search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அதிகாரிகள் மீது முதலமைச்சர் ரங்கசாமி பாய்ச்சல்- சாதாரண வேலையை கூட செய்ய முடியவில்லை என குற்றச்சாட்டு
    X

    அதிகாரிகள் மீது முதலமைச்சர் ரங்கசாமி பாய்ச்சல்- சாதாரண வேலையை கூட செய்ய முடியவில்லை என குற்றச்சாட்டு

    • ஸ்மார்ட் என்ற வார்த்தையை கேட்டதும் முதலமைச்சர் ரங்கசாமி டென்சன் ஆனார்? அதென்ன ஸ்மார்ட் பணி? என அங்கிருந்த அதிகாரிகளை துளைத்தெடுத்தார்.
    • நிலத்தை சமப்படுத்துற வேலை கம்ப சூத்திரமா? முடிவெடுக்கிற நிலையில் நாம் இல்லை. இதற்கு டெல்லிக்கு போய் ஒரு நிறுவனத்தை அழைத்து வர வேண்டியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சி 2 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது.

    ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும், அரசின் முடிவுகளை செயல்படுத்துவதில் பெரும் முட்டுக்கட்டைகள் இருப்பதாகவும், மாநில அந்தஸ்து கிடைத்தால்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகளை துரிதமாக செயல்படுத்த முடியும் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி விழாக்களில் தெரிவித்து வருகிறார்.

    சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு தலைமையில் மாநில அந்தஸ்து போராட்ட ஒருங்கிணைப்பு குழு முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்தபோது, மாநில அந்தஸ்து இல்லாததால் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை என அவர் அங்கலாய்த்தார்.

    வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் புதுவைக்கு மாநில அந்தஸ்து கேட்டு மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில் புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் மீன் அங்காடி வளாகத்தில் ஸ்மார் சிட்டி நகர கட்டுப்பாட்டு மையம் அமைப்பது குறித்து முதலமைச்சர் ரங்கசாமி ஆய்வு செய்தார்.

    அப்போது ஸ்மார்ட் சிட்டி பணிகள் குறித்த விபரங்களை ரங்கசாமி அதிகாரிகளிடம் கேட்டார். அதற்கு அதிகாரிகள், சி.சி.டி.வி., நவீன சிக்னல் அனைத்தும் ஸ்மார்ட் பணிகளாக இருக்கப்போவதாக பெருமையுடன் கூறினர்.

    ஸ்மார்ட் என்ற வார்த்தையை கேட்டதும் முதலமைச்சர் ரங்கசாமி டென்சன் ஆனார்? அதென்ன ஸ்மார்ட் பணி? என அங்கிருந்த அதிகாரிகளை துளைத்தெடுத்தார்.

    அதிகாரிகளை கடிந்து முதலமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:

    நகர் பகுதியில் சாக்கடை கால்வாய்கள் மேலே சிலாப் போட வேண்டும் என 1½ ஆண்டாக கூறுகிறேன்.

    அதை செய்ய முன்வரவில்லை. மக்கள் என்ன நினைப்பார்கள்? அரசைத்தான் குறை கூறுவார்கள்.

    அப்புறம் என்ன ஸ்மார்ட் பணி? அப்படி, இப்படியென சாலை அமைத்துள்ளோம். அரசு நினைக்கிற மாதிரி எதுவும் வரலை, வரும் ஆண்டிலாவது ஏதாவது செய்ய முடியுமா? என யோசிக்கிறேன். அதற்குள் எந்தெந்த செயலர் மாறுகிறார்களோ? வரும் செயலர்கள் எதை பார்த்து பயப்படுவார்களோ? என தெரியாது.

    பொதுப்பணித்துறை உதவாக்கரையாக உள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 3 ஏக்கர் நிலத்தில் பஸ்ஸ்டாண்டு அமைக்க எதுவும் செய்யவில்லை. நிலத்தை சமப்படுத்தி மண் அடித்தால் போதும். பஸ்கள் நிற்கும். இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும்.

    இங்கு 4 பில்லர் அமைத்து ஷெட் போட்டு பஸ்ஸ்டாண்டு ஆரம்பிக்க பொதுப்பணித்துறைக்கு தெரியலை. இதுக்கு டெல்லி போய் என்.ஓ.சி., அது, இதுன்னு சொல்லி விடிய, விடிய டிஸ்கஷன் செய்யுறாங்க.

    நிலத்தை சமப்படுத்துற வேலை கம்ப சூத்திரமா? முடிவெடுக்கிற நிலையில் நாம் இல்லை. இதற்கு டெல்லிக்கு போய் ஒரு நிறுவனத்தை அழைத்து வர வேண்டியுள்ளது. அவர்கள் திட்டமதிப்பீட்டிற்கும், நம் திட்ட மதிப்புக்கும் சம்பந்தம் இல்லை.

    இதை சரிசெய்யும் வரை நாம் உட்கார்ந்திருக்க வேண்டும். சாதாரண வேலையை செய்ய முடியாம ஜவ்வா இழுக்கின்றனர். எரிச்சலாக உள்ளது. ஒரு முடிவு கூட பண்ண முடியவில்லை. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் லபோ திபோன்னு பேச போறாங்க.

    இவ்வாறு ரங்கசாமி கூறினார்.

    இதை அங்கிருந்த அதிகாரிகள் எந்தவித கருத்தையும் கூறாமல் கப்சிப் என அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தனர்.

    Next Story
    ×