search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pon Radhakrishnan"

    • தேர்தல் அமைதியான முறையில் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது.
    • குமரி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் இரவு பணப்பட்டுவாடா நடைபெற்றதாக புகார் வந்துள்ளது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மகளிர் பள்ளியில் தனது வாக்கை இன்று காலை பதிவு செய்தார். இதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதாவிற்கு வெற்றி வாய்ப்பு உறுதியாகிவிட்டது. தமிழகம் முழுவதும் எல்லா தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெறும். நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி 400 தொகுதிகளில் வெற்றி பெறும். அதில் கன்னியாகுமரி தொகுதியும் ஒன்றாக இருக்கும்.

    தேர்தல் அமைதியான முறையில் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டத்தில் மதுபானங்கள் சப்ளையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் கேரளாவில் இருந்து கடல் வழியாக படகுகளில் கொண்டு வந்து மதுபாட்டில்களை சப்ளை செய்துள்ளனர். ஒரு சில இடங்களில் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சியினர் மகாத்மா காந்தி கொள்கைகளை எந்த அளவுக்கு கடைபிடிக்கிறார்கள் என்பது இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

    குமரி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் இரவு பணப்பட்டுவாடா நடைபெற்றதாக புகார் வந்துள்ளது. வழிபாட்டு தலங்களுக்கும் பணம் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று தெளிவாக கூறியுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கேரள விசைப்படகு மற்றும் அதிலிருந்த 13 மீனவர்களும் சிறைபிடிக்கப்பட்டனர்.
    • மீனவர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    குளச்சல்:

    கடந்த 19-ந் தேதி தூத்துக்குடி கடல் பகுதியில் மீன் பிடித்த குளச்சலை சேர்ந்த 73 மீனவர்களை 5 விசைப்படகுகளுடன் தூத்துக்குடி மீனவர்கள் சிறைப்பிடித்து தூத்துக்குடி மீன் பிடித்துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் ஒரு கேரள விசைப்படகு மற்றும் அதிலிருந்த 13 மீனவர்களும் சிறைபிடிக்கப்பட்டனர்.

    இதனை கண்டித்து குளச்சல் விசைப்படகினர் மற்றும் பைபர் வள்ளம், கட்டுமர மீனவர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    சிறைபிடிக்கப்பட்டு 5 நாட்களாகியும் மீனவர்கள் விடுவிக்கப்படாததால் மீனவர்களின் குடும்பத்தினர் கவலையடைந்து உள்ளனர். அவர்களை நேற்று இரவு முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    மீனவர்களை மீட்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். நள்ளிரவு 2 மணிவரை அங்கிருந்தவாறு தூத்துக்குடி காவல்துறை அதிகாரிகள் மற்றும் பா.ஜ.நிர்வாகிகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை பணிகளுக்காக கல், மண் கிடைக்கவில்லை.
    • கெஜ்ரிவாலுக்கு பலமுறை அவர்கள் சம்மன் அனுப்பியுள்ளார்கள்.

    நாகர்கோவில்:

    முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் நான் அமைச்சராக இருந்தபோது 48 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கான திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தியுள்ளேன். மீண்டும் இந்த மாவட்டம் வளர்ச்சி பெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன். கன்னியாகுமரி மாவட்டம் வழியாக அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கடத்திச் செல்லப்படுகிறது. ஆனால் இங்குள்ள மக்களுக்கு கட்டுமான பணிக்காக கனிம வளங்கள் கிடைப்பதில்லை.

    கனிமவள டாரஸ் லாரிகள் மோதி 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு இந்த மாவட்டத்தின் அமைச்சர் மனோ தங்கராஜ் பொறுப்பேற்க வேண்டும். எந்த லாரியாக இருந்தாலும் அவசியம் இல்லாமல் கேரளாவுக்கு செல்ல அனுமதிக்க மாட்டோம். கனிம வளங்கள் கடத்தல் தொடர்பாக மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகிறார். ஆனால் அதற்கான ஆவணங்கள் எதுவும் இதுவரை இல்லை. இதிலிருந்து அவர் பொய் சொல்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.

     கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை பணிகளுக்காக கல், மண் கிடைக்கவில்லை. இதனால் 3 ஆண்டு காலத்திற்கு மேல் நான்கு வழிச்சாலை பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டது. அதன் காரணமாக நான்கு வழிசாலை அமைக்கும் பணிக்காக 1046 கோடி ரூபாய் கூடுதல் செலவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. அதில் 350 கோடி ரூபாய் சாலை அமைக்கும் பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் நிறுவனத்திற்கு நஷ்ட ஈடாக வழங்கப்பட்டுள்ளது.

    ஒரு மாநிலத்தின் கவர்னர் ரப்பர் ஸ்டாம்பாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அமலாக்கத்துறை பொறுத்திருந்து நடவடிக்கை மேற்கொள்ளும். அந்த வகையில் தான் காத்திருந்து அவர்கள் கெஜ்ரிவால் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்கள். கெஜ்ரிவாலுக்கு பலமுறை அவர்கள் சம்மன் அனுப்பியுள்ளார்கள். அப்போது அவர் ஆஜராகவில்லை. அப்போதே அவர் ஆஜர் ஆகி இருந்தால் இதுபோன்ற நடவடிக்கைகள் நடந்திருக்க வாய்ப்பில்லை. தேர்தல் பத்திர விவகாரத்தை பொறுத்தவரை நாங்கள் எதையும் மறைக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குமரி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பொன் ராதாகிருஷ்ணன் மேற்கொண்டார்.
    • கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரதிய ஜனதா அலை வீசுவதாகவும் கூறினார்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த தொகுதி மார்ஷல் நேசமணி, தாணுலிங்கம் நாடார், பெருந்தலைவர் காமராஜர், குமரி ஆனந்தன் என பெருந்தலைவர்கள் போட்டியிட்டு வென்ற தொகுதியாகும்.

    கன்னியாகுமரி தொகுதியில் 1951 முதல் 1998 வரை காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் இந்த தொகுதி வெற்றிபெற்று இருந்தது. 1996-ம் ஆண்டு பாரதிய ஜனதாகட்சி முதல் முறையாக கன்னியாகுமரி தொகுதியில் களமிறங்கியது. பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக பொன். ராதாகிருஷ்ணன் களம் இறக்கப்பட்டார்.

    அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட டென்னிஸ் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து நடந்த தேர்தலிலும் பொன் ராதாகிருஷ்ணன் பாரதிய ஜனதா கட்சி சார்பில் களம் இறக்கப்பட்டார். 1999-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பொன் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.


    அப்போது அமைந்த பாரதிய ஜனதா ஆட்சியில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை இணை மந்திரியாகவும், நகர்புற வளர்ச்சித்துறை இணை மந்திரியாகவும், சாலை போக்குவரத்து துறை மற்றும் நெடுஞ் சாலைத்துறை இணை மந்திரியாகவும் பொறுப்பு வகித்தார்.

    2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பொன் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று மத்திய இணை மந்திரியாக பொறுப்பேற்றார். தொழிற்சாலைகள் மற்றும் பொதுப் பணித்துறை நிறுவனங்கள் துறை இணை மந்திரியாகவும், சாலை போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை இணை மந்திரியாகவும், நிதித்துறை மற்றும் துறைமுக துறை இணை மந்திரியாகவும் பதவி வகித்தார்.

    அப்போது குமரி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பொன். ராதாகிருஷ்ணன் மேற்கொண்டார். மார்த்தாண்டத்தில் மேம்பாலம், பார்வதிபுரத்தில் மேம்பாலம், சுசீந்திரம் பாலம் போன்ற உன்னத திட்டங்களை செயல்படுத்தினார். குமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை திட்டங்களை செயல்படுத்த பொன்.ராதாகிருஷ்ணன் முக்கிய பங்கு வைத்தார்.

    தற்போது மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை மத்திய அரசிடம் இருந்து குமரி மாவட்டத்திற்கு பொன். ராதாகிருஷ்ணன் பெற்று தந்தார்.

    2019 நடந்த தேர்தலில் பொன். ராதாகிருஷ்ணன் வெற்றிவாய்ப்பை இழந்தார். 2021-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலிலும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் களமிறக்கப்பட்ட பொன். ராதாகிருஷ்ணன் வெற்றி பெறவில்லை. தற்போது நடைபெற உள்ள பாராளுமன்ற தொகுதியில் மீண்டும் பொன். ராதாகிருஷ்ணனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    பொன்.ராதாகிருஷ்ணன் இந்த முறை தேர்தலில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கியுள்ளார். ஏற்கனவே பாரத ஜனதா கட்சிக்கு ஆதரவாக கன்னியாகுமரியில் பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார். பாரதிய ஜனதா கட்சி குமரி மாவட்டத்தில் செய்துள்ள சாதனைகளை எடுத்துக் கூறினார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரதிய ஜனதா அலை வீசுவதாகவும் கூறினார்.


    பிரதமர் மோடியின் வருகை குமரி மாவட்ட மக்களுக்கும், பாரதிய ஜனதா கட்சியினருக்கும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. வேட்பாளராக பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டதையடுத்து பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் தங்களது கட்சியின் வெற்றிக்காக தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர்.

    கன்னியாகுமரி மாவட் டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பாரதிய ஜனதா நிர்வாகிகள் மத்திய அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க தொடங்கி விட்டனர். நாகர்கோவிலில் உள்ள தேர்தல் அலுவலகம் மற்றும் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் பலரும் திரண்டு உள்ளனர்.

    இதேபோல் அ.தி.மு.க. சார்பில் மாநில மீனவரணி இணை செயலாளர் பசிலியான் நசரேத் களம் இறக்கப்பட்டுள்ளார். அவர் முதல் முறையாக தேர்தல் களத்தில் இறங்கி உள்ளார். மக்களின் தேவைகளை அறிந்து செயல்படுவதாகவும் கூறி உள்ளார்.

    நாம் தமிழர் கட்சி சார்பில் மரிய ஜெனிபர் களம் இறக்கபட்டுள்ளார். அவர் ஏற்கனவே சட்டமன்ற தொகுதி வாரியாக தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். காங்கிரஸ் கட்சி சார்பில் யாரை வேட்பாளராக களம் இறக்குவது என்பது குறித்து கட்சி தலைமை ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

    கன்னியாகுமரி தொகுதியில் தற்போது எம்.பி.யாக உள்ள விஜய் வசந்த் மீண்டும் களம் இறக்கப்படலாம் என்று தெரிகிறது. அவர் ஏற்கனவே கடந்த இரண்டரை ஆண்டுகளாக தொகுதி முழுவதும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நிறைவேற்றியுள்ளார்.

    தன்னுடைய தந்தை வசந்தகுமார் வழியில் விஜய வசந்த் மக்கள் பணி ஆற்றி வருகிறார். எனவே கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு மீண்டும் அவருக்கே வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியை பொருத்தமட்டில் இந்த முறை நான்கு முனை போட்டி நிலவுகிறது. இந்த தொகுதியில் 7,76,127 ஆண் வாக்காளர்கள், 7, 78,734 பெண் வாக்காளர்கள், 135 மூனறாம் பாலினத்தினர் என மொத்தம் 15 லட்சத்து 55 ஆயிரத்து 96 வாக்காளர்கள் உள்ளனர்.

    கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது இந்த தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். மேலும் இளம் வாக்காளர்களும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். இதனால் இந்த தொகுதியில் இளம் வாக்காளர்கள் மற்றும் புதிய வாக்காளர்களை கவர அரசியல் கட்சியினர் கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

    கன்னியாகுமரி தொகு தியை மீண்டும் கைப்பற்றும் முனைப்பில் பாரதிய ஜனதா செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.கவும் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றிபெற வேண்டும் என்றே தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறது. கன்னியாகுமரியில் மீண்டும் தாமரை மலருமா? அல்லது காங்கிரஸ் கைப்பற்றுமா? இல்லையென்றால் இரட்டை இலை தளிர்விடுமா? என்பது ஜூன் 4-ந்தேதி தெரிந்துவிடும்.

    • பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் மீண்டும் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தில் இறங்குகின்றன.
    • அ.தி.மு.க.வினர் ஏற்கனவே தேர்தல் பணியை தொடங்கி மேற்கொண்டு வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி. அதன் காரணமாகவும் இந்த தொகுதி மிகவும் சிறப்பு பெற்ற தொகுதியாக விளங்கி வருகிறது.

    குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைய போராடிய மார்ஷல் நேசமணி, பெருந்தலைவர் காமராஜரை வெற்றி பெற வைத்த தொகுதி இந்த தொகுதியாகும். இந்த தொகுதியில் இருந்து பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பொன் ராதாகிருஷ்ணன் மத்திய இணை மந்திரி ஆகவும் பதவி வகித்துள்ளார்.

    கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட பொன் ராதா கிருஷ்ணனை தோற்கடித்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வசந்தகுமார் அமோக வெற்றி பெற்றார். அவர் மறைவை தொடர்ந்து 2022-ம் ஆண்டு இடைத் தேர்தல் நடந்தது.


    இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய்வசந்த் களம் இறக்கப்பட்டார். அவரை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். இதில் விஜய்வசந்த் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

    தற்போது நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் மீண்டும் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தில் இறங்குகின்றன. காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினராக உள்ள விஜய்வசந்த் களம் இறக்கப்படுகிறார். வேட்பாளருக்கான முறையான அறிவிப்பு இன்னும் வராமல் இருந்தாலும் காங்கிரசார் தேர்தல் வேலைகளை தொடங்கி விட்டனர்.

    சட்டமன்ற தொகுதி வாரியாக பூத் கமிட்டி கூட்டங்கள் நடத்தப்பட்டு தேர்தல் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.


    பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஏற்கனவே கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் மீண்டும் களம் இறக்கப்படுகிறார். ஏற்கனவே கன்னியாகுமரியில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

    அவர் குமரி மாவட்டத்தில் பா.ஜ.க. அரசு செய்துள்ள சாதனைகளை பட்டியலிட்டார். இது பாரதிய ஜனதாவினருக்கு மிகவும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. கன்னியாகுமரி தொகுதியில் இந்த முறை எப்படியாவது வெற்றிக்கனியை பறித்தாக வேண்டும் என்பதற்காக பா.ஜ.க. நிர்வாகிகள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை தேர்தல் பணியை தொடங்கி மேற்கொண்டு வருகிறார்கள்.

    கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் விஜய் வசந்த் எம்.பி. ஆகிய இருவரும் மீண்டும் நேரடியாக மோத உள்ளனர். தி.மு.க.வும் தேர்தல் களத்தில் குதிக்க தயாராகி விட்டது. அ.தி.மு.க. சார்பில் மாநில மீனவரணி இணை செயலாளராக உள்ள பசிலியான் நசரேத்திற்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அ.தி.மு.க.வினர் ஏற்கனவே தேர்தல் பணியை தொடங்கி மேற்கொண்டு வருகிறார்கள். தகவல் தொழில்நுட்ப பிரிவு வழக்கறிஞர் பிரிவு உட்பட அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தை நடத்தி தேர்தலில் எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்பது குறித்து கருத்துக்களை வழங்கி வருகிறார்கள்.

    நாம் தமிழர் கட்சி சார்பில் மரிய ஜெனிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு ஆதரவு திரட்டும் பணியை தொடங்கிவிட்டார். வெற்றிக்கனியை பறிப்பதற்கு காங்கிரஸ், பாரதி ஜனதா, அ.தி.மு.க. கட்சிகள் முட்டி மோதுகின்றன.

    நாம் தமிழர் கட்சியும் கணிசமான வாக்குகளை பெற பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். ஆகவே கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியை பொறுத்தமட்டில் நான்கு முனைபோட்டி நிலவுகிறது. எனவே இந்த பாராளுமன்ற தேர்தலில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது என்று கருதப்படுகிறது.

    • பிரதமர் மோடி தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
    • மூன்றாவது முறையாக பிரதமர் மோடி வர வேண்டும் என்று ஆதரவு தெரிவிப்பவர்களை நாங்கள் வரவேற்கிறோம்.

    கன்னியாகுமரி:

    முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும். பிரதமர் மோடி தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற் கொண்டு வருகிறார்.

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பிரசாரம் செய்வதற்காக நாளை மறுநாள் வருகிறார். இங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார். பிரதமர் வருகையின் மூலமாக கன்னியாகுமரி தொகுதியின் வெற்றி உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

    பிரதமர் மோடி 18-ந் தேதி சேலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும், 19-ந் தேதி கோவையில் நடைபெறும் நிகழ்ச்சிகளும் கலந்து கொள்கிறார். சமத்துவ மக்கள் கட்சி பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்ததை வரவேற்கிறேன்.


    பிரதமர் மோடி ஆளுமையை ஏற்று வரும் அனைத்து கட்சிகளையும் நாங்கள் வரவேற்கிறோம். எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் சரி. மூன்றாவது முறையாக பிரதமர் மோடி வர வேண்டும் என்று ஆதரவு தெரிவிப்பவர்களை நாங்கள் வரவேற்கிறோம்.

    தமிழகத்தை பொறுத்த மட்டில் தி.மு.க.வை மிஞ்சும் அளவில் தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சி பல்வேறு சாதனைகளை செள்துள்ளது. அயல்நாட்டு தொடர்பு முதல் அடித்தட்டு மக்கள் வரை பல்வேறு வளர்ச்சிகளை செய்துள்ளது.

    கோடிக்கணக்கான திட்டங்களை நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணித்துள்ளார். இந்த தேர்தலை பொருத்தமட்டில் மீண்டும் மோடி வேண்டும் மோடி என்ற கொள்கையின் அடிப்படையில் தேர்தலை சந்திக்க உள்ளோம்.

    விளவங்கோடு சட்டசபை தொகுதியில் பா.ஜனதா சார்பில் விஜயதரணி போட்டியிடுவாரா? என்பது குறித்து தேர்தல் அறிவிக்கபட்ட பிறகு தலைமை முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மிச்சாங் புயலில் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியை மாநில அரசு முறையாக பயன்படுத்தவில்லை.
    • தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு மீட்பு பணியில் மத்திய அரசின் முப்படைகளும் இறங்கி சிறப்பாக பணியாற்றி வருகிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார்.

    கோவிலில் மூலவர், சண்முகர், தட்சிணாமூர்த்தி, சூரசம்ஹாரமூர்த்தி, பெருமாள் உள்ளிட்ட அனைத்து சன்னிதிகளிலும் அவர் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மிச்சாங் புயலில் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியை மாநில அரசு முறையாக பயன்படுத்தவில்லை. முறையாக பயன்படுத்தினால் கேட்ட நிதியை மத்திய அரசு வழங்கும்.

    மேலும் தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு மீட்பு பணியில் மத்திய அரசின் முப்படைகளும் இறங்கி சிறப்பாக பணியாற்றி வருகிறது. வெள்ள பாதிப்புகள் குறித்து மாவட்ட மக்களிடம் நேரடியாகக் கேட்டு அவர்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் செய்து கொடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இளைஞர்கள், தன்னார்வலர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் தாமாகவே யாத்திரையில் கலந்து கொள்கிறார்கள்.
    • யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சி சென்னையில் நடைபெறும்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வருகிற 28-ந்தேதி நடைபயணம் தொடங்குகிறார். இந்த நடைபயண விவரங்கள் குறித்து முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    என் மண் என் மக்கள் என்ற முழக்கத்தோடு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்குகிறார் மத்திய மந்திரி அமித்ஷா நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார்.

    அன்றைய தினம் நடைபெறும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்திலும் அவர் பேசுகிறார்.

    மொத்தம் ஐந்து கட்டங்களாக இந்த யாத்திரை நடைபெறுகிறது. ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய பாராளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கி நடைபெறும் முதற்கட்ட யாத்திரை ஆகஸ்ட் 22-ந்தேதி நிறைவடைகிறது.

    அதன் பிறகு சிறு சிறு இடைவெளிகளுடன் அடுத்தடுத்த கட்டங்களாக யாத்திரை நடைபெறும். ஜனவரி மாதம் சென்னையில் யாத்திரை நிறைவடையும். தமிழ்நாட்டில் தூய்மையான நேர்மையான அரசாங்கம் வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். இது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையிலும் கடந்த 9 ஆண்டுகளாக நடைபெறும் மோடி அரசின் சாதனைகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையிலும் இந்த பயணம் அமையும்.

    தேசிய ஜனநாயக கூட்டணி வருகிற தேர்தலிலும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மோடி பிரதமராகும் இலக்கோடு இந்த பயணத்தை மக்கள் மத்தியில் நடத்துகிறோம்.

    தமிழ்நாட்டில் தி.மு.க. வின் ஊழல் நிறைந்த ஆட்சியையும் இந்த ஆட்சியின் அவலங்களையும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது இந்த பயணத்தின் பிரதான நோக்கமாக இருக்கும். பிரசாரத்தின் போது வழி நெடுக பிரதமர் மோடி தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் செய்திருக்கும் சாதனைகளை 10 லட்சம் புத்தகங்களாக அச்சிட்டு மக்களுக்கு விநியோகிக்கப்படும்.

    மேலும் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மக்களுக்கு எழுதியுள்ள கடிதங்களை ஒரு கோடி குடும்பங்களுக்கு விநியோகிக்க இருக்கிறோம்.

    நடை பயணத்தின் போது பதினோரு இடங்களில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடத்தப்படும். இதில் அகில இந்திய தலைவர்கள் மத்திய மந்திரிகள் பங்கேற்பார்கள். இது தவிர நூற்றுக்கணக்கான தெரு முனை கூட்டங்களில் அண்ணாமலை உரையாற்றுவார்.

    மேலும் கிராமசபை கூட்டங்களிலும் பங்கேற்று மக்களுடைய குறைகளை கேட்டு அறிவார். அதை சரி செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

    முக்கியமான இடங்களில் இருந்து புனித மண் சேகரிக்கப்படும் அதை வைத்து தமிழ் தாய்க்கு முழு உருவ சிலை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக அரசியலில் பல கட்சிகளும் யாத்திரைகள் நடத்தி இருக்கலாம். இந்த யாத்திரை அரசியலில் புதிய அத்தியாயத்தை எழுதும் யாத்திரை நிறைவு பெறும்போது அரசியலில் திருப்பு முனையை உருவாக்கும், யாத்திரையில் கலந்து கொள்ள ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்து இருக்கிறார்கள்.

    இளைஞர்கள், தன்னார்வலர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் தாமாகவே இந்த யாத்திரையில் கலந்து கொள்கிறார்கள். இதை கட்சி யாத்திரையாக கருதாமல் தமிழக அரசியலில் ஒளி ஏற்றும் திருவிழாவாக மக்கள் கொண்டாடுவார்கள்.

    இந்த யாத்திரையின் போது மக்கள் புகார் பெட்டி ஒன்றும் எடுத்துச் செல்லப்படும். விடியல முடியல என்ற முழக்கத்தோடு கொண்டு செல்லப்படும்.

    இந்த பெட்டியில் மக்கள் தங்கள் புகார்களையும் எழுதி போடலாம். யாத்திரை நிறைவில் பிரதமர் மோடியும் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சி சென்னையில் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், மாநில துணைத்தலைவர் சக்கரவர்த்தி, நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., கி.பி.துரைசாமி யாத்திரையின் பொறுப்பாளர் நரேந்திரன் இணைப்பு பொறுப்பாளர் அமர் பிரசாத் ரெட்டி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • விவசாயிகளின் கழுத்தை நெரிக்கின்ற கைகோர்ப்பு என்று நான் கருதுகிறேன்.
    • கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சியில் இருந்தபோதும் தண்ணீர் தரவில்லை என்று கூறுகிறீர்கள்.

    நாகர்கோவில்:

    முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழக விவசாயிகள் காவிரி நீரை எதிர்நோக்கி இருக்கிறார்கள். ஆனால் தற்போது கிடைக்கும் நீரை கூட முழுமையாக தடுக்க புதிய அணையை மேகதாதுவில் கட்ட கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கர்நாடக மாநிலம் சென்று, அணை கட்ட முயற்சி எடுக்கும் அம்மாநில முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் அதற்கு மூளையாக இருக்கும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் ஆகியோருடன் கை குலுக்கி கொண்டு, சோனியா காந்தி கொடுக்கும் விருந்தில் கலந்துகொள்ள சென்றுள்ளார். இதுவெந்துபோன விவசாயி இதயத்தில் ஈட்டி பாய்ச்சுவது போல இருக்கிறது.

    எனவே தமிழக மக்களின் விருப்பத்துக்கு மாறாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கர்நாடகா சென்றது கண்டிக்கத்தக்கது. இதை எதிர்கட்சி கூட்டணிக்காக சென்றாக கருதவில்லை. விவசாயிகளின் கழுத்தை நெரிக்கின்ற கைகோர்ப்பு என்று நான் கருதுகிறேன். இது தமிழகத்துக்கான கேடு. தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் அங்கு சென்று இருக்கலாம். ஆனால் 8 கோடி மக்களின் முதலமைச்சராக சென்று கைகுலுக்கி இருப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

    மேகதாதுவில் அணைகட்ட மாட்டோம் என்ற வாக்குறுதியை தந்தால் மட்டுமே கூட்டணியில் கைகோர்ப்போம் என்று மு.க.ஸ்டாலின் மற்றும் கே.எஸ்.அழகிரி கூறி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் வாக்குறுதியை பெறவில்லை. அதனால் தான் இன்றைய தினத்தை துக்க தினமாக அனுசரித்து கருப்பு பட்டை அணிந்து இருக்கிறோம். கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சியில் இருந்தபோதும் தண்ணீர் தரவில்லை என்று கூறுகிறீர்கள். யார் தண்ணீர் தரவில்லை என்றாலும் தவறுதான்.

    ஊழல்வாதிகள் மீது எடுக்கும் நடவடிக்கை மக்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தும். அமைச்சர் செந்தில் பாலாஜி அ.தி.மு.க. ஆட்சியின் போது செய்த தவறுக்காக தான் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 48 கோடி பேருக்கு புதிய வங்கி கணக்குகள் உருவாக்கியவர் மோடி.
    • 2024-ல் தென்காசியில் தாமரை மலர்ந்தே தீரும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.

    தென்காசி:

    ஆலங்குளம் முத்தாரம்மன் கோவில் திடலில் பா.ஜ.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

    விபத்து காப்பீட்டு

    கூட்டத்துக்கு தென்காசி மாவட்ட தலைவர் ராஜேஸ் ராஜா தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் அன்புராஜ், மாநில வர்த்தக பிரிவு செயலாளர் கோதை மாரியப்பன், மாவட்ட பொது செயலாளர்கள் பாலகுருநாதன், அருள்செல்வன்,ராமநாதன், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆலங்குளம் தெற்கு ஒன்றிய தலைவர் பண்டாரிநாதன் வரவேற்றார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது:-.

    ஒரு ரூபாயில் ரூ.2 லட்சம் விபத்து காப்பீட்டு திட்டம் தந்தவர் பிரதமர் மோடி. சாதாரண பொதுமக்களும் வங்கி பழக்கத்தை பெற்றிட 48 கோடி பேருக்கு புதிய வங்கி கணக்குகள் உருவாக்கியவர் மோடி. இன்று உலக நாடுகள் நம்மை வணங்குகின்றன.

    ஐ.நா.சபை

    193 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா.சபையே நரேந்திர மோடியை உற்று பார்க்கிறது. ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தாமல் காஷ்மீரில் 370 என்ற தனிப்பிரிவை ரத்து செய்து இன்று காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கமாக மாறியுள்ளது. உலகத்திலேயே மிக பெரிய கேன்சர் செண்டர் அசாமில் வருகிறது.

    1999-ம் ஆண்டு தென்காசி தொகுதியில் 886 ஓட்டுவித்தியாசத்தில் வெற்றியை இழந்தோம். நல்ல மனிதரை இழந்தோம். அதற்கு ஒருபரிகாரம் உண்டு என்றால் 2024-ல் தென்காசியில் தாமரை மலர்ந்தே தீரும்.கேரளாவில் ஆற்றிங்கல்பகுதியில் கிறிஸ்தவர்கள் சொன்னார்கள் இந்த முறை தங்களின் வாக்கு நரேந்திரமோடிக்குதான் என்று.

    தமிழகத்தில் 2024 தேர்தலில் 25 பாராளுமன்ற தொகுதியை வெல்ல உள்ளோம். அதில் நம்பர் ஒன்றாக தென்காசி பாராளுமன்றம் இருக்க வேண்டும்.

    தூய்மையான, ஊழலற்ற ஆட்சி தமிழகத்தில் மலர வீடுதோறும் நமது திட்டத்தினை எடுத்து கூறி தாமரையை வெற்றிபெற செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். முடிவில் மாவட்ட துணைத் தலைவர் பாலமுருகன் நன்றி கூறினார்.

    • செந்தில் பாலாஜி தன் மீது குற்றம் இல்லை என நிரூபிக்கும் வரையில் அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
    • செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து தமிழக அரசு விலக்கி வைப்பது, அரசிற்கும், தி.மு.க.விற்கும், மக்களுக்கும் நல்லது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    உப்பை தின்றவன் தண்ணீர் குடிப்பான். தப்பை செய்தவன் தண்டனை அனுபவிப்பான் என்பதை மூதாதையர்கள் கூறியுள்ளனர். யாராக இருந்தாலும், அமைச்சராக இருந்தாலும் அது பொருந்தும்.

    தான் தூய்மையானவன் என்பதை நிரூபிக்கும் பொறுப்பு அவருக்கு உள்ளது. ஆனால் இதற்கு தி.மு.க. துணை போகக்கூடாது.

    செந்தில் பாலாஜி தன் மீது குற்றம் இல்லை என நிரூபிக்கும் வரையில் அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகி இருக்க வேண்டும். செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து தமிழக அரசு விலக்கி வைப்பது, அரசிற்கும் தி.மு.க.விற்கும், மக்களுக்கும் நல்லது. அவருக்கு துணை நின்றால் தி.மு.க. அரசாங்கம் ஆள்வதற்கு அருகதை அற்றவர்கள் ஆவார்கள்.

    இது 2015-ல் உள்ள பழைய வழக்கு, அப்போது தி.மு.க.வினர், அவர் மீது நடவடிக்கை எடுக்க சொல்லியிருந்தார்கள், அதே மனிதர் தி.மு.க.விற்கு வந்தவுடன் கங்கையில் குளித்து புனிதமானவர் என்பதா? தமிழக அரசு அவருக்கு ஆதரவு கொடுக்க கூடாது. அப்படி ஆதரவு கொடுத்தால் அது ஊழலுக்கு துணை போகும் செயல்.

    இதுவரை தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நேர்மையாக மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகத்தில் பெட்ரோல் விலையில் 5 ரூபாய் குறைப்பதாக சொன்னது தி.மு.க. தான் என முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் உள்ள பாரதிய ஜனதா அலுவலகத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் 1982-ம் ஆண்டு மதரீதியான கலவரத்தால் ஏற்பட்ட வடுவை ஆறவைக்க கடந்த 40 ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறோம். மதம், சாதி மற்றும் அரசியல் ரீதியாக மீண்டும் பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் மிக கவனமாக உள்ளோம்.

    ஆனால் துரதிர்ஷ்ட வசமாக சில சம்பவங்கள் குமரி மாவட்டத்தில் மீண்டும் ஒரு பிரச்சனையை உருவாக்க தூண்டுகோலாக அமைந்து விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

    கடந்த 19-ந் தேதி இரவு 10 மணிக்கு சில சாதாரண பிரச்சினையில் ஒரு தம்பதியர் தாக்கப்பட்டுள்ளனர். பிரச்சினயைில் சமரசம் செய்ய முயன்ற வரும் தாக்கப்பட்டுள்ளார்.

    இந்த விஷயத்தில் போலீசார் முறையாக நடக்கவில்லை. இதை வைத்து பார்க்கும்போது குமரி மாவட்டத்தில் மீண்டும் ஒரு கலவரத்தை தூண்டும் வகையில் போலீசார் செயல்படுவது போல தெரிகிறது. போலீசார் தங்களது கடமையை சரியாக செய்ய வேண்டும்.

    முதல்-அமைச்சர் தலையிட்டு இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாளை(24-ந்தேதி) திங்கள்சந்தையில் போராட்டம் நடத்தப்பட உள்ளது.

    மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைத்துள்ளது. தமிழகத்தில் பெட்ரோல் விலையில் 5 ரூபாய் குறைப்பதாக சொன்னது தி.மு.க. தான். தேர்தல் அறிக்கையில் கூறியபடி விலையை தமிழக அரசு குறைக்க வேண்டும்.

    பெட்ரோல் விலை உயர்வு

    பேரறிவாளனை கோர்ட்டு விடுதலை செய்தது. ஆனால் அவரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டி அணைத்து உள்ளார். அவர் என்ன செய்கிறார் என்பதை உணர்ந்து தான் செய்கிறாரா? என்று தெரிய வில்லை. பேரறிவாளன் விடுதலையை கண்டித்து காங்கிரஸ் ஏன் போராட்டம் நடத்தவில்லை. தி.மு.க.வுக்கு எதிராக பேசிவரும் அண்ணாமலை வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் போகும் என்று ஒரு அமைச்சர் சொல்லி இருப்பதாக தெரிகிறது.அந்த அமைச்சருக்கும் வீடு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் தர்மராஜ், மாநிலச் செயலாளர் மீனாதேவ், பொருளாளர் முத்துராமன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    ×