search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நன்கொடை"

    • எனது தம்பி பவன் கல்யாண் தனது சொந்த பணத்தில் விவசாய தொழிலாளர்களுக்கு உதவி செய்து வருகிறார்.
    • அவரை ஊக்கப்படுத்த என்னுடைய பங்காக இந்த நன்கொடையை ஜனசேனா கட்சிக்கு வழங்கி உள்ளேன்‘’ என்றார்.

    நடிகர் சிரஞ்சீவியின் தம்பியும் நடிகருமான பவன் கல்யாண் ஜனசேனா கட்சி நடத்தி வருகிறார். தற்போது பாராளுமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்து அவர் போட்டியிடுகிறார்.

    இந்நிலையில் ஐதராபாத்தில் 'விஸ்வம்பரா' படப்பிடிப்பில் இருந்த நடிகர் சிரஞ்சீவியை, நடிகர் பவன்கல்யாண், ஜனசேனா கட்சி பொதுசெயலாளரும், சிரஞ்சீவியின் இன்னொரு தம்பியுமான நடிகர் நாகபாபு சந்தித்தனர்.




    அப்போது அவர்களை அன்போடு படப்பிடிப்பு தளத்தில் சிரஞ்சீவி வரவேற்றார். பின்னர் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி கொண்டனர். அதன் பின் நடிகர் சிரஞ்சீவி ரூ. 5 கோடிக்கான காசோலையை ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாணிடம் நன்கொடையாக வழங்கினார்.

    இது குறித்து சிரஞ்சீவி கூறும்போது ''பலர் ஆட்சிக்கு வந்த பிறகு தான் மக்களுக்கு உதவி செய்வார்கள். ஆனால், எனது தம்பியான பவன் கல்யாண் தனது சொந்த பணத்தில் விவசாய தொழிலாளர்களுக்கு உதவி செய்து வருகிறார்.

    இந்த சேவை என்னை மிகவும் கவர்ந்து உள்ளது.மேலும் அவரை ஊக்கப்படுத்த என்னுடைய பங்காக இந்த நன்கொடையை ஜனசேனா கட்சிக்கு வழங்கி உள்ளேன்'' என்றார்.

    • தாக்குதலில் 31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
    • காசா மக்கள் உணவு பொருட்கள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

    ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி திடீரென இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 1200 பேர் கொல்லப்பட்டனர். 250 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

    இதனால் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், காசா மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே, காசா மக்கள் உணவு பொருட்கள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். அவர்களுக்கு பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகிறது.

    இந்நிலையில், இஸ்ரேல் தாக்குதலால் காசா பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலனுக்காக சுமார் ரூ. 8.22 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளது இலங்கை அரசு

    பாலஸ்தீன தூதரிடம் இதற்கான காசோலையை அதிபர் ரணில் விக்ரமசிங்கே வழங்கினார்.

    • பா.ஜ.க. கட்சிக்கு பிரதமர் மோடி நன்கொடை வழங்கினார்.
    • அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    நாடு முழுக்க அரசியல் கட்சிகள் பாராளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன. தேர்தல் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை, தேர்தல் களம் குறித்த ஆலோசனையில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

    இந்த நிலையில், தேர்தல் தொடங்குவதை ஒட்டி பா.ஜ.க. கட்சிக்கு பிரதமர் மோடி நன்கொடை வழங்கியுள்ளார்.

     


    பிரதமர் நரேந்திர மோடி பா.ஜ.க. கட்சிக்கு ரூ. 2 ஆயிரம் நன்கொடை வழங்கியுள்ளார். இது தொடர்பான தகவலை அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பதிவில் பகிர்ந்துள்ளார். அதில், "விஸ்கித் பாரத் உருவாக்கும் நம் முயற்சியை பலப்படுத்தும் வகையில், பா.ஜ.க.-வுக்கு நன்கொடை அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்."

    "நமோ ஆப் மூலம் தேசத்தை கட்டமைப்பதற்கான நன்கொடையில் (#DonationForNationalBuilding) அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • ராமர் கோயில் அறக்கட்டளையின் பொறுப்பாளர் பிரகாஷ் குப்தா விளக்கம்.
    • ஜனவரி 23 முதல் மொத்தம் 60 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

    உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கு ஜனவரி 22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அதன் மறுநாள் முதல் பொது மக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டது. அன்று முதல் நேற்று வரை ஒரு மாதத்தில் சுமார் ரூ.25 கோடி நன்கொடையாகவும், 25 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் கிடைத்துள்ளதாக அறக்கட்டளை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

    இதுகுறித்து ராமர் கோயில் அறக்கட்டளையின் பொறுப்பாளர் பிரகாஷ் குப்தா கூறியிருப்பதாவது:-

    ரூ. 25 கோடியில் காசோலைகள், வரைவோலைகள் மற்றும் கோயில் அறக்கட்டளை அலுவலகத்தில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் மற்றும் நன்கொடை பெட்டிகளில் டெபாசிட் செய்யப்பட்டவை அடங்கும்.

    இருப்பினும், அறக்கட்டளையின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செய்யப்படும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் குறித்து எங்களுக்குத் தெரியாது.

    ஜனவரி 23 முதல் மொத்தம் 60 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

    ராமர் பக்தர்களின் பக்தி என்னவென்றால், ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவிலில் பயன்படுத்த முடியாத வெள்ளி மற்றும் தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்களை ராம் லல்லாவுக்கு நன்கொடையாக வழங்குகிறார்கள். 

    இருப்பினும் பக்தர்களின் பக்தியைக் கருத்தில் கொண்டு, ராம் மந்திர் அறக்கட்டளை தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட நகைகள், பாத்திரங்கள் மற்றும் பொருட்களை ஏற்றுக்கொள்கிறது.

    அயோத்தியில் வரும் ராம நவமி பண்டிகை நாட்களில் சுமார் 50 லட்சம் பக்தர்கள் வருகையால் நன்கொடைகள் அதிகரிக்கும் என்று கோயில் அறக்கட்டளை எதிர்பார்க்கிறது.

    ராம நவமியின் போது அதிக அளவில் பணம் வருவதையும், எதிர்பார்க்கப்படும் பிரசாதத்தையும் கட்டுப்படுத்த ராம் ஜென்மபூமியில் நான்கு தானியங்கி உயர் தொழில்நுட்ப எண்ணும் இயந்திரங்களை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) நிறுவியுள்ளது.

    "ராமர் கோவில் அறக்கட்டளை மூலம் ரசீதுகளை வழங்க அறக்கட்டளை மூலம் ஒரு டஜன் கணினி மயமாக்கப்பட்ட கவுன்டர்கள் நிறுவப்பட்டுள்ளன.

    மேலும், கூடுதல் நன்கொடை பெட்டிகள் ராமர் கோவில் அறக்கட்டளையால் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ED,IT ரெய்டு செய்த 30 நிறுவனங்கள் பாஜகவுக்கு 335 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்துள்ளதை நியூஸ் லாண்டரி அம்பலப்படுத்தியுள்ளது.
    • ஏற்கனவே பாஜகவுக்கு நன்கொடை வழங்கி வந்த 6 நிறுவனங்கள் ED,IT ரெய்டுக்கு பிறகு பாஜகவுக்கு அதிக அளவில் நன்கொடை வழங்கியுள்ளன.

    "ED,IT ரெய்டு செய்த 30 நிறுவனங்கள் பாஜகவுக்கு 335 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்துள்ளதை நியூஸ் லாண்டரி அம்பலப்படுத்தியுள்ளது. பாஜகவின் ஊழல்கள் பலவகை. அதில் இது ஒரு புது வகை!" என நியூஸ் லாண்ட்ரி கட்டுரையை குறிப்பிட்டு காங்கிரஸ் எம்பி எம்.பி ஜோதிமணி தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    2018-19 மற்றும் 2022-23 நிதியாண்டுகளுக்கு இடையில், ED,IT ரெய்டு நடைபெற்ற 30 நிறுவனங்கள் பாஜகவுக்கு 335 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்துள்ளது. இந்த காலகட்டத்தில் பாஜகவுக்கு 187.58 கோடியை வழங்கிய 23 நிறுவனங்கள், பாஜக ஆட்சிக்கு வந்த 2014 முதல் ED,IT ரெய்டு நடத்தப்பட்ட ஆண்டு வரை பாஜகவுக்கு எந்த நன்கொடையும் வழங்கப்படவில்லை என்று நியூஸ் லாண்ட்ரி கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், இவற்றில் குறைந்தது 4 நிறுவனங்களாவது ED,IT ரெய்டு நடத்தப்பட்ட 4 மாதங்களுக்குள் பாஜகவுக்கு 9.05 கோடி நன்கொடை அளித்துள்ளன. ஏற்கனவே பாஜகவுக்கு நன்கொடை வழங்கி வந்த 6 நிறுவனங்கள் ED,IT ரெய்டுக்கு பிறகு பாஜகவுக்கு அதிக அளவில் நன்கொடை வழங்கியுள்ளன.

    அதே சமயம் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் பாஜகவுக்கு நன்கொடை அளித்த 6 நிறுவனங்கள், எதாவது ஒரு ஆண்டில் நன்கொடை அளிக்க தவறிவிட்டால், அந்த ஆண்டே அந்நிறுவனங்களில் மீது ED,IT ரெய்டு நடத்தப்பட்டுள்ளது என்று அக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

    • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் வந்து தரிசனம்.
    • `கியூ.ஆர்.’ கோடு மூலம் பணம் செலுத்தும் வசதி.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பக்தர்களும் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள்.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் அம்மனுக்கு அபிஷேகம், நகை அலங்காரம், சந்தன காப்பு அலங்காரம், கன்னியா போஜனம், அரவணை நிவேத்தியம், பால் பாயாசம் நிவேத்தியம், பொங்கல் நிவேத்தியம் மற்றும் அன்னதானம் போன்றவைகளுக்கு பணம் செலுத்தி வழிபாடு நடத்து வது வழக்கம்.

    மேலும் அர்ச்சனை, குழந்தைகளுக்கு சோறு கொடுப்பு, புடவை சாத்துதல், அஷ்டோத்திரம், குங்குமம் அர்ச்சனை, கோடி அர்ச்சனை போன்ற வழிபாடுகளும் கட்டணம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.

    இது தவிர திருப்பணி களுக்கு பக்தர்கள் நன்கொடை வழங்குவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. இந்த வழிபாடுகளுக்கும் நன்கொடைகளுக்கும் பக்தர்கள் நேரடியாக பணம் செலுத்தி வந்தனர். ஆனால் சில பக்தர்கள் பணப்பரிவர்த்தனை செய்யாமல் செல்போன் மூலம், போன் பே அல்லது கூகுள் பே வழியாக இந்த வழிபாடுகளுக்குரிய கட்டணங்களையும், நன்கொடைகளையும் செலுத்த முடியாத நிலை இருந்து வந்தது. இதனால் பெரும்பாலான பக்தர்கள் வழிபாடுகள் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற நிலை இருந்து வந்தது.

    எனவே இந்த கோவிலில் வழிபாடுகள் நடத்துவதற்கும், நன்கொடைகள் வழங்குவதற்கும் செல்போன் வழியாக `கியூ.ஆர்.' கோடு மூலம் பணம் செலுத்தும் முறையை அமல்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் பயனாக தற்போது கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் செல்போன் வழியாக `கியூ.ஆர்.' கோடு மூலம் பணம் செலுத்தி வழிபாடுகள் மற்றும் திருப்பணிகளுக்கு நன்கொடை வழங்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் ஏராளமான பக்தர்கள் `கியூ.ஆர்.' கோடு மூலம் வழிபாடு கட்டணம் செலுத்தி வருகிறார்கள். கோவிலுக்கு நன்கொடையும் குவிந்த வண்ணமாக உள்ளது.

    • சீரடி சாய்பாபா கோவில் முன்பாக பிச்சை எடுத்து வருகிறார்.
    • ஆன்மீகப் பணிகளுக்காக வழங்கி வருவதற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம், முத்தியாலம் பாடு மாவட்டம், விஜயவாடாவை சேர்ந்தவர் யாதி ரெட்டி.

    இவர் விஜயவாடாவில் உள்ள சீரடி சாய்பாபா கோவில் முன்பாக பிச்சை எடுத்து வருகிறார். பிச்சை எடுத்த ரூ.1 லட்சத்தை சாய்பாபா கோவில் வளர்ச்சிக்கு நிதியாக கோவில் கவுரவ தலைவர் கவுதம் ரெட்டியிடம் வழங்கினார்.

    இது குறித்து கவுதம் ரெட்டி கூறுகையில், யாதி ரெட்டி கோவிலுக்கு நன்கொடை வழங்குவது இது முதல் முறை இல்லை. ஏற்கனவே பல தவணைகளில் ரூ.8.54 நன்கொடையாக வழங்கி உள்ளார் தற்போது வழங்கியுள்ள ரூ.1 லட்சத்துடன் ரூ.9.54 லட்சம் வழங்கி உள்ளார் என்றார்.

    யாதி ரெட்டி கூறுகையில் கோவில் முன்பாக பிச்சை எடுக்கும் ஒவ்வொரு ரூபாயும் ஆன்மீகப் பணிகளுக்காக வழங்கி வருவதற்காக மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

    • திருச்சூர் மாவட்டம் வரந்தரப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • மாணவர்கள் ரூ.100 முதல் ரூ.7ஆயிரம் வரை தங்களின் பங்களிப்பை கொடுத்தனர்.

    திருவனந்தபுரம்:

    பள்ளி நட்பு என்பது அனைவரின் வாழ்விலும் மறக்க முடியாததாக இருக்கும். அந்த காலக்கட்டத்தில் ஒருவருக்கொருவர் சிறிய உதவிகளை செய்து கொள்வது சகஜமான ஒன்று. ஆனால் மாணவியின் பெற்றோர் வாங்கிய கடனை, அவருடன் படிக்கும் சக மாணவர்கள் அடைத்திருக்கிறார்கள்.

    இதன் மூலம் அவர்களது வீடு ஏலம் போவதை தடுத்துள்ளனர். கேரளாவில் நடந்த அந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வரந்தரப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவியின் பெற்றோர் வங்கி ஒன்றில், வீட்டுக்கடன் வாங்கியிருக்கின்றனர். ஆனால் அவர்களால் கடன் தொகையை திருப்பி செலுத்த முடியவில்லை.

    இதனால் அவர்களது வீடு ஏலத்துக்கு வந்தது. கடன் தொகை கட்ட முடியாததால் மாணவியின் வீடு ஏலத்துக்கு வருவதை, மாணவியின் உடன்படிக்கும் மற்ற மாணவர்கள் அறிந்தனர். அவர்கள் அந்த மாணவிக்கு உதவ முடிவு செய்தனர்.

    மாணவியின் பெற்றோர் வங்கிக்கு மொத்தம் ரூ.2 லட்சத்து 59 ஆயிரத்து 728 செலுத்த வேண்டும். அதனை நன்கொடை மூலம் வசூலிக்க மாணவர்கள் முடிவு செய்தனர். அது பற்றி தங்களது பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிவித்தனர். இதனால் அந்த மாணவியின் குடும்பத்துக்கு உதவ அனைவரும் முன் வந்தனர்.

    இதற்காக மாணவி படிக்கும் பள்ளியில் பொது இடத்தில் ஒரு பெட்டி வைக்கப்பட்டது. அதில் மாணவர்கள் தங்களின் பங்குக்கு பணம் செலுத்தினார்கள். மாணவர்கள் ரூ.100 முதல் ரூ.7ஆயிரம் வரை தங்களின் பங்களிப்பை கொடுத்தனர்.

    மாணவர்கள் மொத்தம் ரூ.1.70 லட்சம் கொடுத்தார்கள். அது மட்டுமின்றி ஆசிரியர்கள் ரூ.1.28 லட்சம் நிதி திரட்டினார்கள். மொத்தத்தில் ரூ.2 லட்சத்து 98 ஆயிரம் நிதி வசூலிக்கப்பட்டது. மாணவியின் பெற்றோர் வங்கிக்கு செலுத்த வேண்டிய 2 லட்சத்து 59 ஆயிரத்து 728 ரூபாயை, வீடு ஏலத்துக்கு வரும் 2 நாட்களுக்கு முன்னதாகவே கொடுக்கப்பட்டது.

    இதன்மூலம் மாணவியின் வீடு ஏலத்துக்கு வரவில்லை. மேலும் வங்கிக்கு செலுத்தியது போக மீதியிருந்த பணம், மாணவியின் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது. உடன் படிக்கும் மாணவர்களின் இந்த செயல், மாணவியின் பெற்றோரை நெகிழ்ச்சியடைய செய்தது. அவர்கள் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.

    மாணவர்களின் இந்த செயலுக்கு, அவர்கள் படித்த பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள் என பலரும் உறுதுணையாக இருந்தனர் .

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனர் ஷிவ் நாடார் ஆண்டுதோறும் ரூ.2,000 கோடி நன்கொடை அளித்து வருகிறார்.
    • கடந்த 5 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக தரவரிசையில் இவர் முதலிடம் பிடித்துள்ளார்.

    புதுடெல்லி:

    உலக பணக்காரர்கள் பட்டியல் மற்றும் இந்திய நன்கொடையாளர் பட்டியல் போன்றவற்றை எடெல்கிவ் ஹுருன் இந்தியா அமைப்பு வெளியிட்டு வருகிறது.

    இந்நிலையில், எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனர் ஷிவ் நாடார் ஆண்டுக்கு ரூ. 2,042 கோடி நன்கொடைகள் வழங்கி முன்னணி இந்திய நன்கொடையாளராக தொடர்ந்து 2-வது ஆண்டாக முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார் என்று ஹுருன் அமைப்பு தெரிவித்துள்ளது.

    நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.5.6 கோடி வரை நன்கொடை அளித்துள்ளார். 78 வயதான அவர் 5 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். இதில் பெரும்பாலான தொகை கல்விக்காக வழங்கப்பட்டுள்ளது.

    2-வது இடத்தில் விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி கல்வி தொடர்பான காரணங்களுக்காக ரூ.1,774 கோடி நன்கொடை அளித்துள்ளார்.

    ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானி ரூ.376 கோடி நன்கொடை அளித்து 3வது இடத்தில் உள்ளார்.

    ஆதித்ய பிர்லா குழுமத்தின் குமார் மங்கலம் பிர்லா ரூ.287 கோடி நன்கொடை அளித்து 4-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

    அதானி குழுமத்தின் தலைவரான கவுதம் அதானி 2022-ம் ஆண்டிலிருந்து கல்விக்காக ரூ.285 கோடி நன்கொடை அளித்து தரவரிசையில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    • கடந்த 4 ஆண்டுகளில் தேர்தல் பத்திரங்கள் மூலமாக பாரதிய ஜனதா கட்சி ரூ.5 ஆயிரம் கோடி நிதி பெற்று இருப்பதாக தகவல் வெளியானது.
    • மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் ரூ.20 ஆயிரம் வரை நன்கொடை அளிக்கும் நன்கொடையாளர் தனது பான் எண்ணை சமர்ப்பிக்க தேவை இல்லை.

    புதுடெல்லி:

    அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் தங்கள் செலவினங்களுக்காக தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து நிதி வசூலித்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    தேர்தல் பத்திரம் மற்றும் காசோலை மூலமாக நன்கொடையாக இதனை கட்சிகள் பெற்றுக் கொள்ளலாம்.

    ஒவ்வொரு கட்சியும் தணிக்கை செய்யப்பட்ட வரவு-செலவு கணக்குகளை தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

    அந்த வகையில் கடந்த 4 ஆண்டுகளில் தேர்தல் பத்திரங்கள் மூலமாக பாரதிய ஜனதா கட்சி ரூ.5 ஆயிரம் கோடி நிதி பெற்று இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தேர்தல் பத்திர திட்டங்கள் பாரதிய ஜனதா அரசுக்கு சாதகமாக இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வந்தது.

    இந்நிலையில் காங்கிரஸ் கட்சியும் நன்கொடைகள் மற்றும் நிதி திரட்டுவதற்கு ஒரு பிரத்யேக தளத்தை தொடங்குவதற்கு முடிவு செய்துள்ளது.

    தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களிடம் இருந்து தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெறுவதற்கு விதிமுறைகள் உள்ளன.

    மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் ரூ.20 ஆயிரம் வரை நன்கொடை அளிக்கும் நன்கொடையாளர் தனது பான் எண்ணை சமர்ப்பிக்க தேவை இல்லை. அதற்கு மேல் பெறப்படும் பணத்திற்கு தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும்.

    எனவே ரூ.100 அல்லது 500, 1000 ரூபாய் என சிறிய நன்கொடையாக இருந்தாலும் வரவேற்பதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

    கடந்த சில ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் நிதி குறைந்து கொண்டே வருகிறது. கட்சிக்கு நன்கொடை வழங்கி வந்த பெரும்பாலானோர் ஆளும் பா.ஜனதாவுக்கு ஆதரவாக சாய்ந்ததால் காங்கிரஸ் கட்சிக்கு பணம் பற்றாக்குறை ஏற்பட்டதாகவும், கட்சி செலவை சமாளிக்க நிதி திரட்டும் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருவதாகவும் கட்சியின் அலுவலக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • ரூ.50 ஆயிரம் வரை பணம் வசூல் செய்தனர்.
    • மாணவர்களும், பயிற்சி டாக்டர்களும், பொதுமக்களும் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று மாலை ஒரு ஆணும், பெண்ணும் வந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரி ஊழியர்களிடமும், டாக்டர்களிடமும் தாங்கள் தனியார் தொண்டு நிறுவனத்தில் இருந்து வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய ஏதாவது பணம் தருமாறும் கூறினார்கள். அதை உண்மை என்று நம்பி பயிற்சி டாக்டர்களும், மருத்துவர்களும் பணம் கொடுத்ததாக தெரிகிறது. அந்த வகையில் ரூ.50 ஆயிரம் வரை பணம் வசூல் செய்தனர்.

    இதற்கிடையே சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவனம் உண்மைதானா என்று ஆன்லைனில் டாக்டர்கள் சோதனை செய்தனர். அப்போது அது போலி தொண்டு நிறுவனம் என்பது தெரியவந்தது. உடனே அந்த பெண்ணையும், ஆணையும் மாணவர்களும், பயிற்சி டாக்டர்களும், பொதுமக்களும் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் ஆசாரிபள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிபட்ட ஆண் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், பெண் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பயிற்சி டாக்டர்கள் புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    • வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக பலரும் நன்கொடை வழங்கினார்கள்.
    • பொதுமக்கள் வழங்கிய நன்கொடையை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அனுப்பாமல் வைத்துக்கொண்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் பலத்த மழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கால் கோடிக்கணக்கில் சேதம் ஏற்பட்டது.

    பல மாவட்டங்களில் ஏராளமானோர் தங்களின் உடமைகளை இழந்தனர். வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு மாநில அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது. மேலும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு உதவி செய்வதற்காக பலரும் நன்கொடை வழங்கினார்கள்.

    அவற்றை அதிகாரிகள் பெற்று முதல்-மந்திரியின் நிவாரண நிதிக்கு அனுப்பினர். பின்பு அந்த நிதி பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மூலம் வழங்கப்பட்டது. இந்நிலையில் பொதுமக்கள் வழங்கிய நன்கொடையை முதல்வரின் நிவாரணநிதிக்கு அனுப்பாமல் மோசடி செய்த கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

    கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கடுத்துருக்கி கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்தவர் சஜி வர்கீஸ். இவர் தனது அலுவலகத்துக்கு பல்வேறு பணிகளுக்காக வரும் பொதுமக்களிடம் அன்பளிப்பாக பணம் பெறுவதாகவும், சட்ட விரோதமாக மணல் அள்ளுபவர்களிடம் லஞ்சம் வாங்குவதாகவும் புகார்கள் கூறப்பட்டன.

    அந்த புகார்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார் தலைமையிலான போலீசார் கடுத்துருத்தி கிராம நிர்வாக அலுவலகத்துக்கு அதிடியாக சென்று ஆய்வு செய்தனர். மேலும் கிராம நிர்வாக அலுவலர் சஜி வர்கீசிடம் விசாரணை நடத்தினர்.

    அதில் 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் மழையால் பெருவெள்ளம் ஏற்பட்ட போது பேரிடர் நிவாரணநிதிக்கு பொதுமக்கள் வழங்கிய பணத்தை கிராம நிர்வாக அலுவலர் சஜி வர்கீஸ், முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்காமல் மோசடி செய்தது தெரியவந்தது.

    சுமார் 9பேர் வழங்கிய தொகையை அவர் மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் ரூ.10லட்சம் வரையிலான பணத்தை அவர் முறைகேடு செய்தது லஞ்ச ஒழிப்பு போலீசாரின் வுசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் சஜி வர்சீசை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். பேரிடர் நிவாரணத்துக்கு பொதுமக்கள் நன்கொடை யாக வழங்கிய பணத்தை கிராம நிர்வாக அலுவலர் முறைகேடு செய்திருக்கும் சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×