என் மலர்
இந்தியா

பா.ஜ.க-வுக்கு ரூ.6,654 கோடி நன்கொடை- தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பிப்பு
- நிதி அறிக்கை கடந்த 8-ந்தேதி தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
- கடந்த நிதி ஆண்டில் பா.ஜ.க ரூ.3967 கோடி நன்கொடையாக பெற்றது.
கடந்த 2017-18-ம் ஆண்டில் மத்திய அரசு தேர்தல் நிதி பத்திரங்கள் முறையை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் அதிக நிதி வசூலிக்கும் கட்சியாக பா.ஜ.க திகழ்ந்தது. இந்த தேர்தல் பத்திரங்கள் முறை கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது.
இந்தநிலையில் தேர்தல் நன்கொடை பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்த பிறகு தேர்தல் அறக்கட்டளை மூலம் பா.ஜ.க ரூ.6654 கோடி நன்கொடையாக பெற்று உள்ளது.
அறக்கட்டளைகள், பெரு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மூலம் கடந்த ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து இந்த ஆண்டு மார்ச் 30-ந்தேதி வரை ரூ.6654 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளது.
பா.ஜ.காவால் தயாரிக்கப்பட்ட இந்த நிதி அறிக்கை கடந்த 8-ந்தேதி தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இது இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
ரூ.6654 கோடி நன்கொடை பெற்ற இந்த காலகட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் அருணாசல பிரதேசம், சிக்கிம், ஆந்திரா, ஒடிசா, ஜம்மு-காஷ்மீர், அரியானா, ஜார்க்கண்ட், மராட்டியம், டெல்லி ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
கடந்த நிதி ஆண்டில் பா.ஜ.க ரூ.3967 கோடி நன்கொடையாக பெற்றது. தற்போது அந்த கட்சியின் நன்கொடை 68 சதவீதமாக அதிகரித்து உள்ளது.
பா.ஜ.க-வுக்கு கிடைத்த நன்கொடைகளில் ரூ.3744 கோடி தேர்தல் அறக்கட்டளை மூலம் வந்துள்ளது. எஞ்சிய தொகை பெருநிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மூலம் கிடைத்து உள்ளது.
தேர்தல் அறக்கட்டளை நன்கொடையில் புரூடென்ட் அறக்கட்டளை ரூ.2180 கோடி அளித்துள்ளது.
தேர்தல் அறக்கட்டளையை தவிர்த்து நன்கொடை அதிகம் அளித்தவர்களில் முதல் 30 இடங்களில் பெருநிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. இந்தியா சீரம் தனியார் நிறுவனம் (ரூ.100 கோடி), ரங்டாசன்ஸ் தனியார் நிறுவனம் (ரூ.95 கோடி), வேதாந்தா நிறுவனம் (ரூ.67 கோடி) உள்ளிட்டவை இதில் அடங்கும்.
பஜாஜ் குழுமத்தின் 3 வெவ்வேறு நிறுவனங்கள் இணைந்து ரூ.66 கோடியை அளித்துள்ளது. ஐ.டி.சி. நிறுவனம் ரூ.35 கோடியும், திலீப் பில்கான் குழுமம் ரூ.29 கோடியும், ஹீரோ குழுமம் ரூ.23.65 கோடியும் பங்களித்துள்ளன.
தனி நபர்கள் அனைவரும் ரூ.20 ஆயிரத்திற்கும் மேல் நன்கொடை வழங்கி இருக்கிறார்கள். நிறுவனங்கள் காசோலை, வரை வோலை மற்றும் வங்கி பண பரிமாற்றம் வாயிலாக பணத்தை கொடுத்துள்ளன.பல்வேறு பா.ஜ.க தலைவர்களும் நன்கொடையை அளித்துள்ளனர்.
நன்கொடைபெற்றதில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சரிவு காணப்பட்டது. அந்த கட்சிக்கு ரூ.522.13 கோடியே கிடைத்தது. கடந்த 2023-24-ம் ஆண்டில் அந்த கட்சிக்கு ரூ.1129 கோடி கிடைத்தது. இது 43 சதவீத சரிவாகும்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.184.08 கோடி மட்டுமே நன்கொடையாக கிடைத்தது. இது பெரும் சரிவாகும். கடந்த ஆண்டு ரூ.618.8 கோடி கிடைத்து இருந்தது. பாரத் ராஷ்டிரீய சமிதி (பி.ஆர்.எஸ்.) நன்கொடை ரூ.580 கோடியில் இருந்து ரூ.15.09 கோடியாக குறைந்தது. இது பெரும் வீழ்ச்சியாகும்.
அதே நேரத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தல் நன்கொடை அதிகரித்து உள்ளது. அந்த கட்சி ரூ.39.2 கோடி நன்கொடையாக பெற்றது. கடந்த முறை ரூ.22.1 கோடிதான் கிடைத்தது.
தெலுங்கு தேசம் கட்சிக்கு ரூ.85.2 கோடியும் (முன்பு ரூ.274 கோடி), பிஜூ ஜனதா தளத்திற்கு ரூ.60 கோடியும் (ரூ.246 கோடி) கிடைத்தன.
காங்கிரஸ் பெற்ற நன்கொடையை விட பா.ஜனதா 12.5 மடங்கு அதிகமாக வசூலித்துள்ளது.
காங்கிரஸ் மட்டுமல்ல அதன் ஒட்டு மொத்த கூட்டணியிலும் உள்ள 12 கட்சிகளின் தேர்தல் நிதியே மொத்தம் வெறும் ரூ.1343 கோடிதான். இந்த தொகையுடன் ஒப்பிட்டால் கூட பா.ஜ.க 4½ மடங்கு அதிக நிதியை வசூலித்து இருக்கிறது.






