என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அரசுப் பள்ளிகளில் காக்கா முட்டை திரைப்படம்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
    X

    அரசுப் பள்ளிகளில் 'காக்கா முட்டை' திரைப்படம்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

    • படத்தை ஒளிபரப்பு செய்வதற்கான இணைப்பு ‘லிங்க்' பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
    • பொறுப்பு ஆசிரியர் படம் திரையிடும் முன்பு அந்த படத்தை பார்க்க வேண்டும்.

    சென்னை:

    பள்ளிக்கல்வித் துறை சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

    அரசுப் பள்ளிகளில் மாதந்தோறும் 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சிறார் திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு மாதம் 'காக்கா முட்டை' எனும் தமிழ் திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. 2014-ல் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் சென்னையில் குடிசைவாழ் பகுதியில் வசிக்கும் 2 சிறுவர்கள் பற்றிய கதையாகும். இந்த படத்தை ஒளிபரப்பு செய்வதற்கான இணைப்பு 'லிங்க்' பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    அதற்குரிய பாடவேளைகளில் படத்தை திரையிட வேண்டும். இந்த பணிகளை கண்காணித்து ஒருங்கிணைக்க பள்ளிகளில் பொறுப்பாசிரியர்களை நியமிக்க வேண்டும். பொறுப்பு ஆசிரியர் படம் திரையிடும் முன்பு அந்த படத்தை பார்க்க வேண்டும். அதன்பின் கதைச் சுருக்கத்தையும் படித்து மாணவர்களுக்கு படத்தின் அடிப்படை பின்னணியை விளக்க வேண்டும். இதுசார்ந்த வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்றி படத்தை மாணவர்களுக்கு திரையிட்டு காண்பிக்க வேண்டும்.

    மாநில அளவில் நடைபெறும் சிறார் திரைப்பட விழாவில் சிறந்து விளங்கும் 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள். இதற்கான அறிவுறுத்தல்களை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×