search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கன்னியாகுமரி தொகுதியை மீண்டும் பாரதிய ஜனதா கைப்பற்றுமா?
    X

    கன்னியாகுமரி தொகுதியை மீண்டும் பாரதிய ஜனதா கைப்பற்றுமா?

    • குமரி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பொன் ராதாகிருஷ்ணன் மேற்கொண்டார்.
    • கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரதிய ஜனதா அலை வீசுவதாகவும் கூறினார்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த தொகுதி மார்ஷல் நேசமணி, தாணுலிங்கம் நாடார், பெருந்தலைவர் காமராஜர், குமரி ஆனந்தன் என பெருந்தலைவர்கள் போட்டியிட்டு வென்ற தொகுதியாகும்.

    கன்னியாகுமரி தொகுதியில் 1951 முதல் 1998 வரை காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் இந்த தொகுதி வெற்றிபெற்று இருந்தது. 1996-ம் ஆண்டு பாரதிய ஜனதாகட்சி முதல் முறையாக கன்னியாகுமரி தொகுதியில் களமிறங்கியது. பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக பொன். ராதாகிருஷ்ணன் களம் இறக்கப்பட்டார்.

    அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட டென்னிஸ் வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து நடந்த தேர்தலிலும் பொன் ராதாகிருஷ்ணன் பாரதிய ஜனதா கட்சி சார்பில் களம் இறக்கப்பட்டார். 1999-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பொன் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.


    அப்போது அமைந்த பாரதிய ஜனதா ஆட்சியில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை இணை மந்திரியாகவும், நகர்புற வளர்ச்சித்துறை இணை மந்திரியாகவும், சாலை போக்குவரத்து துறை மற்றும் நெடுஞ் சாலைத்துறை இணை மந்திரியாகவும் பொறுப்பு வகித்தார்.

    2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பொன் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று மத்திய இணை மந்திரியாக பொறுப்பேற்றார். தொழிற்சாலைகள் மற்றும் பொதுப் பணித்துறை நிறுவனங்கள் துறை இணை மந்திரியாகவும், சாலை போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை இணை மந்திரியாகவும், நிதித்துறை மற்றும் துறைமுக துறை இணை மந்திரியாகவும் பதவி வகித்தார்.

    அப்போது குமரி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பொன். ராதாகிருஷ்ணன் மேற்கொண்டார். மார்த்தாண்டத்தில் மேம்பாலம், பார்வதிபுரத்தில் மேம்பாலம், சுசீந்திரம் பாலம் போன்ற உன்னத திட்டங்களை செயல்படுத்தினார். குமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை திட்டங்களை செயல்படுத்த பொன்.ராதாகிருஷ்ணன் முக்கிய பங்கு வைத்தார்.

    தற்போது மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை மத்திய அரசிடம் இருந்து குமரி மாவட்டத்திற்கு பொன். ராதாகிருஷ்ணன் பெற்று தந்தார்.

    2019 நடந்த தேர்தலில் பொன். ராதாகிருஷ்ணன் வெற்றிவாய்ப்பை இழந்தார். 2021-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலிலும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் களமிறக்கப்பட்ட பொன். ராதாகிருஷ்ணன் வெற்றி பெறவில்லை. தற்போது நடைபெற உள்ள பாராளுமன்ற தொகுதியில் மீண்டும் பொன். ராதாகிருஷ்ணனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    பொன்.ராதாகிருஷ்ணன் இந்த முறை தேர்தலில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கியுள்ளார். ஏற்கனவே பாரத ஜனதா கட்சிக்கு ஆதரவாக கன்னியாகுமரியில் பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார். பாரதிய ஜனதா கட்சி குமரி மாவட்டத்தில் செய்துள்ள சாதனைகளை எடுத்துக் கூறினார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரதிய ஜனதா அலை வீசுவதாகவும் கூறினார்.


    பிரதமர் மோடியின் வருகை குமரி மாவட்ட மக்களுக்கும், பாரதிய ஜனதா கட்சியினருக்கும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. வேட்பாளராக பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டதையடுத்து பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் தங்களது கட்சியின் வெற்றிக்காக தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர்.

    கன்னியாகுமரி மாவட் டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பாரதிய ஜனதா நிர்வாகிகள் மத்திய அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க தொடங்கி விட்டனர். நாகர்கோவிலில் உள்ள தேர்தல் அலுவலகம் மற்றும் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் பலரும் திரண்டு உள்ளனர்.

    இதேபோல் அ.தி.மு.க. சார்பில் மாநில மீனவரணி இணை செயலாளர் பசிலியான் நசரேத் களம் இறக்கப்பட்டுள்ளார். அவர் முதல் முறையாக தேர்தல் களத்தில் இறங்கி உள்ளார். மக்களின் தேவைகளை அறிந்து செயல்படுவதாகவும் கூறி உள்ளார்.

    நாம் தமிழர் கட்சி சார்பில் மரிய ஜெனிபர் களம் இறக்கபட்டுள்ளார். அவர் ஏற்கனவே சட்டமன்ற தொகுதி வாரியாக தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். காங்கிரஸ் கட்சி சார்பில் யாரை வேட்பாளராக களம் இறக்குவது என்பது குறித்து கட்சி தலைமை ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

    கன்னியாகுமரி தொகுதியில் தற்போது எம்.பி.யாக உள்ள விஜய் வசந்த் மீண்டும் களம் இறக்கப்படலாம் என்று தெரிகிறது. அவர் ஏற்கனவே கடந்த இரண்டரை ஆண்டுகளாக தொகுதி முழுவதும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நிறைவேற்றியுள்ளார்.

    தன்னுடைய தந்தை வசந்தகுமார் வழியில் விஜய வசந்த் மக்கள் பணி ஆற்றி வருகிறார். எனவே கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு மீண்டும் அவருக்கே வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியை பொருத்தமட்டில் இந்த முறை நான்கு முனை போட்டி நிலவுகிறது. இந்த தொகுதியில் 7,76,127 ஆண் வாக்காளர்கள், 7, 78,734 பெண் வாக்காளர்கள், 135 மூனறாம் பாலினத்தினர் என மொத்தம் 15 லட்சத்து 55 ஆயிரத்து 96 வாக்காளர்கள் உள்ளனர்.

    கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது இந்த தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். மேலும் இளம் வாக்காளர்களும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். இதனால் இந்த தொகுதியில் இளம் வாக்காளர்கள் மற்றும் புதிய வாக்காளர்களை கவர அரசியல் கட்சியினர் கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

    கன்னியாகுமரி தொகு தியை மீண்டும் கைப்பற்றும் முனைப்பில் பாரதிய ஜனதா செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.கவும் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றிபெற வேண்டும் என்றே தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறது. கன்னியாகுமரியில் மீண்டும் தாமரை மலருமா? அல்லது காங்கிரஸ் கைப்பற்றுமா? இல்லையென்றால் இரட்டை இலை தளிர்விடுமா? என்பது ஜூன் 4-ந்தேதி தெரிந்துவிடும்.

    Next Story
    ×