என் மலர்
நீங்கள் தேடியது "sand"
- துமாஸ் கடற்கரையில் இளைஞர்கள் சாகசம் செய்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
- காரை கடற்கரை மணலில் இருந்து எடுக்க இளைஞர்கள் முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை
குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள துமாஸ் கடற்கரையில் சாகசம் செய்வதற்காக ஓட்டிச் சென்ற சொகுசுக் கார், கடல் மணலில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பான இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அந்த வீடியோவில் கடற்கரை மணலில் சொகுசு கார் பாதி அளவு சிக்கியுள்ளது.
துமாஸ் கடற்கரையில் தடைசெய்யப்பட்ட பகுதியில் இளைஞர்கள் சாகசம் செய்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. காரை கடற்கரை மணலில் இருந்து எடுக்க இளைஞர்கள் முயற்சித்தும் அது பலனளிக்கவில்லை.
- நடுரோட்டில் லாரி தீப்பற்றி எரிந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
குன்னம்:
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் இருந்து வெள்ளை எம்சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு காஞ்சிபுரம் நோக்கி ஒரு லாரி சென்றது. லாரியை கரூர் கிருஷ்ணராயபுரம் குப்பனம்பட்டியை சேர்ந்த கதிர்வேல் (வயது 23) என்பவர் ஓட்டினார்.
லாரி பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள அயன் பேரையூர் சமத்துவபுரம் அருகே சென்றபோது எதிர் பாராதவிதமாக லாரியின் டயர் வெடித்து தீப்பற்றியது. உடனே டிரைவர் கதிர்வேல் லாரியில் இருந்து கீழே இறங்கினார்.
சிறிது நேரத்தில் லாரி முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து சிறிதுநேரம் நிறுத்தப்பட்டது.
பின்னர் இதுபற்றி பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் லாரி முழுவதுமாக எரிந்து சேதமானது. தீ முழுமையாக அணைக்கப்பட்ட பின்னர் அந்த வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. நடுரோட்டில் லாரி தீப்பற்றி எரிந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- வில்லியனூர் திருக்காஞ்சி அருகே சங்கராபரணி ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
- சங்கராபரணி ஆற்றுப்பகுதியில் ஒரு சிலர் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலையனுக்கு தகவல் வந்தது.
புதுச்சேரி:
வில்லியனூர் திருக்காஞ்சி அருகே சங்கராபரணி ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மணல் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
வில்லியனூர் அடுத்த திருக்காஞ்சி சாலை கணுவாபேட் சங்கராபரணி ஆற்றுப்பகுதியில் ஒரு சிலர் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலையனுக்கு தகவல் வந்தது.
இன்ஸ்பெக்டர் வேலையன் தலைமையிலான போலீசார் அந்தப் பகுதியில் ரகசியமாக கண்காணித்ததில் லோடு வேனில் மணலை அள்ளிக்கொண்டிருந்த நபர்களை சுற்றி வளைத்தனர். சங்கராபரணி ஆற்று படுகையை சேதப்படுத்தி மணல் கொள்ளையில் ஈடுபட்ட கணுவா பேட் சிவப்பிரியா நகரை சேர்ந்த முத்து மகன் மரமா சூர்யா என்கிற பாலாஜி (வயது 23), சாமியார் தோப்பு மல்லிகா தியேட்டர் சாலையைச் சேர்ந்த அன்பழகன் மகன் பென்னி என்கிற மோகன்ராஜ் (வயது 26) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
மணல் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட லோடு வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட சூர்யா மீது 2019, 2020, ஆகிய ஆண்டுகளில் மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக வழக்கு உள்ளது. தொடர்ந்து இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வரும் சூர்யா மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
- மாட்டு வண்டி தொழிலாளர்களுக்காக மணல் குவாரி அமைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்
- சமாதான கூட்டத்தில் எழுத்து பூர்வமாக அறிவிப்பு
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாட்டு வண்டித் தொழிலாளர்கள் உள்ளனர். இந்நிலையில் மாட்டு வண்டிக்கு மணல் குவாரி அமைத்திட வலியுறுத்தி அச்சங்கத்தினர் கடந்த சில மாதங்களாக போராடி வருகின்றனர். அதற்கு அதிகாரிகள் சமாதானம் பேசுவதும், போராட்டம் தற்காலிகமாக கைவிடுவதும் வாடிக்கையாக இருந்தது.
அதே போன்று நேற்று சிஐடியு சார்பில் மணல் குவாரி அமைக்க வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் அறிவித்து, வாயில் முன்பாக மாட்டு வண்டி தொழிலாளர்கள் திரண்டனர். அப்போது வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்னிலையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் வரும் டிசம்பர் 9ம் தேதி முதல் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு மாட்டு வண்டிக்கு குவாரி செயல்படும் என முடிவு செய்யப்பட்டு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாட்டு வண்டித் தொழிலாளர்கள் சமாதானமாக கலைந்து சென்றனர்.
கூட்டத்தில் சிஐடியு மாநில செயலாளர் ஸ்ரீதர், சிபிஎம் மாவட்ட செயலாளர் கவிவர்மன், மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத் தலைவர் சிதம்பரம் உள்ளிட்ட துறை அதிகாரிகள், மாட்டு வண்டி தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- விதிகளை மீறி மணல் அள்ளப்பட்ட விவகாரத்தால் பஸ் நிலையம் திறக்கப்படுவதில் சிக்கல் நீடிக்கிறது.
- பஸ் நிலையத்தை திறக்க கோரி தச்சை சுப்பிரமணியன் தலைமையில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
நெல்லை:
நெல்லை மாநகரின் பழைய பஸ் நிலையம் என்றழைக்கப்படும் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் கடந்த 2017-ம் ஆண்டு இடிக்கப்பட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வணிக வளாகங்கள் மற்றும் பார்க்கிங் வசதியுடன் நவீன பஸ் நிலையமாக கட்டப்பட்டு வருகிறது.
சி.பி.சி.ஐ.டி. விசாரணை
கிட்டத்தட்ட 80 சதவீதத்திற்கும் மேலாக பணிகள் முடிவுற்ற நிலையில் இங்கு விதிகளை மீறி மணல் அள்ளப்பட்ட விவகாரத்தால் பஸ் நிலையம் திறக்கப்படுவதில் சிக்கல் நீடிக்கிறது. அதாவது தாமிரபரணி ஆற்றங்கரை ஓரம் என்பதால் இங்கு புதிய கட்டிட பணிகள் நடைபெற்றபோது பூமிக்கு அடியில் தோண்ட தோண்ட, டன் கணக்கில் ஆற்று மணல் இருந்ததாகவும் அவை திருடப்பட்டதாகவும் சமூக ஆர்வலர் ஒருவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இதைத்தொடர்ந்து நீதிமன்றம் விசாரணை நடத்தியது. பின்னர் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றும்படி நீதிமன்றம் உத்தரவிட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக நீதிமன்றம் சார்பில் புவியியல் வல்லுநர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அக்குழுவினர் பல கட்ட ஆய்வுகள் நடத்தினர்.
மணல் குவியல்
இந்நிலையில் பஸ் நிலையத்தின் ஒரு பகுதியில் டன் கணக்கில் மணல் மலை போல் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்திப்பு பஸ் நிலையம் திறக்க முடியாமல் உள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பஸ் நிலையத்தை திறக்க வேண்டும் என பொதுமக்களும், வியாபாரிகளும் மாநகர 3-வது வார்டு கவுன்சிலர் தச்சை சுப்பிரமணியன் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் நீதிமன்றத்தில் பஸ் நிலையத்தில் உள்ள மணல் குவியல்களை உடனடியாக அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். நீதிமன்றம் இதற்காக வழக்கறிஞர் வேலுச்சாமியை நேரில் சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருந்தது.
லாரிகள் மூலம் அகற்றம்
அதனடிப்படையில் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் வழக்கறிஞர் வேலுச்சாமி மற்றும் நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி, நெல்லை ஆர்.டி.ஓ. சந்திரசேகர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் நூற்றுக்கணக் கான யூனிட் மணல்களை உடனடியாக அப்புறப்படுத்தி ராமையன்பட்டியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் வைக்கும்படி வழக்கறிஞர் உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று நள்ளிரவு முதல் சந்திப்பு பஸ் நிலையத்திலிருந்து மூலமாக ஆற்று மணல் எடுத்துச் செல்லப்பட்டு ராமையன்பட்டி குப்பை கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
2-வது நாளாக
சுமார் 30 லாரிகளில் ஆற்று மணல் அள்ளிச் செல்லப்பட்ட நிலையில் தொடர்ந்து இன்றும் 2-வது நாளாக நள்ளிரவில் மணலை எடுத்துச் செல்லும் பணி நடைபெற உள்ளது. இந்த பணிகள் இன்னும் ஒரு சில நாட்கள் நடக்கும்.
அதன் பின்னர் பொங்கலுக்குள் பஸ் நிலையத்தை திறக்க விரைவான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
- மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- டிரைவர் தப்பி ஓட்டம்
கரூர்
கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த, கூடலுார் பகுதியில், இரவு நேரங்களில் சட்ட விரோதமாக கிராவல் மண், காட்டாற்று மணல் கடத்தப்படுவதாக தோகை மலை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.இதனை தொடர்ந்து சப் இன்ஸ் பெக்டர் மாதேஸ்வரி தலைமையில், போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சிவசக்தி ஆகியோர் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கூடலுார் நெடுஞ்சாலையில் வந்த டிராக்டர் டிப்பரை நிறுத்தி சோதனையிட்டனர். அந்த வாகனத்தில் அனுமதியின்றி காட்டாற்று மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும், டிராக்டர் ஓட்டுனர் தப்பி ஓடிவிட்டார். தொடர்ந்து, மணல் கடத்திய டிராக்டர், டிப்பரை பறிமுதல் செய்து,இதுகுறித்து தோகைமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மணல் கடத்திய 3 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
- போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அரியலூர்:
விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் சாத்தம்பாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாத்தம்பாடி கொள்ளிடம் ஆற்றுப்படுகை பகுதியில் இருந்து மணல் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அப்பகுதிக்கு சென்ற போலீசார் சாத்தம்பாடி கல்லேரி அருகே சென்ற 3 மாட்டு வண்டிகளை நிறுத்தி, சோதனை செய்ய முயன்றனர். இதனால் மாட்டு வண்டிகளை ஓட்டி வந்த 3 பேர், அந்த வண்டிகளை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
பின்னர் போலீசார் அந்த வண்டிகளை சோதனை செய்தபோது, அவற்றில் சாத்தம்பாடி கொள்ளிடம் ஆற்றுப்படுகை பகுதியில் இருந்து ஆலம்பள்ளம் பகுதிக்கு மணல் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து 3 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 3 பேரையும் தேடி வருகிறார்கள்.
- அதிகாலை 2 மாட்டு வண்டிகளில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிக்கொண்டிருந்தனர் .
- சப் -இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மாட்டு வண்டி உரிமையாளர்களை தேடி வருகின்றார் .
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அன்றாயநல்லூர் கிராமத்தில் உள்ள கோரை ஆற்றில் அதிகாலை 2 மாட்டு வண்டிகளில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிக்கொண்டிருந்தனர் .
அந்தப் பகுதியாக ரோந்து சென்ற திருவெண்ணைநல்லூர் சப் -இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மணல் திருடர்களை மடக்கிப் பிடிக்க முயன்றபோது தப்பி ஓடி விட்டனர். 2மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்த சப் -இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மாட்டு வண்டி உரிமையாளர்களை தேடி வருகின்றார் .
- வாகன ஓட்டிகள் மணலில் சறுக்கி விழுந்து காயம் ஏற்படுகிறது.
- விபத்தை தடுக்க சாலையில் இடையே தடுப்புச்சுவர் அமைத்து தர வேண்டும்.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சேது சாலையில் 3 அரசு வங்கிகள், எம்.எல்.ஏ. அலுவலகம், நெடுஞ்சாலை துறை அலுவலகம், திருமண மண்டபங்கள், வட்டாட்சியர் அலுவலகம், நீதிமன்றம், அரசு போக்குவரத்து கழக பணிமனை, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அமைந்துன்ன.
விழா காலங்களில் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
கடந்த ஆண்டு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது சாலையில் மணல் தேங்கி நிற்பதால் பஸ் மற்றும் லாரி, வேன் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும் போது இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மணலில் சறுக்கி விழுந்து காயம் ஏற்படுகிறது.
வாகனங்கள் சேதமடைந்து விடுகிறது.
விபத்தை தடுக்க சாலையில் இடையே தடுப்பு சுவர் (சென்டர் மீடியன்) அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து சமூக ஆர்வலர் துரைராஜன் கூறும்பேது, இவ்வழியே அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவிகள் சைக்கிளில் செல்லும் போது மணல் சறுக்கி விழுந்து விடுகின்றனர்.
இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் எதிரில் வரும் பேருந்து மற்றும் லாரிகளுக்கு வழிவிட்டு ஓரமாக செல்லும் போது மணலில் நிலை தடுமாறி விழுந்து விடுகின்றனர்.
காயங்கள் ஏற்படுகிறது. சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவலநிலை ஏற்படுகிறது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மணலை அப்புறப்படுத்தி விபத்துகளை தடுக்க வேண்டும் என்றார்.
- அரசு தொடக்கப்பள்ளியில் கட்டிட வேலைகள் தற்போது நடைபெற்று பெற்று வருகிறது.
- ஆனால் பல நாட்களாக அதற்கான பணிகள் நடை பெறாமல் தற்போது வரை சாலையிலேயே மணல், ஜல்லி கற்கள் கொட்டி கிடக்கிறது.
செங்கோட்டை:
செங்கோட்டை கீழுர் பகுதியில் பிரசித்தி பெற்ற அழகிய மனவாள பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு காலை- மாலை என இரு வேளைகளிலும் செங்கோட்டை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.
மேலும் கோவிலை யொட்டி ஏராளமான குடியிருப்பு வாசிகள் வாழ்ந்து வருகின்றனர். இதன் அருகில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியும். அரசு தொடக்கப்பள்ளி, அரசு நடுநிலைப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளிகளில் செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் இருந்து மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். அவ்வாறு வரும் பள்ளி மாணவர்கள் மற்றும் பக்தர்கள், பொதுமககள் கீழுர் தபால் நிலையத்தை யொட்டி பிரதான குறுகிய சாலையே அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் குறுகிய சாலையையொட்டி உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் கட்டிட வேலைகள் தற்போது நடைபெற்று பெற்று வருகிறது. இதற்கான மணல், ஜல்லி கற்களை கொட்டி உள்ளனர். ஆனால் பல நாட்களாக அதற்கான பணிகள் நடை பெறாமல் தற்போது வரை சாலையிலேயே கொட்டி கிடக்கிறது. இதனால் குடியிருப்பு வாசிகள் அவசர உதவிக்கு கூட ஆட்டோவில் செல்ல முடியாத நிலை உள்ளது.
மேலும் மிக முக்கியமான குறுகிய சாலையே பயன் படுத்தும் பள்ளி மாண வர்கள், பக்தர்கள், குடியிருப்பு வாசிகள் மிகுந்த சிரமத்துடன் கடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டுள்ளனர். இருப்பி னும் சாலையில் கொட்டி கிடக்கும் மணல், ஜல்லி கற்கள் இன்னும் அகற்றப் படாமல் இருக்கிறது.
எனவே பள்ளி மாண வர்கள், பக்தர்கள் குடி யிருப்பு வாசிகளின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மணல், ஜல்லியை அகற்றி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மணல் கடத்திய 11 பேர் மீது வழக்கு பதியப்பட்டு 4 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
- மணல் கடத்தல் நடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் உச்சிப்புளி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் டிராக்டர்களில் மணல் கடத்தல் நடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. இதையடுத்து சார்பு ஆய்வா ளர்கள் அசோக்சக்ரவர்த்தி, கார்த்திக், முனியாண்டி ஆகியோர் பல்வேறு இடங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது மணல் கடத்தலில் ஈடுபட்ட 3 டிராக்டர்களை பிடித்தனர். அதிலிருந்த 11 பேர் தப்பி ஓடி விட்டனர்.
டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டு உச்சிப்புளி காவல் நிலையம் கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து போலீசார் மணல் கடத்தலில் ஈடுபட்ட சுகுமார்,கார்த்திக், பாக்கியராஜ், ராஜா கார்த்திக், பழனிசுவரன், ஜெகதீஸ்வரன், முனியசாமி, பிரகாஷ், உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- மணலில் இந்த சாமி சிலைகள் எப்படி வந்தது.
- சிதிலம் அடையாமல் அழகாகவும், நேர்த்தியாகவும் உள்ளது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் கடந்த 8-ந்தேதி அதிகாலை மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் போது கடற்கரை ஓரம் மணலில் மூன்று சிலைகள் இருப்பதை கண்டறிந்து தகவல் அளித்ததன் பேரில் புதுப்பட்டினம் போலீசார் மற்றும் சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் நேரில் சென்று இரண்டு பெருமாள் சிலைகள் மற்றும் ஒரு அம்மன் சிலை ஆகியவைகளை கைப்பற்றி எடுத்து வந்து சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு சிலைகள் அதே கடற்கரையில் இருப்பதாக தகவல் அறிந்த வி.ஏ.ஓ. பவளச்சந்திரன் மற்றும் புதுப்பட்டிணம் போலீசார் அப்பகுதிக்கு சென்று பார்த்தபோது அங்கு இருந்த 3 அடி உயரத்தில் உள்ள ஒரு அம்மன் சிலை மற்றும் இரண்டடி உயரத்தில் உள்ள ஒரு அம்மன் சிலை ஆகிய இரண்டு சிலைகளையும் எடுத்து வந்து சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
ஏற்கனவே மீட்கப்பட்ட மூன்று சுவாமி சிலைகள் குறித்து நடைபெற்ற விசாரணையில் சிலைகள் சீனிவாச பெருமாள், துவாரபாலகர , சிம்மவாகனி என தெரியவந்தது
மேலும் கிடைக்கப்பெற்ற சிலைகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் ரவி மற்றும் போலீசார் கடற்கரை மணலில் இந்த சாமி சிலைகள் எப்படி வந்தது. யார் கொண்டு வந்து குறிப்பாக இங்கு போட்டார்கள். எதற்காக போட்டார்கள் என்றும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுவாக சிதிலமடைந்த சிலைகளை மட்டுமே கோயில்களில் பயன்படுத்த மாட்டார்கள்.
ஆனால் இங்கு எடுக்கப்பட்ட அனைத்து சாமி சிலைகளும் சிதிலம் அடையாமல் அழகாகவும் நேர்த்தியாகவும் உள்ளது.
ஏன் நல்ல சாமி சிலைகளை இங்கு கொண்டு வந்து போட்டார்கள் என்ற கோணத்திலும் புதுப்பட்டினம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






