search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN Rain"

    • மாநகர பகுதியில் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் ஓடியது.
    • மாஞ்சோலை வனப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இதன் காரணமாக அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நேற்று பிரதான அணையான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் பரவலாக மழை பெய்த நிலையில், இன்றும் காலை வரையிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    அதன்படி பாபநாசத்தில் 30 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 21 மில்லிமீட்டரும், மணிமுத்தாறில் 12 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. பாபநாசம் அணை பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைக்கு 2,358 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து வினாடிக்கு 2,547 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மணிமுத்தாறு அணைக்கு 1,728 கனஅடி நீர் வரும் நிலையில் வினாடிக்கு 1,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதுதவிர கடனா அணையில் இருந்து 303 கனஅடி நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இதனால் மொத்தமாக இன்று காலை நிலவரப்படி தாமிரபரணி ஆற்றில் 6 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் ஓடியது. மாநகர பகுதியில் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் ஓடியது.


    தற்போது தைப்பூச திருவிழாவிற்காக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு செல்லும் முருக பக்தர்கள் பாதயாத்திரை வரும்போது ஆற்றில் குளித்துவிட்டு செல்கின்றனர். தற்போது ஆற்றில் தண்ணீர் அளவு அதிகரித்து காணப்படுவதால் அங்கு குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ள நிலையில் இன்று காலை முதல் குளிக்க வந்தவர்களை பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை விடுத்து திரும்பி அனுப்பி வைத்தனர்.

    மாஞ்சோலை வனப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி நாலுமுக்கு, ஊத்து எஸ்டேட்டில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. நாலுமுக்கில் அதிகபட்சமாக 8.2 சென்டிமீட்டரும், ஊத்து எஸ்டேட்டில் 7.7 சென்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. மாஞ்சோலையில் 37 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    மாவட்டத்தில் களக்காடு, மூலக்கரைப்பட்டி, நாங்குநேரி, அம்பை, ராதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இன்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காட்சியளிக்கிறது.

    குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. மாவட்டத்தில் அதிகபட்சமாக அம்பை, கன்னடியன் கால்வாய் பகுதியில் தலா 14 மில்லிமீட்டரும், சேரன்மகா தேவி, மூலக்கரைப்பட்டியில் தலா 3 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் கடனா அணை பகுதியில் 16 மில்லிமீட்டர் மழை பெய்தது. ராமநதி, கருப்பாநதி மற்றும் குண்டாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தலா 7 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. தென்காசி, செங்கோட்டை, ஆய்குடியில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மெயினருவியில் அதிக அளவு தண்ணீர் விழுவதால் அங்கு இன்றும் 4-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவி உள்ளிட்டவற்றில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினத்தில் 26 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் நேற்று முதல் தொடர்ந்து பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    ஏற்கனவே பெருமழையால் ஏற்பட்ட வெள்ளம் இன்னும் ஒரு சில இடங்களில் வடியாமல் இருக்கும் நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அப்பகுதியினர் அச்சம் அடைந்துள்ளனர்.

    மாவட்டத்தில் எட்டயபுரம், விளாத்திகுளம், வைப்பாறு, சூரன்குடி ஆகிய இடங்களில் பலத்த மழை பெய்தது. சாத்தான்குளம், கோவில்பட்டி, கழுகுமழை, கடம்பூர், கயத்தாறு ஆகிய இடங்களிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    வட தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.

    கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும். தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • அதிகபட்சமாக சீர்காழியில் 23 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
    • டெல்டா மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * வடகிழக்கு பருவமழை தொடர்ந்து தீவிரமாகவே உள்ளது.

    * கடந்த 4 ஆண்டுகளாகவே ஜனவரியிலும் வடகிழக்கு பருவமழை தொடர்கிறது.

    * கடந்த 24 மணி நேரத்தில் 5 இடங்களில் அதிகனமழை பெய்துள்ளது.

    * 2 நாட்களுக்கு பிறகு மழை படிப்படியாக குறையும். தென்மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்.

    * சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகனமழைக்கு வாய்ப்பில்லை. ஆனால் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    * ஜனவரி மாதத்தில் கடலூரில் 130 ஆண்டுகளில் 2-வது முறையாக அதிகபட்சமாக மழை பதிவாகியுள்ளது.

    * புதுச்சேரியில் ஜனவரி மாதத்தில் நேற்று பெய்ததே அதிகபட்ச மழையாகும்.

    * அதிகபட்சமாக சீர்காழியில் 23 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

    *திருவாரூர், நாகையில், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    * டெல்டா மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு.
    • இன்று கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

    தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கேரளா மற்றும் லட்சத்தீவுகளில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும், வருகிற 10-ந்தேதி வரை (நாளைமறுநாள்) தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இன்று தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு எனவும் தெரிவித்தள்ளது.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதனால் இன்று தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் வட தமிழக கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, தேனி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்கள், கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

    நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், மயிலாடுதுறை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

    08.01.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

    09.01.2024: தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

    10.01.2024: தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

    11.01.2024 மற்றும் 12.01.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    06.01.2024: தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள் மற்றும் லட்ச தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    07.01.2024: தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    08.01.2024 மற்றும் 09.01.2024: தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    10.01.2024: தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள் மற்றும் இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    • சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக தமிழகத்தில் இன்று அநேக இடங்களில் இடியுடன் லேசான மழை பெய்யக்கூடும்.

    நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    நாளை (7-ந்தேதி) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் லேசான மழையும், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இன்று முதல் 8-ந்தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

    சென்னை:

    தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 4 அல்லது 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்துள்ளது. கடந்த மாதம் 17, 18-ந்தேதிகளில் தென் மாவட்டங்களில் அதிக கனமழை பெய்து பேரிழப்பை ஏற்படுத்தியது.

    2 வாரம் கடந்த போது கூட இன்னும் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. வீடுகளில் வெள்ளம் வடிந்த பாடில்லை. தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில் தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தென் தமிழகத்தில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை 5 நாட்களுக்கு பெய்யும். தமிழகத்தில் இன்று (5-ந்தேதி) முதல் 9-ந்தேதி வரை ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

    தேனி, திண்டுக்கல், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

    மேலும் 7-ந்தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராணிப்பேட்டை மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.

    9-ந்தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவித்து உள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    • சேதமடைந்த மீன்பிடி படகுகளுக்கு நிவாரணம் ரூ.15 கோடி வழங்கப்படும்.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 1,17,471 கால்நடைகள் சேதமடைந்துள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் மற்றும் அதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கனிமொழி எம்.பி. தலைமையில் நடைபெற்றது.

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

    முதலமைச்சர் அறிவித்தபடி, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளில் உள்ள 2 லட்சத்து 92 ஆயிரத்து 17 குடும்பங்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணத்தொகை மற்றும் 5 கிலோ அரிசி பை, 1 லட்சத்து 88 ஆயிரத்து 650 குடும்பங்களுக்கு ரூ.1,000 நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளன.

    வெள்ள பாதிப்பால் மொத்தம் 7,762 வீடுகள் சேதமடைந்துள்ளது. இதில் 4,412 குடிசை வீடுகள் பகுதியாகவும், 2,794 குடிசை வீடுகள் முழுமையாகவும், 472 கான்கிரீட் வீடுகள் பகுதியாகவும், 84 கான்கிரீட் வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளது. வீடுகள் சேதமடைந்த வகைக்கு 3,981 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 82 லட்சத்து 77 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பால் 153132.38.5 ஹெக்டேர் வேளாண் பயிர்களும், 32592.02.5 ஹெக்டேர் தோட்டக்கலை பயிர்களும் சேதமடைந்துள்ளது. 688.81.7 ஹெக்டேர் விவசாய நிலங்களில் வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட மண் படிந்துள்ளது.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறு வணிகர்களுக்கு கடன் வழங்க கூட்டுறவு வங்கிகள் மூலம் மனுக்கள் பெறப்படுகின்றன. இத்திட்டத்தின் மூலம் சிறு வணிகர்கள் மற்றும் சிறு கடை உரிமையாளர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை 4 சதவீத வட்டி, ரூ.1 லட்சம் வரை 6 சதவீத வட்டி வீதத்தில் கடன் வழங்கப்படும்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் 10,282 உற்பத்தி நிறுவனங்களும், 30,297 சேவை நிறுவனங்களும், 2,583 வியாபாரம் சார்ந்த நிறுவனங்களும் என மொத்தம் 43,162 நிறுவனங்கள் உதயம் பதிவுச்சான்றிதழ் பெற்றுள்ளன.

    மாவட்டத்தில் மொத்தம் உள்ள 10 வட்டங்களில், 5 வட்டங்களில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பான்மையான உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள் உதயம் பதிவு மேற்கொண்டு, காப்பீடு செய்துள்ளனர்.

    ஆனால் வியாபாரம் மற்றும் சேவை தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் வங்கிக் கடன் பெற்றிருந்தால் மட்டுமே உத்யம் பதிவு மற்றும் காப்பீடு மேற்கொள்கின்றனர். நிவாரணத் தொகுப்பில் அறிவிக்கப்பட்டுள்ள சிறு வணிகர்களுக்கான ரூ.1 லட்சம் வரையான சிறப்பு கடன் திட்டம் குறித்து வணிகர் சங்கங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும், சிறு வணிகர்களுக்கும் சிறப்பு கடன் முகாம்கள் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 12 மனுக்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சேதமடைந்த மீன்பிடி படகுகளுக்கு நிவாரணம் ரூ.15 கோடி வழங்கப்படும். நாட்டுப்படகு மீனவர்களின் உதவியுடன் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தில் சிக்கியிருந்த சுமார் 2,000 பொதுமக்கள் மீட்கப்பட்டனர்.

    பகுதி சேதமடைந்த மீன்பிடி விசைப்படகுகள் 347-க்கு ரூ.161.415 லட்சம், முழு சேதமடைந்த 4 நாட்டுப்படகுகளுக்கு ரூ.4 லட்சம், பகுதி சேதமடைந்த 402 நாட்டுப்படகுகளுக்கு ரூ.119.07 லட்சம், சேதமடைந்த மீன்பிடி வலைகள் 3,515-க்கு ரூ.527.25 லட்சம், சேதமடைந்த மீன்பிடி எந்திரங்கள் 3,902-க்கு ரூ.292.65 லட்சம், சேதமடைந்த மீன் பண்ணைகள் உள்ள 24.75 ஹெக்டேர் பரப்புக்கு ரூ.2.475 லட்சம், சேதமடைந்த உள்நாட்டு மீனவர்களின் வலைகள் 850-க்கு ரூ.85 லட்சம் என மொத்தம் மொத்தம் ரூ.1191.86 லட்சம் சேதார மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 1,17,471 கால்நடைகள் சேதமடைந்துள்ளது. இதில் 3,285 பசுக்களும், 1,343 கன்றுகளும், 26,469 ஆடுகளும், 85,632 கோழிகளும், 524 பன்றிகளும், 49 கழுதைகளும், 60 எருமைகளும், 109 காளைகளும் அடங்கும். புதிதாக கால்நடைகள் வாங்குவதற்கு கடன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இறந்த கால்நடைகளுக்கு நிவாரணமாக பசு, எருமைக்கு 37,500 ரூபாய் வரையிலும், ஆடு, செம்மறி ஆடுகளுக்கு தலா ரூ.4,000 வரையிலும், கோழி ஒன்றுக்கு ரூ.100 வரையிலும் வழங்கப்படுகிறது. இதுவரை 534 இனங்களுக்கு நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இனங்களுக்கு 2 நாட்களில் நிவாரண தொகை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் இணையதளம் வாயிலாக உப்பளத் தொழில் செய்யும் 2023-ம் ஆண்டு பதிவு பெற்ற மற்றும் புதுப்பித்தல் செய்த உப்பளத் தொழிலாளர்களுக்கு அக்டோபர், நவம்பர், டிசம்பர் 2023-ம் ஆண்டிற்கான மழைக்கால நிவாரணம் வழங்கும் பொருட்டு 5300 பதிவு பெற்ற உப்பள தொழிலாளர்களுக்கு ரூ.5000 வீதம் ரூ.2,65,00,000 தொகை கடந்த மாதம் 22-ந்தேதி ஆர்இசிஎஸ் மூலம் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது.

    மேலும், அதி கனமழையினால் உயிரிழந்த 44 நபர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

    வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 5 ஊராட்சி ஒன்றியங்களில் தேங்கியிருந்த மழைநீர் வெள்ளமானது பெரும்பான்மை பகுதிகளில் சுமார் 110 மோட்டார் பம்புகள் மூலம் வேகமாக அகற்றப்பட்டது. மீதமுள்ள 36 குடியிருப்பு பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகள் மூலம் வேகமாக அகற்றப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி மாநகராட்சி வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 4,127 டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. வெள்ளத்தின்போது 123 கிராம ஊராட்சிகளில் உள்ள 727 குக்கிராமங்களில் மின் இணைப்பு பாதிக்கப்பட்டது.

    தற்போது அனைத்து கிராம ஊராட்சிகளிலும் முழுமையாக மின் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அதீத கனமழையின் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தின் மாநில நெடுஞ்சாலைகளில் 112 இடங்களில் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. அவற்றில் 109 பகுதிகள் சரிசெய்யப்பட்டுள்ளது.

    ஊராட்சிகளுக்குட்பட்ட சாலைகளில் 39 இடங்களில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவற்றில் 33 சாலைகளின் பகுதிகள் சீர்செய்யப்பட்டுள்ளது.

    பொதுப்பணித்துறை மூலம் சேதமடைந்த 85 குளங்களில் 82 குளங்களும், 80 கால்வாய்களில் 65 கால்வாய்களும், ஆற்றங்கரைகளில் ஏற்பட்ட 2 உடைப்புகளும் சரிசெய்யப்பட்டுள்ளன.

    போக்குவரத்துத் துறை மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 302 வழித்தடங்களில் 270 வழித்தடங்கள் சீரமைக்கப்பட்டுள்ளது.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 15 தண்ணீர் விநியோகம் செய்யப்படும் நிலையங்களில் 6 நிலையங்கள் பகுதியாகவும், 7 நிலையங்கள் முழுவதுமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

    நெடுஞ்சாலைத்துறை மூலம் சேதமடைந்த 42 சாலைகளும், 112 உடைப்புகளும் சீர் செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து மாவட்ட தொழில் மையம் மூலம் நீட்ஸ் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கனிமொழி எம்.பி வழங்கினார்.

    • 3 மாவட்டங்களிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் இன்று திறக்கப்பட்டன.
    • தூத்துக்குடியில் 1,221 தொடக்கப்பள்ளிகள், 304 நடுநிலைப்பள்ளிகள், 111 உயர்நிலைப்பள்ளிகள், 218 மேல்நிலைப்பள்ளிகள் ஆக மொத்தம் 1, 854 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த மாதம் 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த கனமழையால் ஏராளமான குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

    இதன் காரணமாக தென்மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. தொடர்ந்து அரையாண்டு தேர்வுகள் மற்ற மாவட்டங்களில் முடிவடைந்ததால் தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டது.

    இதனால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளி மாணவர்கள் எழுத வேண்டிய மீதமுள்ள தேர்வுகள் நாளை மறுநாள்(வியாழக்கிழமை) முதல் தொடங்கும் என்றும், பள்ளிகள் இன்று முதல் மீண்டும் தொடங்கும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

    இதையடுத்து 3 மாவட்டங்களிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் இன்று திறக்கப்பட்டன. தொடர்ந்து பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு நாளை மறுநாள் முதல் 11-ந்தேதி வரையிலும், 6 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு நாளை மறுநாள் முதல் 10-ந்தேதி வரையிலும் அரையாண்டு தேர்வுகள் நடைபெறுகிறது.

    10-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை மறுநாள் அறிவியல், 6-ந்தேதி கணிதம் தேர்வு, 9-ந்தேதி சமூக அறிவியல், 10-ந்தேதி உடற்கல்வி தேர்வு நடக்கிறது.

    இதனையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளிக்கூடங்களை சுத்தப்படுத்தும் பணி கடந்த 3 நாட்களாக தீவிரமாக நடைபெற்றது. மேலும் வகுப்பறைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, பள்ளி வளாகங்களில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டன. வெள்ள நீர் புகுந்த பள்ளிகளில் தேங்கி கிடந்த மழைநீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டிருந்தன. சேறும் சகதியுமாக இருந்த இடங்களில் மண் கொட்டப்பட்டிருந்தன.

    தொடர்ந்து இன்று காலை மாணவ-மாணவிகள் உற்சாகமாக பள்ளிகளுக்கு புறப்பட்டு வந்தனர். அவர்களை ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்தும், பூக்கள் கொடுத்தும் வரவேற்றனர். நெல்லை, தூத்துக்குடியில் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் புத்தகங்கள் உள்ளிட்டவை வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டன. இதனால் புத்தகங்களை இழந்த மாணவ-மாணவிகளுக்கு புதிய புத்தகங்கள் வழங்கப்பட்டன.

    நெல்லை மாநகரில் 46 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் சீரமைப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கலெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட தொடங்கியது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் 1,221 தொடக்கப்பள்ளிகள், 304 நடுநிலைப்பள்ளிகள், 111 உயர்நிலைப்பள்ளிகள், 218 மேல்நிலைப்பள்ளிகள் ஆக மொத்தம் 1, 854 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. மாவட்டத்தில் சில பள்ளிகளில் மழை வெள்ள நீர் வெளியேற்றப்படாமல் இருப்பதாலும், சில பள்ளி கட்டிடங்கள் மழையால் சேதம் அடைந்திருப்பதாலும் அதனை பயன்படுத்த வேண்டாம் என பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கலெக்டர் லட்சுமிபதி உத்தரவிட்டிருந்தார்.

    இதையடுத்து அந்த பள்ளிகள் இன்று செயல்படவில்லை. அவர்களுக்கு மாற்று பள்ளி கட்டிடங்களில் படிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தென்காசி மாவட்டத்திலும் விடுமுறைக்கு பின்னர் பள்ளி மாணவ-மாணவிகள் இன்று உற்சாகமாக பள்ளிகளுக்கு புறப்பட்டு சென்றனர். நாளை மறுநாள் தேர்வுக்கு தேவையான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மேற்பார்வையில் பள்ளி நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன. 

    • தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழையால் மக்கள் வீடு, உடமைகளை இழந்து பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.
    • மழை வெள்ள பாதிப்பு, அரையாண்டு விடுமுறைக்கு பிறகு தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 18-ந்தேதி பெய்த தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழையால் மக்கள் வீடு, உடமைகளை இழந்து பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    கனமழை பாதிப்பை கருத்தில் கொண்டு அந்த 3 மாவட்டங்களில் மட்டும் விடுபட்ட அரையாண்டு தேர்வுகள் பின்னர் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

    மழை வெள்ள பாதிப்பு, அரையாண்டு விடுமுறைக்கு பிறகு தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது.

    இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் அரையாண்டு தேர்வுகள் தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

    • மழை அதிகரிக்கும்போது அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
    • இன்று காலை நிலவரப்படி திருச்செந்தூரில் 4 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த வரலாறு காணாத மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து நெல்லை மாவட்ட பிரதான அணைகளில் இருந்து சுமார் 1.50 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால் ஏராளமான குடியிருப்புகள் மூழ்கியது. கடுமையான சேதத்தை விளைவித்த இந்த வெள்ள பாதிப்பில் இருந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.

    இந்நிலையில், தற்போது அவ்வப்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நேற்று பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது. ஏற்கனவே அணைகள் அனைத்தும் நிரம்பிவிட்ட நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. தொடர்மழையால் அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு நேற்று மாலை 10,100 கனஅடியாக இருந்த நிலையில் நேற்று இரவு நீர்வரத்து சற்று குறைந்தது.

    இந்நிலையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து வினாடிக்கு 9,400 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இன்றும் அணை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பாபநாசத்தில் 25 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மணிமுத்தாறில் 6.8 மில்லிமீட்டரும், சேர்வலாறு அணை பகுதியில் 4 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 3425 கனஅடியும், மணிமுத்தாறு அணையில் இருந்து வினாடிக்கு 5,890 கனஅடியும் இன்று காலை நீர் திறக்கப்பட்டு வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள காக்காச்சி, நாலுமுக்கு, மாஞ்சோலை உள்ளிட்ட எஸ்டேட்டுகளில் நேற்று கனமழை பெய்த நிலையில் இன்றும் காலை வரையிலும் பலத்த மழை பெய்துள்ளது.

    இதற்கிடையே நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மழை அதிகரிக்கும்போது அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றில் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கப்படலாம். எனவே நீர்வரத்து அதிகரித்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு வாய்ப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேநேரத்தில் பொதுமக்களை பாதிக்கும் வகையில் வெள்ளம் ஏற்பட இல்லை என்றாலும், முன்எச்சரிக்கையாக மக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, அந்த பகுதிக்கு செல்லவோ வேண்டாம் என நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

    அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் அணைக்கட்டிற்கு சுமார் 10 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் வந்து கொண்டிருப்பதாலும், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும்படி அந்த மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி எச்சரித்துள்ளார்.

    மேலும், தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் இறங்காதவாறு கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் மூலம் கண்காணித்திட ஸ்ரீவைகுண்டம், ஏரல் மற்றும் திருச்செந்தூர் தாசில்தார்களுக்கு கலெக்டர் அறிவுரைகள் வழங்கி உள்ளார்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி திருச்செந்தூரில் 4 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டங்களில் மற்ற இடங்களில் மழை பெய்யவில்லை என்றாலும், மழை எச்சரிக்கை காரணமாக மாவட்டம் முழுவதும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • கிராம நிர்வாக அலுவலகத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.
    • முகாம்களில் பள்ளி மற்றும் கல்லூரி அசல் சான்றிதழ்கள், 10, பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், பாடப்புத்தகங்கள், பள்ளி சீருடைகள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழந்தது. இதனால் வீடுகளில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    மேலும் பலரது வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் அவர்களது வீடுகள் மற்றும் உடைமைகள் முழுவதும் சேதமானது. தற்போது இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் சேதமான ஆவணங்களுக்கு மாற்று ஆவணம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து சேதமான ஆவணங்களை பெறுவதற்கு இன்று சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இந்த முகாம் தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) வரை நடத்தப்படுகிறது. அதன்படி தூத்துக்குடி வட்டத்தில் தூத்துக்குடி தாசில்தார் அலுவலகம் மற்றும் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு மண்டல அலுவலகங்களிலும், மாப்பிள்ளையூரணி கிராம நிர்வாக அலுவலகத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.

    ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் பழைய தாசில்தார் அலுவலகம், தாசிதார் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஏரல் வட்டத்தில் பழையகாயல் மரிய அன்னை மேல்நிலைப்பள்ளி, நாசரேத் கிராம நிர்வாக அலுவலகம், ஆழ்வார்திருநகரி கிராம நிர்வாக அலுவலகம், பெருங்குளம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம், சாயர்புரம் கிராம நிர்வாக அலுவலகம், ஏரல் தாசில்தார் அலுவலகத்தில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது.

    திருச்செந்தூர் வட்டத்தில் ஆத்தூர் சமுதாயநலக்கூடம், புன்னைக்காயல் புனித வளனார் திருமணமண்டபம், சுகந்தலை சமுதாய நலக்கூடம், திருச்செந்தூர் தாசில்தார் அலுவலகம், மெஞ்ஞானபுரம், பரமன் குறிச்சி, மானாடு தண்டு பத்துக்கு வெள்ளாளன் விளை சர்ச் மகால், நங்கைமொழி, லெட்சுமி புரம், செட்டியா பத்து, உடன்குடிக்கு உடன்குடி வருவாய் அலுவலகம், சாத்தான்குளம் வட்டத்தில் சாத்தான்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தாசில்தார் அலுவலகத்தில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது.

    இந்த முகாம்களில் பள்ளி மற்றும் கல்லூரி அசல் சான்றிதழ்கள், 10, பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், பாடப்புத்தகங்கள், பள்ளி சீருடைகள் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படுகிறது. சாதிச்சான்று, இருப்பிச்சான்று, வருமானச்சான்று, வாரிசுச்சான்று, விதவை, ஆதரவற்றோர் சான்று உள்ளிட்டவைகள் வருவாய்த்துறையினர் மூலம் வழங்கப்படுகிறது.

    ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேஷன்கார்டு, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு அட்டை, பட்டா நகல்கள், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட அட்டை, வங்கி கணக்கு புத்தகம், ஏ.டி.எம்.கார்டு, டிரைவிங் லைசென்சு, பத்திர ஆவணங்கள் மற்றும் சிலிண்டர் இணைப்பு புத்தகம் ஆகியவைகள் சம்பந்தப்பட்ட துறையினர் மூலம் வழங்கப்படுகிறது.

    எனவே இன்றும், நாளையும் நடைபெறும் இந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் லட்சுமிபதி கேட்டுக் கொண்டுள்ளார்.

    ×