search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் தி.மு.க.வை மிஞ்சும் அளவுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளது-  பொன். ராதாகிருஷ்ணன்
    X

    தமிழகத்தில் தி.மு.க.வை மிஞ்சும் அளவுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளது- பொன். ராதாகிருஷ்ணன்

    • பிரதமர் மோடி தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
    • மூன்றாவது முறையாக பிரதமர் மோடி வர வேண்டும் என்று ஆதரவு தெரிவிப்பவர்களை நாங்கள் வரவேற்கிறோம்.

    கன்னியாகுமரி:

    முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும். பிரதமர் மோடி தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற் கொண்டு வருகிறார்.

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பிரசாரம் செய்வதற்காக நாளை மறுநாள் வருகிறார். இங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார். பிரதமர் வருகையின் மூலமாக கன்னியாகுமரி தொகுதியின் வெற்றி உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

    பிரதமர் மோடி 18-ந் தேதி சேலத்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும், 19-ந் தேதி கோவையில் நடைபெறும் நிகழ்ச்சிகளும் கலந்து கொள்கிறார். சமத்துவ மக்கள் கட்சி பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்ததை வரவேற்கிறேன்.


    பிரதமர் மோடி ஆளுமையை ஏற்று வரும் அனைத்து கட்சிகளையும் நாங்கள் வரவேற்கிறோம். எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் சரி. மூன்றாவது முறையாக பிரதமர் மோடி வர வேண்டும் என்று ஆதரவு தெரிவிப்பவர்களை நாங்கள் வரவேற்கிறோம்.

    தமிழகத்தை பொறுத்த மட்டில் தி.மு.க.வை மிஞ்சும் அளவில் தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சி பல்வேறு சாதனைகளை செள்துள்ளது. அயல்நாட்டு தொடர்பு முதல் அடித்தட்டு மக்கள் வரை பல்வேறு வளர்ச்சிகளை செய்துள்ளது.

    கோடிக்கணக்கான திட்டங்களை நாட்டுக்கு பிரதமர் மோடி அர்ப்பணித்துள்ளார். இந்த தேர்தலை பொருத்தமட்டில் மீண்டும் மோடி வேண்டும் மோடி என்ற கொள்கையின் அடிப்படையில் தேர்தலை சந்திக்க உள்ளோம்.

    விளவங்கோடு சட்டசபை தொகுதியில் பா.ஜனதா சார்பில் விஜயதரணி போட்டியிடுவாரா? என்பது குறித்து தேர்தல் அறிவிக்கபட்ட பிறகு தலைமை முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×