என் மலர்
உலகம்

பாகிஸ்தானின் மனித உரிமை மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்
- காஷ்மீர் மக்கள் தாங்கள் எந்த நாட்டுடன் இணைய வேண்டும் என்று ஒரு பொது வாக்கெடுப்பு மூலம் முடிவு செய்ய வேண்டும் என்று கோரினார்.
- பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் மற்றும் பாதுகாக்கும் ஒரு நாடு பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக இருப்பது வருந்தத்தக்கது
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலவும் ஒடுக்குமுறையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று ஐநா சபையில் இந்தியா வலியுறுத்தி உள்ளது.
நேற்று ஐ.நா.வின் 80வது ஆண்டு விழாவையொட்டி நடைபெற்ற பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பி. ஹரிஷ் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "ஜம்மு காஷ்மீர் மக்கள் இந்திய அரசியலமைப்பின் கட்டமைப்பிற்குள்ளும் ஜனநாயக மரபுகளின்படியும் தங்கள் அடிப்படை உரிமைகளைப் அனுபவிக்கின்றனர். இருப்பினும், இந்த அரசியலமைப்பு, ஜனநாயகம் உள்ளிட்ட கருத்துக்கள் பாகிஸ்தானுக்கு முற்றிலும் பரிச்சயமற்றவை என்பதை நாங்கள் அறிவோம்.
பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பிரதேசங்களில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பாகிஸ்தானின் இராணுவ ஆக்கிரமிப்பு, ஒடுக்குமுறை மற்றும் வளங்களை சுரண்டுவதற்கு எதிராக அங்குள்ள மக்கள் வெளிப்படையாக கிளர்ச்சி செய்து வருகின்றனர்" என்று தெரிவித்தார்.
கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதிநிதி, 1948 ஆம் ஆண்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின்படி, காஷ்மீர் மக்கள் தாங்கள் எந்த நாட்டுடன் இணைய வேண்டும் என்று ஒரு பொது வாக்கெடுப்பு மூலம் முடிவு செய்ய பாகிஸ்தான் பிரதிநிதி கோரினார்.
இதற்கு பதிலளித்த இந்திய பிரதிநிதி ஹரிஷ், அந்த தீர்மானத்தின்படி பொது வாக்கெடுப்பு நடப்பதற்கு முன், பாகிஸ்தான் முதலில் காஷ்மீரின் தான் ஆக்கிரமித்த பகுதிகளிலிருந்து தன்னுடைய இராணுவத்தையும், பொதுமக்களையும் முழுவதுமாகத் திரும்பப் பெற வேண்டும்.
ஆனால் அந்த நிபந்தனையை இதுவரை பாகிஸ்தான் நிறைவேற்றவில்லை. எனவே பொது வாக்கெடுப்பு கோரும் தீர்மானம் பற்றி இப்போது பேசுவது காலாவதியாகிவிட்டது." என்று தெரிவித்தார்.
முன்னதாக வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நேற்று டெல்லியில் நடந்த ஐ.நா.வின் 80வது ஆண்டு நினைவு முத்திரை வெளியீட்டு விழாவில் பேசுகையில், பயங்கரவாதத்தை ஊக்குவித்து பாதுகாக்கும் ஒரு நாடு பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக இருப்பது வருந்தத்தக்கது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.






