என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெய்சங்கர்"

    • மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் டெல்லியிலிருந்து அமெரிக்கா சென்றுள்ளார்.
    • அங்கு அவர் அமெரிக்க வெளியுறவு மந்திரியை சந்திக்கிறார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் நடைபெறும் முக்கிய தாதுக்கள் விநியோகச் சங்கிலி தொடர்பான அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் டெல்லியிலிருந்து புறப்பட்டார்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் வரி விதிப்பால் இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில்,வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரின் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

    இதுதொடர்பாக, வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ அழைப்பின் பேரில், முக்கிய தாதுக்கள் குறித்த மந்திரிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மந்திரி ஜெய்சங்கர் பிப்ரவரி அமெரிக்காவில் பயணம் மேற்கொள்கிறார். இந்த மாநாட்டில் தூய்மையான எரிசக்தி மாற்றம் மற்றும் தாதுக்கள் விநியோகச் சங்கிலியில் உள்ள சவால்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு மந்திரி மார்கோ ரூபியோவை ஜெய்சங்கர் இன்று சந்திக்க உள்ளார். இந்தப் பயணத்தில் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அதிகாரிகளையும் அவர் சந்திக்கிறார்.

    • காஷ்மீர் விவகாரம் ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின்படி தீர்க்கப்பட வேண்டும் என்று போலந்து துணை பிரதமர் குறிப்பிட்டார்.
    • இந்தியா தனது தேச நலன் சார்ந்த விஷயங்களில் யாருடைய அறிவுரையையும் எதிர்பார்க்கவில்லை

    போலந்து நாட்டின் துணைப் பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி கடந்த அக்டோபர் மாதம் பாகிஸ்தானுக்குச் சென்றிருந்தார்.

    அப்போது பாகிஸ்தானுடன் இணைந்து அவர் வெளியிட்ட கூட்டறிக்கையில், "காஷ்மீர் விவகாரம் ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின்படி தீர்க்கப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில் ராடோஸ்லாவ் சிகோர்ஸ்கி ஜனவரி 17 முதல் 19 வரை மூன்று நாள் டெல்லி வருகை தந்தார். அவரை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று சந்தித்து பேசினார்.

    இந்த சந்திப்பு கூட்டத்தின்போது பேசிய ஜெய்சங்கர், "சில நாடுகள் தங்களுக்குச் சாதகமான பிரச்சினைகளை மட்டும் தேர்ந்தெடுத்துப் பேசுவதும், காஷ்மீரில் எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்ளிட்ட இந்தியாவின் பாதுகாப்பு விவகாரங்களை விமர்சிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

    பயங்கரவாதம் எங்கு நடந்தாலும் அது பயங்கரவாதம்தான். உக்ரைனில் நடக்கும் போரை ஒரு கண்ணோட்டத்திலும், இந்தியாவில் நடக்கும் எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை மற்றொரு கண்ணோட்டத்திலும் பார்க்க முடியாது. 

    இந்தியா தனது தேச நலன் சார்ந்த விஷயங்களில் யாருடைய அறிவுரையையும் எதிர்பார்க்கவில்லை. போலந்து அல்லது மற்ற ஐரோப்பிய நாடுகள் இந்தியாவின் நியாயமான கவலைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். போலந்து எங்கள் அண்டை நாடுகளில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கக் கூடாது" என்று தெரிவித்தார்.

    மேலும் இதன்போது ரஷிய எண்ணெய் வாங்கும் நாடுகளில் இந்தியாவை மட்டும் அமெரிக்கா குறிவைக்கிறது என ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.   

    • உங்களைப் பற்றி மற்றவர்கள் தவறாகப் புரிந்துகொள்வதைத் தடுப்பதற்கான வழி, தொடர்புகொள்வதுதான்.
    • நீங்கள் சிறப்பாகவும், தெளிவாகவும் தொடர்புகொண்டால் மற்றவர்கள் அதை மதித்து ஏற்றுக்கொள்வார்கள்.

    சென்னை ஐஐடி மாணவர்களுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உரையாடினார். அப்போது "உங்களைப் பற்றி மற்றவர்கள் தவறாகப் புரிந்துகொள்வதைத் தடுப்பதற்கான வழி, தொடர்புகொள்வதுதான்.

    நீங்கள் சிறப்பாகவும், தெளிவாகவும், நேர்மையாகவும் தொடர்புகொண்டால், மற்ற நாடுகளும் மற்ற மக்களும் அதை மதித்து ஏற்றுக்கொள்வார்கள்" என்றார்.

    மேலும், "உலகம் முழுவதும் உள்ள பல மக்கள் தங்கள் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் மரபு குறித்துப் பெருமை கொள்கிறார்கள். நாம் பெருமை கொள்ளாமல் இருப்பதற்கு எந்தக் காரணத்தையும் நான் காணவில்லை. நவீன காலத்தின் முக்கிய தேசங்களாக நிலைத்து நிற்கும் பழங்கால நாகரிகங்கள் உண்மையில் மிகச் சிலவே உள்ளன. அவற்றில் நாமும் ஒன்று" என்றார்.

    • கலிதா ஜியாவின் இல்லத்தில் வைத்து இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
    • 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இரு நாடுகளின் உயர்மட்டப் பிரதிநிதிகள் சந்தித்துக் கொள்வது இதுவே முதல் முறை.

    வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று டாக்கா சென்றார்.

    அங்கு பாகிஸ்தான் தேசிய அவையின் சபாநாயகர் அயாஸ் சாதிக்கைச் சந்தித்துப் பேசினார். கலிதா ஜியாவின் இல்லத்தில் வைத்து இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

    கடந்த ஏப்ரலில் காஷ்மீரில் 26 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றத்திற்குப் பிறகு, இரு நாடுகளின் உயர்மட்டப் பிரதிநிதிகள் சந்தித்துக் கொள்வது இதுவே முதல் முறையாகும்.

    இந்தச் சந்திப்பு குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு, இது வெறும் ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே என்று கூறியுள்ளது.

    இத்தகைய பலதரப்பு நிகழ்வுகளில் சந்திப்பதும், வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வதும் இயல்பான ஒன்று என்றும், இது முறையான ராஜதந்திரப் பேச்சுவார்த்தை அல்ல என்றும் தெரிவித்துள்ளது.  

    • வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா இன்று காலமானார்.
    • அவரது மறைவுக்கு அவாமி லீக் கட்சி தலைவரான ஷேக் ஹசீனா இரங்கல் தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா (80), இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 13-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறப்பு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

    இதற்கிடையே, கலிதா ஜியா சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். கலிதா ஜியா கடந்த 1991-96 மற்றும் 2001-06 என இரு முறை வங்கதேச பிரதமராக இருந்தவர். கலிதா ஜியாவின் இறுதிச்சடங்கு டாக்காவில் நாளை நடைபெற உள்ளது.

    இந்நிலையில், கலிதா ஜியாவின் இறுதிச்சடங்கில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்கிறார். இதற்காக ஜெய்சங்கர் நாளை வங்கதேச தலைநகர் டாக்கா செல்கிறார்.

    வங்கதேசம் உடனான உறவில் விரிசல் நிலவி வரும் சூழ்நிலையில், வெளியுறவுத்துறை மந்திரியின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

    • தமிழ்நாட்டைச் சேர்ந்த 248 மீன்பிடிப் படகுகளும், 61 மீனவர்களும் இலங்கை அதிகாரிகளின் காவலில் உள்ளனர்.
    • மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவிக்கவும் உரிய தூதரக வழிகளை மேற்கொள்ள வலியுறுத்தல்.

    தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக இன்று இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ள நிலையில், தமிழ்நாடு மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை தடுக்கவும், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும் உரிய தூதரக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 27.12.2025 அன்று மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று மீனவர்களை அவர்களது மீன்பிடிப் படகுடன் இலங்கை கடற்படையினர் இன்று (28.12.2025) கைது செய்த மற்றொரு சம்பவத்தை வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருவதாக முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    தமிழக மீனவர்களும் அவர்களது மீன்பிடிப் படகுகளும் இலங்கை அதிகாரிகளால் சிறை பிடிக்கப்படுவது தங்கு தடையின்றி தொடர்ந்து நடைபெற்று வருவதாக கவலையுடன் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இக்கைது நடவடிக்கைகள் நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாட்டைச் சேர்ந்த 248 மீன்பிடிப் படகுகளும், 61 மீனவர்களும் இலங்கை அதிகாரிகளின் காவலில் உள்ளதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    எனவே எதிர்காலத்தில் இதுபோன்ற கைது சம்பவங்கள் நிகழாமல் தடுக்கவும், இலங்கை காவலில் உள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவிக்கவும் உரிய தூதரக வழிகளை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • இலங்கையில் டிட்வா புயலில் சிக்கி 643 பேர் உயிரிழந்தனர்.
    • பலர் வீடுகளையும், உறவினர்களையும் இழந்து தனிமை ஆகினர்.

    இலங்கையில் இந்த மாத தொடக்கத்தில் 'டிட்வா' புயல் தாக்கியது. இதனால் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் அந்த நாடே சின்னாபின்னமானது.

    இலங்கையில் புயலில் சிக்கி 643 பேர் உயிரிழந்தனர். பலர் வீடுகளையும், உறவினர்களையும் இழந்து தனிமை ஆகினர்.

    நிதி பற்றாக்குறை மற்றும், பொருளாதார மந்தநிலை காரணமாக சிக்கி தவிக்கும் இலங்கை, புயல் பாதிப்பால் பெரும் பாதிப்படைந்தனர்.

    இதனிடையே புயல் பாதிப்பில் இருந்து மீள்வதற்காக ரூ.1,850 கோடி (206 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) அவசரநிதியை விடுவித்து நிவாரணமாக வழங்குவதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில், இலங்கையின் மறுகட்டமைப்புக்கு ரூ.4041 கோடி (450 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) நிதியை வழங்குவதாக இந்தியா உறுதியளித்துள்ளது.

    இலங்கை அதிபர் அனுர திசாநாயக்கவை சந்தித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதனை தெரிவித்தார்.

    இதுகுறித்து ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இன்று கொழும்பில் அதிபர் அனுர திசாநாயக்கவை சந்தித்ததில் மகிழ்ச்சி. டிட்வா புயலுக்குப் பிந்தைய பாதிப்பில் இருந்து மீண்டெழ உதவுவதாக கூறிய பிரதமர் நரேந்திர மோடியின் செய்தியையும் தெரிவித்தேன்.

    ஆபரேஷன் சாகர்பந்து நடவடிக்கையின் கீழ் இந்தியா இலங்கையின் கீழ்கண்ட மறுகட்டமைப்புக்கு 450 மில்லியன் அமெரிக்க டாலர் தொகுப்பை வழங்க உறுதியளித்துள்ளது" என்று தெரிவித்தார்.

    • 2023 ஆம் ஆண்டில் 617 இந்தியர்களையும், 2024 ஆம் ஆண்டில் 1,368 பேரை அமெரிக்கா நாடு கடத்தியது.
    • இந்த நாடுகடத்தல்களுக்கு மனித கடத்தல் முக்கிய காரணம்.

    2009 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா 18,822 இந்திய குடிமக்களை நாடு கடத்தியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இவர்களில் இந்த ஆண்டு மட்டும் 3,258 பேர் ஜனவரி முதல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

    இன்று மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அளித்த எழுத்துப்பூர்வமாக பதிலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதில், 2023 ஆம் ஆண்டில் 617 இந்தியர்களையும், 2024 ஆம் ஆண்டில் 1,368 பேரை அமெரிக்கா நாடு கடத்தியது. இந்த ஆண்டு திரும்பிய 3,258 பேரில், 2,032 பேர் வழக்கமான வணிக விமானங்களில் வந்தனர். மீதமுள்ள 1,226 பேர் அமெரிக்க குடியேற்ற அதிகாரிகளால் சிறப்பு விமானங்களில் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர்.

    இந்த நாடு கடத்தல்களுக்கு மனித கடத்தல் முக்கிய காரணம் என்று ஜெய்சங்கர் தெரிவித்தார். தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) மற்றும் மாநில அரசுகள் இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், பஞ்சாப் மாநிலத்தில் இதுபோன்ற வழக்குகள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

    மேலும் NIA இதுவரை 27 மனித கடத்தல் வழக்குகளைப் பதிவு செய்து 169 பேரைக் கைது செய்துள்ளது என்றும் 132 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஜெய்சங்கர் குறிப்பிட்டார். 

    • ஜி7 நாட்டின் வெளியுறவு மந்திரிகள் மாநாடு கனடாவில் நடைபெற்றது.
    • இதில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்றார்.

    ஒட்டாவா:

    ஜி7 நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் பங்கேற்கும் மாநாடு கனடாவின் ஒண்டாரியாவில் உள்ள நயாகரா பகுதியில் நடைபெற்றது.

    இதில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்துகொண்டார்.

    இந்நிலையில், வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு மந்திரி மார்க் ரூபியோவை நேரில் சந்தித்து உரையாடினார்.

    முன்னதாக கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வெளியுறவு மந்திரிகளுடன் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தமிழ்நாட்டின் மீனவ சமூகத்தினரிடையே ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • 114 மீனவர்கள் இலங்கை வசம் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    இன்று நாகை மீனவர்கள் 31 பேர், ராமநாதபுரம் மீனவர்கள் 4 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளதோடு சேர்த்து, மொத்தம் 114 மீனவர்கள் காவலில் உள்ள நிலையில், அவர்களை மீட்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 31 மீனவர்களையும், அவர்களது மூன்று இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளையும் சிறைபிடித்துள்ள இலங்கைக் கடற்படையினர், மற்றொரு சம்பவத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்களையும், அவர்களது நாட்டுப் படகினையும் சிறைபிடித்துள்ளனர்.

    மீனவர்களின் வாழ்க்கையும், அவர்களது வாழ்வாதாரமும் கடலுடன் பிரிக்கமுடியாத வகையில் பின்னிப் பிணைந்துள்ளது. இதுபோன்று தொடர்ச்சியாக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தமிழ்நாட்டின் மீனவ சமூகத்தினரிடையே ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஒவ்வொரு கைது நடவடிக்கையின்போதும், மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களது குடும்பத்தினரிடையே ஆழ்ந்த அச்ச உணர்வையும், பாதுகாப்பற்ற நிலையையும் ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 114 மீனவர்கள் இலங்கை வசம் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், 247 படகுகளும் இலங்கை வசம் காவலில் உள்ளது.

    எனவே, இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிப்பதற்கு மத்திய வெளியுறவுத் துறை மந்திரி டாக்டர் எஸ். ஜெய்சங்கர் உடனடியாக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • காஷ்மீர் மக்கள் தாங்கள் எந்த நாட்டுடன் இணைய வேண்டும் என்று ஒரு பொது வாக்கெடுப்பு மூலம் முடிவு செய்ய வேண்டும் என்று கோரினார்.
    • பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் மற்றும் பாதுகாக்கும் ஒரு நாடு பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக இருப்பது வருந்தத்தக்கது

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலவும் ஒடுக்குமுறையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று ஐநா சபையில் இந்தியா வலியுறுத்தி உள்ளது.

    நேற்று ஐ.நா.வின் 80வது ஆண்டு விழாவையொட்டி நடைபெற்ற பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பி. ஹரிஷ் உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், "ஜம்மு காஷ்மீர் மக்கள் இந்திய அரசியலமைப்பின் கட்டமைப்பிற்குள்ளும் ஜனநாயக மரபுகளின்படியும் தங்கள் அடிப்படை உரிமைகளைப் அனுபவிக்கின்றனர். இருப்பினும், இந்த அரசியலமைப்பு, ஜனநாயகம் உள்ளிட்ட கருத்துக்கள் பாகிஸ்தானுக்கு முற்றிலும் பரிச்சயமற்றவை என்பதை நாங்கள் அறிவோம்.

    பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பிரதேசங்களில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பாகிஸ்தானின் இராணுவ ஆக்கிரமிப்பு, ஒடுக்குமுறை மற்றும் வளங்களை சுரண்டுவதற்கு எதிராக அங்குள்ள மக்கள் வெளிப்படையாக கிளர்ச்சி செய்து வருகின்றனர்" என்று தெரிவித்தார். 

    கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதிநிதி, 1948 ஆம் ஆண்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின்படி, காஷ்மீர் மக்கள் தாங்கள் எந்த நாட்டுடன் இணைய வேண்டும் என்று ஒரு பொது வாக்கெடுப்பு மூலம் முடிவு செய்ய பாகிஸ்தான் பிரதிநிதி கோரினார்.

    இதற்கு பதிலளித்த இந்திய பிரதிநிதி ஹரிஷ், அந்த தீர்மானத்தின்படி பொது வாக்கெடுப்பு நடப்பதற்கு முன், பாகிஸ்தான் முதலில் காஷ்மீரின் தான் ஆக்கிரமித்த பகுதிகளிலிருந்து தன்னுடைய இராணுவத்தையும், பொதுமக்களையும் முழுவதுமாகத் திரும்பப் பெற வேண்டும்.

    ஆனால் அந்த நிபந்தனையை இதுவரை பாகிஸ்தான் நிறைவேற்றவில்லை. எனவே பொது வாக்கெடுப்பு கோரும் தீர்மானம் பற்றி இப்போது பேசுவது காலாவதியாகிவிட்டது." என்று தெரிவித்தார்.

    முன்னதாக வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நேற்று டெல்லியில் நடந்த ஐ.நா.வின் 80வது ஆண்டு நினைவு முத்திரை வெளியீட்டு விழாவில் பேசுகையில், பயங்கரவாதத்தை ஊக்குவித்து பாதுகாக்கும் ஒரு நாடு பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக இருப்பது வருந்தத்தக்கது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.   

    • டெல்லி வந்தடைந்த முத்தாகி அக்டோபர் 16 வரை இந்தியாவில் இருப்பார்.
    • செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி ஒரு வார கால அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லி வந்தடைந்த முத்தாகி அக்டோபர் 16 வரை இந்தியாவில் இருப்பார்.

    நேற்று முன்தினம் டெல்லியில் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து உயர் மட்ட ஆலோசனை கூட்டத்தில் முத்தாகி கலந்துகொண்டார். இதன்பின் இருவரும் கூட்டாக செய்தியாளரை சந்தித்தனர்.

    ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் வைத்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தாலிபான் செய்தித்தொடர்பாளர் சுஹைல் சாஹின் விளக்கம் அளித்துள்ளார்.

    இதுகுறித்து பேசிய அவர், "டெல்லி ஆப்கான் தூதரகத்தில் பெண் நிருபர்கள் அனுமதிக்கப்படவில்லை என்ற செய்தி உண்மை இல்லை. அனுமதி பாஸ்கள் குறைவாகவே இருந்ததால், சிலரால் அதைப் பெற முடியவில்லை. வெளியுறவு அமைச்சர் முத்தாகி பல பெண் நிருபர்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார். எதிர்கால இந்திய வருகைகளின் போது பெண் நிருபர்கள் இருப்பதை நிச்சயம் உறுதி செய்வோம்" என்று தெரிவித்தார்.

    ×