search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செந்தில் பாலாஜி கைது"

    • சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ், சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஆகியவற்றில் தனித்தனியாக 3 வழக்குகள் செந்தில்பாலாஜி மீது பதிவு செய்யப்பட்டு உள்ளது.
    • சிறப்பு கோர்ட்டில் வருகிற 28-ந் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.

    சென்னை:

    கடந்த 2015-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது டிரைவர், கண்டக்டர் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் பணத்தையும் திரும்ப கொடுக்காமல் ஏமாற்றியதாக அமைச்சர் செந்தில்பாலாஜி மீது குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ், சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஆகியவற்றில் தனித்தனியாக 3 வழக்குகள் செந்தில்பாலாஜி மீது பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    அந்த வழக்குகள் அனைத்தும் நிலுவையில் உள்ளன. இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை தனியாக விசாரணை நடத்தி சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கடந்த ஜூன் 14-ந்தேதி செந்தில்பாலாஜியை கைது செய்தது.

    இதன்பின்பு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தது.

    இதைத்தொடர்ந்து அவர் மீது 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்தது.

    செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ.வாக இருப்பதால் அவர் மீதான வழக்கை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான சிறப்பு கோர்ட்டுதான் விசாரிக்க வேண்டும்.

    அந்த அடிப்படையில், இந்த வழக்கை சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றி முதன்மை செசன்ஸ் கோர்ட்டு நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டு உள்ளார்.

    சிறப்பு கோர்ட்டில் வருகிற 28-ந் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. அன்றைய தினம் செந்தில்பாலாஜிக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்க வாய்ப்பு உள்ளது.

    குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டதும் சாட்சி விசாரணை உள்ளிட்ட அடுத்தகட்ட விசாரணை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் நிலுவையில் உள்ள வழக்குகளை செப்டம்பர் 30-ந்தேதிக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என போலீசாருக்கு சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

    இந்த வழக்குகளிலும் செந்தில்பாலாஜி மீது அடுத்த மாதம் இறுதிக்குள் போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வார்கள் என தெரிகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அசோக் குமாரின் மனைவி நிர்மலா, நிர்மலாவின் தாய் லட்சுமி என இருவருக்கும் சம்மன் அனுப்பியும் அவர்கள் ஆஜராகவில்லை.
    • செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் 3 பேருக்கும் தொடர்பு இருப்பதாக கருதியதால் சம்மன் அனுப்பப்பட்டது.

    சென்னை:

    அமைச்சர் செந்தில் பாலாஜி முறைகேடான பண பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

    அமலாக்கத்துறை கஸ்டடியில் எடுத்து விசாரிக்கப்பட்ட பிறகு மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த வழக்கில் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்கின் பெயரும் இடம் பெற்றுள்ளது. அசோக் குமாருக்கு 4 முறை சம்மன் அனுப்பப்பட்டது, ஆனால் அவர் ஆஜராகவில்லை.

    இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை கைது செய்து விசாரணை நடத்துவதாக வெளியான தகவலுக்கு அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

    அசோக் குமார் கைது செய்யப்படவில்லை. அவருக்கு 4 முறை சம்மன் அனுப்பப்பட்டது, ஆனால் அவர் ஆஜராகவில்லை. அசோக் குமாரின் மனைவி நிர்மலா, நிர்மலாவின் தாய் லட்சுமி என இருவருக்கும் சம்மன் அனுப்பியும் அவர்கள் ஆஜராகவில்லை.

    செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் 3 பேருக்கும் தொடர்பு இருப்பதாக கருதியதால் சம்மன் அனுப்பப்பட்டது.

    கொச்சியில் அசோக்குமார் கைதானதாக வெளியான செய்தி தவறானது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டது.

    • போக்குவரத்து துறையில் 2014 முதல் 2015 வரை பணியமர்த்தப்பட்ட சுமார் 1500 பேரிடம் விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
    • கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 150 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, டிரைவர், கண்டக்டர் பணியிடங்களுக்கு பணம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் பேரில் அமலாக்க துறையினர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தி கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

    செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது நீதிமன்ற காவலில் அவர் உள்ளார்.

    மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு விசாரணையை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விரைவுப்படுத்தி உள்ளனர்.

    போக்குவரத்து துறையில் 2014 முதல் 2015 வரை பணியமர்த்தப்பட்ட சுமார் 1500 பேரிடம் விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    முதற்கட்டமாக 300 போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 150 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

    பணியமர்த்தப்பட்டது எப்படி? சமர்ப்பித்த ஆவணங்கள் என்ன? என விசாரித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.

    • அமலாக்கத்துறை சார்பில் அசோக்குக்கு 2 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.
    • வருகிற 27-ந்தேதி ஆஜராக வேண்டும் என்று மூன்றாவது சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் உள்ளிட்டோரின் வீடுகளில் முதலில் வருமான வரி சோதனையும், பின்னர் அமலாக்கத்துறை சோதனையும் நடைபெற்றது.

    இது தொடர்பாக அசோக் நேரில் ஆஜராகுமாறு இந்த 2 துறைகளின் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. கடந்த மாதம் 20ம் தேதிக்கு முந்தைய வாரமே அசோக்குக்கு சம்மன் அனுப்பப்பட்டு நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை அலுவலகங்களில் அசோக் கடந்த ஜூன் 20ம் தேதி ஆஜராகவில்லை. ஆனால், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக தேவையான ஆவணங்களை திரட்டவேண்டி இருப்பதால் வேறு ஒரு நாளில் ஆஜராகிறேன் என அசோக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

    அமலாக்கத்துறை சார்பில் அசோக்குக்கு 2 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாததால், மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையினர் முடிவு செய்தனர்.

    இந்த நிலையில் 3-வது முறையாக அசோக்குமாருக்கு வருமானவரிதுறை அதிகாரிகள் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர். வருகிற 27-ந்தேதி ஆஜராக வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • முதலமைச்சரின் ஆலோசனை இன்றி அமைச்சர்களை நியமிக்கவோ நீக்கவோ கவர்னருக்கு அதிகாரம் இல்லை.
    • கவர்னர் ஆர்.என்.ரவி, மாநில அரசியலிலும், மாநில அரசு நிர்வாகத்திலும் தலையிடும் வகையில் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    சென்னை:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜியை கவர்னர் ஆர்.என்.ரவி பதவி நீக்கம் செய்ததற்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. இது முழுக்க முழுக்க அரசியல் சாசனத்துக்கு எதிரான செயல். முதலமைச்சரின் ஆலோசனை இன்றி அமைச்சர்களை நியமிக்கவோ நீக்கவோ கவர்னருக்கு அதிகாரம் இல்லை.

    கவர்னர் ஆர்.என்.ரவி, மாநில அரசியலிலும், மாநில அரசு நிர்வாகத்திலும் தலையிடும் வகையில் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்வதற்கான மூர்க்கத்தனமான நடவடிக்கையை நிறுத்தி வைத்தாலும், அவர் கவர்னர் பதவியை வகிக்க தகுதியற்றவர் என்பதை தெளிவாக காட்டுகிறது. அவரை உடனடியாக ஜனாதிபதி திரும்ப அழைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னை ஐகோர்ட்டில் அமலாக்கத் துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
    • செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக சிறை பிடிக்கவில்லை என தெரிவித்தது.

    சென்னை:

    அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் இன்று கூடுதல் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தனது கணவருக்கு எதிராக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெறுப்பை வளர்த்து வருவதாக குற்றம் சாட்டினார். மேலும் செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைத்தது சட்டவிரோதமானது. அவரை நீதிமன்ற காவலில் வைக்க மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், அவரை விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.

    இந்நிலையில், செந்தில் பாலாஜியின் மனைவியின் மனுவுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் கூறியுள்ளதாவது:

    அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்யும் முன் சட்டவிரோதமாக சிறை பிடிக்கவில்லை. சம்மனை பெற செந்தில் பாலாஜி மறுத்தார்; அதிகாரிகளை மிரட்டும் தொனியில் நடந்து கொண்டார்.

    விசாரணைக்கு ஒத்துழைக்காததால் வேறு வழியின்றி கடைசி நடவடிக்கையாக செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். சட்ட விரோதமாக செந்தில் பாலாஜியை கைது செய்யவில்லை.

    செந்தில் பாலாஜி சட்டவிரோத பணபரிமாற்றம் செய்துள்ளார் என்பதற்கு காரணங்கள் உள்ளன. அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளதால் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை இதுவரை காவலில் எடுத்து விசாரிக்கவில்லை. வருங்காலத்தில் செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க வாய்ப்பளிக்க வேண்டும்.

    ஜூன் 13ல் நடந்த சோதனையில் செந்தில் பாலாஜி உடன் இருந்தார்; அவரை சட்டவிரோதமாக சிறைபிடிக்கவில்லை. சாட்சியங்களை கலைத்து ஆதாரங்களை அழிக்க வாய்ப்பு இருந்ததால் தான் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார்.

    பெருந்தொகை டெபாசிட் செய்யப்பட்டது பற்றி எந்த விளக்கமும் செந்தில் பாலாஜி தரப்பில் அளிக்கப்படவில்லை. செந்தில் பாலாஜி கைது பற்றி அவரது குடும்பத்திற்கு குறுஞ்செய்தி மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டது என தெரிவித்துள்ளது.

    • அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடந்த21ம் தேதி இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
    • அவரது உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இருதயத்தில் 4 அடைப்புகள் இருந்ததால் கடந்த 21-ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    இதையடுத்து அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதயத்தில் அடைப்புகள் அகற்றப்பட்ட நிலையில் ஐசியுவில் அவர் உள்ளார். செந்தில் பாலாஜிக்கு வென்டிலேட்டர் கருவி அகற்றப்பட்டு உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி அவசர சிகிச்சை பிரிவில் இருந்து தனி அறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காவேரி மருத்துவமனையின் 7வது தளத்தில் இருந்து 4-வது தளத்தில் உள்ள தனி அறையில் மாற்றப்பட்டுள்ளார்.

    • அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • செந்தில் பாலாஜி உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    சென்னை:

    அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இருதயத்தில் 4 அடைப்புகள் இருந்ததால் கடந்த 21-ந்தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதயத்தில் அடைப்புகள் அகற்றப்பட்ட நிலையில் ஐசியுவில் அவர் உள்ளார்.

    செந்தில் பாலாஜிக்கு வென்டிலேட்டர் கருவி அகற்றப்பட்டு உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

    • அறுவை சிகிச்சைக்கு பிறகு 3 மணி நேரத்துக்கு செந்தில் பாலாஜி மயக்க நிலையில் இருந்தார்.
    • கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி சென்னையில் வருகிற 24-ந்தேதி கலைஞர் நூற்றாண்டு மெகா மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

    சென்னை:

    அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இருதயத்தில் அடைப்புகள் இருந்ததால் நேற்று காலை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சுமார் 5 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது.

    அறுவை சிகிச்சைக்கு பிறகு 3 மணி நேரத்துக்கு செந்தில் பாலாஜி மயக்க நிலையில் இருந்தார். அதன் பிறகு அவருக்கு மயக்கம் தெளிந்தது.

    இந்தநிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று கூறியதாவது:-

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று பைபாஸ் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பிறகு செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது.

    கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி சென்னையில் வருகிற 24-ந்தேதி கலைஞர் நூற்றாண்டு மெகா மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இதற்காக 100 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படுகின்றன. இதில் பல் மருத்துவம், காச நோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. ஆட்சியில் எஸ்.ஜ.எப்.ஐ. விளையாட்டு போட்டியில் கூட மாணவர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.
    • பேருந்து சேவை குறைக்கப்பட்டதால் இலவச பேருந்து பயணமும் கிடைக்கவில்லை.

    ஈரோடு:

    செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக்கோரி ஈரோட்டில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.

    தமிழ்நாட்டில் 13 ஆண்டுகள் எம்.ஜி.ஆர். ஆட்சி செய்தார். 5 முறை ஜெயலலிதா முதல்வரானார். பிறகு இ.பி.எஸ். மாநிலத்தில் ஆட்சி செய்தார். அத்திக்கடவு-அவினாசி குடிநீர் திட்டம் உட்பட பல நலத்திட்டங்கள் மற்றும் மேம்பாட்டு திட்டங்களை வழங்கினார்.

    ஆனால் தி.மு.க. ஆட்சியில் எஸ்.ஜ.எப்.ஐ. விளையாட்டு போட்டியில் கூட மாணவர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. மின் விநியோகம் அவ்வப்போது தடைப்படுகிறது. பேருந்து சேவை குறைக்கப்பட்டதால் இலவச பேருந்து பயணமும் கிடைக்கவில்லை. கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் அதிகரித்து வருகிறது. பல பகுதிகளில் குடிநீர் வினியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

    வரி பல மடங்கு உயர்த்தப்பட்டது. வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பால் விலை, சொத்து, தண்ணீர் வரி உயர்த்தப்பட்டது. மதுவின் மூலம் தி.மு.க.வுக்கு பல கோடி ரூபாய் தினசரி கிடைக்கிறது. நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்ற தனது தேர்தல் வாக்குறுதியை தி.மு.க. நிறைவேற்றவில்லை. அ.தி.மு.க. ஆட்சியின் திட்டங்கள் மட்டுமே தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளன. தி.மு.க. ஊழலால் வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். அதைத்தொடர்ந்து தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் 234 தொகுதியில் அ.தி.மு.க அபார வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கனிமொழி கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த போது அவரை சென்று மு.க.ஸ்டாலின் பார்க்கவில்லை.
    • விரைவில் தமிழக மந்திரிகள் அனைவரும் குற்றவாளிகள் கூடாரத்திற்குள் கொண்டுவரப்படுவார்கள்.

    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் அ.தி.மு.க சார்பில் இன்று அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மணிக்கூண்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாவட்ட செயலாளருமான நத்தம் இரா.விசுவநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    தி.மு.க.வின் கருவூலமாக செந்தில்பாலாஜி செயல்பட்டு வருகிறார். அதனால்தான் அமலாக்கத்துறையினர் கைது செய்தவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர அவசரமாக பதட்டத்துடன் அவரை சென்று சந்தித்தார். உச்சநீதிமன்றம் அறிவுறுத்தலின்படி அமலாக்கத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    ஆனால் ஒரு அமைச்சரை விசாரணையில் இருந்து காப்பாற்ற தி.மு.க அரசு முயல்வது வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத ஒன்றாகும். அமலாக்கத்துறையினர் தங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பல்வேறு மாநிலங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    அதன்படி குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைச்சர்களை அம்மாநில அரசு பதவியில் இருந்து நீக்கிவிடும். ஆனால் தமிழக அரசு அதுபோல் செய்யவில்லை. கனிமொழி கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த போது அவரை சென்று மு.க.ஸ்டாலின் பார்க்கவில்லை. ஆனால் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டபோது சென்று பார்த்து தனது கருத்துகளை பதிவு செய்திருப்பது முதலமைச்சர் பதவிக்கு அழகல்ல.

    தற்போது 3-ம் தர பேச்சாளர் போல அவர் பேசி வருகிறார். ரூ.30ஆயிரம் கோடி ஊழல் தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைதொடர்ந்து அவர் வேறு இலாகாவிற்கு மாற்றப்பட்டார். அதனைதொடர்ந்து பொன்முடியும் தற்போது விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். விரைவில் தமிழக மந்திரிகள் அனைவரும் குற்றவாளிகள் கூடாரத்திற்குள் கொண்டுவரப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கினார்.
    • அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக்கோரி அ.தி.மு.க. சார்பில் கவர்னரிடம் மனு கொடுக்கப்பட்டிருந்தது.

    சென்னை:

    கடந்த 2011-2015-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி போக்குவரத்து கழகங்களில் டிரைவர்-கண்டக்டர்கள் வேலைக்கு லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு சொன்னபடி வேலை வழங்கவில்லை என்று புகார் கூறப்பட்டது. இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

    இதன் காரணமாக அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கினார். அவரிடம் இருந்த மாவட்டச் செயலாளர் பதவியும் அப்போது பறிக்கப்பட்டது.

    ஆனாலும் அவர் மீது போலீசில் கொடுக்கப்பட்ட புகார் அப்படியே இருந்தது. கோர்ட்டிலும் அவர் மீதான வழக்கு இருந்தது. அப்போது 2016-ம் ஆண்டு கரூரில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினார்.

    அந்த தேர்தலில் வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி அ.ம.மு.க.வுக்கு சென்று அதன் பிறகு கடந்த 2018-ம் ஆண்டு தி.மு.க.வில் சேர்ந்து இப்போது தி.மு.க.வில் அமைச்சராகவும் உள்ளார்.

    ஆனாலும் அவர் மீதான வழக்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் அமலாக்கத் துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்து அழைத்துச் சென்றபோது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக்கோரி அ.தி.மு.க. சார்பில் கவர்னரிடம் மனு கொடுக்கப்பட்டிருந்தது.

    அதன் தொடர்ச்சியாக அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்று அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என்றும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

    அதன்படி ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் தி.மு.க. அரசை கண்டித்து இன்று அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள்.

    சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகே இன்று அ.தி.மு.க.வினர் ஒன்று திரண்டு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.

    ஒருங்கிணைந்த சென்னை மாவட்டம் மற்றும் புறநகர் மாவட்டம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான கழக நிர்வாகிகள் பங்கேற்று தி.மு.க. அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர். செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.

    சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும் அவர்கள் முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைப்புச் செயலாளர்கள் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், பாலகங்கா, ஆதிராஜாராம், மாவட்டச் செயலாளர்கள் விருகை வி.என்.ரவி, வெங்கடேஷ் பாபு, தி.நகர் சத்தியா, ஆர்.எஸ்.ராஜேஷ், வேளச்சேரி எம்.கே.அசோக், கே.பி.கந்தன், அம்மா பேரவை மாநில துணைச் செயலாளர் பரங்கிமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரும்பாக்கம் எ.ராஜசேகர், எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில துணைச் செயலாளரும் 193-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான துரைப்பாக்கம் டி.சி.கோவிந்தசாமி, எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளர் டாக்டர் வி.சுனில், கழக மாணவரணி மாநில துணைச் செயலாளர் வழக்கறிஞர் ஆ.பழனி,

    இலக்கிய அணி இணைச் செயலாளர் சிவராஜ், பேரவை துணைச் செயலாளர் வேளச்சேரி மூர்த்தி, பகுதி செயலாளர்கள் எ.எம்.காமராஜ், ஜி.கே.முருகன், சைதை சுகுமார், ஷேக் அலி, எஸ்.எம்.சரவணன், எம்.ஜி.ஆர். நகர் குட்டி, வக்கீல் சதாசிவம், மார்க்கெட் சுரேஷ், வைகுண்ட ராஜா, ஆயிரம் விளக்கு 117-வது வட்ட கழக செயலாளர் முன்னாள் மாமன்ற உறுப்பினர் பி.சின்னையன் (எ) ஆறுமுகம், மாணவரணி போயஸ்கார்டன் எம்.ராமலிங்கம், வடபழனி சத்திய நாராயணமூர்த்தி வழக்கறிஞர் பாபு முருகவேல், வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட கழக பொருளாளர் வழக்கறிஞர் எம்.பாலாஜி, மாநில சிறுபான்மை ஆணைய முன்னாள் துணைத் தலைவரான கழக செய்தி தொடர்பாளர் வீர ஜவஹர் அலி உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

    இதே போல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

    காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே காவலன் கேட்டில் மாவட்ட செயலாளர் வி.சோம சுந்தரம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா. கணேசன், நிர்வாகிகள் மைதிலி திருநாவுக்கரசு, காஞ்சி பன்னீர்செல்வம், கே.யு.எஸ். சோமசுந்தரம், வள்ளிநாயகம், வி.பாலாஜி, வாலாஜாபாத் அரிகுமார், ஜெயராஜ், திலக்குமார் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

    செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் மற்றும் மேற்கு மாவட்டத்தின் சார்பில் செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே மாநில மகளிர் அணி செயலாளர் பா.வளர்மதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் மாவட்ட செயலாளர்கள் சிட்டலப்பாக்கம் ராஜேந்திரன், திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் டி.கே.எம்.சின்னையா, மாநில மகளிர் அணி இணை செயலாளர்கள் மரகதம் குமர வேல் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. கனிதாசம்பத், தண்டரை கே.மனோகரன், கே.என்.ராமச்சந்திரன், தனபால், ப. தன்சிங், பூவராகவமூர்த்தி, அனகை ராஜாதுரைபாபு, வேலாயுதம், விஜயசங்கர், முரளிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிழக்கு மாவட்டச் செயலாளர் மாதவரம் மூர்த்தி, மேற்கு மாவட்ட செயலாளர் பி.வி. ரமணா, வடக்கு மாவட்டச் செயலாளர் பி.பலராமன், தெற்கு மாவட்டச் செயலாளர் அலெக்சாண்டர், மத்திய மாவட்ட செயலாளர் பா.பெஞ்சமின் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    சிறப்பு அழைப்பாளராக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

    இதில் முன்னாள் எம்.பி.க்கள் வேணுகோபால், கோ.அரி, முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம், முன்னாள் எம்.எல்.ஏ. மணிமாறன், துணைச் செயலாளர் கமாண்டோ பாஸ்கரன், மாவட்ட வக்கீல் பிரிவு இணைச் செயலாளர் ராம்குமார், கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் சூரகாபுரம் சுதாகர், சிற்றம் சீனிவாசன், இளைஞர் அணி செயலாளர் வேல்முருகன், மதுரவாயல் வடக்குபகுதி செயலாளர் என்.எம். இமானுவேல், அம்மாபேரவை பகுதி செயலாளர் முகப்பேர் இளஞ்செழியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×