என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உயர் அதிகாரிகள் சொன்னதை செய்ததால் எனக்கு தண்டனை  -போலீஸ் இன்ஸ்பெக்டர் குற்றச்சாட்டு
    X

    உயர் அதிகாரிகள் சொன்னதை செய்ததால் எனக்கு தண்டனை -போலீஸ் இன்ஸ்பெக்டர் குற்றச்சாட்டு

    • எனக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் கேரளா சென்று விசாரிக்க அனுமதி வேண்டினேன்.
    • பணி உயர்வு, ஊதிய உயர்வில் பாதிப்பு ஏற்பட்டதோடு மட்டும் அல்லாமல் அபராதமாக இருவருக்கும் சேர்த்து ரூபாய் 18 லட்சம் வழங்க வேண்டும் என இரு இரண்டு தண்டனைகள் கிடைத்துள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி வெண்ணாம்பட்டி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் ரத்தினகுமார் (வயது 49). இவர் தற்போது விருத்தாசலம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் தருமபுரி நகர போலீஸ் இன்ஸ்பெக்டராக 2012 -ல் பணிபுரிந்தார். பின்பு ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அப்போது ஒரு கொலை வழக்கில் ராஜா முகமது, மனோகரன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிந்து தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தார்.

    ஆனால் அந்த வழக்கு பொய் வழக்கு என நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. அதனால் பாதிக்கப்பட்ட இருவரும் மதுரை உயர் நீதிமன்றத்தில் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.

    வழக்கை விசாரித்த நீதிமன்றம் ராஜா முகமது என்பவருக்கு ரூபாய் 10 லட்சமும், மனோகரன் என்பவருக்கு ரூபாய் 8 லட்சமும் ரத்தினகுமார் கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளது.

    இந்நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் இதுகுறித்து கூறியதாவது:-

    எனக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் கேரளா சென்று விசாரிக்க அனுமதி வேண்டினேன். ஆனால் உயர் அதிகாரிகள் அனுமதிக்காமல், கைது செய்த 4 பேரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய நிர்பந்தம் செய்தனர்.

    தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய எந்த ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு அதிகாரம் இல்லை. கலெக்டர் முதல் கிராம நிர்வாக அலுவலர் வரை முழுவதுமாக அவர்களைப் பற்றி விசாரித்து, அவர்கள் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் மட்டுமே தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒருவரை கைது செய்ய முடியும்.

    இப்படி அன்றைக்கு இருந்த உயர் அதிகாரிகளின் அறிக்கையின் அடிப்படையிலும், நிர்பந்தத்தின் அடிப்படையிலும் மட்டுமே வழக்கை பதிவு செய்து 4 பேரை கைது செய்தேன். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டதாக அன்றைக்கு எனக்கு பாராட்டும் கிடைத்தது.

    ஆனால் இன்று தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய என்னை நிர்பந்தித்த அனைத்து அதிகாரிகளும் ஒதுங்கிக் கொள்ள, உயர் அதிகாரிகளின் அழுத்தத்தால் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்த எனக்கு பணி உயர்வு, ஊதிய உயர்வில் பாதிப்பு ஏற்பட்டதோடு மட்டும் அல்லாமல் அபராதமாக இருவருக்கும் சேர்த்து ரூபாய் 18 லட்சம் வழங்க வேண்டும் என இரு இரண்டு தண்டனைகள் கிடைத்துள்ளது.

    இந்த அபராத தொகை குறித்து மதுரை உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளேன். நியாயமான முறையில் பணியாற்றும் காவலர்களின் நிலைமை பெரும்பாலும் இவ்வாறே உள்ளது. இது போன்று மேலும் ஆறு வழக்குகளின் உண்மை தன்மை குறித்து விசாரித்து எனக்கு நீதி வழங்க வேண்டும்.

    இவ்வாறு ரத்தினகுமார் கூறியுள்ளார்.

    Next Story
    ×