search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அண்ணாமலை 234 தொகுதிகளில் 100 நாட்கள் யாத்திரை- நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்
    X

    அண்ணாமலை 234 தொகுதிகளில் 100 நாட்கள் யாத்திரை- நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்

    • இளைஞர்கள், தன்னார்வலர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் தாமாகவே யாத்திரையில் கலந்து கொள்கிறார்கள்.
    • யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சி சென்னையில் நடைபெறும்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வருகிற 28-ந்தேதி நடைபயணம் தொடங்குகிறார். இந்த நடைபயண விவரங்கள் குறித்து முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    என் மண் என் மக்கள் என்ற முழக்கத்தோடு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்குகிறார் மத்திய மந்திரி அமித்ஷா நடைபயணத்தை தொடங்கி வைக்கிறார்.

    அன்றைய தினம் நடைபெறும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்திலும் அவர் பேசுகிறார்.

    மொத்தம் ஐந்து கட்டங்களாக இந்த யாத்திரை நடைபெறுகிறது. ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய பாராளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கி நடைபெறும் முதற்கட்ட யாத்திரை ஆகஸ்ட் 22-ந்தேதி நிறைவடைகிறது.

    அதன் பிறகு சிறு சிறு இடைவெளிகளுடன் அடுத்தடுத்த கட்டங்களாக யாத்திரை நடைபெறும். ஜனவரி மாதம் சென்னையில் யாத்திரை நிறைவடையும். தமிழ்நாட்டில் தூய்மையான நேர்மையான அரசாங்கம் வரவேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். இது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையிலும் கடந்த 9 ஆண்டுகளாக நடைபெறும் மோடி அரசின் சாதனைகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையிலும் இந்த பயணம் அமையும்.

    தேசிய ஜனநாயக கூட்டணி வருகிற தேர்தலிலும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மோடி பிரதமராகும் இலக்கோடு இந்த பயணத்தை மக்கள் மத்தியில் நடத்துகிறோம்.

    தமிழ்நாட்டில் தி.மு.க. வின் ஊழல் நிறைந்த ஆட்சியையும் இந்த ஆட்சியின் அவலங்களையும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது இந்த பயணத்தின் பிரதான நோக்கமாக இருக்கும். பிரசாரத்தின் போது வழி நெடுக பிரதமர் மோடி தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் செய்திருக்கும் சாதனைகளை 10 லட்சம் புத்தகங்களாக அச்சிட்டு மக்களுக்கு விநியோகிக்கப்படும்.

    மேலும் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மக்களுக்கு எழுதியுள்ள கடிதங்களை ஒரு கோடி குடும்பங்களுக்கு விநியோகிக்க இருக்கிறோம்.

    நடை பயணத்தின் போது பதினோரு இடங்களில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடத்தப்படும். இதில் அகில இந்திய தலைவர்கள் மத்திய மந்திரிகள் பங்கேற்பார்கள். இது தவிர நூற்றுக்கணக்கான தெரு முனை கூட்டங்களில் அண்ணாமலை உரையாற்றுவார்.

    மேலும் கிராமசபை கூட்டங்களிலும் பங்கேற்று மக்களுடைய குறைகளை கேட்டு அறிவார். அதை சரி செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

    முக்கியமான இடங்களில் இருந்து புனித மண் சேகரிக்கப்படும் அதை வைத்து தமிழ் தாய்க்கு முழு உருவ சிலை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக அரசியலில் பல கட்சிகளும் யாத்திரைகள் நடத்தி இருக்கலாம். இந்த யாத்திரை அரசியலில் புதிய அத்தியாயத்தை எழுதும் யாத்திரை நிறைவு பெறும்போது அரசியலில் திருப்பு முனையை உருவாக்கும், யாத்திரையில் கலந்து கொள்ள ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்து இருக்கிறார்கள்.

    இளைஞர்கள், தன்னார்வலர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் தாமாகவே இந்த யாத்திரையில் கலந்து கொள்கிறார்கள். இதை கட்சி யாத்திரையாக கருதாமல் தமிழக அரசியலில் ஒளி ஏற்றும் திருவிழாவாக மக்கள் கொண்டாடுவார்கள்.

    இந்த யாத்திரையின் போது மக்கள் புகார் பெட்டி ஒன்றும் எடுத்துச் செல்லப்படும். விடியல முடியல என்ற முழக்கத்தோடு கொண்டு செல்லப்படும்.

    இந்த பெட்டியில் மக்கள் தங்கள் புகார்களையும் எழுதி போடலாம். யாத்திரை நிறைவில் பிரதமர் மோடியும் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சி சென்னையில் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், மாநில துணைத்தலைவர் சக்கரவர்த்தி, நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., கி.பி.துரைசாமி யாத்திரையின் பொறுப்பாளர் நரேந்திரன் இணைப்பு பொறுப்பாளர் அமர் பிரசாத் ரெட்டி ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×