search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாமக்கல் செய்திகள்"

    குமாரபாளையத்தில் பகலில் பூட்டப்பட்டுள்ள பொதுக்கழிப்பிடத்தால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகின்றனர்.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் நகராட்சி சார்பில் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் பொதுக்கழிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது. இது அடிக்கடி பூட்டப்படுவதாக புகார் எழுத்தது.

     இதனால் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள், சுற்றுலா கார்கள், வேன்கள், டெம்போ ஓட்டுனர்கள்,பயணிகள், பஸ் ஸ்டாண்ட் கடை வியாபாரிகள், அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் என பலரும் அவதிக்கு ஆளாகின்றனர். 

    இதே வளாகத்தில் ரோட்டரி கிளப் சார்பில் அமைக்கப்பட்ட பொதுக்கழிப்பிடம் உள்ளது. இதில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் கூறப்படுகிறது. நகராட்சி நிர்வாகத்தினர் இதனை பரிசீலித்து இரு கழிப்பிடங்களும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
    வேலகவுண்டன்பட்டி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டன் பட்டி அருகே இளநகர் அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரம் (வயது 50) .பெயிண்டர். இவருக்கு 2 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.  

    இதில் மூத்த மகள் நளினியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாசக்கல்பட்டி இளங்கோநகர் பகுதியை சேர்ந்த ரகுபதி என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். 2 ஆண்டுகளாக இவர்களுக்கு குழந்தைகள் இல்லை .இந்நிலையில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் நாளினி இருந்து உள்ளார். 

    கடந்த வாரம் ஞாயிற்றுக்கி–ழமை சுந்தரத்தின் உறவினர் பெருமாள் இறந்ததின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக நளினியும், ரகுபதியும் சொந்த ஊரில் இருந்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் சுந்தரத்தின் மனைவி வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாக பூட்டு போடப்பட்டு இருந்தது.  

    கதவை தட்டியும் திறக்காததால்  சந்தேகம் அடைந்த தாய், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு மகள் நளினி சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதை கண்டு கதறி அழுதார்.  அக்கம்பக்கத்தினரை அழைத்து நளினி உடலை மீட்டனர். 

     இதுகுறித்து சுந்தரம் வேலகவுண்டம்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குமரேசன் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்து தற்கொலை செய்து கொண்டது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
    குமாரபாளையத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட தினசரி காய்கறி மார்க்கெட் கட்டப்பட உள்ளது.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டிடம் சேதமானதால், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ்  2 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பில் தினசரி காய்கறி மார்க்கெட்  கட்டப்பட உள்ளது. 

    கட்டுமான பணிகள் முடியும் வரை தற்காலிகமாக மார்க்கெட் பஸ் ஸ்டாண்டில்  அமைக்க,  சேர்மன் விஜய்கண்ணன், நகராட்சி கமிஷனர், பொறியாளர் மற்றும் கவுன்சிலர்களால் முடிவு செய்யப்பட்டது. அதன்படி மார்க்கெட் கடைகள் தற்காலிகமாக பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் அமைக்கப்பட்டது.

    பரமத்தி அருகே வீட்டுக்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே  உள்ள மாவுரெட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 45). விவசாயி. இவரது பாட்டி அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் கூரை வீட்டில் குடியிருந்து வருகிறார். 

    இந்நிலையில் அந்த கூரை வீட்டுக்குள் 6 அடி நிளமுள்ள சாரைப்பாம்பு சென்றுள்ளது.  இதனால் மூதாட்டி அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்து சத்தம் போட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பாம்பை விரட்டினார்கள். ஆனால் பாம்பு அந்த வீட்டுக்குள் இருந்து வெளியே வரவில்லை. 

    இதுகுறித்து பிரபாகரன் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் நிலைய அலுவலர் திருமுருகன் தலை–மையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட வீட்டிற்கு விரைந்து சென்று வீட்டுக்குள் இருந்த 6அடி நீளமுள்ள சாரைப்பாம்பை குச்சியால் பிடித்து சாக்குப் பைக்குள் போட்டு அருகாமையில் உள்ள வனப் பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.
    பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வைகாசி மாத கிருத்திகை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
    பரமத்திவேலூர்:

    வைகாசி மாத கிருத்திகையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் கோப்பணம்பாளையம் பரமேஸ்வர் ஆலயத்தில் உள்ள பாலமுருகனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலமுருகன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 

    இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பாலமுருகன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
     
    அதேபோல் நன்செய் இடையாறு காவிரி ஆற்றங்கரையில் உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத பாலமுருகன், கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி, பொத்தனூர் பச்சைமலை முருகன் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் எழுந்தருளியுள்ள சுப்ரமணியர், அனிச்சம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள வேல்வடிவம் கொண்ட சுப்ரமணியர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவி லில் எழுந்தருளியுள்ள ஆறுமுகன், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனியாண்டவர், அருணகிரிமலையில் எழுந்தருளியுள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், வேலூர் சக்தி நகர் முருகன், பேட்டை பகவதியம்மன் கோவிலில் எழுந்தருளியுள்ள முருகன், அய்யம்பாளையத்தில் உள்ள முருகன் கோவில், ஆனங்கூர் மாரியம்மன் கோவிலில் உள்ள முருகன், பாலப்பட்டி முருகன், மோகனூர் பாலசுப்ரமணிய சாமி கோவில் மற்றும் பரமத்திவேலூர் தாலுகா பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் வைகாசி மாத கிருத்திகையை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. 

    இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    பரமத்திவேலூர் அருகே சரக்கு ஆட்டோவில் மணல் கடத்தலில் ஈடுப்பட்ட 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினார்கள்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர் தண்ணீர்பந்தல்மேடு அருகே வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது தண்ணீர்பந்தல் மேட்டிலிருந்து பரமத்தி நோக்கி அவ்வழியாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை போலீசார் நிறுத்தி வாகன சோதனை செய்ய முயன்றனர். அப்போது சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் அதில் வந்த மற்றொருவரும் சரக்கு ஆட்டோவை நிறுத்தி சாவியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். 

    இதனையடுத்து போலீசார் சரக்கு ஆட்டோவை சோதனை செய்தனர். அதில் 40 மணல் மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சட்டவிரோதமாக அனுமதியின்றி காவிரி ஆற்றில் இருந்து கடத்தி வந்த மணல், சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்து வேலூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். 

    பின்னர் வழக்குப்பதிவு செய்து, மணல் திருட்டில் ஈடுபட்டு தப்பி ஓடிய  2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
    குமாரபாளையம் அருகே கார் மோதி தந்தை- மகன் படுகாயமடைந்ததில் ஆத்தூரை சேர்ந்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் ஓட்டமெத்தை பகுதியை  சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 37). கட்டிட கூலித் தொழிலாளி. 

    இவர் நேற்று மாலை  மோட்டார்சைக்கிளில் தனது தந்தை லோகவசீகரன், (57), என்பவரை பின்னால்  உட்கார வைத்துக்கொண்டு சேலம்-கோவை புறவழிச்சாலையில் கோட்டைமேடு பிரிவு அருகே கே.பி.டி பெட்ரோல் பங்க் முன்பு வந்து கொண்டிருந்தார். 

    அப்போது இவருக்கு பின்னால் வேகமாக வந்த கார், மோட்டார்சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் செந்தில்குமார், லோகவசீகரன் ஆகிய, இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இது பற்றி தகவலறிந்த குமாரபாளையம் போலீசார் நேரில் சென்று இருவரையும் மீட்டு  குமாரபாளையம்  அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

    விசாரணையில் காரை ஓட்டி வந்தது சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த கூலித் தொழிலாளி பூபாலன்  (24), என்பது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பூபாலனை  கைது செய்தனர்.
    அரசு பி.எட். கல்லூரியில் விளையாட்டு விழா நடந்தது.
    குமாரபாளையம்: 

    குமாரபாளையம் அரசு பி.எட். கல்லூரியில் விளையாட்டு  விழா முதல்வர் ஜான்  பீட்டர் தலைமையில் கொண்டாடப்பட்டது.  விளையாட்டு அறிக்கையை உடற்கல்வி இயக்குனர் ரவி வாசித்தார். 

    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ரேணுகா, குமாரபாளையம் எஸ்.ஐ. நந்தகுமார் உள்ளிட்ட பலர் வாழ்த்தி பேசினார்கள்.  

    ஆடவர் மற்றும் மகளிருக்கான  சதுரங்கம், கேரம்  போன்ற உள்ளரங்க போட்டிகளும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வலைப்பந்து, கூடைப்பந்து, ஓட்டம், கபாடி, தடகளம்  உள்ளிட்ட பல போட்டிகளும்  நடைபெற்றன. 

    சிறப்பு அழைப்பாளராக தஞ்சை மாவட்ட டி.எஸ்.பி. சுபாஷ் சந்திரபோஸ் பங்கேற்று, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தினார்.
    நாமக்கல்லில் உடற்திறன் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட தடகள சங்கத்தின் சார்பாக மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான உடற்திறன் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. 

    இப்போட்டியை நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சின்ராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    ஆண்களுக்கு 10 கிலோமீட்டர் தூரமும் மற்றும் பெண்களுக்கு 5 கிலோமீட்டர் தூரமும் என 2 பிரிவுகளாக நடத்தப்பட்டன. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வீரர்கள் திரளாக பங்கேற்றனர். 

    இந்த மாரத்தான் போட்டியை நாமக்கல் மாவட்ட தடகள சங்கத்தின் நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.
    நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே கங்கநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 72) .இவரது மகள் மணிமேகலை( 46) . இவர் குடும்பத்தினருடன் தனது தந்தை வீட்டில் குடியிருந்து கூலி வேலைக்குச் சென்று வருகிறார். 

    மணிமேகலைக்கு திருமணமாகி ஒரு மகனும் 2 மகள்களும் உள்ளனர் .ராமசாமி ஒரு வாரத்திற்கு முன் சாலை விபத்து ஏற்பட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 26-ம் தேதி மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்துவிட்டார் .இந்நிலையில் இவருக்கு தோள்பட்டையில் வலி இருந்து வந்தது. அது சரியாகததால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் படுத்திருந்த போது திடீரென மாயமனார். 

    மணிமேகலை மற்றும் குடும்பத்தினர் அவரை தேடிப் பார்த்தபோது அங்கிருந்த கார் ஷெட்டில் இரும்பு கம்பியில் கயிற்றை கட்டி ராமசாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம்பக்கத்தினரை அழைத்து ராமசாமி உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு 

    பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மணிமேகலை மோகனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழழகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    குமாரபாளையத்தில் மோட்டார்சைக்கிள் மோதி பெண் படுகாயம் அடைந்தார்.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் நாராயண நகரில் வசிப்பவர் நாகம்மா(வயது 55),கூலி தொழிலாளி. இவர் கே.ஓ.என் தியேட்டர் பஸ் நிறுத்தம் பகுதியில் சாலையை  கடந்தார். 

    அப்போது வேகமாக வந்த மோட்டார்சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் நாகம்மா பலத்த காயமடைந்தார். இதைய–டுத்து அவர் சிகிச்சைக்காக குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். 

    இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், மோட்டார்சைக்கிளில் வந்த வட்டமலை பகுதியை சேர்ந்த ராஜா  என்பவரை கைது செய்தனர். 
    குமாரபாளையம் நகராட்சியில் இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் நகராட்சியில் நகராட்சி நிர்வாக இயக்குனரக இணை இயக்குனர் பூங்கொடி அருமைக்கண் நேரில் ஆய்வு செய்தார்.  

    குமாரபாளையம் நகரில் நடந்து வரும் கட்டுமான பணிகள், மார்க்கெட் கட்டுமான பணிகள், தற்காலிக மார்க்கெட் அமைப்பு பணிகள், வரி வசூல் நிலை உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார். 

    அப்போது நகராட்சி கமிஷனர் விஜயகுமார், பொறியாளர் ராஜேந்திரன், எஸ்.ஓ. ராமமூர்த்தி, மேலாளர் சண்முகம்  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
    ×