என் மலர்
நீங்கள் தேடியது "காக்கா முட்டை"
- படத்தை ஒளிபரப்பு செய்வதற்கான இணைப்பு ‘லிங்க்' பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
- பொறுப்பு ஆசிரியர் படம் திரையிடும் முன்பு அந்த படத்தை பார்க்க வேண்டும்.
சென்னை:
பள்ளிக்கல்வித் துறை சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
அரசுப் பள்ளிகளில் மாதந்தோறும் 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சிறார் திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு மாதம் 'காக்கா முட்டை' எனும் தமிழ் திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. 2014-ல் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் சென்னையில் குடிசைவாழ் பகுதியில் வசிக்கும் 2 சிறுவர்கள் பற்றிய கதையாகும். இந்த படத்தை ஒளிபரப்பு செய்வதற்கான இணைப்பு 'லிங்க்' பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதற்குரிய பாடவேளைகளில் படத்தை திரையிட வேண்டும். இந்த பணிகளை கண்காணித்து ஒருங்கிணைக்க பள்ளிகளில் பொறுப்பாசிரியர்களை நியமிக்க வேண்டும். பொறுப்பு ஆசிரியர் படம் திரையிடும் முன்பு அந்த படத்தை பார்க்க வேண்டும். அதன்பின் கதைச் சுருக்கத்தையும் படித்து மாணவர்களுக்கு படத்தின் அடிப்படை பின்னணியை விளக்க வேண்டும். இதுசார்ந்த வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்றி படத்தை மாணவர்களுக்கு திரையிட்டு காண்பிக்க வேண்டும்.
மாநில அளவில் நடைபெறும் சிறார் திரைப்பட விழாவில் சிறந்து விளங்கும் 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள். இதற்கான அறிவுறுத்தல்களை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இயக்குனர் மணிகண்டன் கடந்த இரண்டு மாதங்களாக சென்னையில் வசித்து வருகிறார்.
- நரேஷ்குமார் வீட்டின் கதவுகள் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விளாம்பட்டியைச் சேர்ந்தவர் தேசிய விருது பெற்ற காக்கா முட்டை பட இயக்குனர் மணிகண்டன்., இவரது வீடு மற்றும் அலுவலகம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள எழில் நகரில் உள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக திரைப்பட வேலைக்காக சென்னையில் குடும்பத்துடன் வசித்து வரும் சூழலில் அவரது வீட்டில் உள்ள நாய்க்கு மணிகண்டனின் ஓட்டுனர்களான ஜெயக்குமார் மற்றும் நரேஷ்குமார் இருவரும் தினசரி வந்து உணவு வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று நாய்க்கு உணவை வைத்துவிட்டு சென்ற பின் இன்று வழக்கம் போல மாலை 4 மணியளவில் நாய்க்கு உணவு வைக்க வந்த நரேஷ்குமார் வீட்டின் கதவுகள் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் நடத்திய சோதனையில் வீட்டின் பிரோவில் இருந்த கடைசி விவசாயி திரைப்படத்திற்காக மத்திய அரசு வழங்கிய இரு தேசிய விருதுக்கான வெள்ளி பதக்கங்கள், 1 லட்சம் ரொக்கம் மற்றும் 5 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது முதற்கட்டமாக தெரியவந்துள்ளது.
மேலும் சென்னையில் உள்ள இயக்குனர் மணிகண்டன் நேரில் வந்து ஆய்வு செய்த பின்னரே மேலும் பணம், நகை ஏதும் கொள்ள போனதா என தெரிய வரும் என கூறப்படுகிறது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, டி.எஸ்.பி நல்லு தலைமையிலான போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- மணிகண்டன் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார்.
- டைரக்டர் மணிகண்டனின் வீட்டு வாசல் கேட் பகுதியில் ஒரு பாலித்தீன் பை தொங்கிக்கொண்டிருந்தது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி எழில் நகரை சேர்ந்தவர் சினிமா டைரக்டர் மணிகண்டன்.
இவர் 'காக்கா முட்டை', 'கடைசி விவசாயி' ஆகிய தேசிய விருது பெற்ற படங்களை இயக்கி பிரபலம் அடைந்தவர்.
மத்திய அரசால் வழங்கப்பட்ட 2 தேசிய விருதுக்கான வெள்ளி பதக்கங்கள், ரூ.1 லட்சம் மற்றும் 5 பவுன் தங்க நகைகள் ஆகியவற்றை உசிலம்பட்டி எழில்நகரில் உள்ள வீட்டில் மணிகண்டன் வைத்திருந்தார். தற்போது மணிகண்டன் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். உசிலம்பட்டியில் உள்ள வீடு பூட்டப்பட்டு இருந்தது.
கடந்த 8-ந் தேதி அவருடைய வீட்டுக்கதவின் பூட்டை உடைத்து உள்ளே ஒரு கும்பல் புகுந்தது. பீரோவை உடைத்து, அதில் இருந்த தேசிய விருது பதக்கங்கள், பணம், நகை ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றன. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக உசிலம்பட்டி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், கொள்ளையர்கள் பிடிபடவில்லை.
இந்த நிலையில், நேற்று டைரக்டர் மணிகண்டனின் வீட்டு வாசல் கேட் பகுதியில் ஒரு பாலித்தீன் பை தொங்கிக்கொண்டிருந்தது. இதை பார்த்து சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் உடனடியாக விரைந்து வந்து அந்த பையை திறந்து பார்த்தனர்.

கொள்ளையர்கள் எழுதி வைத்திருந்த மன்னிப்பு கடிதம்.
அதில், ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தில், "அய்யா எங்களை மன்னித்து விடுங்கள், உங்கள் உழைப்பு உங்களுக்கு" என்று எழுதப்பட்டிருந்தது.
மேலும் அந்த கடிதத்துடன் தேசிய விருதுக்கான வெள்ளி பதக்கங்களை மட்டும் அந்த பையில் போட்டு தொங்க விட்டு விட்டு திருடர்கள் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அந்த தேசிய விருதுக்கான வெள்ளி பதக்கங்களை போலீசார் மீட்டு, கொள்ளையர்களை தேடி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
தேசிய விருதின் முக்கியத்துவத்தை உணர்ந்த கொள்ளையர்கள், அதை திருடிய வீட்டிலேயே கொண்டு வந்து பையில் கட்டி தொங்க விட்டுச் சென்றது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.






