search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "School Education"

    • தனியாா் சுயநிதி பள்ளிகளில் எல்.கே.ஜி., 1-ம் வகுப்பு மாணவா் சோ்க்கைக்கு வருகிற 22-ந்தேதி முதல் மே 20-ந்தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.
    • 25 சதவீத இடஒதுக்கீட்டின்படி, தகுதியான இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் விவரத்தை, தனியாா் பள்ளிகள் தங்களது அறிவிப்பு பலகையில் இடம் பெறச் செய்ய வேண்டும்.

    சென்னை:

    பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 2024-2025-ம் கல்வி ஆண்டுக்கான 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், தனியாா் சுயநிதி பள்ளிகளில் எல்.கே.ஜி., 1-ம் வகுப்பு மாணவா் சோ்க்கைக்கு வருகிற 22-ந்தேதி முதல் மே 20-ந்தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

    விண்ணப்பதாரா்கள் rte.tnschools.gov.in என்ற இணையதள வழியாகவோ, முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகங்கள், வட்டாரக் கல்வி அலுவலகங்கள், ஒருங்கிணைந்த வட்டார வளமைய அலுவலகங்களிலோ கட்டணமின்றி விண்ணப்பிக்கலாம்.

    25 சதவீத இடஒதுக்கீட்டின்படி, தகுதியான இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் விவரத்தை, தனியாா் பள்ளிகள் தங்களது அறிவிப்பு பலகையில் இடம் பெறச் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 10 ஆண்டுகள் அனுபவம் உள்ள கனரக வாகன ஓட்டுநர்களை நியமிக்க வேண்டும்.
    • பள்ளி வாகனங்களில் இனி ஒரு பெண் உதவியாளர் கட்டாயம் இருக்க வேண்டும்.

    சென்னை:

    பள்ளி வாகனங்களில் மாணவிகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடப்பதை தடுக்கும் வகையில் புதிய உத்தரவை பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ளது.

    பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளில்,

    * பள்ளி வாகனங்களில் இனி ஒரு பெண் உதவியாளர் கட்டாயம் இருக்க வேண்டும்.

    * 10 ஆண்டுகள் அனுபவம் உள்ள கனரக வாகன ஓட்டுநர்களை நியமிக்க வேண்டும்.

    * ஓட்டுநர் மற்றும் உதவியாளர் மீது குற்ற நடவடிக்கை இல்லை என்பதை பள்ளி நிர்வாகங்கள் சரி பார்க்க வேண்டும்.

    * வாகன ஓட்டுநர், உதவியாளர் மது அருந்தியுள்ளார்களா என்பதை தினமும் பரிசோதிக்க வேண்டும்.

    * போக்சோ சட்ட விதிகள் பற்றி ஓட்டுநர் மற்றும் உதவியாளருக்கு தெளிவாக விளக்கப்பட வேண்டும்.

    * பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.

    * பள்ளி வாகனங்களில் ஓட்டுநர், உதவியாளர் குறித்த விவரங்களை பள்ளி தகவல் மேலாண்மை இணைய பக்கத்தில் நாளை மாலைக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    • அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 21,233 பேர் சேர்ந்து முதலிடத்தில் உள்ளது.
    • 23-ந் தேதி ஆண்டு இறுதி தேர்வு நிறைவு பெறுவதால் அதற்கு முன்னதாக மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்தி முடிக்க கல்வித்துறை முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது.

    சென்னை:

    2024-2025-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை மார்ச் 1-ந்தேதி பள்ளி கல்வித்துறை தொடங்கியது. அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 5.5 லட்சம் மாணவ-மாணவிகளை சேர்க்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    அங்கன்வாடி மையங்களில் 5 வயது உள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பள்ளிகளில் சேர்க்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    வருகிற 12-ந் தேதிக்கு முன் 4 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்து பணிபுரிய வேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டு உள்ளார்.

    மாணவர்கள் சேர்க்கை விவரங்களை உடனுக்குடன் கல்வி மேலாண்மை தகவல் முறைமை (எமிஸ்) இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் நேற்று வரை நடந்த மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 21,233 பேர் சேர்ந்து முதலிடத்தில் உள்ளது. கள்ளக்குறிச்சி 16,938 பேரும், கிருஷ்ணகிரியில் 13,205 பேரும் அரசு பள்ளிகளில் சேர்ந்து உள்ளனர். 23-ந் தேதி ஆண்டு இறுதி தேர்வு நிறைவு பெறுவதால் அதற்கு முன்னதாக மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்தி முடிக்க கல்வித்துறை முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் இயக்குனர் எம்.பழனிசாமி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

    இதற்கு வருகிற 23-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் மே 22-ந் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    www.rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் ஏப்ரல் 22-ந்தேதி முதல் மே 22-ந்தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

    • ஒரு கல்வி மாவட்டத்துக்கு அதிகபட்சம் 2 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட வேண்டும்.
    • பயிற்சியின் போது மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு, போக்குவரத்து கட்டணம் வழங்கப்படும்.

    சென்னை:

    பள்ளிக் கல்வி இயக்குநா் க.அறிவொளி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு மாணவா்களுக்கு நீட், ஜேஇஇ தோ்வுகளுக்கு கடந்த நவம்பா் முதல் பிப்ரவரி வரை பள்ளி அளவில் பயிற்சி வழங்கப்பட்டது. அதன் தொடா்ச்சியாக, பொதுத்தோ்வு முடிந்த பிறகு 12-ம் வகுப்பு மாணவா்களுக்கு கல்விமாவட்ட அளவில் மாா்ச் 25-ந் தேதி முதல் மே 2-ந் தேதி வரை தொடா் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

    அதன்படி, ஒரு கல்வி மாவட்டத்துக்கு அதிகபட்சம் 2 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட வேண்டும். ஒரு மையத்துக்கு 40 போ் வீதம் மாணவா்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப மையங்கள் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளலாம். இணையதளம் மற்றும் ஸ்மாா்ட் வகுப்பறை வசதி கொண்ட பள்ளிகளை மையங்களாகத் தோ்வுசெய்ய வேண்டும். தமிழ், ஆங்கில வழியில் பயிற்சி நடைபெறும்.

    தினந்தோறும் தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல் ஆகிய 4 பாடங்களிலும் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். இதுதவிர பயிற்சி மையங்கள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 9.15 முதல் மாலை 4.30 மணி வரை வழங்கப்படும். பயிற்சியின் போது மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு, போக்குவரத்து கட்டணம் வழங்கப்படும்.

    வாரந்தோறும் சனிக் கிழமை திருப்புதல் தோ்வுகள் நடத்தப்பட்டு அதுகுறித்த விவாதங்கள் மேற்கொள்ளப்படும். அதற்குரிய கால அட்டவணைகளும் வழங்கப்பட்டுள்ளன. இத்தகைய வழிமுறைகளை பின்பற்றி பயிற்சி மையங்கள் சிறப்பாக செயல்பட தேவையான நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • சேலம் மற்றும் மதுரையில் அரசு பள்ளிகளில் சேர அதிகம் பேர் ஆர்வம் காட்டினார்கள்.
    • சென்னையை பொருத்தவரை 13,135 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் மாணவர்களை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்காக பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவர் சேர்க்கை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த 1-ந்தேதி தொடங்கி வைத்தார். அதன்மூலம் கடந்த 1-ந்தேதி முதல் அரசு பள்ளிகளில் 2024-2025-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்காக பள்ளிகளை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை மையமாக வைத்து இந்த பிரசார இயக்கம் நடத்தப்படுகிறது.

    இதன்மூலம் தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களில் மட்டும் 3.31 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேர்ந்துள்ளனர். சேலம் மற்றும் மதுரையில் அரசு பள்ளிகளில் சேர அதிகம் பேர் ஆர்வம் காட்டினார்கள். இதில் அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் மட்டும் அரசு பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 19,242 மாணவர்கள் சேர்ந்து சாதனை படைத்துள்ளனர்.

    இதையடுத்து மதுரையில் 18,127 மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். திண்டுக்கல்லில் 17,036 மாணவர்களும், திருவள்ளூரில் 15,207 மாணவர்களும், திருவண்ணாமலையில் 13,679 மாணவர்களும், திருப்பூரில் 13,204 மாணவர்களும் அரசு பள்ளிக்கூடங்களில் சேர்ந்துள்ளனர்.

    சென்னையை பொருத்தவரை 13,135 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். சென்னை மாதவரத்தில் 1,568 மாணவர்களும், சிந்தாதிரிப்பேட்டையில் 1,058 மாணவர்களும், ஆலந்தூரில் 1,220 மாணவர்களும், ராயபுரத்தில் 1,298 மாணவர்களும் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.

    • சுமார் 20 வருட காலத்திற்கு பிறகு தலிபான், ஆட்சியை கைப்பற்றியது
    • பெண்ணிய சிந்தனையாளர்களின் எதிர்ப்பை தலிபான் புறக்கணித்தது

    ஆப்கானிஸ்தானில் 1996 முதல் தலிபான் அமைப்பினர் ஆட்சியில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.

    ஆனால், 2001ல் அமெரிக்க ராணுவம் அவர்களை ஆட்சியிலிருந்து தூக்கியடித்ததும், அவர்கள் பலவீனமடைந்திருந்தனர்.

    கடந்த 2021ல் அமெரிக்க படைகள் அந்நாட்டை விட்டு வெளியேறின. தொடர்ந்து தலிபான் மீண்டும் ஆட்சிக்கு வந்தது.

    சுமார் 20 வருடகாலம் கடந்து ஆட்சியை கைப்பற்றிய தலிபான் அந்நாட்டு மக்களுக்கு; குறிப்பாக பெண்களுக்கு, பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    தலிபானின் புதிய சட்டங்களின்படி பெண் குழந்தைகள் கல்வி கற்பது ஆறாம் வகுப்புடன் நிறுத்தப்படும். இதற்கு பல உலக நாடுகளும் பெண்ணிய சிந்தனையாளர்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்த போதிலும் அவற்றை ஆப்கானிஸ்தான் புறக்கணித்தது.

    இந்நிலையில், பதின் வயதுகளில் 6-ஆம் வகுப்பை முடிக்கவுள்ள பல சிறுமிகள் இத்துடன் தங்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்பு முடிந்து போவதை எண்ணி அழுகின்றனர்.

    கடந்த வாரம், இது குறித்து ஐ.நா. சபையின் சிறப்பு தூதர் ரோசா ஒடுன்பயேவா (Roza Otunbayeva), "ஒரு தலைமுறையை சேர்ந்த பெண்களின் கல்வி கற்கும் வாய்ப்பு, ஒவ்வொரு நாள் கடக்கும் நிலையில் பறிக்கப்படுகிறது" என கவலை தெரிவித்தார்.

    ஏழாம் வகுப்பிற்கு செல்வோம் என நம்பியிருந்த பல மாணவிகள் தங்கள் கல்வியே முடிவடைவதால், எதிர்காலம் குறித்த அச்சத்திலும், தாங்கள் சாதிக்க நினைத்தவற்றை இனி அடைய முடியாத துக்கத்திலும் அழுகின்றனர் என தெரிய வந்துள்ளது.

    • சட்ட அலுவலருக்கு உதவியாக சட்ட வரைவு நுட்பம் தெரிந்த 4 பேர் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட உள்ளனர்.
    • ஒரு பள்ளியின் வளர்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தினுடைய பங்கீடு முக்கியமானது.

    சென்னை:

    பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாக அரங்கில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். இதில் பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் குமரகுருபரன், தொடக்கக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கு புதிதாக 14 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்துகளை தெரிவித்தார்.

    மேலும், பள்ளிக்கல்வித் துறை சார்ந்த வழக்குகளை கையாள 4 சட்ட வல்லுனர்கள் நியமனம் செய்வது உள்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசும்போது கூறியதாவது:-

    பள்ளிக்கல்வித் துறையில் நிலுவையில் உள்ள வழக்குகளை கையாளுவதற்கு பல்வேறு கட்டங்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கிறது. இதற்காக நம்மிடம் ஒரே ஒரு சட்ட அலுவலர் மட்டுமே இருக்கிறார்.அந்த சட்ட அலுவலருக்கு உதவியாக சட்ட வரைவு நுட்பம் தெரிந்த 4 பேர் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் இருந்து ஊதியம் வழங்க அனுமதி வழங்கப்படுகிறது.

    மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பொதுக்குழு 5 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டப்படுகிறது. ஒரு பள்ளியின் வளர்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தினுடைய பங்கீடு முக்கியமானது.

    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்காக வினா-வங்கிகள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் வழங்கப்பட்டது. கொரோனா தொற்றுக்கு பிறகு அது தயார் செய்யப்படாமல் இருந்தது. வருகிற ஜனவரி மாதத்தில் இருந்து மீண்டும் வினா-வங்கி புத்தகங்கள் வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மயிலாடுதுறை, நாகை மாவட்டத்தில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் விடுமுறை பற்றி முடிவெடுக்கலாம் என்ற உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • மாணவ-மாணவிகள், பெற்றோர் குழப்பத்துக்குள்ளானார்கள்.

    சென்னை:

    மழை காலங்களின்போது, பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்த முடிவை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் எடுக்கும் நடைமுறை இருந்து வருகிறது. அந்தவகையில் வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தலின் பேரில், எந்தெந்த மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது? என்ற முன்னெச்சரிக்கையின்படி, முந்தைய நாளோ அல்லது மழை பெய்யக்கூடிய நாளில் காலையிலோ விடுமுறை அளிக்கப்படுகிறது.

    அவ்வாறு விடுமுறை விடப்படும் நாட்களை ஈடுசெய்யும் வகையில் கல்வித்துறை சனிக்கிழமைகளில் வகுப்புகளை நடத்தி மாணவ-மாணவிகளுக்கான கற்பித்தல் பணிகளை மேற்கொள்கின்றன. இந்த நிலையில் சில மாவட்டங்களில் மழை காலங்களில் விடுமுறை விடுவதில் சில குழப்பங்கள் ஏற்படுகிறது. சமீபத்தில் மயிலாடுதுறை, நாகை மாவட்டத்தில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் விடுமுறை பற்றி முடிவெடுக்கலாம் என்ற உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் மாணவ-மாணவிகள், பெற்றோர் குழப்பத்துக்குள்ளானார்கள்.

    நேற்று கூட கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்துக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னையையொட்டிய சில பகுதிகளும் வருகின்றன. இதனால் அந்த பகுதிகளில் உள்ளவர்களுக்கு விடுமுறையில் குழப்பம் ஏற்பட்டது. இந்த குழப்பங்களுக்கெல்லாம் விரைவில் தீர்வு காணும் வகையில் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க இருப்பதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • சமீபத்தில் நடந்து முடிந்த காலாண்டு தேர்வும் இதேபோல், பொது வினாத்தாள் நடைமுறையே பின்பற்றப்பட்டது.
    • பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு தொடங்குவதற்குள் அனைத்து பாடங்களையும் நடத்தி முடிக்கவேண்டும்.

    சென்னை:

    6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு, அரையாண்டு உள்ளிட்ட தேர்வுகளுக்கு பொது வினாத்தாள் நடைமுறை கொண்டு வரப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த காலாண்டு தேர்வும் இதேபோல், பொது வினாத்தாள் நடைமுறையே பின்பற்றப்பட்டது.

    அதன்படி, 6 முதல் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு அடுத்த மாதம் (டிசம்பர்) 11-ந்தேதி முதல் 22-ந்தேதி வரையிலும், பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு அடுத்த மாதம் 7-ந்தேதி முதல் 22-ந்தேதி வரையிலும் நடைபெற உள்ளது.

    தேர்வுக்கு முந்தைய நாளில் அந்தந்த பாடங்களுக்கான வினாத்தாளை 'எமிஸ்' என்ற தளத்தில் இருந்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும், வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் 14417 என்ற இலவச எண்ணுக்கு தொடர்பு கொண்டு அதுபற்றி பதிவு செய்யவேண்டும் என்றும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    அரையாண்டு தேர்வுகள் முடிந்து, டிசம்பர் மாதம் 23-ந்தேதி முதல் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் 1-ந்தேதி வரை தொடர் விடுமுறை விடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு தொடங்குவதற்குள் அனைத்து பாடங்களையும் நடத்தி முடிக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடப்பு கல்வியாண்டில் 2023 அக்டோபர் மாதம் முதல் 6 ஆயிரத்து 29 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இந்த மொழி ஆய்வகத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
    • உயர் தொழில்நுட்ப ஆய்வகத்துக்கு அழைத்து செல்லப்பட்டு மொழி ஆய்வகத்திட்டத்தில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.

    சென்னை:

    6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் திறனை மேம்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதி 'தமிழ்நாடு மொழி ஆய்வகத்திட்டம்' தொடங்கப்பட்டது. இது மாணவர்கள் தங்கள் கணினிகள் வாயிலாக டிஜிட்டல் உள்ளடக்கத்தை பயன்படுத்தி சுய வேக கற்றலை அதிகரிக்கும் தளமாக பயன்படுகிறது.

    அதன் தொடர்ச்சியாக நடப்பு கல்வியாண்டில் 2023 அக்டோபர் மாதம் முதல் 6 ஆயிரத்து 29 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இந்த மொழி ஆய்வகத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக அந்தந்த பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் ஹெட்செட்டுகளும் பயன்படுத்தப்பட இருக்கின்றன.

    இந்த திட்டத்துக்காக 6,029 அரசு பள்ளிகளில் ஆங்கில பாடத்தை கையாளும் ஆசிரியர்களுக்கு வருகிற 25-ந் தேதிக்குள் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட இருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு பள்ளியிலும் வாரத்தில் ஒரு நாள் ஆங்கில பாடவேளை மொழி ஆய்வக திட்டத்துக்காக ஒதுக்கப்படும். அந்த நாளில் மாணவர்கள் உயர் தொழில்நுட்ப ஆய்வகத்துக்கு அழைத்து செல்லப்பட்டு மொழி ஆய்வகத்திட்டத்தில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும். பள்ளிகளில் செயல்படாமல் இருக்கும் கணினிகளை சரிசெய்வதற்கான அனைத்து பணிகளையும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும், இந்த மாத இறுதிக்குள் அதற்கான பாடவேளை அட்டவணைகளை உருவாக்க வேண்டும் என்றும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

    • பள்ளி வளாகத்தையும், விளையாட்டு மைதானத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
    • புகையிலை மற்றும் போதைப்பொருட்களால் ஏற்படும் சீரழிவுகள் குறித்து அறிவுரைகள் வழங்க வேண்டும்.

    சென்னை:

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, கல்வித் துறை மாணவர்கள் மற்றும் பள்ளி நலன் சார்ந்த சில அறிவுரைகள் அடங்கிய ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பள்ளி வளாகத்தையும், விளையாட்டு மைதானத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். பருவமழை காலத்துக்கு முன்பாக பள்ளி வகுப்பறைகளின் மேற்கூரையில் படர்ந்துள்ள மரக்கிளைகள் மற்றும் தேங்கியுள்ள இலைகளை அகற்றி மழைநீர் எளிதாக வெளியேற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் பள்ளி கட்டிடத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.

    பள்ளியில் உள்ள மின் மோட்டார் உள்ளிட்ட மின்சாதனங்களை எக்காரணம் கொண்டும் மாணவர்களை கொண்டு இயக்கக் கூடாது. பள்ளி வகுப்பறைகள் மற்றும் வளாகங்களில் மின் இணைப்புகள் முறையாக பாதுகாப்பாக பராமரிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். மின் கம்பிகள், மின்சாதனங்கள் பழுதுப்பட்டிருந்தால் மின் இணைப்பினை துண்டித்து பராமரிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்.

    பள்ளி வளாகத்தில் திறந்தநிலை நீர்நிலைகள், பள்ளங்கள் மாணவர்கள் அணுகா வண்ணம் சுற்றுவேலி அமைத்தல், கிணறு மற்றும் நீர்நிலை தொட்டிகளில் மேற்புறம் முழுவதும் மூடிய அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.

    புகையிலை மற்றும் போதைப்பொருட்களால் ஏற்படும் சீரழிவுகள் குறித்து அறிவுரைகள் வழங்க வேண்டும். பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை, மதியம் வழங்கப்படும் சிற்றுண்டி மற்றும் உணவு முற்றிலும் தூய்மையாக சமைக்கப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • பழுதடைந்துள்ள சுற்றுச்சுவர் பகுதிகளைச் சுற்றி வேலி அல்லது தடுப்புகளை ஏற்படுத்திட வேண்டும்.
    • பழுதடைந்த சுவிட்சுகள் உள்ள இடங்களில் மழைக்காலங்களில் மின்சாரம் செல்வதை தடைசெய்து வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்துவகை பள்ளிகளிலும் மழைக்காலங்களில் ஏற்படும் நோய்கள் மற்றும் விபத்துகளில் இருந்து பாதுகாப்பதற்கென உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள, அவ்வப்போது பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் பள்ளி பாதுகாப்பிற்கென, ஆய்வு அலுவலர்களும், பள்ளித்தலைமை ஆசிரியர்களும் கூடுதல் கவனம் செலுத்திடும் பொருட்டு, கீழ்க்கண்ட அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

    1. மாணவர்கள் விடுமுறை நாட்களில் ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் குளிப்பதற்கு பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது என பெற்றோர்களுக்கு அறிவுரைகள் வழங்கிட தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    2. கடற்கரையோரம் உள்ள மாணவர்களின் பெற்றோர்களுக்கும் மேற்கூறிய அறிவுரைகள் வழங்கிட தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    3. மாணவர்கள் மிதிவண்டிகளில் பள்ளிக்கு வரும்போது பாதுகாப்பாக வர அறிவுரை கூறவேண்டும்.

    4. மழைக் காலங்களில் மாணவர்களும், அவர்தம் உடைமைகளும் மழையில் நனையாமல் இருக்கும் பொருட்டு மழைக் கோட்டுகளையோ அல்லது குடைகளையோ பயன்படுத்த அறிவுரை வழங்கவேண்டும்.

    5. தொடர் மழை காரணமாக பள்ளியின் சுற்றுச்சுவர் மிகுந்த ஈரப்பதத்துடன் காணப்படலாம். எனவே, சுற்றுச்சுவர் உறுதி தன்மையை கண்காணிக்க வேண்டும். பழுதடைந்துள்ள சுற்றுச்சுவர் பகுதிகளைச் சுற்றி வேலி அல்லது தடுப்புகளை ஏற்படுத்திட வேண்டும்.

    6. மழையின் காரணமாக பள்ளியின் சில வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் பாதிக்கப்பட்டிருப்பின் அத்தகைய வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் பயன்படுத்தாமல் பூட்டிவைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    7. அனைத்து மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா என்றும், மின் கசிவு, மின்சுற்று கோளாறுகள் ஏதேனும் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதிபடுத்திடவும், தேவையெனில் மின் இணைப்பை தற்காலிகமாக துண்டித்துவைக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. இத்தகைய நேர்வுகளில் மின்வாரிய பொறியாளரை உடனடியாக தொடர்புகொண்டு இதனை சரிசெய்திட அறிவுறுத்தப்படுகிறது.

    8. மின் மோட்டார்கள் அமைந்துள்ள இடங்கள் பாதுகாப்பாக உள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

    9. பள்ளி வளாகத்தில் உள்ள நீர்தேக்கப் பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டி, மற்றும் தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் இருக்கும் பட்சத்தில் அவற்றை மூடப்பட்ட நிலையில் உள்ளனவா என்று உறுதி செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    10. மழைக்காலங்களில் ஏரிகள், ஆறுகளில் நீர்ப்பெருக்கு அதிகம் உடைப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், விடுமுறை காலங்களில் மாணவர்கள் வெளியே செல்வதை தவிர்க்கவும், குறிப்பாக காட்டாற்று வெள்ளம் ஏற்படும் அபாயமுள்ள நீர்நிலைகளுக்கு அருகே வேடிக்கை பார்க்க அனுமதிக்கக்கூடாது என பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்குவதுடன், பெற்றோர்களுக்கும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமையாசிரியர்கள் கோரப்படுகிறார்கள்.

    11. பழுதடைந்த அல்லது அறுந்து கிடக்கும் மின்கம்பிகளை மாணவர்கள் தொடுவதோ அல்லது மின்கம்பி வடம் பதிப்பதற்கான பள்ளம் தோண்டியுள்ள பகுதிகளுக்கு அருகாமையில் செல்வதோ கூடாது என பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமையாசிரியர்கள் கோரப்படுகிறார்கள்.

    12. மழைக்காலங்களில் இடி, மின்னல் போன்வற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மாணவர்கள் மரங்களின் கீழ் ஒதுங்குவது கூடாது என பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமையாசிரியர்கள் கோரப்படுகிறார்கள்.

    13. மாணவர்கள் சாலையில் மழைநீர் கால்வாய்கள் பாதாள சாக்கடைக் குழிகள் இருக்கும் இடங்களில் கவனமாக செல்வதுடன் அதனை தவிர்க்க பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமையாசிரியர்கள் கோரப்படுகிறார்கள்.

    14. பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் மரங்கள் ஏதேனும் இருப்பின் அதனை உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும்.

    15. பள்ளி வளாகத்தில் ஆபத்தானநிலையில் உள்ள உயர்மின் அழுத்தமுள்ள மின்கம்பங்கள், மற்றும் அறுந்து தொங்கக்கூடிய மின்கம்பிகள் இருப்பின் அவைகளை உடனடியாக மின்வாரியத்தின் துணையுடன் அகற்றப்படவேண்டும்.

    16. சுவிட்சுகள் (switches) சரியாக உள்ளனவா, மழைநீர் படாதவண்ணம் உள்ளனவா என்பதையும் தலைமையாசிரியர்கள் ஆய்வு செய்யவேண்டும். பழுதடைந்த சுவிட்சுகள் உள்ள இடங்களில் மழைக்காலங்களில் மின்சாரம் செல்வதை தடைசெய்து வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    17. பள்ளியில் உள்ள அனைத்துக் கட்டிடங்களின் மேற்கூரைகள், கைப்பிடிச்சுவர்கள் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் சன்னல், கதவுகளுக்கு மேல் உள்ள கைப்பிடிச் சுவர்கள் உறுதியாக உள்ளனவா என்று அவ்வப்போது ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேற்கூரையில் நீர் தேங்காவண்ணம் உடனடியாக தேங்கியுள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

    18. பள்ளி வளாகத்தில், கட்டிட பராமரிப்பு பணிகள் மற்றும் புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெறும் இடங்களில் பள்ளங்களை சுற்றி பாதுகாப்பான தடுப்பு அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.

    19. பருவகால மாற்றங்களால் மாணாக்கர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களிலிருந்து (குறிப்பாக டெங்கு, சிக்குன்குனியா போன்ற காய்ச்சல்களிலிருந்து) பாதுகாத்துக் கொள்வதற்கான தேவையான அறிவுரைகளை வழங்குவதுடன் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளபடி நடவடிக்கைகளும் மேற்கொள்ளவேண்டும். மேலும், மாணவர்களுக்கு காய்ச்சல் இருப்பின் காலதாமதம் இல்லாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை/ ஆரம்ப மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள

    சுகாதார நிலையங்களுக்கு சென்று அறிவுறுத்தவேண்டும்.

    20. மாணவர்கள் வசிக்கும் வீடுகளிலும் சுற்று வட்டாரங்களிலும் மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது அவசியம். மழை நீர் தேங்குவதினால் கொசுக்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம் என்பதை உணர்த்த வேண்டும்.

    21. பள்ளிகளில் இடிக்கக்பட வேண்டிய கட்டடங்கள் இருப்பின் மாவட்ட ஆட்சியரை தொடர்ப்பு கொண்டு இடித்திடல் அவசியம். இல்லையெனில் அக்கட்டடத்திற்கு அருகில் செல்லாமல் இருக்க மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

    22. பள்ளிகளில் கனமழையால் நீர் தேங்கும் காலங்களில் நீர் இறைக்கும் இயந்திரம் (மின்மோட்டார்) வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் இதர அலுவலகங்களில் உள்ளதா என்பதை தலைமையாசிரியர்கள் உறுதி செய்து வைத்தல் அவசியம்.

    23. மழைக்காலங்களில் சுட வைத்த நீரைப் பருக அறிவுறுத்த வேண்டும்.

    24. கடலோர பகுதிகள் கொண்ட, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், கடும் மழை அல்லது புயலினால் மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்கள் கடலோர பகுதியின் அருகாமையில் உள்ள பள்ளிகளில் தங்கவைப்பதற்கான உரிய இடவசதி இருப்பின் உரிய முன்னேற்பாடுளை தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட வேண்டும். மேலும் மாவட்ட ஆட்சியரின் அறிவுரைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்றி தலைமை ஆசிரியர்கள் செயல்படுவதை, அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளிப்பார்வை மற்றும் ஆய்வின்போது கண்காணிக்க வேண்டும் எனவும், தெரிவிக்கப்படுகிறது.

    ×