search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல்வர் பழனிசாமி"

    டெண்டர் விவகாரம் தொடர்பான சிபிஐ விசாரணையை எதிர்த்து மேல் முறையீடு செய்யவுள்ளோம் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார். #tenderirregularities #Edappadipalaniswami #CBIenquiry #Ponnaiyan
    சென்னை:

    தமிழக நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4 ஆயிரத்து 800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி தி.மு.க. அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர்.

    இதற்கிடையே, முதல்வர் கையில் இருக்கும் லஞ்ச ஒழிப்பு துறை இதனை முறையாக விசாரித்து இருக்காது என மனுதாரர் கூடுதல் மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் புகாரை சிபிஐ விசாரிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது.

    இந்நிலையில், டெண்டர் விவகாரம் தொடர்பான சிபிஐ விசாரணையை எதிர்த்து மேல் முறையீடு செய்யவுள்ளோம் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் அதிமுக நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
    இதில் முன்னாள் அமைச்சர் பொன்னையன், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் விளக்கம் அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

    முதலமைச்சர் மீதான புகார் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்.

    நெடுஞ்சாலைத்துறை டெண்டர் வழங்கியதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. முதலமைச்சர் மீதான புகாரை விரைவுப்படுத்தவே எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கை முழுவதும் முடித்துவிட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து முடித்துவிட்ட நிலையில் சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது தவறு.

    நீதிமன்றத்தின் மீது நாங்கள் எந்த குற்றச்சாட்டையும் கூறவில்லை. 2009-ல் திமுக ஆட்சியில் சாலை பணிக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 33 கோடி ரூபாய் டெண்டர் விடப்பட்டுள்ளது. தற்போதைய அதிமுக ஆட்சியில் சாலை பணிக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 10 கோடி ரூபாய் மட்டுமே டெண்டர் விடப்பட்டுள்ளது. தற்போது டெண்டர் வழங்கப்பட்டுள்ள நிறுவனத்திற்கு, திமுக ஆட்சியில் 10-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளது.

    நெடுஞ்சாலை ஒப்பந்த முறைகேட்டில் அப்போதைய திமுக அரசு ஈடுபட்டதற்கு ஆதாரம் உள்ளது. விரைவில் திமுக மீது வழக்கு தொடருவோம் என தெரிவித்துள்ளார். #tenderirregularities #Edappadipalaniswami #CBIenquiry #Ponnaiyan
    சி.பி.ஐ விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் முதலமைச்சர் உடனடியாக பதவி விலகிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். #MKStalin #DMK #EdappadiPalaniswami #ADMK
    சென்னை:

    தமிழக நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4 ஆயிரத்து 800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி தி.மு.க. அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர்.

    இதற்கிடையே, முதல்வர் கையில் இருக்கும் லஞ்ச ஒழிப்பு துறை இதனை முறையாக விசாரித்து இருக்காது என மனுதாரர் கூடுதல் மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் புகாரை சிபிஐ விசாரிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது.

    இந்நிலையில், சி.பி.ஐ விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் முதலமைச்சர் உடனடியாக பதவி விலகிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.



    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெடுஞ்சாலை டெண்டர் புகார் பற்றி சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

    ஆதாரங்கள் அழிப்புக்கு இடமளித்துவிடாமல் காலதாமதமின்றி சிபிஐ விசாரணையை தொடங்க வேண்டும். உலக வங்கியின் ஊழல் எதிர்ப்பு விதிகளை மீறியது சர்வேத அளவில் தமிழகத்திற்கு தலைகுனிவு. 

    சிபிஐ விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் முதல்-அமைச்சர் பழனிசாமி உடனடியாக பதவி விலக வேண்டும், இல்லையேல் ஆளுநர் அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். #MKStalin #DMK #EdappadiPalaniswami #ADMK
    சென்னையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் இனி டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பெயரில் அழைக்கப்படும் என தெரிவித்தார். #MGRCenturyFestival #ADMK #EdappadiPalaniswami
    சென்னை:

    சென்னையில் நந்தனம் பகுதியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது. இதில் முதல்வர் பழனிசாமி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    ஆங்கிலேயருக்கு பிறகு அதிக முறை ஜார்ஜ் கோட்டையை ஆண்ட கட்சி அதிமுகதான். எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ஆடம்பர விழா அல்ல; மக்களுக்கு பயனளிக்கும் விழா. அதிமுக அரசு மக்களுக்கான அரசு; மக்களுக்காக பாடுபடுகின்ற அரசு.

    யாரும் அசைக்க முடியாத எஃகு கோட்டையாக அதிமுக இருந்து வருகிறது. குடிசைகள் இல்லாத சென்னையை உருவாக்கி வருகிறோம்.

    அவர் தொடர்ந்து, எம்.ஜி.ஆர். முதன்முறையாக முதல் அமைச்சராக பொறுப்பேற்ற பொழுது ரூ.330 கோடி விவசாய கடனை ரத்து செய்தவர்.

    திரைத்துறையில் இருந்து வந்தவர்களில் முதல் அமைச்சராக மக்கள் ஏற்று கொண்டது எம்.ஜி.ஆரையே.  தமிழகத்தின் சத்துணவு திட்டத்தினை மத்திய அரசே பின்பற்றுவதற்கு எம்.ஜி.ஆர். காரணம்.

    எம்.ஜி.ஆர். புகழை பறைசாற்றும் வகையில் அரசு சார்பில் நாணயம், அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. தமிழக மக்களுக்காக கிருஷ்ணா குடிநீர் திட்டத்தினை செயல்படுத்தியவர். தனது சொத்துகளை பொது நலத்திற்கு விட்டு சென்றவர்.

    நாட்டில் பெண்கள் பாதுகாப்பில் மெட்ரோ நகரங்களில் ஒன்றான சென்னை முதலிடம் வகிக்கிறது. இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக சென்னையில் குவிந்து வருகிறார்கள்.



    சென்னை அருகே உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும். கோயம்பேடு பேருந்து நிலையம் இனி டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பெயரில் அழைக்கப்படும்.

    ராமாவரம் தோட்டம் அமைந்துள்ள சுமார் 20.8 கி.மீ நீளமுள்ள மவுண்ட் - பூந்தமல்லி - ஆவடி நெடுஞ்சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும்.

    எம்.ஜி.ஆர். என்ற சக்தி தோன்றியிருக்கா விட்டால் தமிழகத்தின் கதி நிர்க்கதியாகி இருக்கும். எம்.ஜி.ஆர். கட்சி அவரது படம் போன்று 100 நாட்களே இருக்கும் என்றவர்கள் கோட்டைக்கே வர முடியவில்லை.

    எதிர்ப்புகளை எல்லாம் மீறி சென்னையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. விழாவை நிறுத்த தீட்டப்பட்ட சதி முறியடிக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் பேசினார். #MGRCenturyFestival #ADMK #EdappadiPalaniswami
    சென்னையில் நடைபெற்று வரும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா மலரை முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்டார். #MGRCenturyFestival #ADMK #EdappadiPalaniswami #OPanneerselvam
    சென்னை:

    முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா அதிமுக கட்சி சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட்டது. இதையடுத்து அதன் நிறைவு விழா இன்று சென்னையில் பிரம்மாண்டமான ஏற்பாடுகளுடன் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    சென்னை நந்தனம் ஒய். எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50-ம் ஆண்டு பொன் விழா நடைபெற்று வருகிறது.
     
    இந்த விழாவின் கலை நிகழ்ச்சிகளில் ஒன்றாக பாட்டுக் கச்சேரியும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் அமைச்சர் ஜெயக்குமாரும் எம் ஜி ஆர் பாடல்களை பாடி பாடகராக அசத்தினார். பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவும் அவருடன் இணைந்து பாட்டுப்பாடி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

    இந்நிலையில், மாலை 4 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் மற்றும் பல்வேறு துறை அமைச்சர்கள் நூற்றாண்டு விழா நிறைவு மேடைக்கு வருகை தந்தனர்.  



    மேடையில் வைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    மேலும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா மலரை முதல்வர் பழனிசாமி வெளியிட துணைமுதல்வர் பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார்.

    பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதால் அதிக அளவிலான போலீசாரும் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். #MGRCenturyFestival #ADMK #EdappadiPalaniswami #OPanneerselvam
    அர்ஜூனா விருது வென்ற தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரனுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி ப்ழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். #ArjunaAward #SathiyanGnanasekaran #EdappadiPalaniswami
    சென்னை:

    மத்திய அரசால் ஆண்டுதோறும் விளையாட்டுத் துறையில் சிறந்த விளங்கும் வீரர்களுக்கு அர்ஜூனா விருது வழங்கி கவுரவிப்பது வழக்கம். இந்த விருதுக்கான பெயரை அந்தந்த விளையாட்டு சங்கங்கள் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யும். வீரர்களின் செயல்பாட்டை ஆராய்ந்து மத்திய அமைச்சகம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும்.

    தமிழக வீரர் சத்யன் ஞானசேகரன், ஹீமா தாஸ், ஸ்மிருதி மந்தனா உள்பட பல்வேறு வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது வழங்க மத்திய அரசுக்கு விளையாட்டுத்துறை அமைச்சகம் சமீபத்தில் பரிந்துரை செய்துள்ளது.

    இதற்கிடையே, தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரனுக்கு அர்ஜுனா விருது வழங்கப்படும் என விளையாட்டு துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.



    இந்நிலையில்,  அர்ஜூனா விருது பெறும் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் ஞானசேகரன் மேலும் பல வெற்றிகளை குவித்து சாதனை சிகரங்களை தொட அன்பான வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார். #ArjunaAward | #SathiyanGnanasekaran #EdappadiPalaniswami
    ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற தமிழக டென்னிஸ் வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரனுக்கு 20 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என தமிழக முதல் வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். #AsianGames #PrajneshGunneswaran #EdappadiPalanisamy
    சென்னை:

    இந்தோனேசிய தலைநகர் ஜெகார்த்தாவில் ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் வெண்கல பதக்கம் வென்றார்.

    இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலம் வென்ற டென்னிஸ் வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரனுக்கு ரூ.20 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.



    இதுதொடர்பாக, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரஜ்னேசுக்க் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறுகையில், ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலம் வென்றதற்கு வாழ்த்துக்கள். தமிழக அரசு சார்பில் ரூ. 20 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும், ஊக்கமுடன் செயல்பட்டு மேலும் பல வெற்றிகளை தேடித்தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். #AsianGames #PrajneshGunneswaran #EdappadiPalanisamy
    கேரளா வெள்ள நிவாரணத்துக்கு அதிமுக கட்சியின் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒருமாத சம்பளத்தை நிவாரண நிதிக்கு அளிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். #KeralaFloods #KeralaRain #KeralaReliefFund #EdappadiPalaniswami
    சென்னை:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழையால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது.  மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. நேற்று மட்டும் 33 பேர் பலியாகியுள்ள நிலையில் மழை பாதிப்பால் இதுவரை 357 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை  மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    இந்நிலையில், கேரளா வெள்ள நிவாரணத்துக்கு அதிமுக கட்சியின் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒருமாத சம்பளத்தை நிவாரண நிதிக்கு அளிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கு அதிமுக கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒருமாத சம்பளத்தை நிதியாக தருவார்கள். மேலும், கேரளாவுக்கு உணவு, உடை உட்பட அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார். #KeralaFloods #KeralaRain #KeralaReliefFund #EdappadiPalaniswami
    ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதி உடலுக்கு முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். #RIPKalaignar #கலைஞர் #DMK
    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காலமானார். அவரது உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து முதலில் கோபாலபுரம் இல்லத்தில் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதன்பின் சிஐடி காலனிக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு, அங்கும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

    பின்னர், சிஐடி காலனியில் இருந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தவும் ராஜாஜி அரங்கத்துக்கு கொண்டு சென்று வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு முப்படை வீரர்கள் தேசிய கொடி போர்த்தி அரசு மரியாதை செலுத்தினர்.

    காலை 6.45 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, திண்டுக்கல் ஸ்ரீனிவாசன், காமராஜர் மற்றும் சபாநாயகர் தனபால் அஞ்சலி செலுத்தினார்கள். #Karunanidhi #RIPKalaignar #கலைஞர் #DMK
    காவிரி மேலாண்மை ஆணையம் அரசிதழில் வெளியானது விவசாயிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #EdappadiPalanisamy #CaveryManagement
    சென்னை:

    காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை மத்திய அரசு அமைத்து அரசிதழில் வெளியிட்டது தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய நீர்வள ஆதாரம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகளை அமைத்து, அதை மத்திய அரசின் அரசிதழில் இன்று (நேற்று) வெளியிட்டுள்ளது. இது மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் செயல்பட்டு வரும் அவருடைய அரசிற்கும், தமிழ்நாட்டு விவசாய பெருங்குடி மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

    தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கும் காவிரி நதி நீரை பகிர்ந்து கொள்வது பல ஆண்டுகளாகவும், குறிப்பாக 1970-ம் ஆண்டிலிருந்தும் தமிழ்நாட்டிற்கும், கர்நாடகத்திற்கும் இடையேயுள்ள நீண்ட நாள் பிரச்சினை ஆகும்.

    ஜெயலலிதா மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளாலும், சட்டப் போராட்டத்தினாலும் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தலையீட்டாலும், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை மத்திய அரசிதழில் 19.2.2013 அன்று வெளியிடப்பட்டு செயலாக்கத்திற்கு வந்தது.

    காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை மத்திய அரசிதழில் கொண்டு வந்ததுதான் தன்னுடைய 30 ஆண்டுகால அரசியல் வாழ்வில், தான் செய்த சாதனைகளில் முதன்மையானதாக கருதுவதாகவும், தான் பல ஆண்டுகள் பொது வாழ்வில் இருந்து கஷ்டப்பட்டதற்கு இந்த வெற்றிதான் தனக்கு முழு நிறைவைத் தந்திருக்கிறது என்றும் ஜெயலலிதா ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மனம் நெகிழ்ந்து பேசினார் என்பதைக் கொண்டு காவிரி நதிநீர் பிரச்சினையில் அவருக்கு இருந்த உள்ளார்ந்த அக்கறையும், ஈடுபாடும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாக புரிந்தது.

    விவசாயிகளின் உரிமையை நிலைநாட்ட மெரினா கடற்கரையில் தொடர்ந்து 80 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து போராடிய ஜெயலலிதாவின் தியாகம் இத்தருணத்தில் நினைவு கூறத்தக்கதாகும்.

    உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த சிவில் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டு 16.2.2018 அன்று இறுதியாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில், காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த இறுதி ஆணை மற்றும் அதனை மாற்றியமைத்த உச்சநீதிமன்றத்தின் 16.2.2018 அன்று அளிக்கப்பட்ட தீர்ப்பின்படி ஒரு செயலாக்க திட்டத்தை மத்திய அரசு 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டுமெனவும், காலக்கெடு ஏதும் நீட்டிக்கப்பட மாட்டாது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதனைத் தொடர்ந்து நான் பிரதமரிடம் நேரிலும் மற்றும் கடிதங்கள் வாயிலாகவும் இவ்வமைப்புகளை உடனே அமைக்க வலியுறுத்தினேன். பாராளுமன்ற கூட்டத்தொடர் 5.3.2018 அன்று தொடங்கி 6.4.2018 வரை நடைபெற்றது. இக்கூட்டத்தொடரில், தமிழ்நாட்டைச் சேர்ந்த அ.தி.மு.க. எம்.பி.க்கள் செயலாக்க திட்டத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்கக் கோரி தொடர்ந்து வலியுறுத்தியதால் பாராளுமன்ற நடவடிக்கைகள் 22 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    உச்சநீதிமன்றம் பிறப்பித்த காலக்கெடு முடிவடையும் நிலை இருந்தபோது, 29.3.2018 அன்று மூத்த அமைச்சர்கள், தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர், தலைமைச் செயலாளர் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோருடன் தமிழ்நாட்டின் சார்பில் எடுக்கப்பட வேண்டிய மேல்நடவடிக்கை குறித்து நான் விரிவாக விவாதித்தேன்.

    அக்கூட்டத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை மத்திய அரசின் மீது உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய வேண்டும் என முடிவெடுக்கப்பட்டு, 31.3.2018 அன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மத்திய அரசின் மீது உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

    மத்திய அரசும் கால அவகாசம் கேட்டு ஒரு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம் 14.5.2018 அன்று, மத்திய நீர்வள ஆதாரம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சக செயலாளர் ஒரு வரைவுத் திட்டத்துடன் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி, 14.5.2018 அன்று, மத்திய அரசின் நீர்வள ஆதாரம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சக செயலாளர், உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, மத்திய அரசு தயாரித்துள்ள வரைவு திட்டத்தினை தாக்கல் செய்தார். எனது அறிவுரையின் பேரில், 16.5.2018 அன்று தமிழ்நாடு அரசு சார்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞர்கள் காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையில், குறிப்பிட்டபடி அனைத்து அதிகாரங்களும் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகளை மத்திய அரசு உடனடியாக அமைத்து செயல்படுத்த வேண்டும் என தகுந்த ஆதாரங்களுடன் கடுமையாக வாதிட்டனர்.

    இதனை அடுத்து, 18.5.2018 அன்று மத்திய அரசு தாக்கல் செய்த திருத்திய வரைவு திட்டத்தின் மீது உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பில், மத்திய அரசு தாக்கல் செய்த திருத்திய வரைவு திட்டம், நடுவர் மன்ற இறுதி ஆணை / கட்டளைகள்படியும், அதனை திருத்தியமைத்து வழங்கிய உச்சநீதிமன்ற தீர்ப்பின்படியும் உள்ளது எனவும், 1956-ம் ஆண்டைய பன்மாநில நதிநீர்த் தாவா சட்டப்பிரிவு 6 ஏ 4 ஒத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்று, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைமையிடம் டெல்லியிலும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் தலைமையிடம் பெங்களுரூவிலும் செயல்படும் எனவும் இத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைபடுத்தும் குழு ஆகிய அமைப்புகளை அமைத்து, மத்திய அரசிதழில் வெளியிட்டு பருவ மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னர் செயலாக்கத்திற்கு கொண்டுவர வேண்டி, பிரதமருக்கும், மத்திய நீர்வளத்துறை மந்திரிக்கும் 26.5.2018 அன்று என்னால் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

    இவ்வாறு ஜெயலலிதாவின் வழியில் செயல்பட்டு வரும் அவருடைய அரசு பல தொடர் நடவடிக்கைகள் எடுத்ததன் வாயிலாக இன்று (நேற்று) காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகள் மத்திய அரசால் அமைக்கப்பட்டு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

    காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை 19.2.2013 அன்று மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகு, அதனை சிறப்பாக செயல்படுத்துவதற்கு ஜெயலலிதா மற்றும் அவர் வழியில் அரசு மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளாலும் மற்றும் சட்ட போராட்டங்களாலும், உச்சநீதிமன்றம், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை சற்று மாற்றியமைத்து 16.2.2018 அன்று பிறப்பித்த தீர்ப்பினை செயல்படுத்துவதற்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகளை மத்திய அரசு அமைத்து அதனை மத்திய அரசிதழில் 1.6.2018 அன்று வெளியிட்டது, ஜெயலலிதா வழியில் நடைபெறும் தமிழ்நாடு அரசிற்கும், விவசாயப் பெருங்குடி மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

    இந்த உத்தரவுகளினால், தமிழ்நாட்டின் உரிமைகள் மற்றும் விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரம் மீட்டு எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் எனது மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
    தொழிற்பயிற்சிக்காக வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் தமிழகத்தைச் சேர்ந்த 99 மாணவர்களுக்கு பாஸ்போர்ட், விசா, பயணச்சீட்டு ஆகியவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். #EdappadiPalanisamy
    சென்னை:

    தொழிற்பயிற்சிக்காக வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் தமிழகத்தைச் சேர்ந்த 99 மாணவர்களுக்கு பாஸ்போர்ட், விசா, பயணச்சீட்டு ஆகியவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 23.8.2016 அன்று சட்டசபையில் 110-ம் விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், தனியார் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் திறன் மேம்படும் வகையில் வெளிநாட்டில் உள்ள கல்லூரிகளில் குறுகிய காலப் பயிற்சி பெற அந்த கல்லூரிகள் வகை செய்கின்றன.

    அதைப்போன்று, அரசு பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைத்திடும் வகையில், அரசு பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் 15 நாட்கள் தொழில்நுட்ப பயிற்சி பெறும்வகையில், வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அறிவித்தார்.

    இத்திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் 15 நாட்கள் தொழிற்பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு, தங்கள் அறிவுத் திறனை உலகளவில் மேம்படுத்துவதற்கும், சர்வதேச அளவில் தொழில்நுட்ப கல்வியில் ஏற்பட்டு வரும் வளர்ச்சியை அறியவும், அவர்களின் ஆய்வு திறனை வளர்க்கவும் வழிவகை ஏற்படும்.

    இத்திட்டத்தை சிறப்பான முறையில் செயல்படுத்தும் விதமாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள 10 அரசு பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் மதிப்பெண் அடிப்படையில் சிறந்து விளங்கும் 50 பேர்களும், அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களில் மதிப்பெண் அடிப்படையில் சிறந்து விளங்கும் 49 பேரும், என மொத்தம் 99 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் 15 நாட்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் தொழிற்பயிற்சி பெறுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

    இத்திட்டத்தின் கீழ், 2017-18-ம் கல்வி ஆண்டில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் அறிவியல், மெட்டலார்ஜி, புரடக்‌ஷன் டெக்னாலஜி அண்டு இன்பர்மேஷன் தொழில்நுட்பம் ஆகிய பொறியியல் பாடப்பிரிவுகளைச் சார்ந்த 61 மாணவர்கள் ஆஸ்திரேலியாவின், மெல்போர்னில் உள்ள ஸ்வைன்பர்ன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் 19.5.2018 முதல் 2.6.2018 வரை தொழிற்பயிற்சி வகுப்பில் இரு பேராசிரியர்களின் வழிகாட்டுதலுடன் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

    சிவில் மற்றும் பி.டெக். பாடப் பிரிவுகளைச் சேர்ந்த 14 மாணவர்கள் ஜெர்மனி நாட்டில் உள்ள லெய்ப்னிஸ் பல்கலைக்கழகத்தில் 18.6.2018 முதல் 2.7.2018 வரை தொழிற்பயிற்சி வகுப்பில் ஒரு பேராசிரியரின் வழிகாட்டுதலுடன் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

    எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமெண்டேசன் தொழில்நுட்பம் ஆகிய பொறியியல் பாடப்பிரிவுகளைச் சார்ந்த 24 மாணவர்கள் ஜப்பான் நாட்டில் உள்ள யோகோகாமா தேசிய பல்கலைக்கழகத்தில் 18.6.2018 முதல் 2.7.2018 வரை தொழிற்பயிற்சி வகுப்பில் இரு பேராசிரியர்களின் வழிகாட்டுதலுடன் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த 99 மாணவர்கள், ஆஸ்திரேலியா, ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு தொழிற்பயிற்சி பெறுவதற்காக செல்வதற்கு முன்பு, முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுக்கு பாஸ்போர்ட், விசா மற்றும் பயணச்சீட்டுகளை வழங்கிடும் அடையாளமாக 7 மாணவ, மாணவிகளுக்கு அவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #EdappadiPalanisamy
    ×