search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளிக்கல்வித்துறை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 26-4-2024 அன்று இந்த கல்வி ஆண்டிற்கான கடைசி வேலை நாளாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி நடைபெறுவதால் 1 முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கான இறுதி தேர்வு முன்கூட்டியே நடத்தப்படுகிறது.

    தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு ஏப்ரல் 2-ந்தேதி தொடங்கி 12-ந்தேதி வரை நடத்தப்படும். 13-ந்தேதி முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் தெரிவித்துள்ளன.

    மேலும் ஏப்ரல் 23-ந் தேதி முதல் 26-ந்தேதி வரையில் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தல், தேர்வு முடிவுகள் வெளியிடுதல் மற்றும் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். 26-4-2024 அன்று இந்த கல்வி ஆண்டிற்கான கடைசி வேலை நாளாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கல்வித்துறை இயக்குனர்கள் அறிவொளி மற்றும் கண்ணப்பன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கான பொதுத்தேர்வு வருகிற 26-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் 8-ந்தேதி வரை நடக்க இருக்கிறது.
    • விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்றதும், மதிப்பெண்களை ஆன்லைன் வாயிலாக பதிவேற்றும் பணிகள் தொடங்கி நடைபெறும்.

    சென்னை:

    பிளஸ்-2, பிளஸ்-1 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு 22-ந்தேதியுடனும், பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு 25-ந்தேதியுடனும் தேர்வு நிறைவு பெற உள்ளது. அதனைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கான பொதுத்தேர்வு வருகிற 26-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஏப்ரல்) 8-ந்தேதி வரை நடக்க இருக்கிறது.

    இந்த நிலையில் பொதுத் தேர்வு நிறைவு பெற்றதும், மாணவ-மாணவிகள் எழுதிய விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தொடங்கப்படும். அந்த வகையில் விடைத்தாள் திருத்தும் பணிகள் எப்போது தொடங்கப்படும்? என்ற தகவலை பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

    அதன்படி, பிளஸ்-2 வகுப்புக்கு அடுத்த மாதம் 1-ந்தேதியில் இருந்து 13-ந்தேதி வரையிலும், பிளஸ்-1 வகுப்புக்கு அடுத்த மாதம் 6-ந்தேதியில் இருந்து 25-ந்தேதி வரையிலும் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கு அடுத்த மாதம் 12-ந்தேதி ஆரம்பித்து 22-ந்தேதி வரையிலும் நடைபெற உள்ளது.

    விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்றதும், மதிப்பெண்களை ஆன்லைன் வாயிலாக பதிவேற்றும் பணிகள் தொடங்கி நடைபெறும். ஏற்கனவே பொதுத் தேர்வு அட்டவணை வெளியிட்ட நேரத்தில், பிளஸ்-2 வகுப்புக்கு மே மாதம் 6-ந்தேதியும், எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கு மே 10-ந்தேதியும், பிளஸ்-1 வகுப்புக்கு மே 14-ந்தேதியும் பொதுத்தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பொதுத்தேர்வு முடிவை வெளியிட பள்ளிக்கல்வித் துறை தீவிரமாக பணிகளில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சேலம் மற்றும் மதுரையில் அரசு பள்ளிகளில் சேர அதிகம் பேர் ஆர்வம் காட்டினார்கள்.
    • சென்னையை பொருத்தவரை 13,135 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் மாணவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்காக பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவர் சேர்க்கை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த 1-ந்தேதி தொடங்கி வைத்தார். அதன்மூலம் கடந்த 1-ந்தேதி முதல் அரசு பள்ளிகளில் 2024-2025-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்காக பள்ளிகளை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை மையமாக வைத்து இந்த பிரசார இயக்கம் நடத்தப்படுகிறது.

    இதன்மூலம் தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களில் மட்டும் 3.31 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேர்ந்துள்ளனர். சேலம் மற்றும் மதுரையில் அரசு பள்ளிகளில் சேர அதிகம் பேர் ஆர்வம் காட்டினார்கள். இதில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் மட்டும் அரசு பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 19,242 மாணவர்கள் சேர்ந்து சாதனை படைத்துள்ளனர்.

    இதையடுத்து மதுரையில் 18,127 மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். திண்டுக்கல்லில் 17,036 மாணவர்களும், திருவள்ளூரில் 15,207 மாணவர்களும், திருவண்ணாமலையில் 13,679 மாணவர்களும், திருப்பூரில் 13,204 மாணவர்களும் அரசு பள்ளிக்கூடங்களில் சேர்ந்துள்ளனர்.

    சென்னையை பொருத்தவரை 13,135 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். சென்னை மாதவரத்தில் 1,568 மாணவர்களும், சிந்தாதிரிப்பேட்டையில் 1,058 மாணவர்களும், ஆலந்தூரில் 1,220 மாணவர்களும், ராயபுரத்தில் 1,298 மாணவர்களும் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

    • அரசு பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படுவதை பொதுமக்கள் அனைவரும் அறியும் வகையில் பேனர்கள், துண்டு பிரசுரங்கள் மூலம் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
    • அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள், நலத்திட்டங்கள், காலை சிற்றுண்டி வழங்குவது குறித்து எடுத்துக்கூறி விழிப்புணர்வு பேரணி நடத்திட வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் உள்ள அரசு, தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் மற்றும் நான் முதல்வன் திட்டங்களுடன் தற்காப்பு கலைப் பயிற்சி, கல்வி சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    மாணவர்களை அரசு பள்ளிகளை நோக்கி ஈர்க்கும் வகையில் 2024-2025-ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை மார்ச் 1-ந்தேதி முதல் தொடங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

    5 வயது பூர்த்தி அடைந்த மற்றும் பள்ளி குழந்தைகள் அனைவரையும் அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு இயக்குனர்கள் அறிவொளி மற்றும் கண்ணப்பன் ஆகியோர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

    ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையில் கூட்டங்கள் நடத்தி அதில் உள்ளூர் பிரமுகர்களை பங்கு பெறச்செய்து மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    அரசு பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படுவதை பொதுமக்கள் அனைவரும் அறியும் வகையில் பேனர்கள், துண்டு பிரசுரங்கள் மூலம் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள், நலத்திட்டங்கள், காலை சிற்றுண்டி வழங்குவது குறித்து எடுத்துக்கூறி விழிப்புணர்வு பேரணி நடத்திட வேண்டும்.

    மேலும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கிடைக்கும் முன்னுரிமைகள் குறித்து பெற்றோர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்து கூறி மாணவர் சேர்க்கையினை அதிகரிக்க வேண்டும்.

    அங்கன்வாடிகளில் படிக்கும் குழந்தைகளில் 5 வயது உடையவர்களை கண்டறிந்து அவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும்.

    வீடு தோறும் நேரடியாக சென்று சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும். பள்ளியை சுற்றியுள்ள குடியிருப்புகளில் 5 வயது உள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களை உடனடியாக அரசு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    வருகிற கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அலுவலர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் முழு முயற்சியோடு பணியாற்றிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    • வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான இலக்கை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • ஹால் டிக்கெட் மறந்துவிட்டு பதற்றம் அடைய கூடாது என்று அதை தேர்வு எழுதும் போது மாணவர்களுக்கு கொடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஷிவ் நாடார் பவுண்டேஷன் இணைந்து, 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உண்டு உறைவிட பள்ளி அமைத்து பராமரிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு கையெழுத்தானது.

    தொடர்ந்து, மணற்கேணி இணையம் இனி கணினியிலும் காணும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஷிவ் நாடார் அறக்கட்டளை சார்பில் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு ஷிவ் நாடார் அறக்கட்டளையுடன் இணைந்து ஒரு வருடத்திற்கு 6ம் வகுப்பில் சேரும் 100 மாணவர்களுக்கு உலக தரம் வாய்ந்த கல்வி அளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    மணற்கேணி செயலியார் வேண்டுமானாலும் பயன்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. 2 லட்சம் அளவில் வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


    அதேபோல், 6-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை ஒரு கான்செப்ட் எப்படி வந்துள்ளது என்பது போல் அந்த வீடியோக்கள் இருக்கும். தனியார் பள்ளி கொரோனா காலத்தில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கல்வியை கொண்டு சேர்த்தார்கள். அதை அரசு பள்ளி மாணவர்களுக்கு இப்போது கொண்டு சேர்த்து வருகிறது.

    வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான இலக்கை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஒன்றரை லட்சம் கோடி தி.மு.க. ஆட்சி தொடங்கியதில் இருந்து பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற வரலாற்றிலேயே இந்த ஆண்டு தான் 44 ஆயிரம் கோடி பள்ளி கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    கோடை காலம் தொடங்கியதால் பள்ளிகளில் பந்தல் அமைப்பது, குடிநீர் வைப்பது உள்ளிட்ட கோடைகால தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும். பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளும் ஒவ்வொரு ஆண்டும் செய்வது போல் இந்த ஆண்டும் தயாராக உள்ளது.

    ஹால் டிக்கெட் மறந்துவிட்டு பதற்றம் அடைய கூடாது என்று அதை தேர்வு எழுதும் போது மாணவர்களுக்கு கொடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களும் தேர்வில் ஒவ்வொரு முறையும், செய்வது போல் இந்த ஆண்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், நிதி நிலைமை சீர் அடையும் போது அவர்களின் தேவைகள் நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2023-24-ம் கல்வியாண்டில் கண்டறியப்பட்ட 8 ஆயிரத்து 643 எண்ணிக்கையிலான இடங்களில், 1000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப ஏற்கனவே அனுமதி பெறப்பட்டது.
    • அதிகமாக காலியாக உள்ள மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் எண்ணிக்கையுடன் பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்ய வேண்டும்.

    சென்னை:

    பள்ளிக்கல்வித் துறையில் தொடக்கக்கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நேரடி நியமனம் மூலம் நிரப்ப வேண்டிய இடைநிலை ஆசிரியர் விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தெரிவிக்கப்பட்டது.

    அதன்படி, தொடக்கக் கல்வி இயக்குனரின் கருத்துரு, அரசின் விரிவான பரிசீலனைக்கு பிறகு 2023-24-ம் கல்வியாண்டில் கண்டறியப்பட்ட 8 ஆயிரத்து 643 எண்ணிக்கையிலான இடங்களில், 1000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப ஏற்கனவே அனுமதி பெறப்பட்டது.

    இந்த நிலையில் அந்த பணியிடங்களுடன் கூடுதலாக 500 இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பிட தொடக்கக் கல்வி இயக்குனருக்கு அனுமதி அளித்து அரசு ஆணையிட்டு இருப்பதாக பள்ளிக்கல்வித் துறை செயலாளர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளார்.

    மேலும் அந்த அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பால் அனுமதிக்கப்பட்ட அளவைவிட உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை, அதிகமாக காலியாக உள்ள மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் எண்ணிக்கையுடன் பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்ய வேண்டும்.

    தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள 1,500 இடைநிலை ஆசிரியர்களில் தேர்வு செய்யப்படுபவர்களை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகமாக காலியாக உள்ள மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும். அவ்வாறு முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யும்போதே அவர்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அந்த மாவட்டங்களில் பணி புரிய வேண்டும் என்ற நிபந்தனையை நியமன ஆணையில் குறிப்பிட்டு நியமிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கல்லூரி சான்றிதழ்களை இழந்த 4 மாவட்ட மாணவ, மாணிகளுக்கு கட்டணமின்றி நகல்கள் பெற ஏற்பாடு.
    • உரிய விண்ணப்பத்தை சமர்ப்பித்து கட்டணமின்றி சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.

    தென்மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழை பாதிப்பில் கல்லூரி சான்றிதழ்களை இழந்த 4 மாவட்ட மாணவ, மாணிகளுக்கு கட்டணமின்றி நகல்கள் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நகல்களைப் பெற உயர்கல்வித் துறை உருவாக்கிய இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.

    அதன்படி, தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி மாவட்ட மாணவ, மாணவிகள் www.mycertificates.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளின் சான்றிதழ் நகல் கட்டணமின்றி வழங்கப்படும்.

    சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவிகள் தாங்கள் படித்து வரும் பள்ளிகளில் உரிய விண்ணப்பத்தை சமர்ப்பித்து கட்டணமின்றி சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.


    • சட்ட அலுவலருக்கு உதவியாக சட்ட வரைவு நுட்பம் தெரிந்த 4 பேர் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட உள்ளனர்.
    • ஒரு பள்ளியின் வளர்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தினுடைய பங்கீடு முக்கியமானது.

    சென்னை:

    பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாக அரங்கில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். இதில் பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் குமரகுருபரன், தொடக்கக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கு புதிதாக 14 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்துகளை தெரிவித்தார்.

    மேலும், பள்ளிக்கல்வித் துறை சார்ந்த வழக்குகளை கையாள 4 சட்ட வல்லுனர்கள் நியமனம் செய்வது உள்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசும்போது கூறியதாவது:-

    பள்ளிக்கல்வித் துறையில் நிலுவையில் உள்ள வழக்குகளை கையாளுவதற்கு பல்வேறு கட்டங்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கிறது. இதற்காக நம்மிடம் ஒரே ஒரு சட்ட அலுவலர் மட்டுமே இருக்கிறார்.அந்த சட்ட அலுவலருக்கு உதவியாக சட்ட வரைவு நுட்பம் தெரிந்த 4 பேர் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் இருந்து ஊதியம் வழங்க அனுமதி வழங்கப்படுகிறது.

    மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பொதுக்குழு 5 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டப்படுகிறது. ஒரு பள்ளியின் வளர்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தினுடைய பங்கீடு முக்கியமானது.

    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்காக வினா-வங்கிகள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் வழங்கப்பட்டது. கொரோனா தொற்றுக்கு பிறகு அது தயார் செய்யப்படாமல் இருந்தது. வருகிற ஜனவரி மாதத்தில் இருந்து மீண்டும் வினா-வங்கி புத்தகங்கள் வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மயிலாடுதுறை, நாகை மாவட்டத்தில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் விடுமுறை பற்றி முடிவெடுக்கலாம் என்ற உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • மாணவ-மாணவிகள், பெற்றோர் குழப்பத்துக்குள்ளானார்கள்.

    சென்னை:

    மழை காலங்களின்போது, பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்த முடிவை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் எடுக்கும் நடைமுறை இருந்து வருகிறது. அந்தவகையில் வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தலின் பேரில், எந்தெந்த மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது? என்ற முன்னெச்சரிக்கையின்படி, முந்தைய நாளோ அல்லது மழை பெய்யக்கூடிய நாளில் காலையிலோ விடுமுறை அளிக்கப்படுகிறது.

    அவ்வாறு விடுமுறை விடப்படும் நாட்களை ஈடுசெய்யும் வகையில் கல்வித்துறை சனிக்கிழமைகளில் வகுப்புகளை நடத்தி மாணவ-மாணவிகளுக்கான கற்பித்தல் பணிகளை மேற்கொள்கின்றன. இந்த நிலையில் சில மாவட்டங்களில் மழை காலங்களில் விடுமுறை விடுவதில் சில குழப்பங்கள் ஏற்படுகிறது. சமீபத்தில் மயிலாடுதுறை, நாகை மாவட்டத்தில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் விடுமுறை பற்றி முடிவெடுக்கலாம் என்ற உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் மாணவ-மாணவிகள், பெற்றோர் குழப்பத்துக்குள்ளானார்கள்.

    நேற்று கூட கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்துக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னையையொட்டிய சில பகுதிகளும் வருகின்றன. இதனால் அந்த பகுதிகளில் உள்ளவர்களுக்கு விடுமுறையில் குழப்பம் ஏற்பட்டது. இந்த குழப்பங்களுக்கெல்லாம் விரைவில் தீர்வு காணும் வகையில் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க இருப்பதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • சமீபத்தில் நடந்து முடிந்த காலாண்டு தேர்வும் இதேபோல், பொது வினாத்தாள் நடைமுறையே பின்பற்றப்பட்டது.
    • பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு தொடங்குவதற்குள் அனைத்து பாடங்களையும் நடத்தி முடிக்கவேண்டும்.

    சென்னை:

    6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு, அரையாண்டு உள்ளிட்ட தேர்வுகளுக்கு பொது வினாத்தாள் நடைமுறை கொண்டு வரப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த காலாண்டு தேர்வும் இதேபோல், பொது வினாத்தாள் நடைமுறையே பின்பற்றப்பட்டது.

    அதன்படி, 6 முதல் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு அடுத்த மாதம் (டிசம்பர்) 11-ந்தேதி முதல் 22-ந்தேதி வரையிலும், பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு அடுத்த மாதம் 7-ந்தேதி முதல் 22-ந்தேதி வரையிலும் நடைபெற உள்ளது.

    தேர்வுக்கு முந்தைய நாளில் அந்தந்த பாடங்களுக்கான வினாத்தாளை 'எமிஸ்' என்ற தளத்தில் இருந்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும், வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் 14417 என்ற இலவச எண்ணுக்கு தொடர்பு கொண்டு அதுபற்றி பதிவு செய்யவேண்டும் என்றும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    அரையாண்டு தேர்வுகள் முடிந்து, டிசம்பர் மாதம் 23-ந்தேதி முதல் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் 1-ந்தேதி வரை தொடர் விடுமுறை விடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு தொடங்குவதற்குள் அனைத்து பாடங்களையும் நடத்தி முடிக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • திருவாரூரில் 3 அரசு பள்ளிகள் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டது.
    • தில்லைவிளாகம் அரசு பள்ளிக்கு கேடயம் வழங்கப்பட்டது.

    திருவாரூர்:-

    திருவாரூர் மாவட்டத்தில் 3 அரசு பள்ளிகள் சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு பள்ளிக்கல்வித்துறை சார்பில் கேடயம் வழங்கப்பட்டது.

    இதில் தில்லை விளாகம் கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு கேடயம் வழங்கப்பட்டுள்ளது.

    கேடயத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

    இந்த பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகள், காற்றோட்டமான வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    பெண் குழந்தைகளுக்கு கராத்தே பயிற்சி வழங்கப்படுகிறது.

    இந்த நிலையில் இந்த பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு ஊராட்சி மன்ற தலைவர் காசிநாதன் மற்றும் கிராம மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடப்பு கல்வியாண்டில் 2023 அக்டோபர் மாதம் முதல் 6 ஆயிரத்து 29 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இந்த மொழி ஆய்வகத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
    • உயர் தொழில்நுட்ப ஆய்வகத்துக்கு அழைத்து செல்லப்பட்டு மொழி ஆய்வகத்திட்டத்தில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.

    சென்னை:

    6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் திறனை மேம்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதி 'தமிழ்நாடு மொழி ஆய்வகத்திட்டம்' தொடங்கப்பட்டது. இது மாணவர்கள் தங்கள் கணினிகள் வாயிலாக டிஜிட்டல் உள்ளடக்கத்தை பயன்படுத்தி சுய வேக கற்றலை அதிகரிக்கும் தளமாக பயன்படுகிறது.

    அதன் தொடர்ச்சியாக நடப்பு கல்வியாண்டில் 2023 அக்டோபர் மாதம் முதல் 6 ஆயிரத்து 29 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இந்த மொழி ஆய்வகத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக அந்தந்த பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் ஹெட்செட்டுகளும் பயன்படுத்தப்பட இருக்கின்றன.

    இந்த திட்டத்துக்காக 6,029 அரசு பள்ளிகளில் ஆங்கில பாடத்தை கையாளும் ஆசிரியர்களுக்கு வருகிற 25-ந் தேதிக்குள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட இருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு பள்ளியிலும் வாரத்தில் ஒரு நாள் ஆங்கில பாடவேளை மொழி ஆய்வக திட்டத்துக்காக ஒதுக்கப்படும். அந்த நாளில் மாணவர்கள் உயர் தொழில்நுட்ப ஆய்வகத்துக்கு அழைத்து செல்லப்பட்டு மொழி ஆய்வகத்திட்டத்தில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். பள்ளிகளில் செயல்படாமல் இருக்கும் கணினிகளை சரிசெய்வதற்கான அனைத்து பணிகளையும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும், இந்த மாத இறுதிக்குள் அதற்கான பாடவேளை அட்டவணைகளை உருவாக்க வேண்டும் என்றும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    ×