என் மலர்
உள்ளூர் செய்திகள்

லாரிகளில் ஆற்று மணல் ஏற்றப்படுவதை படத்தில் காணலாம்.
பொங்கலுக்குள் திறக்க விரைவான நடவடிக்கை; நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து லாரிகளில் மணல் எடுக்கும் பணி தொடங்கியது
- விதிகளை மீறி மணல் அள்ளப்பட்ட விவகாரத்தால் பஸ் நிலையம் திறக்கப்படுவதில் சிக்கல் நீடிக்கிறது.
- பஸ் நிலையத்தை திறக்க கோரி தச்சை சுப்பிரமணியன் தலைமையில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
நெல்லை:
நெல்லை மாநகரின் பழைய பஸ் நிலையம் என்றழைக்கப்படும் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் கடந்த 2017-ம் ஆண்டு இடிக்கப்பட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வணிக வளாகங்கள் மற்றும் பார்க்கிங் வசதியுடன் நவீன பஸ் நிலையமாக கட்டப்பட்டு வருகிறது.
சி.பி.சி.ஐ.டி. விசாரணை
கிட்டத்தட்ட 80 சதவீதத்திற்கும் மேலாக பணிகள் முடிவுற்ற நிலையில் இங்கு விதிகளை மீறி மணல் அள்ளப்பட்ட விவகாரத்தால் பஸ் நிலையம் திறக்கப்படுவதில் சிக்கல் நீடிக்கிறது. அதாவது தாமிரபரணி ஆற்றங்கரை ஓரம் என்பதால் இங்கு புதிய கட்டிட பணிகள் நடைபெற்றபோது பூமிக்கு அடியில் தோண்ட தோண்ட, டன் கணக்கில் ஆற்று மணல் இருந்ததாகவும் அவை திருடப்பட்டதாகவும் சமூக ஆர்வலர் ஒருவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இதைத்தொடர்ந்து நீதிமன்றம் விசாரணை நடத்தியது. பின்னர் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றும்படி நீதிமன்றம் உத்தரவிட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக நீதிமன்றம் சார்பில் புவியியல் வல்லுநர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அக்குழுவினர் பல கட்ட ஆய்வுகள் நடத்தினர்.
மணல் குவியல்
இந்நிலையில் பஸ் நிலையத்தின் ஒரு பகுதியில் டன் கணக்கில் மணல் மலை போல் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்திப்பு பஸ் நிலையம் திறக்க முடியாமல் உள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பஸ் நிலையத்தை திறக்க வேண்டும் என பொதுமக்களும், வியாபாரிகளும் மாநகர 3-வது வார்டு கவுன்சிலர் தச்சை சுப்பிரமணியன் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் நீதிமன்றத்தில் பஸ் நிலையத்தில் உள்ள மணல் குவியல்களை உடனடியாக அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். நீதிமன்றம் இதற்காக வழக்கறிஞர் வேலுச்சாமியை நேரில் சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருந்தது.
லாரிகள் மூலம் அகற்றம்
அதனடிப்படையில் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் வழக்கறிஞர் வேலுச்சாமி மற்றும் நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி, நெல்லை ஆர்.டி.ஓ. சந்திரசேகர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் நூற்றுக்கணக் கான யூனிட் மணல்களை உடனடியாக அப்புறப்படுத்தி ராமையன்பட்டியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் வைக்கும்படி வழக்கறிஞர் உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று நள்ளிரவு முதல் சந்திப்பு பஸ் நிலையத்திலிருந்து மூலமாக ஆற்று மணல் எடுத்துச் செல்லப்பட்டு ராமையன்பட்டி குப்பை கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
2-வது நாளாக
சுமார் 30 லாரிகளில் ஆற்று மணல் அள்ளிச் செல்லப்பட்ட நிலையில் தொடர்ந்து இன்றும் 2-வது நாளாக நள்ளிரவில் மணலை எடுத்துச் செல்லும் பணி நடைபெற உள்ளது. இந்த பணிகள் இன்னும் ஒரு சில நாட்கள் நடக்கும்.
அதன் பின்னர் பொங்கலுக்குள் பஸ் நிலையத்தை திறக்க விரைவான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.






