search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Selvaperundagai"

  • சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
  • தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம்.

  சென்னை:

  கள்ளக்குறிச்சியில் நடந்த விஷச்சாராய சாவுகள் தொடர்பாக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்தார். அப்போது அவர், 'தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுவகைகள் தாராளமாக கிடைக்கும் போது விஷச் சாராயம் எப்படி கிடைக்கிறது? எனவே இந்த விஷயத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.

  நிர்மலா சீதாராமனின் இந்த கருத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்தார்.

  கள்ளக்குறிச்சி சம்பவம் மிகவும் வேதனையானது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளி கள் கைது செய்யப்பட்டு சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடந்து வருகிறது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷனும் அமைக்கப்பட்டுள்ளது.

  அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் சி.பி.ஐ. விசாரணை கேட்கலாம். நிர்மலா சீதாராமன் இந்த விவகாரத்தை அரசியல் ஆக்குகிறார். பொறுப்புள்ள மந்திரி இதை அரசியல் ஆக்காமல் இனிவரும் காலங்களில் இந்த மாதிரி சம்பவங்கள் நிகழாமல் இருக்க ஆலோசனை வழங்கலாம்.

  ஒட்டுமொத்த தமிழ்நாடும் புறக்கணித்துவிட்ட நிலை யில், ஏதாவது காரணங்களை வைத்து எப்படியாவது அரசியல் செய்ய முடியுமா? என்று பார்க்கிறார். அது எடுபடாது.

  நடிகர் கமல் மிதமாக குடித்து கொள்ளலாம் என்று தனது கருத்தை வெளியிட்டு உள்ளார். நாங்கள் காந்திய வாதிகள். முழு மதுவிலக்கைத்தான் விரும்புகிறோம்.

  ஆபத்தில்லாமல் குடிக்கலாம் என்பது சமூகத்தில் மது குடிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பது போல் ஆகிவிடும். ஆரோக்கியமான வாழ்வுக்குத்தான் வழிகாட்ட வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • ஒவ்வொரு கட்ட தேர்தலிலும் பா.ஜ.க தலைவர்களுக்கு பயம் வருகிறது.
  • கல்வி பற்றி பேசுவதற்கு பா.ஜ.க.விற்கு எந்தவித தகுதியும் இல்லை.

  சென்னை:

  சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  சாதி, மதம், மொழி அரசியல் செய்யகூடாது என்று சட்டம் சொல்கிறது. ஆனால், மோடி அரசு கல வர அரசியலில் ஈடுபட்டு வருகிறது. அதனை தடுக்கா மல் தேர்தல் ஆணையம் தொடர்ந்து வேடிக்கை பார்ப்பது அச்சத்தை ஏற் படுத்தியுள்ளது.

  ஒவ்வொரு கட்ட தேர்தலிலும் பா.ஜ.க தலைவர்களுக்கு பயம் வருகிறது. அரசியலுக்காக அயோத்தியில் ராமர் கோவிலை மோடி கட்டினார். எங்களுக்கு எல்லா மதமும் சம்மதம். நானும் ராமர் பக்தர் தான். நாங்கள் எப்படி ராமர் கோயிலை இடிக்க விடுவோம். இடிப்பது காங்கிரஸ் வழக்கம் அல்ல, கட்டுவது தான் காங்கிரஸ் வழக்கம்.

  மோடியின் வாழ்க்கை வரலாற்றில் நடிகர் சத்திய ராஜ் நடித்தால் உண்மையாக நடிக்க வேண்டும்.

  கல்வி என்றால் பெருந்தலைவர் காமராஜர் தான் முன்னுதாரணம். கல்வி பற்றி பேசுவதற்கு பா.ஜ.க. விற்கு எந்தவிதமான தகுதியும் இல்லை.

  நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக அறிவியல் ரீதியாக விசாரணை நடக்கிறது. அவசர கதியில் எதையும் செய்யவேண்டாம், நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்று காவல்துறைக்கு வலியுறுத்தி உள்ளோம். சி.பி.சி.ஐ.டிக்கு வழக்கை மாற்றுவதற்கு தேவை இருக்காது என்று நெல்லை மாவட்ட எஸ்.பி என்னிடம் தெரிவித்தார்.

  ஜெயக்குமார் வழக்கில் கூடுதல் காவல் துறையை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பெண்கள் அடிமையாக இருக்க வேண்டும் என்று தான் இலவச பேருந்து திட்டம் குறித்து பிரதமர் மோடி தரம் குறையாக பேசி இருக்கிறார்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • மத நல்லிணக்கத்தில் நம்பிக்கையுள்ள இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதி.
  • ஒவ்வொரு கட்டத்திலும் காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்து முறியடித்து வருகிறது.

  சென்னை:

  தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் போல் இருக்கிறார்கள் என்று கூறியதாக ஒரு கருத்தை வைத்துக்கொண்டு காங்கிரஸ் கட்சியுடன் உள்ள உறவை முறிக்க தி.மு.க. தயாரா என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி சவால் விடுத்திருக்கிறார்.

  எதற்கு எதை முடிச்சு போடுவது என்று தெரியாமல் அரசியல் உள்நோக்கத்தோடு கருத்துகளை திரித்து பேசுவது மோடியின் கை வந்த கலையாக இருக்கிறது. அதை ஒவ்வொரு கட்டத்திலும் காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்து முறியடித்து வருகிறது.

  இந்நிலையில் அமெரிக் காவில் வாழ்கிற சாம்பிட் ரோடா ஏற்கனவே தெரிவித்த ஒரு கருத்துக்கு காங்கிரஸ் கட்சி மறுப்பை வெளியிட்டது. அதேபோல, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இக் கருத்தை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை என மறுப்பு கூறியிருக்கிறார்.

  இதைத் தொடர்ந்து அகில இந்திய காங்கிரசின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவின் பொறுப்பிலிருந்து சாம்பிட்ரோடா விலகிக்கொண்டிருக்கிறார். இதன் மூலம் அவரது கருத்தை காங்கிரஸ் கட்சி முழுமை யாக நிராகரித்திருக்கிறது. இதற்கு பிறகும் இக்கருத்தின் அடிப்படையில் சவால் விடுவது அரசியல் நாகரீக மற்ற செயலாகும். இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

  அமெரிக்க குடியரசு தலைவராக பராக் ஒபாமா 2010-ல் இந்தியாவுக்கு வருகை புரிந்த போது, அன்றைய பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங்கை சந்தித்து இந்தியாவில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த முஸ்லீம்களுக்கு எதிராக வளர்ந்து வருகிற அச்சுறுத் தலையும், அதன்மூலம் இந்து தேசியவாதத்தை பா.ஜ.க. வளர்ப்பதையும் கவலையோடு பகிர்ந்து கொண்டதை இங்கு நினைவு கூறுவது அவசியமாகும்.

  அன்று பராக் ஒபாமா எதை கண்டு அச்சம் தெரிவித்தாரோ அத்தகைய அச்சத்தை 10 ஆண்டுகால மோடி ஆட்சியின் மூலம் நாடு முழுவதும் தீய பிரசாரம் பரப்பப்பட்டு வருகிறது. மக்களவை தேர்தலில் தோற்பது உறுதியாகியதை முற்றிலும் உணர்ந்து விட்ட மோடி, மக்களை பிளவு படுத்துவதற்கு இல்லாததை எல்லாம் இட்டுக் கட்டி அப வாதங்களை கூறி வருகிறார்.

  10 ஆண்டுகால ஆட்சியின் மூலம் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்கள் விரோத ஆட்சியினால் ஏற்பட்ட பாதிப்புகளை மூடி மறைப்பதற்கு வகுப்புவாத, நச்சு கருத்துகளை பரப்பி மக்களை பிளவுபடுத்தும் மோடியின் முயற்சியை காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் களத்தில் நின்று போராடி மக்கள் மன்றத்தில் முறியடித்து வருகிறார்கள்.

  இவர்களது கடும் பரப்புரையினால் வகுப்புவாத மோடி ஆட்சி வீழ்த்தப்பட்டு, மத நல்லிணக்கத்தில் நம்பிக்கையுள்ள இந்தியா கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகியிருக்கிறது. இதன்மூலம் மக்களவை தேர்தலுக்கு பிறகு அனைத்து மக்களையும் உள்ளடக்கிய நல்லாட்சியை இந்தியா கூட்டணி அமைப்பதை நரேந்திர மோடி உள்ளிட்ட எவராலும் தடுக்க முடியாது.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  • தேர்தல் முடிந்து களநிலவரம் பா.ஜ.க.வுக்கு பாதகமாக இருக்கிறது.
  • விரக்தியில் வாய்க்கு வந்த அவதூறுகளை மோடி அள்ளி வீசி வருகிறார்.

  சென்னை:

  தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இல்லாததை இட்டுக்கட்டி பட்டியலின, பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படுகிற இட ஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் கட்சி முயற்சி செய்கிறது என்ற கோயபல்ஸ் பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடர்ந்து செய்து வருகிறார்.

  இந்த பிரசாரத்தை செய்வதற்கு காரணம் உளவுத்துறை மூலம் கிடைத்த தகவலின்படி பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்ற ரகசிய அறிக்கை தான். அதன் காரணமாகவே மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து சிறுபான்மையினருக்கு எதிராக துவேஷ பிரசாரத்தை மிக மிக கீழ்த்தரமாக இழிவான முறையில் பிரதமர் மோடி செய்து வருகிறார்.

  காங்கிரசின் 60 ஆண்டு கால ஆட்சி வெறும் ஆட்சியே. ஆனால், தமது 10 ஆண்டுகால ஆட்சி தேசத்திற்கான சேவை என்கிறார். கடந்த 2019 ஆகஸ்ட் 15 அன்று டெல்லி செங்கோட்டையில் 2024-ம் ஆண்டிற்குள் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்தி உலக அரங்கில் ஏழாவது நாடாக கொண்டு வருவேன் என்று பிரதமர் மோடி பேசினார்.

  ஆனால், கடந்த 2004-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைந்த போது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 50 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. 2014-ல் 100 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதன்மூலம் டாக்டர் மன்மோ கன்சிங் ஆட்சியில் இருமடங்கு வளர்ச்சி எட்டப்பட்டது.

  ஆனால், 2014 முதல் 2024 வரை 10 ஆண்டுகளில் ரூபாய் 200 லட்சம் கோடி மொத்த உள்நாட்டு உற்பத்தியை அடைந்திருக்க வேண்டும்.

  ஆனால், 2024-ல் அடைந்ததோ ரூபாய் 173 லட்சம் கோடி தான். மோடி கொடுத்த அறிவிப்பின்படி இருமடங்கு வளர்ச்சி எட்டப்படவில்லை.

  5 லட்சம் டிரில்லியன் டாலர் என்று சொன்னால் ரூபாய் 390 லட்சம் கோடி மொத்த உள்நாட்டு உற்பத்தியை 2024 இல் பெற்றிருக்க வேண்டும். ஆனால், மோடி ஆட்சி பெற்றதோ ரூபாய் 173 லட்சம் கோடி தான்.

  இதன்மூலம் கொடுத்த வாக்குறுதியின்படி மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மூலம் வளர்ச்சியை காட்டி, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியாத பிரதமர் மோடியின் பொருளாதார தோல்வி இன்றைக்கு அம்பலமாகியிருக்கிறது.

  காங்கிரஸ் இல்லாத இந்தியா என்று பேசிய பிரதமர் மோடி, நாள்தோறும் காங்கிரஸ் கட்சியை பற்றி பேச வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு ஆளாகியிருக்கிறார். பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் பேசுவதற்கு எதுவும் இல்லாத நிலையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து பேசி, பேசி நாட்டு மக்களிடையே பேசு பொருளாக மாற்றி விட்டார்.

  கடந்த காலத்தில் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற பேச்சு சமீப காலமாக பேசப்படுவதில்லை. ஏனெனில் இரண்டு கட்ட தேர்தல் முடிந்து களநிலவரம் பா.ஜ.க.வுக்கு பாதகமாக இருக்கிறது.

  இதையெல்லாம் அறிந்த பிரதமர் மோடி, அச்சம், பீதியினால் மிகுந்த பதற்றத்துடன் எதை பேசுகிறோம் என்ற சிந்தனை இல்லாமல் நினைவிழந்து விரக்தியில் வாய்க்கு வந்த அவதூறுகளை அள்ளி வீசி வருகிறார்.

  இத்தகைய பேச்சுகள் பா.ஜ.க.வின் தோல்வியை நாளுக்கு நாள் உறுதிபடுத்தி வருகிறது. இந்தியா கூட்டணியின் ஆட்சி அமையப்போவது காலத்தின் கட்டாயமாகும்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  • வாக்கு வங்கியை விரிவுபடுத்தி வெற்றி பெற்று விடலாம் என்று பகல் கனவு காண்கிறாரா என்று தெரியவில்லை.
  • இந்தியா கூட்டணியின் வெற்றி நாளுக்கு நாள் ஒளிர்ந்து, உறுதி செய்யப்பட்டு வருகிறது.

  சென்னை:

  தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  மக்களவைத் தேர்தலின் முதல், இரண்டாம் கட்டம் முடிந்த நிலையில் மிகுந்த பதற்றத்துடனும், தோல்வி பயத்தினாலும் பிரதமர் மோடி அடிப்படை உண்மைகளுக்கு புறம்பாக ஆதாரமற்ற அவதூறான கருத்துகளை தேர்தல் பரப்புரையின் போது பேசி வருகிறார். நேற்று மும்பையில் உரையாற்றும் போது, நான் உயிருடன் இருக்கும் வரை மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அனுமதிக்கமாட்டேன் என்று பேசியிருக்கிறார்.

  10 ஆண்டுகாலம் பிரதமராக இருந்த ஒருவருக்கு இட ஒதுக்கீடுகள் மதத்தின் அடிப்படையில் வழங்கப்படுவது அல்ல. சமூக, கல்வி ரீதியாக பின்தங்கிய மக்கள் எந்த மதத்தில் இருந்தாலும், அவர்கள் எந்த சாதியை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை அந்தந்த மாநில அரசுகள் அமைக்கும் பின்தங்கியோர் ஆணையம் வழங்குகிற தரவுகளின்படி அந்தந்த மாநில அரசுகள் இடஒதுக்கீடு வழங்குகின்றன.

  இந்த அடிப்படையை புரிந்து பேசுகிறாரா? அல்லது திட்டமிட்டு மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி, வாக்கு வங்கியை விரிவுபடுத்தி வெற்றி பெற்று விடலாம் என்று பகல் கனவு காண்கிறாரா என்று தெரியவில்லை.

  கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் முஸ்லிம் மதத்தில் உள்ள பின்தங்கிய சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. உண்மை நிலை இப்படியிருக்க காங்கிரஸ் கட்சி பின்தங்கியோரின் இடஒதுக்கீட்டை பறித்து இஸ்லாமியர்களுக்கு வழங்க சதித் திட்டம் தீட்டுகிறது என்று ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை திரும்ப திரும்ப கூறி இந்தியாவின் கோயபல்ஸ் ஆக பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார்.


  கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. அதுகுறித்து பிரதமர் மோடி பரப்புரையில் பேசுவதே இல்லை. வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை மறுப்பு, போன்றவற்றின் காரணமாக மக்களிடையே பா.ஜ.க. மீது கடுமையான எதிர்ப்பு அலை வீசிக் கொண்டிருக்கிறது. வடமாநிலங்களில் பா.ஜ.க. எதிர்ப்பு அலை தலை தூக்கியிருக்கிறது.

  காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாட்டை கொள்ளையடிப்பார்கள் என்று கூறுகிறார் பிரதமர் மோடி. நாட்டிலுள்ள சொத்துக்களை எல்லாம் 20, 25 கோட்டீஸ்வரர்கள் 45 சதவிகித மொத்த சொத்துகளை கொள்ளையடிப்பதற்கு துணை போனவர் இப்படி பேசுவது விந்தையாக இருக்கிறது. இதன்மூலம் தொழிலதிபர்களிடமிருந்து தேர்தல் பத்திர நன்கொடை மூலம் ரூபாய் 8,000 கோடி கொள்ளையடித்த பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியைப் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது.

  எனவே, 2024 மக்களவைத் தேர்தல் என்பது இந்திய மக்களுக்கு வாழ்வா? சாவா? என்பதே பிரச்சினை. இந்தியாவின் எதிர்காலமே மக்களவை தேர்தல் முடிவை பொறுத்திருக்கிறது. இந்தியாவில் சர்வாதிகார, பாசிச, மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட வேண்டுமெனில் பா.ஜ.க.வை தோற்கடிப்பது மிகமிக அவசியம் என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

  இதன் காரணமாகவே இந்தியா கூட்டணியின் வெற்றி நாளுக்கு நாள் ஒளிர்ந்து, உறுதி செய்யப்பட்டு வருகிறது. மோடி எத்தகைய கபட நாடகத்தை ஆடினாலும் கடந்த 2014, 2019-ல் மக்கள் ஏமாந்ததைப் போல 2024-ல் மக்களை ஏமாற்ற முடியாது. மோடியின் தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்தால் இந்தியா என்ன ஆகும் என்ற பயம் மக்களிடையே ஏற்படு வதற்கு அவரது உரைகள் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

  பிரதமர் மோடியின் இத்தகைய அரசமைப்புச் சட்ட விரோத மதநல்லிணக் கத்தை சீர்குலைக்கிற, வெறுப்பு பேச்சுகளை விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு தொடர்ந்து பேச பேச பா.ஜ.க. படுதோல்வி அடைவது உறுதியாகும்.

  இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

  • இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத அளவிற்கு மோடி எதிர்ப்பு அலை உருவாகி இருக்கிறது.
  • இந்தியா கூட்டணியை சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றி பெறுகிற வகையில் உங்கள் ஆதரவை வழங்க வேண்டும்.

  சென்னை:

  தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  நாட்டில் இதுவரை நடை பெற்ற மக்களவை தேர்தல்களிலேயே மிகமிக முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக வருகிற மக்களவைத் தேர்தல் அமைந்திருக்கிறது. இது இந்தியாவின் எதிர்காலத்தையும், நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும் நிர்ணயிக்கப் போகிற தேர்தலாகும்.

  இந்தியாவில் ஜனநாயகம் நீடிக்கப் போகிறதா? சர்வாதிகாரம் நீடிக்கப் போகிறதா? என்பது குறித்து வாக்காளப் பெருமக்கள் முடிவு செய்ய வேண்டிய தேர்தல். சுதந்திர இந்தியா காணாத வகையில் இந்திய அரசமைப்புச் சட்டம் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது.

  அதனை சீர்குலைத்து புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க பாரதிய ஜனதா கட்சி தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய பேராபத்துகளில் இருந்து நாட்டை மீட்க ஜனநாயக அடிப்படையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்கிற வகையில் காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இந்தியா கூட்டணியை அமைத்திருக்கின்றன.

  இந்தியா முழுவதும் பா.ஜ.க. எதிர்ப்பு அலை வீசிக் கொண்டிருக்கிறது. வட மாநிலங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது என்ற நிலையில் 9 முறை தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரை நிகழ்த்த வேண்டிய பலகீனமான நிலையில் பிரதமர் மோடி இருக்கிறார். ஆனால், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத அளவிற்கு மோடி எதிர்ப்பு அலை உருவாகி இருக்கிறது.

  கடந்த 10 ஆண்டுகளாக தமிழகம் அனைத்து நிலைகளிலும் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. பா.ஜ.க.வின் தென்மாநிலங்கள் புறக்கணிப்பு அரசியலில் தமிழகம் கடுமையாக வஞ்சிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டு மக்கள் மீது தலைவர் ராகுல்காந்தி அளவற்ற அன்பையும், பாசத்தையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.

  அகில இந்திய காங்கிரஸ் கட்சி வெளியிட்ட நியாய பத்திரம் என்ற தேர்தல் அறிக்கையில் சமூகநீதி, பெண்களுக்கான சமஉரிமை, சமவாய்ப்பு, விவசாயிகள் நலன், சிறுபான்மையினர் பாதுகாப்பு, மாநில உரிமைகள், கருத்து சுதந்திரம், மீனவர் நலன், கல்விக் கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து, 100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூபாய் 400 ஆக உயர்வு, சாதிவாரி கணக்கெடுப்பு, அரசு வேலைகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு, பெண்களுக்கு ஆண்டு ரூபாய் 1 லட்சம் வழங்குகிற மகாலட்சுமி திட்டம், மீனவர்களுக்கு மீண்டும் டீசல் மானியம், 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மதிய உணவு, மூத்த குடிமக்களுக்கு ரெயில்களில் மீண்டும் கட்டண சலுகை, நாடு முழுவதும் ஒன்றிய அரசு பணியிடங்களில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும், விவசாயிகளுக்கு எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஆதரவுப்படி சட்டப் பாதுகாப்பு என மக்கள் நலன் சார்ந்த வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

  எனவே, இந்தியாவின் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க, இந்திய அரச மைப்புச் சட்டத்தை பாதுகாக்க, மோடியின் பாசிச, சர்வாதிகார ஆட்சியை வீழ்த்திட, இந்தியா கூட்டணி தலைமையில் ஜனநாயக ஆட்சி மீண்டும் மலர்ந்திட, மக்கள் நலன்சார்ந்த நல்லாட்சி அமைந்திட காங்கி ரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியை சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றி பெறுகிற வகையில் உங்கள் ஆதரவை வழங்க வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

  • பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று சொல்வது மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயலாகும்
  • வந்தேபாரத் ரயில், புல்லட் ரயில் இவை எதுவுமே சாதாரண மக்களுக்கு பயன்படுகிற வகையில் அமைவதில்லை

  பிரதமர் மோடி பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார்.

  இந்நிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

  "2014, 2019 ஆகிய தேர்தல்களில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத பா.ஜ.க. 2024 தேர்தலுக்கு முதல்கட்ட தேர்தல் தொடங்கி அனைத்து கட்சிகளும் தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகு அவற்றை பார்த்து இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

  பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை சமூகநீதி, மதநல்லிணக்கம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றுக்கு எதிராக பல்வேறு அம்சங்கள் உள்ளன.

  பல்வேறு மதம், மொழி, ஜாதி, இனங்களை கொண்ட பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று சொல்வது மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயலாகும்.

  தற்போது நடைபெறுகின்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 இல் ஆரம்பித்து ஜூன் மாதம் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்படுகிற நிலையில் ஒரே நாடு, ஒரே தேர்தலை எப்படி நடத்த முடியும் என்பதை பிரதமர் மோடி தான் விளக்க வேண்டும்.

  புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு பழங்குடியினத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு அவர்களை அழைக்காமல் புறக்கணித்த பா.ஜ.க.வினர் 2025 ஆம் ஆண்டை பழங்குடியினர் ஆண்டாக கொண்டாடுவோம் என்பது அப்பட்டமான இரட்டை வேடமாகும்.

  ஏற்கனவே ஆயுஷ்மான் திட்டத்தில் ஊழல் புரையோடிப் போயிருக்கிற நேரத்தில் மீண்டும் அத்திட்டம் குறித்து தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  இந்தியாவின் பெருமைமிகு தமிழ் மொழி வளர்க்கப்படும் என்று தேர்தல் அறிக்கை கூறுகிறது. நிதி ஒதுக்குவதில் தமிழ் மொழியை விட 18 மடங்கு அதிகமாக சமஸ்கிருத மொழிக்கு நிதி ஒதுக்கி பாரபட்சம் காட்டுகிற பா.ஜ.க., தமிழ் மொழி வளர்ச்சி பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது. இதன்மூலம் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது.

  தேர்தல் நன்கொடை பத்திரம் மூலமாக ரூபாய் 8,000 கோடி கார்ப்பரேட்டுகளிடம் நிதியை பெற்று குவித்த பா.ஜ.க., ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுவது மிகுந்த கேலிக்குரியதாக இருக்கிறது.

  வந்தேபாரத் ரயில், புல்லட் ரயில் இவை எதுவுமே சாதாரண மக்களுக்கு பயன்படுகிற வகையில் அமைவதில்லை. தமிழகத்தில் மெட்ரோ ரயிலை புறக்கணித்த பா.ஜ.க.வை எவரும் மறந்திட இயலாது.

  மோடியின் உத்திரவாதம் நம்பகத் தன்மையை இழந்துள்ளது. ஏற்கனவே 2014 இல் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை, விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக கூட்டப்படும், கருப்பு பணத்தை ஒழித்து அனைவரது வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்ற உத்திரவாதத்தை நிறைவேற்றாத மோடியின் உத்திரவாதத்தை மக்கள் எவரும் நம்ப மாட்டார்கள்.

  தேர்தல் அறிக்கையை டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளில் வெளியிட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையை ஜாதிவாரியாக கணக்கெடுத்து இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்காத பா.ஜ.க., டாக்டர் அம்பேத்கர் பெயரை உச்சரிக்க தகுதியில்லை.

  எனவே, மக்களின் நம்பகத்தன்மையை இழந்த பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை என்பது வெறும் கண்துடைப்பு நாடகமாகவே இருக்கிறது. இதில் இந்தியாவின் வளர்ச்சி குறித்து ஆக்கப்பூர்வமான கருத்துகள் எதையும் பா.ஜ.க. கூறவில்லை. இந்த தேர்தல் அறிக்கையை நாட்டு மக்கள் நிச்சயம் புறக்கணிப்பார்கள்.

  கடந்த தேர்தல்களில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் நிகழ்த்திய ஜூம்லா நாடகத்தை மீண்டும் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டு அரங்கேற்றியிருக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சியில் கச்சத்தீவை மீட்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
  • 285 ஏக்கர் பரப்பளவு கொண்ட மனித நடமாட்டம் இல்லாத கச்சத்தீவை பற்றி பிரதமர் மோடி பேசுகிறார்.

  கச்சத்தீவு விவகாரம் தற்போது பூதாகரமாக கிளம்பியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியின்போது இலங்கைக்கு தாரைவார்த்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் கட்சியை எப்போதும் நம்ப முடியாது என்று குற்றம் சாட்டினார்.

  இதனையடுத்து கச்சத்தீவு விவகாரம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார். அதில் கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவும், காங்கிரசும் தங்களுக்கு எந்த பொறுப்பும் இல்லை என்ற அணுகுமுறையை கடைபிடித்தனர். கச்சத்தீவை விட்டுக்கொடுப்பதில் தனக்கு எந்த தயக்கமும் இல்லை என அன்றைய பிரதமர் நேரு தெரிவித்தார். கச்சத்தீவு இறையாண்மை இந்தியாவுக்கே உரியது என 1958ல் அன்றைய அட்டர்னி ஜெனரல் செதால்வத் கூறினார்" என்று தெரிவித்தார்.

  இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

  "இந்தியாவிலேயே பிரதமர் நரேந்திர மோடியையும், பா.ஜ.க.வையும் மிக அதிக அளவில் வெறுக்கப்படுகிற மாநிலமாக தமிழ்நாடு இருப்பதால் அதை சகித்துக் கொள்ள முடியாமல் ஆதாரமற்ற அவதூறுகளை பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் பரப்பி வருகின்றனர். 1974 ஆம் ஆண்டு இந்திய - இலங்கை நாடுகளுக்கிடையே 50 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஒப்பந்தம் குறித்து உண்மைகளை திரித்து கருத்துகளை கூறி வருகிறார்கள். தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கும், கச்சத்தீவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

  தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்கிற போது இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர் கதையாக நிகழ்ந்து வருகிறது. மோடி ஆட்சி அமைந்த 2014 முதல் 2024 வரை 400 படகுகள் பறிமுதலும், 3179 மீனவர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கடந்த 2016 ஆம் ஆண்டு இருநாடுகளுக்கிடையே அமைக்கப்பட்ட கூட்டு நடவடிக்கைக்குழு 2020 ஆம் ஆண்டிற்கு பிறகு ஒருமுறை கூட கூடவே இல்லை. தமிழக மீனவர்களின் பிரச்சினைகளை தீர்க்க அமைக்கப்பட்ட இக்குழுவை பா.ஜ.க. அரசு ஏன் கூட்டவில்லை?

  கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சியில் கச்சத்தீவை மீட்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? கடந்த 2014 ஆம் ஆண்டு மோடி பிரதமரான பிறகு கச்சத்தீவு குறித்து தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் தலைமை வழக்கறிஞர் முகுல் ரொக்டகி உச்சநீதிமன்றத்தில் 'கச்சத்தீவை திரும்ப எப்படி மீட்க முடியும் ? அப்படி மீட்க வேண்டுமென்றால் போர் தொடுத்து தான் மீட்க முடியும். வேறு எந்த வகையிலும் மீட்க முடியாது" என்று கூறிய பிறகு கச்சத்தீவு பற்றி பா.ஜ.க.வினர் பேசுவதற்கு என்ன உரிமை இருக்கிறது ? தமிழக மீனவர்கள் எல்லைகளை பொருட்படுத்தாமல் பாரம்பரியமாக மீன்பிடிக்கிற உரிமையை பெற்றுத் தருவதற்கு கையாலாகாத பா.ஜ.க. அரசு கச்சத்தீவை பற்றி பேசுவது பிரச்சினையை திசைத் திருப்புகிற செயலாகும்.

  இப்பிரச்சினையில் 10 ஆண்டுகளாக ஒரு துரும்பைக் கூட எடுத்து போடாத ஒன்றிய பா.ஜ.க. அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பதவி பிரமாணத்தில் எடுத்துக் கொண்ட ரகசிய காப்பு உறுதிமொழியை அப்பட்டமாக மீறுகிற வகையில் கருத்து கூறியிருக்கிறார்.

  285 ஏக்கர் பரப்பளவு கொண்ட மனித நடமாட்டம் இல்லாத கச்சத்தீவை பற்றி பிரதமர் மோடி பேசுகிறார். அந்த பிரச்சினையின் மூலமாக தமிழக மீனவர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார். ஆனால், இந்தியாவுக்கு சொந்தமான லடாக் பகுதியில் 38,000 சதுர கிலோ மீட்டர் பரப்பையும், அருணாசல பிரதேசத்தில் இந்திய - சீன எல்லையில் 90,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள நிலத்தையும் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் சீனா ஆக்கிரமித்து அதன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ஆனால், பிரதமர் மோடி இந்திய எல்லைப் பகுதியில் சீன ஆக்கிரமிப்பு இல்லை என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற வகையில் கருத்து கூறியதை விட தேசதுரோகச் செயல் வேறு என்ன இருக்க முடியும்?

  சீன ஆக்கிரமிப்பு குறித்து தட்டிக் கேட்க முடியாத பலகீனமான நிலையில் உள்ள பிரதமர் மோடி, கச்சத்தீவு குறித்து பேசுவதற்கு என்ன உரிமை இருக்கிறது ? மக்களவை தேர்தலில் தமிழக மக்களின் நலனில் அக்கறை இருப்பதாக நாடகமாடுவதற்காக தான் கச்சத்தீவை பற்றி திடீரென இப்பொழுது பேசுகிறார். 10 ஆண்டுகால ஆட்சியில் கச்சத்தீவை மீட்பதற்கோ, தமிழக மீனவர்களின் கைது நடவடிக்கை, படகுகள் பறிமுதல் செய்வதை தடுத்து நிறுத்த முடியாத பிரதமர் மோடியின் சுயரூபத்தை தமிழக மீனவர்கள் நன்கு அறிவார்கள்.

  பிரதமர் மோடி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அமலாக்கத்துறை சுதந்திரமாக செயல்படுவதாக கூறியிருக்கிறார். இன்றைய நிலையில் பா.ஜ.க.வோடு கூட்டணி வைக்க எந்த அரசியல் கட்சியும் முன்வராத நிலையில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து எதிர்கட்சிகளை ஒடுக்குகிற முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட்டு வருகிறார். 2014 முதல் 2022 வரை அமலாக்கத்துறை 5493 வழக்குகள் போட்டிருக்கிறது. இதில் 90 சதவிகித வழக்குகள் எதிர்கட்சியினர் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கிறது.

  ஜார்க்கண்ட் முதலமைச்சர் சிபுசோரன், தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், தமிழக அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி உள்ளிட்ட பல எதிர்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அமலாக்கத்துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருப்பவர்கள் பா.ஜ.க.வில் சேர்ந்தால் அவர்களது சலவை எந்திரத்தின் மூலம் தூய்மையானவர்களாக ஆக்கப்பட்டு அமைச்சர் பதவி தரப்படுகிறது. இதுதான் மோடியின் ஊழல் ஒழிப்பு நாடகமாகும்.

  பா.ஜ.க. ஆட்சி தமிழக மக்களின் நலனுக்கு விரோதமாக, கார்ப்பரேட்டுகளுக்கு பாதுகாவலனாக, ஏழை, எளிய மக்களுக்கு எதிரானதாக 10 ஆண்டுகாலமாக செயல்பட்டதை பிரதமர் மோடியின் கோயபல்ஸ் பிரச்சாரத்தால் மூடி மறைக்க முடியாது. வருகிற மக்களவை தேர்தலில் பிரதமர் மோடியின் தமிழக விரோத போக்கிற்கு உரிய பாடத்தை மக்கள் நிச்சயம் புகட்டுவார்கள். அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக பதவி பிரமாண உறுதிமொழியை மீறிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை குடியரசுத் தலைவர் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

  • 10 ஆண்டுகால மக்கள் விரோத பா.ஐ.க. ஆட்சியினால் பொருளாதார போழிவு ஏற்பட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது
  • மோடி ஆட்சியில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது

  பிரதமர் மோடி கன்னியாகுமரி பாஜக பொதுக்கூட்டத்திற்கு வரும் போது கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "10 ஆண்டுகால மக்கள் விரோத பா.ஐ.க. ஆட்சியினால் பொருளாதார போழிவு ஏற்பட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. மோடி ஆட்சியில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட பகுதிகள் மழை வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட போது தமிழகம் வராத பிரதமர் மோடி, தமிழகத்திற்கு ஐந்தாவது முறையாக வர இருக்கிறார்.

  தமிழக அரசு கேட்ட நிவாரணத் தொகை ரூபாய் 37,000 கோடியில் ஒரு சல்லிக் காசு கூட தராத நிலையில், சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த நினைக்கும் பிரதமர் மோடியை கண்டித்து கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வாம் அருகே நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு அவர் வரும் போது எதிர்ப்பு தெரிவிக்கிற வகையில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜோக்குமார் அவர்கள் தலைமையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

  இதில் மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஜே.ஜி. பிரின்ஸ் மற்றும் வட்டார, நகர, பேரூர், கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முன்னணி அமைப்புகள் துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்ட பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று மோடி அரசுக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.