என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாட்டு வண்டி தொழிலாளர்களுக்காக மணல் குவாரி அமைக்க அதிகாரிகள் முடிவு
- மாட்டு வண்டி தொழிலாளர்களுக்காக மணல் குவாரி அமைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்
- சமாதான கூட்டத்தில் எழுத்து பூர்வமாக அறிவிப்பு
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாட்டு வண்டித் தொழிலாளர்கள் உள்ளனர். இந்நிலையில் மாட்டு வண்டிக்கு மணல் குவாரி அமைத்திட வலியுறுத்தி அச்சங்கத்தினர் கடந்த சில மாதங்களாக போராடி வருகின்றனர். அதற்கு அதிகாரிகள் சமாதானம் பேசுவதும், போராட்டம் தற்காலிகமாக கைவிடுவதும் வாடிக்கையாக இருந்தது.
அதே போன்று நேற்று சிஐடியு சார்பில் மணல் குவாரி அமைக்க வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் அறிவித்து, வாயில் முன்பாக மாட்டு வண்டி தொழிலாளர்கள் திரண்டனர். அப்போது வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்னிலையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் வரும் டிசம்பர் 9ம் தேதி முதல் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு மாட்டு வண்டிக்கு குவாரி செயல்படும் என முடிவு செய்யப்பட்டு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாட்டு வண்டித் தொழிலாளர்கள் சமாதானமாக கலைந்து சென்றனர்.
கூட்டத்தில் சிஐடியு மாநில செயலாளர் ஸ்ரீதர், சிபிஎம் மாவட்ட செயலாளர் கவிவர்மன், மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத் தலைவர் சிதம்பரம் உள்ளிட்ட துறை அதிகாரிகள், மாட்டு வண்டி தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






