது விமானத்தில் நாமும் பறந்து செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டனர். ஆனால் அந்த ஆசை நீண்ட ஆண்டுகளாக கனவாகவே இருந்துள்ளது. அந்த கனவை நிறைவேற்றும் விதமாக ஊர்மக்கள் அனைவரும் பணத்தை சிறுக சிறுக சேமித்து விமானத்தில் பறக்க திட்டமிட்டனர்.

    அதன்படி கனவு நிறைவேறும் விதமாக பணத்தை சேமித்து வந்த கிராம மக்கள் நேற்று முன்தினம் இரவு புனித சுற்றுலாவாக விமானம் மூலமாக கோவா புறப்பட்டனர். தொடர்ந்து அங்குள்ள சவேரியாரை இன்று காலை பார்வையிட்டனர். இதற்காக அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 134 பேர் விமானத்தில் பறந்தனர். இதற்கான ஏற்பாடுகளை அருளகம் பங்கு தந்தை எட்வர்ட் ராயன் தலைமையில் அருள்பால்துரை, அருளானந்தம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    முன்னதாக அவர்கள் ஊரில் இருந்து புறப்பட்டபோது, அங்குள்ள புனித அருளானந்தர் ஆலயம் முன்பு அருளகம் பங்கு தந்தை எட்வர்ட் ராயன் தலைமையில் கிராம மக்கள் அனைவரும் கேக் வெட்டி கொண்டாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் அனைவருக்கும் தனியாக அடையாள அட்டை, உடைமைகள் தொலைந்து விடாமல் இருக்க அனைவரது உடைகளிலும் சிவப்பு நிற துணி உள்ளிட்டவை அடையாளமாக வைத்து பல்வேறு திட்டமிடுதலுடன் சென்றனர்.

    இதுகுறித்து பங்கு தந்தை எட்வர்ட் ராயன் கூறுகையில், சிறு சிறு சேமிப்பு மூலமாக புனித பயணமாக சவேரியாரை தரிசனம் செய்ய உள்ளோம். எங்கள் கிராமத்தினர் நீண்ட ஆண்டுகளாக விமானத்தில் செல்ல வேண்டும் என கூறினர். அதனால் இந்த புனித சுற்றுலாவிற்கு விமானத்தில் சென்றுவிட்டு, ரெயிலில் ஊருக்கு திரும்ப உள்ளோம். சுமார் 10 ஆண்டுகளாக சிறு சிறு சேமிப்பு மூலமாக எங்கள் பணத்தில் செல்கிறோம். இதனால் எங்களது நீண்ட நாள் கனவு நிறைவேறி இருக்கிறது. இன்றும், நாளையும் என 2 நாட்கள் கோவாவில் தங்கி புனித சவேரியார் ஆலயத்தை சுற்றி பார்க்க உள்ளோம் என்றார்.

    • சென்னையில் இருந்து விமானம் மூலம் அந்தமானுக்கு சிறப்பு சுற்றுலா திட்டமிட்டுள்ளது.
    • வருகிற 23-ந்தேதி புறப்படும் இந்த சுற்றுலா 6 நாட்களை கொண்டதாகும்.

    சென்னை:

    இந்திய ரெயில்வேயின் சுற்றுலாப் பிரிவான ஐ.ஆர்.சி.டிசி. பல விமான சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது சென்னையில் இருந்து விமானம் மூலம் அந்தமானுக்கு சிறப்பு சுற்றுலா திட்டமிட்டுள்ளது.

    வருகிற 23-ந்தேதி புறப்படும் இந்த சுற்றுலா 6 நாட்களை கொண்டதாகும். ஹேவ்லாக், நீல், போர்ட் பிளேர் ஆகிய இடங்களை சுற்றி பார்க்கவும் தங்கும் வசதி, உணவு, கப்பல் கட்டணம், விமான கட்டணம், உள்ளூர் போக்குவரத்து, பயண காப்பீடு அனைத்தையும் உள்ளடக்கிய கட்டணம் ஒருவருக்கு ரூ.51,500 ஆகும். இந்த தகவலை சுற்றுலா மேலாளர் மாலதி ரத்தினம் தெரிவித்துள்ளார்.

    • பயணிகள் விமான நிறுவன கவுண்டரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மதியம் ஒரு மணிக்கு விமானம் புறப்பட்டு செல்லும் என்று அறிவித்துள்ளனர்.

    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் இன்று அதிகாலை 1.40 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. 168 பயணிகள் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, விமானத்தில் ஏற தயாராக இருந்தனர். விமானி பரிசோதித்தபோது விமானத்தில் எந்திர கோளாறு இருப்பதை கண்டுபிடித்தார்.

    இதைத்தொடர்ந்து விமானம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் விமானம் புறப்பட தொடர்ந்து தாமதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த பயணிகள் விமான நிறுவன கவுண்டரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்தனர்.

    இன்று மதியம் ஒரு மணிக்கு விமானம் புறப்பட்டு செல்லும் என்று அறிவித்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில் சுமார் 12 மணி நேரத்திற்கு மேலாக பயணிகள் தவித்தபடி இருந்தனர்.

    • பள்ளி மாணவர்கள் விமானத்தை நேரில் பார்க்க வேண்டும் என ஆசிரியைகளிடம் தெரிவித்துள்ளனர்.
    • நாட்டுப்புற கலைகள், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு அறிவுசார் ஓவியங்களும் தத்ரூபமாக வரையப்பட்டு உள்ளன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி ஊராட்சியில் அரசு தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 130 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி தலைமை ஆசிரியையாக சித்ரா மற்றும் ஆசிரியைகளாக சிவசங்கரி, லதா, ரேவதி ஆகிய 4 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பள்ளியில் தஞ்சை, பிள்ளையார்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    விமானம்

    இந்த நிலையில் இந்த பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் விமானத்தை நேரில் பார்க்க வேண்டும் என்ற விருப்பத்தை ஆசிரியைகளிடம் தெரிவித்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகள் செய்தனர். ஆனால் அவர்களுக்கு விமானத்தை பார்க்க அனுமதி கிடைக்கவில்லை.

    இதனால் மாணவர்கள் ஏமாற்றம் அடைய கூடாது என முடிவெடுத்த தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகள் ஒரு வித்தியாசமான முடிவை எடுத்தனர்.

    இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமார், பள்ளி கல்வித்துறை, பள்ளி மேலாண்மை குழு, மாணவர்களின் பெற்றோர் என அனைத்து தரப்பினரும் உறுதுணையாக இருந்தனர். மேலும் முன்னாள் முதன்மை கல்வி அதிகாரி சிவக்குமார் மற்றும் உட்கட்டமைப்புக்கு அரசு சார்பில் நிதி அளிக்கபட்டது. தற்போதைய முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் பள்ளியின் வளர்ச்சிக்கு பக்க பலமாக உள்ளார். இதையடுத்து பள்ளி சுவரில் விமானம், ரெயில், கப்பல், ஆம்னி பஸ் போன்றவற்றின் வரைப்படத்தை ஓவியர் நரசிம்மன் மூலம் தத்ரூபமாக வரைய செய்தனர். இதேப்போல் விண்ணில் ஏவப்பட்ட செயற்கைகோள்கள், பாரம்பரிய விளையாட்டுக்கள், தண்ணீர் சேமிப்பு, நாட்டுப்புற கலைகள், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு அறிவுசார் ஓவியங்களும் தத்ரூபமாக வரையப்பட்டு உள்ளன.

    ஆசிரியைகளின் இந்த அசத்தல் செயலால் மாணவ-மாணவிகள் சுவரில் வரையப்பட்டுள்ள விமானம், ரெயில், கப்பல் போன்றவற்றில் ஏறுவது போல பள்ளி உள்ளே செல்கிறார்கள். பின்னர் அவற்றில் இருந்து இறங்குவது போல பள்ளியில் இருந்து வெளியே செல்கின்றனர். இதேப்போல் செயற்கை க்கோள், விவசாயம் உள்பட பல்வேறு ஓவியங்களை பார்த்து அவற்றின் முக்கியத்துவத்தை உணர்கின்றனர்.

    இது தவிர மகாத்மா காந்தி, அம்பேத்கர் உள்பட பல்வேறு தேச தலைவர்களின் ஒவியம், அவர்கள் போதித்த வாசகம் ஆகியவையும் வரையப்பட்டுள்ளதால் மாணவர்களின் தேசப்பக்தி வளர்ச்சி அடைகிறது. மேலும் பள்ளி முகப்பு தோற்றத்தில் மகிழ்ச்சியான பிரபஞ்சத்திற்கு வரவேற்கிறோம் என்றும், ஒவ்வொரு வகுப்பறைக்கும் மகிழ்ச்சி வகுப்பறை, நம்பிக்கை, தேனீக்கள், நேர்மை வகுப்பறை என ஓவியமாக எழுதி பெயரும் சூட்டப்பட்டுள்ளது. தனியார் பள்ளியை மிஞ்சியது

    இந்த தத்ரூப ஓவியம் மூலம் படிப்போடு பொது அறிவையும் மாணவர்கள் வளர்த்து கொள்கின்றனர். ஆசிரியர்களின் இந்த செயலால் பிள்ளையார்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளியானது தனியார் பள்ளிகளை விஞ்சும் வகையில் உள்ளது என்றால் அது மிகையல்ல. மேலும் மாணவர்களின் விருப்பத்தை விதியாசமான முறையில் தத்ரூபமான ஓவியங்களால் நிறைவேற்றிய தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகளை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    • விமானத்தில் மொத்தம் 140 பயணிகள் இருந்தனர்.
    • விமானம் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு அனைத்தையும் சீரானதும் டெல்லிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டது.

    ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் இருந்து ஏர்இந்தியா விமானம் டெல்லிக்கு புறப்பட்டது. விமானம் புறப்படும் போது பயணி ஒருவரின் செல்போன் திடீரென வெடித்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தில் புகை வந்ததை தொடர்ந்து விமானி விமானத்தை அவசரமாக தரை இறக்கினார்.

    அந்த விமானத்தில் மொத்தம் 140 பயணிகள் இருந்தனர். அவர்கள் அனைவரும் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் விமானம் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு அனைத்தையும் சீரானதும் டெல்லிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டது.

    அவசரமாக தரை இறக்கப்பட்ட அந்த விமானம் 1 மணி நேரத்துக்குள் உதய்ப்பூரில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றது. கடந்த ஜூன் 21-ந் தேதி டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் டோராடூனுக்கு புறப்பட்ட உடனேயே இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரை இறக்கப்பட்டது. அதை சரி செய்த பிறகு விமானம் புறப்பட்டு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    • விபத்தில் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை.
    • விமானத்தின் மீது மோதிய பறவை ஆண்டியன் காண்டன் வகை ராட்சத பறவையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    லாஸ்ரியோஸ்:

    ஈக்வாட்டார் நாட்டின் லாஸ் ரியோஸ் மாகாணத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென அந்த விமானத்தின் மீது ராட்சத பறவை ஒன்று மோதியது.

    பறவையின் காலும், இறக்கையும் மோதியதில் விமானத்தின் காக்பிட் அறை சேதமடைந்தது. இதில் கண்ணாடிகள் சிதறி விழுந்ததில் விமானி படுகாயம் அடைந்தார். அவரது முகத்தில் ரத்தம் கொட்டியது. உடனே அவர் விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.

    இதையடுத்து விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது. விமானம் தரை இறங்கியதும், விமானி ரத்தம் சொட்ட, சொட்ட விமானத்தில் இருந்து வெளியே வந்தார். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை.

    விமானத்தின் மீது மோதிய பறவை ஆண்டியன் காண்டன் வகை ராட்சத பறவையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுபற்றி விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் விமானி அதிர்ஷ்டசாலி என்றும், அதனால் தான் அவர் உயிருடன் மீண்டார் எனவும் குறிப்பிட்டு உள்ளார்.

    தற்போது விமானத்தின் காக்பிட் பகுதியில் பறவை மோதி நிற்கும் காட்சி சமூக வலைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.

    • வெடி குண்டு நிபுணர்கள் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் விமானம் முழுவதும் சோதனை நடத்தினார்கள்.
    • போலீசார் வெடிகுண்டு இருப்பதாக சத்தம் போட்ட பயணியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    கொல்கத்தா:

    கத்தார் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் இன்று அதிகாலை 3.29 மணிக்கு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் 541 பயணிகள் இருந்தனர்.

    அப்போது ஒரு பயணி திடீரென எழுந்து விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக கூச்சலிட்டார். இதனால் மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்,

    இது பற்றி உடனடியாக மத்திய தொழில்பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டனர். பின்னர் வெடி குண்டு நிபுணர்கள் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் விமானம் முழுவதும் சோதனை நடத்தினார்கள். ஆனால் இந்த சோதனையில் வெடி குண்டு எதுவும் சிக்கவில்லை. அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதை அறிந்த பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    இதையடுத்து போலீசார் வெடிகுண்டு இருப்பதாக சத்தம் போட்ட பயணியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் பக்கத்தில் இருந்த ஒருவர் தன்னிடம் இதுபற்றி கூறியதாக தெரிவித்தார்.

    உடனே போலீசார் அவரது தந்தையை விமானநிலையத்துக்கு வரவழைத்து விசாரித்த போது அந்த பயணிக்கு சற்று மனநலம் பாதிக்கப்ட்டு இருந்தது தெரியவந்தது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததாக தந்தை தெரிவித்தார்.

    அந்த பயணி செய்த களேபாரத்தால் லண்டன் விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    • தங்கம் உள்ளிட்ட பொருட்களை சட்ட விரோதமாக கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
    • வாலிபர் நசீமிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, லண்டன், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், பெங்களூரு, சென்னை, மும்பை, டெல்லி, விஜயவாடா உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய விமானங்களில் சிலர் தங்கம் உள்ளிட்ட பொருட்களை சட்ட விரோதமாக கடத்தி வரும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய விமானங்களில் வரும் பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் துபாயில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக மதுரை விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து துபாய் விமானத்தில் வந்த பயணிகளை சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர் தீவிர சோதனை நடத்தினர்.

    அப்போது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த நசீம் என்ற பயணியின் பையை சோதனை செய்தனர். அப்போது அதில் பேஸ்ட் வடிவில் ஒரு கிலோ 565 கிராம் தங்கம் இருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.96 லட்சத்து 18 ஆயிரம் ஆகும். அதனை கைப்பற்றிய சுங்க இலாகா அதிகாரிகள், அதனை கொண்டு வந்த நசீமிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் சட்ட விரோதமாக தங்கத்தை கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வாலிபர் நசீமிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அசோக்கின் முழு முயற்சியால் அவர் சொந்தமாக விமானத்தை தயாரித்து முடித்தார்.
    • ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் அவர் சொந்த விமானத்தில் சுற்றுலா சென்றார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ. தாமராக்ஷன். இவரது மகன் அசோக், மெக்கானிக்கல் என்ஜினீயர். இவரது மனைவி அபிலாஷா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    அசோக் படித்து முடித்ததும் இங்கிலாந்தில் வேலைக்கு சேர்ந்தார். அங்கேயே குடும்பத்துடன் தங்கி இருந்தார். அப்போது விமானிக்கான பயிற்சி எடுத்து கொண்டார். பின்னர் பிரிட்டிஷ் சிவில் ஏவியேஷன் நிறுவனத்தில் விமானம் ஓட்டும் லைசென்ஸ் பெற்றார்.

    அதன்பின்பு அசோக்குக்கு சொந்தமாக விமானம் தயாரிக்க ஆசை ஏற்பட்டது. கொரோனா லாக்-டவுன் காலத்தில் விமானம் தயாரிக்கும் ஆசையை நிறைவேற்ற முடிவு செய்தார்.

    இதற்காக பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களின் கட்டுரைகளை படித்து விமானம் தயாரிப்பு பற்றி முழுமையாக தெரிந்து கொண்டார். தொடர்ந்து அதனை தயாரிக்கும் பணியை தொடங்கினார்.

    அசோக்கின் முழு முயற்சியால் அவர் சொந்தமாக விமானத்தை தயாரித்து முடித்தார். இதற்கு ஒரு கோடியே 26 லட்சம் செலவானது. விமான தயாரிப்பு முடிந்ததும் அதனை முறையான அனுமதி பெற்று ஓட்டி பார்த்தார். அதிலும் வெற்றி கிடைக்க அந்த விமானத்தில் வெளிநாடுகளுக்கு செல்ல தேவையான அனைத்து நடைமுறைகளையும் முடித்தார்.

    இதையடுத்து அந்த விமானத்திற்கு தனது மகள் தியாவின் பெயரை சூட்டினார். பின்னர் அசோக் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் ஓய்வு நாட்களில் உலகம் சுற்ற தொடங்கினார். சொந்த காரில் சுற்றுலா செல்வது போல சொந்த விமானத்தில் வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் பறக்க தொடங்கினார்.

    ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் அவர் சொந்த விமானத்தில் சுற்றுலா சென்றார். இதனை அவர் மகிழ்ச்சியுடன் சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டார்.

    பெரும் தொழில் அதிபர்கள் மட்டுமே சொந்தமாக விமானம் வைத்துள்ள நிலையில் கேரள முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரின் மகன் சொந்தமாக அவரே விமானம் தயாரித்து அதில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். 

    • பயணிகள் விமானத்திலிருந்து இறங்குவதற்கு முற்பட்டபோது விமானத்தின் கதவு திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.
    • உடனடியாக தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    திருச்சி:

    திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு 10.10 மணிக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா விமானம் 158 பயணிகளுடன் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது. அப்போது பயணிகள் விமானத்திலிருந்து இறங்குவதற்கு முற்பட்டபோது விமானத்தின் கதவு திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் 30 நிமிடம் பயணிகள் விமானத்திற்கு உள்ளேயே தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். பின்னர் உடனடியாக தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு விமானத்தின் கதவை திறந்தனர்.

    இதையடுத்து நள்ளிரவு சுமார் 11.30 மணியளவில் விமானத்தின் கதவு திறக்கப்பட்டது. இதனால் நிம்மதி பெருமூச்சுவிட்ட பயணிகள் கீழே இறங்கி புறப்பட்டு சென்றனர். மீண்டும் 178 பயணிகளுடன் அந்த விமானம் கோலாலம்பூருக்கு இரவு 10.30 மணிக்கு பதிலாக நள்ளிரவு 1.30 மணிக்கு புறப்பட்டு சென்றது.

    • கொரோனா தொற்று குறைந்து வருகிறது.
    • முககவசம் அணிவது நல்லது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    புதுடெல்லி :

    இந்தியாவில் விமான பயணங்களின்போது பயணிகள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இதுவரை நடைமுறையில் இருந்து வந்தது.

    ஆனால் அந்தக் கட்டுப்பாடு இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இனி விமான பயணங்களில் பயணிகள் முககவசம் அணிவது கட்டாயம் கிடையாது. இதையொட்டிய தகவலை விமான நிறுவனங்களுக்கு சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சகம் அனுப்பி உள்ளது.

    கொரோனா வைரஸ் பெருந்தொற்று மேலாண்மை தொடர்பான அரசின் கொள்கைக்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் தருணத்திலும், முககவசம் அணிவது நல்லது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    ×