search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குற்றச்சாட்டு"

    • அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சி அடைந்தன.
    • ஜூன் 27-ந்தேதி செபி நோட்டீஸ் அனுப்பியது.

    அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன் பர்க், கடந்த ஆண்டு இந்தியாவின் அதானி குழுமம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அறிக்கை வெளியிட்டது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இதன் காரணமாக அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சி அடைந்தன. ரூ. 10 லட்சம் கோடி வரை பங்கு சந்தையில் அதானி குழுமம் இழப்பை சந்தித்தது. இந்த குற்றச் சாட்டை அதானி குழுமம் திட்டவட்டமாக மறுத்தது.

    ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பில் அதானி குழும மீதான வழக்கை செபி எனப்படும் இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமே விசாரிக்கும் என்று தெரிவித்தது.

    இதற்கிடையே ஹிண்டன் பர்க் நிறுவனம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், விரைவில் இந்தியாவில் மிகப்பெரிய சம்பவம் இருக்கு என்று பதிவிட்டது. இதனால் இந்தியாவைச் சேர்ந்த நிறுவனம் மீது ஹிண்டன்பர்க் புதிய குற்றச்சாட்டுகளை தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில் ஹிண்டன்பர்க் நிறுவனம் தான் அறிவித்தப்படி, புதிய குற்றச்சாட்டை வெளியிட்டது. இதில் இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியின் தலைவரான தலைவர் மாதபி புரி புச் மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது.

    அதானி குழுமத்தின் பண மோசடி தொடர்பான வெளிநாட்டு நிறுவனங்களில் மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச்சு ஆகியோர் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வாங்கியிருந்ததாக தெரிவித்தது. இதுதொடர்பாக ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அதானி குழுமம் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டது. ஆனால் அந்த குழுமத்துக்கு எதிராக எந்த பொது நடவடிக்கையும் செபி எடுக்கவில்லை. தங்கள் நிறுவனங்கள் மீது செபி எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காது என்ற ரீதியிலேயே அதானி குழும நிர்வாகத்தினர் பதில் அளித்தனர்.

    இதற்கு செபியின் தலைவரான மாதபி புச்சுடன் அதானி குழுமத்திற்குத் தொடர்பு இருக்கலாம் என்று நாங்கள் முன்பு குறிப்பிட்டிருந்தோம்.

    அதன்படி மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச்சு ஆகியோர் கவுதம் அதானியின் சகோதரரான வினோத் அதானி பயன்படுத்திய அதே பெர்முடா மற்றும் மொரிஷஸ் பண்ட் நிறுவன பங்குகளில் முதலீடு செய்துள்ளனர்.

    செபி உறுப்பினர் மாதபி புரி புச், தவால் புச்சு கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 5-ந் தேதி சிங்கப்பூரில் உள்ள ஐபிஇ பிளஸ் பண்ட் 1 இல் தங்கள் கணக்கை தொடங்கி உள்ளனர். இந்த கணக்கில் செய்யப்பட்ட முதலீட்டுக்கான ஆதாரமாக அவர்கள் சம்பளம் பெற்ற பணத்தை குறிப்பிட்டு உள்ளனர். மேலும் புச்சு தம்பதியின் நிகர சொத்து மதிப்பு 10 மில்லியன் டாலர்கள் என்று அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாதபி புச்சு 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் செபியின் முழுநேர உறுப் பினராக நியமிக்கப்பட்டார். அதற்கு சில வாரங்களுக்கு முன்பு 2017-ம் ஆண்டு மார்ச் 22-ந்தேதி, அவரது கணவர் தவால் புச்சு, மொரிஷஸில் உள்ள நிதி நிர்வாக நிறுவனமான டிரைடென்ட் டிரஸ்ட்டுக்கு எழுதிய கடிதத்தில், தனது மற்றும் மனைவியின் ஜாயின்ட் கணக்கை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

    இதன் மூலம் அந்த கணக்கு, தவால் புச்சுவின் முழு கட்டுப்பாட்டிற்கு வந்தது. அதன்பின் 2018-ம் ஆண்டு வெளியிட்ட கணக்கு விவரத்தில் புச்சு தம்பதியின் இந்த பண்டில் இருக்கும் பங்கின் மதிப்பு 872,762.25 டாலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பின்னர், 2018 பிப்ரவரி 25-ந் தேதி, மாதபி புச்சு செபி-யின் முழுநேர உறுப்பினராக இருந்தபோது, தனது கணவரின் பெயரில் வணிகம் செய்து, தனது தனிப்பட்ட இ-மெயில் மூலம் இந்திய இன்போலைன் நிறுவனத்திற்குக் கடிதம் எழுதியுள்ளார்.

    அதில், பண்டில் உள்ள பங்குகளை விற்பனை செய்யும்படி கோரியுள்ளார். தான் செபியின் தலைவராக நியமிக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்கு பிறகு தனது பெயரில் உள்ள பங்குகளை கணவர் பெயருக்கு மாதபி புரி புச் மாற்றியுள்ளார்.

    இவர்கள் அதானியின் பங்குகளில் அதிக அளவில் முதலீடுகளை செய்துள்ளனர். அதானிக்கு சரிவு ஏற்பட்டால் தங்களுக்கும் சரிவு ஏற்படும் என்று செபி அதானி மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. அதானி மீது செபி நடவடிக்கை எடுக்காமல் போனதற்கு அதன் தலைவர் மாதபி பூரி புச் அதானிக்கு சொந்தமான வெளிநாட்டு பங்குகளில் பணம் முதலீடு செய்ததே காரணம்.

    அதானி குழுமத்தின் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளவர்கள் யார் என்பது குறித்த விசாரணையில் செபி தோல்வி அடைந்துள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

    செபி உண்மையாகவே வெளிநாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளவர்கள் கண்டறிய விரும்பியிருந் தால், அதன் தலைவர்தான் தன்னை முதலில் முன் நிறுத்த வேண்டும். இதனால் அதானி விவகாரத்தில் செபியின் மந்தமான செயல்பாடுகள் ஆச்சரிய மளிக்கவில்லை.

    அதானி குழுமம் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக ஜூன் 27-ந்தேதி செபி எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதில் நாங்கள் இன்னும் வலுவான வெளிப் பாட்டை வழங்கியிருக்க வேண்டும் என்று கூறியது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செபி தலைவர் மீதான இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களில் ஒரு பிரிவினர் போர்க்கொடி.
    • மக்களுக்கு வெறுப்பை உண்டாக்கும் நோக்கத்தில் செயல்படுகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை பாராளுமன்ற தொகுதியில் ஆளுங்கூட்டணியின் தோல்விக்கு பிறகு என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா இடையிலான விரிசல் அதிகரித்துள்ளது.

    முதலமைச்சர் ரங்கசாமியின் செயல்பாடுகளால்தான் தேர்தலில் தோல்வியடைந்தோம். எனவே முதலமைச்சருக்கு தரும் ஆதரவை வாபஸ் பெற வேண்டும் என்றும் பா.ஜனதா அமைச்சர்களை மாற்ற வேண்டும் என பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களில் ஒரு பிரிவினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

    பா.ஜனதா தேசிய தலைவர் நட்டா, மத்திய மந்திரி மெக்வால், அமைப்பு செயலர் சந்தோஷ் ஆகியோரை சந்தித்தும் புகார் கூறினர். மத்திய மந்திரி அமித்ஷாவை சந்திக்க முயற்சித்தனர். ஆனால் நேரம் கிடைக்கவில்லை.

    அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் பா.ஜனதா மேலிட பார்வையாளர் சுரானா முயற்சியும் தோல்வியடைந்தது.

    இந்த நிலையில் புதுவை சட்டசபையில் இன்று முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார்.

    புதுவை சட்டசபைக்கு அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஓரணியாக வந்தனர். முதலமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்யும்போது, சட்டசபை வளாகத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்று நல்லாட்சி அளித்து வருகிறார். அவர் தலைமையில் நடந்த நிதி ஆய்வுக்குழு கூட்டத்தில் புதுவை முதலமைச்சர் கலந்து கொள்ளவில்லை. புதுவையில் பா.ஜனதா மீது மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தோடு முதலமைச்சர் ரங்கசாமி செயல்பட்டு, பட்ஜெட் தாக்கல் செய்வது வருத்தம் அளிக்கிறது.

    ஆந்திரா, பீகாருக்கு பல கோடி மத்திய அரசு வழங்கியுள்ளது. அவர்கள் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கும் முன்பாக ஒரு வாரம் டெல்லியில் முகாமிட்டு, ஒவ்வொரு துறை அமைச்சரையும் சந்தித்து மாநில வளர்ச்சிக்காக நிதி ஒதுக்க கோரினர். அந்த அடிப்படையில்தான் மத்திய அரசு நிதியை வாரி வழங்கியுள்ளது.

    புதுவை முதலமைச்சரும் மாநிலம் வளர்ச்சியடைய வேண்டும் என நினைத்திருந்தால், மத்திய அரசின் நிதிஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு நமக்கு தேவையான நிதியை பெற்றிருக்க முடியும்.

    ஒவ்வொரு மத்திய அமைச்சர்களையும் துறை வாரியாக சந்தித்து ஒவ்வொரு திட்டத்தின் மூலமாகவும் ரூ.50 கோடி என பெற்றிருந்தால்கூட புதுவை மாநில பட்ஜெட் தொகையை விட கூடுதலாக ரூ.2 ஆயிரம் கோடி கிடைத்திருக்கும்.

    பிரதமர் பதவியேற்பு, நிதிஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது, பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகளை புறக்கணிப்பது, மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்ற பொய்யான கூற்றை மக்களிடையே உருவாக்குவதன் மூலம் புதுவையில் பா.ஜனதா மீது மக்களுக்கு வெறுப்பை உண்டாக்கும் நோக்கத்தில் முதலமைச்சர் ரங்கசாமி செயல்பட்டு வருகிறார்.

    புதுவையில் அளவுக்கு அதிகமான ரெஸ்டோபார்களுக்கு தொகுதி எம்.எல்.ஏ.க்களை கலந்து ஆலோசிக்காமல் அனுமதி வழங்குகிறார். மருத்துவமனை, அரசு பள்ளிகள், வழிபாட்டு தலங்கள் உள்ள இடங்களில் ரெஸ்டோபார் அமைக்க அனுமதி வழங்கியதுதான் முதல்- அமைச்சர் ரங்கசாமி 3 ஆண்டு செய்த சாதனை.

    முதல்- அமைச்சர் மத்திய அரசை நேரடியாக சந்தித்து, மாநில வளர்ச்சிக்கான முழு நிதியையும் பெற்று புதுவையை ஒரு முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • காலக்கெடு நீட்டிப்பதால் எந்த பயனும் இல்லை.
    • வன்மத்தின் காரணமாகவே உள் இட ஒதுக்கீடு வழங்க மறுக்கிறது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்ட 20 சதவீதம் இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கத் தடையில்லை என்று 2022-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.

    அதன்பின் 10 மாதங்கள் கழித்து 12.01.2023-ம் வன்னியர்களுக்கு உள் இடஓதுக்கீடு வழங்குவது பற்றி 3 மாதங்களில் பரிந்துரைக்கும்படி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு தமிழக அரசு ஆணையிட்டது.

    ஆனால், வழங்கப்பட்ட கெடுவுக்குள் வன்னியர் இட ஒதுக்கீடு குறித்த அறிக்கையை ஆணையம் தாக்கல் செய்யாத நிலையில், அடுத்தடுத்து 6 மாதங்கள், 3 மாதங்கள், 6 மாதங்கள் என மேலும் 15 மாதங்களுக்கு கூடுதல் காலக்கெடு வழங்கப்பட்டது.

    ஒட்டு மொத்தமாக வழங்கப்பட்ட 18 மாதக் கெடுவும் ஜூலை 11-ம் நாளுடன் முடிந்து விட்டது. இப்போதும் அறிக்கை தாக்கல் செய்யப்படாத நிலையில் தான் ஓராண்டு கூடுதல் கெடு வழங்கப்பட்டுள்ளது.

    இவை எந்த அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு காலநீட்டிப்பு வழங்கப்பட்டது? கால நீட்டிப்பு கோருவதற்காக ஆணையம் கூறிய காரணம் என்ன?

    ஆணையம் எந்தக் காரணமும் கூறவில்லை என்றால், காலநீட்டிப்பு வழங்கப்பட்டது ஏன்? ஆணையம் நீட்டிய இடத்தில் கையெழுத்து போடும் அளவுக்கு அரசு பலவீனமடைந்து விட்டதா?

    வன்னியர் இடஒதுக்கீடு குறித்து பரிந்துரைப்பதற்காக ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள அடுத்த ஓராண்டு காலத்தில் அது என்னென்ன பணிகளைச் செய்யும்? என்பது போன்ற வினாக்களை தமிழக அரசு கேட்டிருக்க வேண்டும். ஆனால், எந்த எதிர்வினாவும் கேட்காமல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கோரியவாறே ஓராண்டு காலநீட்டிப்பை அரசு வழங்கியுள்ளது.

    மு.க.ஸ்டாலின் வெளிப்படையாக அறிவித்த நிலைப்பாட்டின்படி தமிழக அரசு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தப்போவதில்லை என்றும் மத்திய அரசும் உடனடியாக சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறியுள்ளார்.

    இவை நடக்காத நிலையில், வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க ஆணையத்திற்கு காலக்கெடு நீட்டிப்பதால் எந்த பயனும் இல்லை.

    இது அரசுக்கும், ஆணையத்திற்கும் தெரியும். ஆனாலும் நீ அடிப்பது போல அடி, நான் அழுவதைப் போல அழுகிறேன் என்று தமிழக அரசும், ஆணையமும் இணைந்து வன்னியர் சமூகநீதிக்கு எதிராக நாடகமாடுகின்றன.

    இன்னொருபுறம் வன்னியர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்த தரவுகளே இல்லை என்று ஆணையம் கூறியுள்ளது.

    ஆனால், வன்னியர்கள் 10.50 சதவீக்கும் கூடுதலான பிரதிநிதித்துவத்தைப் பெறுகிறார்கள் என்று அமைச்சர் சிவசங்கர் சட்டப்பேரவையில் கூறுகிறார். அப்படியானால் ஆணையம் கூறுவது பொய்யா? இல்லை, அமைச்சர் கூறுவது பொய்யா?

    அண்மையில் நடத்தி முடிக்கப்பட்ட முதல் தொகுதி தேர்வுகளில் கூட வன்னியர்களுக்கு 5 சதவீதத்துக்கும் குறைவான பிரதிநிதித்துவம் தான் கிடைத்திருக்கிறது. இது உள்ளிட்ட அனைத்துத் தரவுகளும் தமிழக அரசிடமும், ஆணையத்திடமும் உள்ளன.

    வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிவிடக் கூடாது என்பதற்காக தரவுகள் இல்லை என்று கூறி அரசு ஏமாற்றுகிறது. அதன் நாடகத்திற்கு ஆணையமும் துணை போகிறது.

    வன்னியர்களால் வளர்ந்த தி.மு.க., இப்போது வன்னியர்கள் மீது கொண்டிருக்கும் வஞ்சம் மற்றும் வன்மத்தின் காரணமாகவே உள் இட ஒதுக்கீடு வழங்க மறுக்கிறது.

    தி.மு.க.வின் இந்த நாடகங்களை உழைக்கும் பா.ம.க. நன்றாக அறிவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தி.மு.க ஆட்சியிலே எந்த சம்பவங்களும், வன்முறை சம்பவங்களும் ஆட்சியோடு தொடர்புடையவை அல்ல.
    • எங்களுடைய முதலமைச்சர் எதையும் தைரியமாக சொல்லக்கூடியவர், ஏற்றுக் கொள்ள கூடியவர்.

    அமைச்சர் ரகுபதி செய்தியாளர் சந்திப்பில் கூறியிருப்பதாவது,

    சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு கொலை மாநிலமாக மாறிவிட்டது என்ற புதிய குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

    தமிழ்நாடு கொலை மாநிலம் அல்ல. கலை மற்றும் அறிவுசார் மாநிலம் தான் தமிழ்நாடு. சமூக விரோதிகளை களை எடுக்கின்ற மாநிலம் தமிழ்நாடு. இதை பழனிச்சாமி உணர்ந்து கொள்ள வேண்டும்.

    அவரது ஆட்சியில் நடந்த சம்பவங்கள் ஆட்சியில் தொடர்பு உடையவை. ஆனால் தி.மு.க ஆட்சியிலே எந்த சம்பவங்களும், வன்முறை சம்பவங்களும் ஆட்சியோடு தொடர்புடையவை அல்ல.

    அதிமுக தொடர்பான சம்பவம் என்று எடுத்துக் கொண்டால் அது அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவினுடய கேம்ப் அலுவலகமாக இருந்தது. அங்கு கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன. அது ஆட்சியாளரினுடைய திறமையின்மையை காண்பிப்பதாக இருந்திருக்கிறது அல்லது ஏதோ சதி திட்டத்தின் அடிப்படையில் நடந்துள்ளது.

    அன்றைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி துப்பாக்கி சம்பவம் எனக்கு தெரியாது என்று கூறியிருக்கிறார். 13 பேர் உயிரிழந்தது டிவியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் கூறியிருந்தார். அன்று அதை ஒப்பு கொள்ளவில்லை.

    ஆனால் எங்களுடைய முதலமைச்சர் எதையும் தைரியமாக சொல்லக்கூடியவர், ஏற்றுக் கொள்ள கூடியவர்.

    26, 27, 28 ஆகிய தேதிகளில் நடைப்பெற்ற சம்பவங்களில் ஒன்று புதுச்சேரியை சேர்ந்தது. அதையும் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டு கணக்கில் எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்திருக்கிறார்.

    மீதம் உள்ள 4 வன்முறை சம்பவங்கள் எதுவும் அரசாங்கத்திற்கு தொடர்புடையவை அல்ல. இந்த சம்பவங்கள் அனைத்து அவர்களுக்குள் முன்விரோதம், பகைமை அடிப்படையில் ஏற்பட்ட சம்பவங்கள் நடந்திருக்கிறதே தவிர இதில் எதுவும் சட்டவிரோதம் சம்பவம்மும் இல்லை.

    ஒரு காலத்தில் 4 கோடி மக்களுக்கு தலைவர் என்று தலைவர் கலைஞரை சொல்லுவோம். இன்றைக்கு 8 கோடி மக்களுக்கு தலைவராக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார். மக்கள் தொகையும் உயர்ந்திருக்கிறது இதுபோன்ற சம்பவங்களும் கூடவும் செய்யும் குறையவும் செய்யும். ஆனால் அதற்கு அரசாங்கம் எந்த வகையிலும் பொறுப்பாக முடியாது.

    அதே வேளையில் யார் யாருக்கு முன் விரோதம் இருக்கிறது என்பதையும் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறோம். ரவுடிகளின் பட்டியலை வைத்து அவர்களுக்குள் ஏதாவது விரோதம் இருக்கிறதா என்பதை குறித்து விசாரணை நடத்த காவல் துறைக்கு முதலமைச்சர் உத்தரவிட்டு அப்படி ஏதாவது பிரச்சனை இருப்பின் அதை தீர்த்து வைக்க முன்நடவடிக்கை எடுப்பவதாக முதலமைச்சர் இருக்கிறார்.

    ஆகவே சட்டம் ஒழுங்கை நாங்கள் சிறப்பாக பேணி பாதுகாப்பதால் தான் இந்தியாவிலேயே முதன்மையாக மாநிலமாக நமது தமிழ்நாடு இருக்கிறது என்பதை யாரும் மறந்துவிட முடியாது, மறுக்கவும் முடியாது

    அதனால்தான் நிறைய தொழிலதிபர்கள் நம்மை நாடி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி போன்றவர்கள் இதை வேறு கோணத்திலே மாற்றிவிட்டு இந்த சமூகத்தை பின்நோக்கி தள்ளிவிட முடியுமா என கனவு காண்கிறார்கள். அவர்களுடைய கனவு ஒரு காலத்திலும் பலிக்காது. இவை அனைத்தையும் முதலமைச்சர் வென்று காட்டுவார். தமிழ்நாடு தான் இந்தியாவிலேயே சிறந்த அமைதி பூங்கா என்பதை நிருப்பித்து காட்டுவார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சட்டம்-ஒழுங்கு முழுமையாக தோல்வியடைந்துவிட்டது.
    • காவல்துறை அதன் கடமையை தட்டிக்கழிக்கக் கூடாது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் ஒரே நாளில் மட்டும் 3 கொடிய அரசியல் படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. கடலூர் நகர அ.தி.மு.க. வட்ட செயலாளரான பத்மநாதன் சிவகங்கை மாவட்டம் வேலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் கூட்டுறவு அணி மாவட்ட செயலாளர் செல்வகுமார், திருவட்டார் பேரூராட்சியின் காங்கிரஸ் உறுப்பினர் உஷாராணியின் கணவர் ஜாக்சன் ஆகிய 3 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு முழுமையாக தோல்வியடைந்துவிட்டது என்பதையே இந்த படுகொலைகள் காட்டுகின்றன.

    படுகொலை செய்யப் பட்டவர்கள் அனைவருமே முன்விரோதம் காரணமாகத் தான் படுகொலை செய்யப்பட்டார்கள் என்று கூறி காவல்துறை அதன் கடமையை தட்டிக்கழிக்கக் கூடாது. கொல்லப்பட்ட மூவருக்குமே முன்விரோதம் இருந்திருக்கிறது என்பது உண்மை தான்.

    அரசியலில் இருக்கும் ஒருவருக்கு எவருடனாவது முன்விரோ தம் இருந்தால், அவரது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று தான் பொருள் ஆகும். அதனால், அவர்களுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஆய்வு செய்து, அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய காவல்துறை தவறி விட்டது.

    கொடூரமான அரசியல் படுகொலைகள் ஒரு புறம் இருக்க போதைக் கலாச்சார மும், அதனால் நிகழும் குற்றச்செயல்களும் தலை விரித்து ஆடுகின்றன.

    சென்னை காசிமேடு பகுதியில், 17 வயது சிறுவன் கஞ்சா போதையில் கையில் கத்தியுடன், இன்னொரு சிறுவனை கொடூரமாக தாக்கும் காணொலி காட்சிகள் இணைய தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. தடை செய்யப்பட்ட கஞ்சா போதைப் பொருள், 17 வயதான சிறுவனால் எளிதில் வாங்கும் அளவுக்கு தாராளமாக புழக்கத்தில் உள்ளது என்றால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்கெட்ருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தலையாயக் கடமை சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பது தான். ஆனால், எந்த அச்சமும் இல்லாமல் குற்ற வாளிகள் நடமாடுகின்றனர். இதைத் தடுக்க முடியாமல் காவல்துறை திணறிக் கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜெயக்குமாரின் மர்மச்சாவு குறித்த சி.பி.சி.ஐ.டி. விசாரணை மந்த கதியிலேயே உள்ளது.
    • நாம் நமது கருத்தை ஆழமாக பதிவு செய்தால் தான் மக்களை நம்மை திரும்பி பார்ப்பார்கள்.

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கே.பி.கே.ஜெயக்குமார் கடந்த மே மாதம் 4-ந்தேதி உடல் எரிக்கப்பட்ட நிலையில் கரைசுத்து புதூரில் அவரது வீட்டுக்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.

    அவரது சாவில் மர்மம் நீடித்து வந்த நிலையில் வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒரு மாதத்துக்கும் மேலாக பல்வேறு கோணங்களில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசியும் நெல்லைக்கு நேரடியாக வருகை தந்து விசாரணையை மேற்கொண்டார்.

    ஆனாலும் இதுவரை பெரிதாக துப்பு துலங்கவில்லை. ஜெயக்குமாரின் மர்மச்சாவு குறித்த சி.பி.சி.ஐ.டி. விசாரணை மந்த கதியிலேயே உள்ளது.

    இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது கார்த்தி சிதம்பரம் பேசியதாவது,

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொடுங்கொலை செய்யப்பட்டார். இந்தியாவை ஆண்ட கட்சியின் மாவட்ட தலைவர் கொலை செய்யப்பட்டதற்கு இன்று வரை இந்த அரசு ஒருவரை கூட கைது செய்யவில்லை. காவல்துறை என்கவுண்டர் செய்வது சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதற்கு அல்ல.. அந்த வழக்கை முடிப்பதற்காக தான் என்கவுண்டர் செய்கிறார்கள். இப்போது கூலிப்படை கொலைகள் நடைபெறுகிறது அதை பற்றியும் நாம் பேசியாக வேண்டும். அதுபோல மின்கட்டண உயர்வு பற்றியும் நாம் பேசியாக வேண்டும். திருமாவளவனுக்கு இருக்கும் உரிமை நமக்கு இல்லையா? கம்யூனிட்டுகளுக்கு இருக்கும் உரிமை நமக்கு இல்லையா? நாம் நமது கருத்தை ஆழமாக பதிவு செய்தால் தான் மக்களை நம்மை திரும்பி பார்ப்பார்கள் என்று கூறியுள்ளார்.

    • ரத்தத்தில் சர்க்கரை அளவு 5 முறை குறைந்துள்ளது.
    • ஆம் ஆத்மி கட்சிக்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இதற்கிடையே கெஜ்ரிவாலின் எடை 8.5 கிலோ குறைந்துள்ளதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. மார்ச் 21 அன்று அமலாக்கத் துறை கைது செய்த போது கெஜ்ரிவாலின் எடை 70 கிலோவாக இருந்தது என்றும், தற்போது அவரது எடை 61.5 கிலோவாக குறைந்துள்ளது என்றும் அந்த கட்சி தெரிவித்துள்ளது.

    மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவு 5 முறை குறைந்துள்ளது என்று டெல்லி மந்திரி அதிஷி தெரிவித்தார்.

    இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சிக்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் கெஜ்ரிவாலின் எடை 2½ கிலோ மட்டுமே குறைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 11 பொய் வழக்குகளில் இதுவும் ஒரு பொய் வழக்கு.
    • எனது உயிருக்கு பாதுகாப்பில்லை.

    திருச்சி:

    விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் ஆகியோர் பிரசாரம் செய்தனர்.

    அப்போது தமிழக அரசு குறித்தும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்தும் அவதூறாக பேசியதாக சாட்டை துரைமுருகன் மீது திருச்சி சிறுகமணி பேரூராட்சி கவுன்சிலர் அருண் கொடுத்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    அதன் பின்னர் தென்காசி மாவட்டம் வீராணம் பகுதியில் தனியார் ஓட்டலில் தங்கி இருந்த அவரை திருச்சி தனிப்படை போலீசார் நேற்று கைது செய்து திருச்சி மாஜிஸ்திரேட் எண் 3 ஆஜர் படுத்தினர.

    நீதிபதி அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பாமல் ஜாமீனில் விடுவித்தார். பின்னர் சாட்டை துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

    தி.மு.க. அரசு என் மீது போட்ட 11 பொய் வழக்குகளில் இதுவும் ஒரு பொய் வழக்கு. எங்கள் தரப்பு வக்கீல்கள் வைத்த வாதங்களின் அடிப்படையில் நீதிபதி என்னை விடுவித்துள்ளார்

    14 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சி பட்டியலின மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அரசியல் செய்து வருகிறது. ஆனால் என்னை எஸ்.சி., எஸ்.டி. பி.சி.ஆர். சட்டத்தின் கீழ் முடக்க பார்க்கிறார்கள்.

    நான் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவன். அந்த மக்களுக்காகவே அதிகமாக குரல் கொடுத்துள்ளேன்.

    நான் மேற்கோள் காட்டி பாடிய பாடல் 31 ஆண்டுகளாக அ.தி.மு.க.வின் தேர்தல் பிரச்சார பாடலாக உள்ளது.

    சண்டாளன் என்ற சொல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான வார்த்தை என்பது சத்தியமாக எனக்கு தெரியாது. யாரும் இந்த அரசுக்கு எதிராக பேசக்கூடாது என தி.மு.க. அரசு அடக்கு முறையை கையாள்கிறது.

    பா.ஜ.க.வை பாசிசம் என்று சொல்லும் தி.மு.க.வுக்கு இது பாசிசம் என்பது தெரியாதா?

    இந்த வழக்குக்கு எந்த தொடர்பும் இல்லாத எனது கைபேசியை முதலில் போலீசார் பறித்துக் கொண்டார்கள்.

    என்னை கைது செய்தால் போலீசாரின் டெம்போ வேனில் அழைத்து வர வேண்டும். அதற்கு மாறாக என் காரிலேயே அழைத்து வந்தனர். அப்போது டிரைவர் முழு போதையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் மதுரை ஆகிய இரண்டு இடங்களில் என்னை விபத்துக்குள்ளாக்கி கொலை செய்ய பார்த்தது.

    மதுரையில் விபத்து நடந்து கார் சேதமடைந்த பின்னரே போலீஸ் வேனில் ஏற்றினர். எனது உயிருக்கு பாதுகாப்பில்லை. நீதிமன்றம் தான் என் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அண்ணாமலை மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளது.
    • உரிய வகையில் வழக்கை சந்திப்பேன்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தன்மீது வழக்கு தொடர்ந்தது பற்றி தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக அவருக்கு நான் ரூ.2 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீசு அனுப்பி இருந்தேன். அதற்கு அவரிடம் இருந்து பதில் இல்லை.

    இப்போது கோர்ட்டுக்கு சென்றுள்ளார். அதை சந்திக்க தயார். அண்ணாமலை மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளது. அதை ஒவ்வொன்றாக கோர்ட்டில் நிரூபிப்போம்.

    சென்னை விமான நிலையத்தில் ரூ.167 கோடிக்கு தங்கம் பிடிபட்ட விவகாரத்தை திசை திருப்ப கோர்ட்டுக்கு சென்றுள்ளார். யாரும் அதைப் பற்றி பேச மாட்டார்கள். பயந்து விடுவார்கள் என நினைக்கிறார். குற்றவாளியுடன் அவர் இருக்கும் புகைப்படம் வெளி வந்துள்ளதே?

    பா.ஜ.க. தலைவர்களின் புகைப்படம் வந்ததற்கு இன்னும் அவர் பதில் சொல்லவில்லையே?

    இப்போது கோர்ட்டில் என்ன கூறி உள்ளார் என முழுமையாக தெரியவில்லை அதன் நகல் கிடைத்தது. பார்த்துவிட்டு உரிய வகையில் வழக்கை சந்திப்பேன்.

    கள்ளக்குறிச்சி விவகாரம் சம்பந்தமாக அண்ணாமலை மீது ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டு 4-ந்தேதி நோட்டீசுக்கு பதில் அனுப்பி உள்ளேன். அதை 6-ந்தேதி அவரது வக்கீல் பால் கனகராஜ் வாங்கி இருப்பார் என கருதுகிறேன்.

    அண்ணாமலை பற்றி நிறைய தகவல்கள் வெளிவரத் தொடங்கி விட்டது.

    நான் மட்டுமல்ல, மற்ற தலைவர்களும் இதுபற்றி பேச ஆரம்பித்துவிட்டனர். இனிமேல் அண்ணாமலை பற்றி ஒவ்வொன்றாக வெளிவரும். என்னைப்போல் மற்ற தலைவர்களும் வெளியிடுவார்கள்.

    • அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 5-ந் தேதி நடைபெற உள்ளது.
    • ஜனநாயகத்தை ஒரு சர்வாதிகாரமாக மாற்ற விரும்புகிறார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 5-ந் தேதி நடைபெற உள்ளது.

    இதில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோபை டன் (வயது 81), குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (வயது 78) ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

    இந்த நிலையில் டிரம்ப்பை துணை அதிபர் கமலா ஹாரிஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். லாஸ்வேகாசில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கமலாஹாரிஸ் பேசியதாவது:-

    டிரம்பின் ஆலோசகர்கள் 900 பக்க வரைபடத்தை உருவாக்கி, "திட்டம் 2025" என்று அழைக்கிறார்கள். இது சமூகப் பாதுகாப்பைக் குறைக்கும் திட்டம். இதில் கருத்தடைக்கான அணுக்களை கட்டுப்படுத்தும் திட்டம் உள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், இனப்பெருக்க சுதந்திரத்தின் மீதான டிரம்பின் முழு தாக்குதலாக இருக்கும்.

    டிரம்ப்புக்கு வாய்ப்பு கிடைத்தால், அவர் ஒவ்வொரு மாநிலத்திலும் கருக்கலைப்பை தடை செய்யும் தேசிய கருக்கலைப்பு தடையில் கையெழுத்திடுவார். ஆனால் நாங்கள் அதை நடக்க அனுமதிக்கப் போவதில்லை. ஏனென்றால், பெண்களை நாங்கள் நம்புகிறோம். பெண்களுக்கு அவர்களின் சொந்த நலனில் என்ன இருக்கிறது என்பதை நாங்கள் அறிவோம்.

    அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று அரசாங்கம் அவர்களுக்கு சொல்லத் தேவையில்லை. டிரம்ப் நமது ஜனநாயகத்தை ஒரு சர்வாதிகாரமாக மாற்ற விரும்புகிறார். அவர் அமெரிக்க ஜனநாயகத்தை சர்வாதிகார நாடாக மாற்றி விடுவார். எனது தாய் மார்பக புற்றுநோய் ஆராய்ச்சியாளராக இருந்தார். அவரது வாழ்க்கையில் இரண்டு குறிக்கோள்கள் இருந்தன.

    அவை தனது இரண்டு மகள்களை வளர்ப்பது மற்றும் மார்பக புற்றுநோயை முடிவுக்குக் கொண்டு வருவது ஆகியவை ஆகும். எனது தாய் அவரது கனவுகளைத் தொடர யாரிடமும் அனுமதி கேட்கவில்லை.

    இது நமது வாழ்நாளின் மிக முக்கியமான தேர்தல். இந்த தேர்தல் கடினமாக இருக்கும் என்பதை எப்போதும் அறிந்திருக்கிறோம். சில நாட்களாக அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடுவது என்பது எளிதானது அல்ல என்பதை நினைவூட்டுகிறது. ஆனால் அதிபர் ஜோபைடனைப் பற்றி நாம் அறிந்த ஒன்று என்னவென்றால் அவர் ஒரு போராளி. இவ்வாறு அவர் கூறினார்.

    • தாழ்த்தப்பட்ட சமுதாயமும், வன்னிய சமுதாயமும் பெரிய சமுதாயங்களாகும்.
    • திராவிடக் கட்சிகள் நம்மை பிரித்து சூழ்ச்சி செய்து வருகின்றன.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து காணை காலனி பகுதியில் அக்கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தேர்தல் பிரசாரம் செய்து பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தாழ்த்தப்பட்ட சமுதாயமும், வன்னிய சமுதாயமும் பெரிய சமுதாயங்களாகும். தமிழக மக்கள் தொகையில் 40 சதவீதம் இந்த இரு சமுதாயத்தினர்தான் உள்ளனர். இந்த இரு சமுதாயங்களும் ஒன்று சேர்ந்து விட்டால், வேறு எந்த கட்சிகளும் நமக்கு தேவையில்லை.

    வன்னியருக்கு எதிரி தாழ்த்தப்பட்டோர் என்றும், தாழ்த்தப்பட்டோருக்கு எதிரி வன்னியர் என்றும் நிலையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாகியும் நம்மை முன்னேறவிடாமல் வைத்திருக்கிறார்களே, அவர்கள் தான் நம் முதல் எதிரி. திராவிடக் கட்சிகள் நம்மை பிரித்து சூழ்ச்சி செய்து வருகின்றன.

    நான் இங்கு அரசியல் பேச வரவில்லை. நியாயம் கேட்க வந்திரு க்கிறேன்.1949-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தி.மு.க.வில், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்தது 1999-ல் தான்.

    ஆனால், பா.ம.க.வில் 1998-ம் ஆண்டிலேயே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச்சேர்ந்த தலித் ஏழுமலைக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

    அதுபோல, அம்பேத்கர் சிலையை தமிழகத்தில் அதிகளவில் திறந்தவர்பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் தான். உங்களை வாக்கு வங்கியாகத்தான் அவர்கள் பார்க்கிறார்கள். நீங்கள் முன்னேற வேண்டும் என்பதுதான் பா.ம.க.வின் எண்ணம்.

    நமக்குள் சண்டை, பிரச்சினை எதற்கு?. நாம் ஒன்று சேர்ந்தால் இவர்களுக்கு வேலை இல்லை. தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞர்களே சிந்தித்துப்பாருங்கள். நாம் முன்னேற வேண்டும். நமக்கு ஆட்சி அதிகாரம் வேண்டும். இந்த இடைத்தேர்தல் மூலம் மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினால்தான் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் மாறுவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பீகார் மாநிலத்தில் கடந்த 15 நாட்களில் 9 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது.
    • பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சியில் இருப்பதால் கோடி மீடியாக்கள் இந்த விவகாரத்தை பற்றி பேசுவதில்லை.

    பீகார் மாநிலம் சிவன் மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஒரே நாளில் 2 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பாலம் இடிந்து விழுந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடிந்து விழுந்த 2 பாலங்களும் எம்பி பிரபுநாத் சிங் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    பீகார் மாநிலத்தில் கடந்த 15 நாட்களில் 9 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது. இவ்வாறு பாலங்கள் தொடர்ந்து இடிந்து விழுவது பீகாரில் பாஜக கூட்டணியில் நிதிஷ் குமார் தலைமையில் உள்ள ஆளும் ஜனதா தள கட்சி மீது விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.

    இந்நிலையில் பீகாரில் தொடர்ந்து பாலங்கள் இடிந்து விழுந்து வருவதை அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளார். 

    அதில், "பா.ஜ.க கூட்டணியில் ஊழல் ஆட்சியில், பீகார் மாநிலத்தில், கடந்த 15 நாட்களில் 9 பாலங்களில் இடிந்து விழுந்துள்ளன. குறிப்பாக, இன்று (03.07.24) மட்டும், 3 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன.

    இந்த விவகாரத்தில் யார் குற்றவாளி என்பதை 18 ஆண்டுகால தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சொல்ல வேண்டும். ஆனால் பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சியில் இருப்பதால் கோடி மீடியாக்கள் இந்த விவகாரத்தை பற்றி பேசுவதில்லை.

    ஆனால், 6 கட்சிகள் அடங்கிய இரட்டை இயந்திர ஆட்சிக்கு 15 நாட்களில் பல ஆயிரம் கோடி மதிப்பிலான 10 பாலங்கள் இடிந்து விழுந்த பிறகும், எதிர்க்கட்சிகளை குறை சொல்ல எந்த சாக்குபோக்கும் கிடைக்காமல் இருப்பது விசித்திரமாக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

    ×